பச்சைத் தமிழர் காமராஜர் பிறந்த நாள் ஜுலை 15 : பெரியாரின் தராசில் இரண்டு பக்கமும் காமராஜர்!

ஜுன் 16 - ஜூலை 15, 2020

ஏகா.ராஜசேகர்

 இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் நான்காம் மாநாடு தேவகோட்டையில் 9.7.1961-ஆம் நாள் நடைபெற்ற போது தந்தை பெரியார்அவர்கள் காமராஜரைக்குறித்து இப்படிப் பேசினார் ”எனக்கோ வயது 82 ஆகின்றது.நான் எந்த நேரத்திலும் இறந்து விடலாம். ஆயினும் நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான் மரண வாக்குமூலம் போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்கு மூலம் கூற வேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம் கடந்த இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர்கள் ஆட்சி காலத்தில் ஆகட்டும், அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை, தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன் படுத்திக்கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது’’ என்று கூறினார்.அரசியல் வரலாற்றில்  இப்படி யாருக்கும் தந்தைபெரியார் அவர்கள் சான்றிதழ் அளித்ததில்லை, ஆனால் காமராஜருக்கு அளித்தார்.  

அதிகார போதையும் சுயநல நோக்கமும் தன்னை எப்பொழுதும் நெருங்கிடவிக்கூடாது என்று தன் வாழ்வின் இறுதிமூச்சு வரை மிக மிக  கவனமாக இருந்தவர், அதன் காரணம் கருதியே ஓட்டரசியலை முற்றிலுமாக வெறுத்தவர் அதே ஓட்டரசியலை உயர்த்திப்பிடித்து காமராசாரை விட்டுவிடாமல் பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூற வேண்டிய அவசியம் என்ன. ஒன்றே ஒன்று தான்,  அவர்  மிக மிக தூய்மையான மானுடபற்றாளனாக வாழ்ந்தார் என்பதுதான். அரசியல் அதிகாரத்தின் பாதைகளில் பயணித்த உலகத் தலைவர்கள் அனைவரையும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பகுக்கலாம். ஒன்று, எளிய மக்களின் வாழ்க்கை வலிகளை உணர்ந்து அவர்களின் வாழ்வை வளப்படுத்த  தங்கள் வாழ்வையே  ஒப்படைத்தவர்கள், இரண்டு, அதிகார வர்க்கத்தின் தேவைகளை நிறைவு செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொண்டவர்கள். இதில் காமராஜர் எந்த வகைக்குள் அடங்குவார் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. மானுடவர்க்கம் வளம் பெற பெரியார் என்னவெல்லாம் சிந்தித்தாரோ, எவற்றையெல்லாம் பேசியும்  எழுதியும் வந்தாரோ அவற்றையெல்லாம்  காமராஜர்  முதல்வரான காலகட்டத்தில் இயல்பாகவே நிகழ்த்திக்காட்டினார். கடைசி வரை ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து மறைந்தவர், தமது தாயை தெருக்குழாயில் குடிநீர் பிடிக்க வைத்தவர், சாகும்போது வெறும் நூறுரூபாயோடு இருந்தவர், நீர்வளத்தை, தொழில்வளத்தை, கல்விக்கூடங்களை பெருக்கியவர், தான் கொண்டுவந்த  நல்ல திட்டங்களை விளம்பரம் செய்ய விரும்பாமல் அம்மாவுக்கு சோறு போடுறதை விளம்பரம் பண்ண முடியுமா? என்றவர் இப்படி காமராஜரைக்குறித்து எழுதும் போதும் பேசும்போதும் பல உணர்ச்சிபூர்வமான  சித்திரங்களிலிருந்து விடுபட இயலாது. காரணம் அவர் ஆட்சி எளிய மனிதர்களின்  உணர்வுகளோடு பின்னிப்பிணைந்தது.

ஆனால் இவற்றையும் கடந்து பல குற்றச்சாட்டுகளை அவர்மீது வைக்க முனைந்தவர்கள் அவரின் தொலைநோக்குப்பார்வையால் பின்னாலில்  வாழ்த்திமகிழ்ந்தார்கள். தமிழை உயர்த்திப்பிடித்து தமிழில் எழுத்து சீர்திருத்தத்தைக் கொண்டுவந்த பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதும் காமராஜர் தமது ஆட்சியில் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை தொடங்கிவிட்டு ஒருபக்கம் ஆங்கில வழிக்கல்வியை ஆதரித்ததும் வேறுவேறு அல்ல.இரண்டும் வெவ்வேறு சூத்திரங்களால் போடப்பட்ட ஒரே கணக்குத்தான்.

காமராஜர் முதல்வராக இருந்த போது அண்ணாதுரை அவர்கள் சட்டப்பேரவையில் தி.மு.க குழுவின் தலைவராக இருந்தார். அப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த கல்யாணசுந்தரம் அவர்கள் “ஆங்கிலத்தைக் கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் பாடமொழியாக வைக்கக் கூடாது, அதை அகற்ற வேண்டும், தமிழ்தான் அரிச்சுவடியிலிருந்து முதுகலைப் படிப்புவரை இருக்க வேண்டும்’’ என்று பேசினார். அப்பொழுது காமராஜர் அவர்கள், அண்ணா, கருணாநிதி ஆகிய இருவரையும் அருகே வரச்சொல்லி, அண்ணாவிடம் இது குறித்து கூறும் போது’’  என்ன தமிழ்.. தமிழ்னு பேசுறீங்களே… நான் என்ன தமிழுக்கு விரோதியா? எனக்குத் தமிழ் பிடிக்காதா? என்று கேட்டார். அதற்கு அண்ணா “என்ன சொல்கிறீர்கள்?’’ என்றார். உடனே காமராஜர் கல்யாணசுந்தரத்தை சுட்டிக்காட்டி அவுங்க பேசுறாங்களே… இங்கிலீஷ் அறவே கூடாது… தமிழே எல்லா இடத்திலும் இருக்கணும்னு சொல்றாங்களே… இங்கிலீஷைச் சுத்தமாக எடுத்துப்புட்டா என்னாகும்னு நினைக்குறீங்க? இங்கிலீஷை அறவே அகற்றிட்டா அந்த இடத்திலே இந்தி வந்து குந்திக்கும்னேன் என்று சொன்னார். சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பின் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில்  அண்ணா அவர்கள் கருணாநிதியிடம் கூறும் போது எவ்வளவு பெரிய மொழிப்பிரச்சினையை ஒரே வார்த்தையிலே காமராஜர் அவருடைய பாஷையிலே சொல்லிட்டார் பாத்தியாஎன்றாராம். எங்குமே பதிவாகாத காமராஜர் அவர்களின் இந்த இந்தி எதிர்ப்பின் சூத்திரத்தை  கருணாநிதி (ஆகட்டும் பார்க்கலாம், திரு.வீரபாண்டியன், ப.45) அவர்களே  குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு இவ்வாறான  தொலைநோக்குப்பார்வையை அவருக்கு யார் தந்திருப்பார்கள். அப்பழுக்கற்று மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட  ஒரு தலைவனுக்கு யார் சொல்லவேண்டும். அரசியல் வரலாற்றில் புதிய திசைகளை திறந்து விட்ட காமராஜர் நாம் தான் ஓர் அரசியல் தலைமைக்கான கோட்பாடுகளையே வகுத்துக்கொண்டிருக்கிறோம்  என்பதை உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

முதல்வர் பதவியை காமராஜர் விரும்பி ஏற்கவில்லை. 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள்  காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். பல விதிமுறைகளை தமது தோழர்களுக்கு முன்வைக்கிறார். நான் மந்திரிசபை அமைக்கும்பட்சத்தில் மந்திரியாக அவரைப்போடு, இவரைப்போடு என்று யாரும் சொல்லக்கூடாது. எந்தக் காரியத்துக்காகவும் சிபாரிசு கேட்டு வரக்கூடாது. இதற்கெல்லாம் சம்மதம் என்றால் நான் முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என்று தனது ஆதரவாளர்களிடம் வாக்குறுதி பெற்ற பிறகே அவர் முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்கிறார். எந்த வருணபேதத்தை ஒழித்துக்கட்டவேண்டும் என்று பெரியார் போராடினாரோ  அந்த கொள்கையை தன் ஒவ்வொரு செயல்களிலும் இயல்பாகவே தூக்கிச்சுமந்தார் காமராஜர். வருணம் என்பது தீண்டாமையை சார்ந்தது மட்டுமல்ல அது மனிதனை பகுத்தறிவோடு  சிந்திக்க விடாமல் கற்பிக்கப்பட்ட அடிமைத்தனங்களை முழுவதுமாக பின்பற்றவைக்கும் மனநிலையை நிலைத்திருக்கச் செய்வது. ஆகவே தான் வருணத்தை அசைத்துப்பார்க்கும் மிக உயர்ந்த ஆயுதமாக கல்வியை முன்னிறுத்தினார் பெரியார். குலக்கல்வி திட்டத்தை முற்றிலுமாக ஒழித்தேதீர வேண்டும் என்கிற பெரியாரின்  குரலுக்கு இணையான ஒரு குரல்  ராசாசி இருக்கின்ற அதே காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தது. தமது சொந்த கட்சியை விமர்சிக்கும், அதன்  தவறை சுட்டிக்காட்டி திருத்த முயற்சிக்கும் அந்த பேராற்றல் காமராஜரிடமிருந்தது, காமராஜரிடம் மட்டுமே இருந்தது. பிராமணர்கள் அல்லாதவர்கள் கல்வி கற்பதை விரும்பாத ராசாசியின் எல்லா உத்திகளையும் வெகுசப் பார்வையோடும் மிகுந்த கவனத்தோடும் உடைந்தெரிந்தார் காமராஜர். மானுட இனத்தின் பேரழகான காரணிகளாக மானத்தையும் அறிவையும் குறிப்பிட்ட பெரியாரின் எண்ணம் போல ராஜாஜியால் பூட்டப்பட்ட ஆறாயிரம் பள்ளிக்கூடங்களை திறந்துவிட்டு  அறிவுப்பாதையில் தமிழகத்தை வழிநடத்தினார் காமராஜர். சாதி ஒழிப்பிலும் சமத்துவத்தைப் பேணுவதிலும் காமராஜர் அவர்கள் மிகுந்த தீவிரமாக செயல்பட்டார். குறிப்பாக தனது சொந்த சாதியைக்கூட தூக்கிப்பிடிக்காமல் நான் மந்திரியாக இருந்தேன் என்பதற்காக  நாடார்களெல்லாம் நாடார் ஒருவர் மந்திரியாக  இருக்கிறார், நாங்கள் உழைக்க மாட்டோம், உட்கார்ந்துக் கொண்டே சாப்பிடுவோம் என்று சொன்னால் முடியுமா என்ன? நான் மந்திரியாக இருந்தேன் எனக்கு அரசாங்கத்தில் வீடும் காரும் கொடுத்தார்கள். இதனால் மற்ற நாடார்களுக்கு என்ன லாபம்? ஆகையால் ஜாதியைச் சொல்லி ஏமாற்றுகிறவர்களிடம்  நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதற்கு பலியாகி விடக்கூடாது (‘நவசக்தி’ -13.7.1968) என்கிற கருத்தோட்டத்தை எப்பொழுதும் விதைத்துக்கொண்டே இருந்தார். அவர் சமத்துவத்தை மட்டுமே நேசித்தவர், சாதியை வெறுத்தவர். அவர் வாழ்வில் அடுக்குகளில் இதற்கான ஆதாரங்கள் பரவலாகவே விரவி இருக்கின்றன. இன்றைய திருவள்ளூர் மாவட்டமாக உள்ள செவ்வாய்ப்பேட்டையில், 27.2.1961 ஆம் நாள்  ‘தாழ்த்தப்பட்டோர் லீக்’ மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் காமராஜர் இப்படித்தான் பேசினார். அரிஜனங்கள் ஏன் தாழ்த்தப்பட்டவர்கள் என்று புரியவில்லை.     தாழ்த்தப்பட்டவர்கள், உயர்ந்தோர்கள் என்று சமுதாயத்தில் இருக்கக் கூடாதென்று என்று எண்ணித்தான் 21 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் ஓட்டுரிமையைக் கொடுத்துள்ளோம். அப்படியிருந்தும் ஏன் அவர்கள் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்? காரணம், அவர்கள் பொருளாதாரத்துறையில் பின்னடைந்திருப்பதால்தான். பொருளாதாரத் துறையில் முன்னேற்றம் அடைந்த ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருந்த போதிலும் அவரிடம் வேலைசெய்ய உயர்ந்தவர் என்று சொல்லிக் கொள்பவரும் தானாகவே முன் வருகிறார். ஆகவே பொருளாதார முன்னேற்றம் அடைந்துவிட்டால் தாழ்த்தப்பட்டவர் என்ற சொல் தானாகவே மறைந்து உயந்தவர் என்றாகிவிடும். கல்வி வளர்ச்சி ஏற்பட்டுவிட்டால் சாதி வித்தியாசம் தன்னாலேயே அகன்றுவிடும். தாழ்த்தப்பட்ட ஒருவர் கலெக்டர் ஆகிவிட்டால் நான் உயர்ந்த சாதி, ஆகையால் அவர் கீழ் வேலை செய்ய மாட்டேன் என்று யாரும் கூற முடியாது.உயர்ந்த சாதி என்று கூறிக் கொள்பவன் தானாகவே கலெக்டர் உத்தரவுக்கு வேலை செய்கிறான். ஆகவே கல்வியே இந்த ஜாதிய கொடுமையைப் போக்க வழிவகுக்கும் என்றார் (‘நவசக்தி’ 28.2.1961). அப்படியானால் பொருளாதாரத்தை உயர்த்திவிட்டால் ஜாதிவித்தியாசம் தானாக ஒழிந்துவிடும் தானே எதற்காக  வருணபேதத்தை  ஒழிக்க வேண்டும் என்கிற கேள்வி ஒருவேளை எழுமானால் காமராஜரரின் சொற்களின் வழியே ஒன்றை அறிதல் அவசியமாகிறது. முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கான பொருளாதார மேம்பாட்டைக் குறித்து காமராஜர் இங்கு பேசவில்லை. மாறாக ஜாதியை ஒழிப்பதற்கான பொருளாதார மேம்பாட்டைக் குறித்துத்தான் அவர் இங்கு பேசுகிறார். இன்றைய ஏழை நாளைய முதலாளியாக மாறமுடியும். ஆனால் இன்றைய தாழ்த்தப்பட்டவனாக கருதப்பட்டவன் நாளை உயர் ஜாதியாக மாற முடியுமா? முடியாது என்பது காமராஜருக்குத் தெரியும். முதாலாளித்துவத்தை ஒழிப்பதற்கான பொருளாதார மேம்பாடு என்பதும் ஜாதியை ஒழிப்பதற்கான பொருளாதார மேம்பாடு என்பதும் எதிரெதிரானவை. ஆகவே தான் அவர் ஜாதியை ஒழிப்பதற்கான பொருளாதார மேம்பாட்டைக்குறித்து பேசுகிறார். இதன் அடிநாதம் இடஒதுக்கீட்டை முன்மொழிகிறதே தவிர, வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்மொழியவில்லை.

அடுத்து அவர் இன்னும் ஒரு படி மேலே சென்று கல்வி வளர்ச்சி ஏற்பட்டுவிட்டால் ஜாதி வித்தியாசம் தானாக ஒழியும் என்று பேசுகிற அவரின் கருத்து மிக முக்கியமான பார்வையைத்தருகிறது. அதற்காக அவர் முன்வைக்கின்ற உதாரணத்தின் வழியே அதன் ஆழத்தை உணர முடிகிறது. கல்வி அறிவு என்பது உளவியல் ரீதியாகவே ஜாதி வேறுபாட்டிலிருந்து விடுதலை அளிக்கின்ற மனநிலையை உருவாக்கும் வல்லமையுடையது. கல்வியைக்குறித்து வள்ளுவம் பேசும் பல சிந்தனைகளை இங்கு வேண்டுமானால் பொறுத்திப் பார்த்துக்கொள்ளலாம். ஆகவே தான் உணவுக்குக் கூட வழியற்ற ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு அளித்தாகிலும் கல்வி வழங்கவேண்டும் என்று போராடினார் காமராஜர். 1955-ஆம் ஆண்டு மார்ச் 27—இல் தொடக்கப்பள்ளி நிர்வாகிகள் மாநாடு சென்னையில் நடைபெற்ற போது காமராஜர் இவ்வாறு பேசினார்.  வயித்திலே ஈரம் இல்லாதவன் எப்படி படிப்பான்னே, அவனுந்தானே நம்ம இந்தியாவுக்குச் சொந்தக்காரன், ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்துலேயே சோறு போட்டு படிக்க வைக்கணும். பணத்துக்கு எங்கே போவிங்கினு கேப்பிங்க, வழி இருக்கு தேவைப்பட்டால் பகல் உணவிற்கென்று வரி போடவும் தயங்க மாட்டேன் என்று  பேசினார். இதுமட்டுமல்லாமல் ஒருமுறை வைப்பாற்று பாலத்திற்கு அடிக்கல் நாட்டுவிழாவில் பேசும் போதுஎதற்காக சுதந்திரம் வாங்கினோம்? எல்லோரும் வாழ,எப்படி வாழணும்? ஆடு மாடுகள் மாதிரி உயிரோடு இருந்தால் போதுமா? மனிதர்களாக வாழணும். அதற்கு படிப்பு வேணும். பட்டினியாக இருந்தால் படிப்பு வருமா? வராது. ஏழைகளுக்கெல்லாம் பள்ளிக்கூடங்களிலேயே சோறு போடணும்  அப்பத்தான் படிப்பு ஏறும். இதுவே என் முதல் வேலை முக்கியமான வேலையும் கூட. இதைத்தான் நான் ரொம்ப முக்கியமாகக் கருதுகிறேன். அதனால் மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு இதே வேலையாக ஊர் ஊராகப் பிச்சையெடுக்க வருவதற்கும் தயாராக இருக்கிறேன் என்றார். ஊர் ஊராகச்சென்று பிச்சை எடுத்தாகிலும் படிக்க வைக்க வைப்பேன் என்கிற சொல்லை எந்த அரசியல் அதிகாரம் மிக்க தலைமையிடமிருந்து நாம் கேட்டிருக்கிறோம். இதற்குத்தான் பெரியார் சொன்னார் காமராஜரை விட்டுவிடாதீர்கள் என்று.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *