விழிப்புணர்வு : கரோனாவில் நாத்திகத்தின் எழுச்சி

ஜுன் 16 - ஜூலை 15, 2020

முனைவர் வா.நேரு, தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

கரோனா  காலம் பல விதங்களில் மனிதர்களைப் பாதித்தாலும் சில விதங்களில் நிறைய சிந்திக்கவும் வைத்திருக்கிறது. சாதாரண ஒரு பக்தர், ஆண்டு தோறும் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை திருப்பதி உண்டியலுக்கு போட்டு வரும் எனக்கு தெரிந்த ஒரு பக்தர்- சொன்னார். “என்னங்க சார், கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், உங்களை மாதிரி நாத்திகர்கள் சொல்வதுதான் உண்மை எனத்தோன்றுகிறது’’ என்றார்.நோய் வந்தால் கடவுள்தான் காப்பாற்றும் என்றார்கள். இப்போது கோவில், சர்ச், மசூதி என அனைத்தையுமே மூடிவிட்டார்கள். அதனைப்போல இந்தக் கரோனா பரப்பலில் வழிபாட்டுத்தலங்களுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது சார்… என்றார்.

21-ஆம் நூற்றாண்டில் கணினிகளும் ரோபாட்டுகளுமாக அறிவியல் பரவியிருக்கும் இக்காலத்தில், கரோனாவை தடுக்கமுடியாது கடவுள் கோவில்களை மூடும்நிலை கடவுள் இல்லை என்பதையும் உணரவைத்திருக்கிறது. நாம் வைத்த பக்தியும்,அதற்காக செலவழித்த பணமும், நேரமும் வீண் எனும் எண்ணத்தை பக்தர்களுக்கே இந்தக் கரோனா காலம் ஏற்படுத்தியிருக்கிறது. நம்பிக்கை தரும் செய்திதான்…

கரோனா ஆரம்பித்த இந்த இரண்டு, மூன்று மாத காலத்தில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. எப்போதும் கூட்டத்தில் நின்று உரை நிகழ்த்தி பிரார்த்தனை செய்யும் போப்பாண்டவர் தன்னந்தனியாக நின்று பிரார்த்தனை செய்வதை செய்திகளில் பார்த்தோம். மசூதிக்குள் சென்று கூட்டமாக பிரார்த்தனை செய்யக்கூடாது என்னும் சட்டங்களையும் அதற்கு அடிபணிந்து தங்கள் வீடுகளில் தாங்கள் தொழுது கொள்கிறோம் என்று சொன்ன இஸ்லாமியர்களைப் பார்த்தோம். மெக்கா, மெதினாவிற்கு பக்தர்கள் வரவேண்டாம் என்னும் அறிவிப்பைக் கண்டோம். கோவிலுக்கு கும்பிடப்போகிறோம் என்று மொத்தமாகக் கும்பிடப்போனவர்களை காவல்துறையினர் விரட்டி அடித்ததைப் பார்த்தோம். திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள்  வரவேண்டாம் என நிர்வாகமே கோயிலை மூடிய செய்தியைப் பார்த்தோம்.

எனது கடவுள் பெரிது, உனது கடவுள் சிறியது என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களெல்லாம் அமைதியானதை இந்தக் கரோனா காலத்தில் பார்த்தோம். ஆத்திகர்களின் நம்பிக்கையை, காலம் காலமாக அவர்கள் பக்தியின் பேரால் செய்துகொண்டிருந்த சடங்குகளை தவிர்க்க கரோனா காரணமாக அமைந்திருக்கிறது. நாம் சில ஆத்திகர்களைப் பார்த்து கேள்விகள் எழுப்பியபோது, பதில் தெரியாமல், இந்தக் கரோனா நேரத்தில் இந்த விவாதம் வேண்டாம் சார் என்று வழிந்ததை எல்லாம் பார்த்தோம்.

மனிதர்களின் வாழ்க்கையை சூழ்நிலைதான் தீர்மானிக்கிறது. எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கும்போது குழந்தையாகத்தான் பிறக்கிறது. ஆனால் அது பிறக்கும் வீட்டைப் பொறுத்து, அது இந்து மதக்குழந்தை என்றோ, இஸ்லாம் மதக்குழந்தை என்றோ, கிறித்துவ மதக்குழந்தை என்றோ பிறக்கிறது. பின்பு அது வளரும் சூழல், அந்தக் குழந்தையை கோவிலுக்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ அழைத்துச்செல்வதைப் பொறுத்து தன்னை இந்த மதத்தைச்சார்ந்தவர் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. அந்தந்த மதத்திற்குரிய சடங்குகளால் ஒரு மதத்தினைச்சார்ந்த குழந்தையாக அது மாற்றப்படுகிறது. அந்த மதத்திற்குரிய வழிபாடுகளோ, புத்தகங்களோ கொடுக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் படிக்கப்பட வலியுறுத்தப்படும் போது அது ஒரு முழுமையான மதத்தைச்சார்ந்த குழந்தையாக மாறுகிறது. ஆனால் மதவாதிகள் எந்த இடத்திலும் கடவுள் குறித்தோ, மதம் குறித்தோ குழந்தைகளுக்கு கேள்விகள் எழக்கூடாது என்பதற்காகவே கடவுள் குறித்த ஒரு பயத்தினை ஏற்படுத்தியிருக்கிறார்கள். முழுக்க முழுக்க கடவுள் அச்சம் ஊட்டி வளர்க்கப்படும் குழந்தைகள் தன்னம்பிக்கை இன்மையால் தடுமாறுகிறார்கள். பெரியவர்கள் ஆனாலும் அவர்களின் தன்னம்பிக்கை தடுமாறத்தான் செய்கிறது.

‘டெக்கான் கெர்னால்டு’ என்னும் ஆங்கிலப்பத்திரிகையில், 2020, மார்ச் 28-ந்தேதி  ‘நாத்திகர்களின் எழுச்சி’(Rousing of atheists) என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை ராகுல் ஜெயராம் என்பவர் எழுதியிருக்கிறார். அதில் இந்துத்துவா வெறி அதிகமாக அதிகமாக, இந்தக் கரோனா காலத்தில் மக்கள் நாத்திகம் பற்றி சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நாத்திகத்திற்கான வரவேற்பு என்பது இந்தியாவில் இந்து மதத்தைச்சார்ந்தவர்கள் மத்தியில் மட்டுமல்ல, மற்ற மதத்தினைச்சார்ந்தவர்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டு விரிவாக எழுதியிருக்கின்றார்.

கடவுளின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்களாய், பிற்படுத்தப்பட்டவர்களாய் 90 சதவீதத்திற்கும் மேலான மக்களை வைத்துக் கொண்டு அனைத்து வாய்ப்புகளையும் ஏகபோகமாக அனுபவித்துக்கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் மீதான கோபம் சாதாரண மக்களிடம் இந்த நேரத்தில் அதிகமாகி இருக்கிறது. அமெரிக்க நாட்டில், காலம் காலமாக பொறுத்து பொறுத்துப்பார்த்த கறுப்பு இன மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் செய்திகளையும், ‘என்னால் மூச்சுவிட முடியவில்லை ‘என்று ஜார்ஸ் பிளாய்ட் சொன்ன நேரத்திலும், அவர் ஒரு கறுப்பர், ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச்சார்ந்தவர், அவரை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம், கொல்லலாம் , யாரும் கேட்க முடியாது என்னும் ஆணவம்தான், ஜார்ஸ் பிளாய்ட்டை  பூட்ஸ் காலால் அமுக்கி கொல்ல, அந்த  வெள்ளை நிற காவல்துறை வெறியனைத் தூண்டியிருக்கிறது. நாட்டு நடப்புகள் இப்படியே இருக்காது, உழைப்பவர்கள், நாட்டின் சொந்தக்காரர்கள் வெள்ளைத் தோலுக்கு எல்லா நாளும் அடங்கிப் போய்விட மாட்டார்கள், அவர்கள் கொதித்து எழுந்தால் நாடு தாங்காது என்பதைத்தான் அமெரிக்காவில் நிகழும் நிகழ்வுகள் காட்டிக் கொண்டிருக்கின்றன.

“நமது மக்கள் மாத்திரம் பல காலமாகவே முன்னேற்றமடையாமல் இருக்கக் காரணம் என்ன என்று யோசிக்கவேண்டும். இப்படிப்பட்ட நாளை இவ்வாறு சிந்தனை செய்யத்தான் நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வெகுகாலமாகவே நம் மக்கள் அறிவு வளர்ச்சியடையாமல் இருந்து வரக்காரணம் கடவுள் இல்லாத குறையாலா? அல்லது அவைகளுக்குப் பூஜை சரிவர நடத்தி வைக்காததாலா? அல்லது அவற்றை மதிக்கத் தவறி விட்டதாலா?

ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான் என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சியும்-அவன் துவக்கிய காரியமும் செத்துப்போய் விடுவதில்லை. அதுவும் அவனுடைய எண்ணத்தை அவனால் கூடுமான அளவுக்கு அவனைச் சூழ்ந்துள்ள மக்களிடையே பரப்பிவிட்டால்- அந்த எண்ணம் ஒரு போதும் அழியாது; அடக்கி விடமுடியாது.என்னுடைய முயற்சியெல்லாம் மக்கள் எதையும் சிந்திக்க வேண்டும் என்பதுதான், அவர்கள் எதையும் கண்மூடி நம்பிவிடக்கூடாது என்பதுதான்’’ -தந்தை பெரியார் கூறிய சொற்கள் மேலே சொன்னவை.

தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்தக் கரோனா காலத்தை சிந்தனை செய்யும் காலமாக நாம் பயன்படுத்தும் விதங்களை சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்தக் கரோனா காலத்திலும் ஒரு நேர்மறையான (பாஸிட்டிவ்) அணுகுமுறையை தொண்டர்களுக்கும் தோழர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டியிருக்கிறார். எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் அதனை நேர்மறையாக மாற்றுவது என்பது நமது கைகளில்தான், நமது எண்ணத்தில்தான் இருக்கிறது. எனவே சூம்(ZOOM) என்னும் காணொளி வழிக்காட்சி வழியாக தனது அமைப்பினைச்சார்ந்த பொறுப்பாளர்களோடு தொடர்ச்சியாக கலந்துரையாடினார். அதன் விளைவாக மதுரை, சென்னை, வேலூர், திருவாரூர், ஈரோடு எனப் பல மண்டலங்களில், பல மாவட்டங்களில் காணொளி வழியாகத் தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இது ஒரு புதிய உணர்ச்சியை, எழுச்சியை தோழர்கள் மத்தியில் கொடுத்திருக்கிறது. பெரியாரியல் என்பது பேரிடர் காலத்திலும் மக்களுக்குத் துணை நிற்பது, வழி காட்டுவது, வலிமையான எண்ணத்தோடு நடைபோடுவது எனும் செய்தி கிடைத்திருக்கிறது. தொடர்வோம் தோழர்களே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *