தில்லை மறைமுதல்வன்
கடைசியில் அந்தப் போர் முடிவுற்றது!
பெருவீரன் இராவணன் சாய்க்கப்பட்டான். அவனைச் சேர்ந்தோரின் உடல்கள் கழுகுகளுக்கும் காக்கைகளுக்கும் விருந்தாக்கப்பட்டன. இலங்காபுரியின் மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் தீ தின்று தீர்த்தது. செல்வக் குவியல்கள் சூறையாடப்பட்டன. இராமன் மூட்டிய நெருப்பு அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை சாம்பலாக்கிற்று.
இத்தனைக்கும் காரணமான மிதிலை நாயகி அசோக வனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்தாள், இராவணனின் ரத்தச் சேற்றில் இராமன் வெற்றிவாகை சூடிய செய்தியை அசோகவனத்திலிருந்த சீதைக்குச் சொன்னான் மாருதி இந்த விடுதலைக்குத்தான் இந்த மீட்சிக்குத்தான் – அவள் இத்தனை காலமும் காத்திருந்தான், வீரக்கழல் புனைந்த இராமனைக் காணவேண்டுமென்ற ஆசையால் தான் அவள் பல இடர்களையும் பொறுத்துக் கொண்டு காத்திருந்தாள். தசரத குமாரன் தன்னைக் காப்பாற்றுவான், பழிதுடைப்பான், மானங்காப்பான், வாழ்வளிப்பான் என்ற நினைப்பில் தான் அவள் பலர் பலகாலும் பலவாறு சொன்ன பழிச்சொற்களை எல்லாம் சகித்துக் கொண்டு காத்திருந்தாள். அசோகவனத்துச் சேடியர்களின் உபதேசங்கள் செவிகளைப் புண்ணாக்கிய போதெல்லாம் இலங்கை வேந்தனின் ஆசையில் விளைந்த சொற்கள் நெஞ்சை சுட்டெரித்த போதெல்லாம் அவள் உயிரைக் காத்து நின்றது இதற்காகத்தான்.
அவளுக்குத்தான் எத்தனை நம்பிக்கை, பொறுமை!
அவள் தவங்கிடந்த அந்த நேரமும் வந்தது. ஆனால் அவள் எதிர்பார்த்ததுபோல அல்ல!
போர்க் களத்தின் பிண வாடையிடையே நின்று கொண்டிருந்த இராமன், சிறை மீண்டு வந்த சீதையைக் கண்டான். பத்து மாதங்களுக்கு முன்பு அவன் கண்ட அந்த அழகொழுகும் முகமும், இளமை கொஞ்சும் மேனியும், மதர்த்த விழிகளும், கை புனைந்தியற்றாக் கவின் பெரு வனப்பும் இப்போது சீதையிடம் இல்லை. அவள் வாடித் தான் போயிருந்தாள்!
தாபமும் பெருமூச்சம் நிறைந்த எண்ணற்ற இரவுகளுக்குப் பின்னர், ஜானம் தன்னை ஆட்கொண்டவனைக் கண்டான். வெள்ளம் போல் உவகை பெருக்கெடுத்து ஓடியது. உணர்ச்சிகளின் அலை புரண்டது. தவமிருந்து பெற்ற அந்தத் திருக்குமாரனின் பாதங்களில் விழுந்து வணங்கினான்.
அவனோ கண்களை மூடிக் கொண்டான்.
“பிரபோ!’’
பதிலில்லை. சீதையின் நெஞ்சில் முள் தைத்தது.
“சீதை வந்திருக்கிறேன். கண் திறந்து பாருங்கள்.’’
“கண் வலியால் வேதனைப்படுகிறேன், சீதா.’’
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’’
“இந்த இலங்கைப் படையெடுப்பு உன்னை மீட்பதற்காக அல்ல – எனக்காக என் பெயருக்கு வந்த மாக துடைப்பதற்காக! என்னை அவமானப்படுத்தியவனைப் பழி வாங்குவதற்காக! என் கடமை முடிந்து விட்டது: நீ இனி உன் விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும் போகலாம்!’’
இராவணன் காமுற்ற போதும் அடையாத வேதனையை சீதை இப்போது அனுபவித்தாள். எத்திசையில் வேண்டுமானாலும் செல்லும் இந்த விடுதலைக்காகவா அவள் காத்திருந்தாள்? உலக விடுதலையைவிட இதென்ன மேலான விடுதலையா? நஞ்சு துளிர்த்த நீண்ட பிரிவுக்குப் பின்னர் தன்னைக் கண்டதும் ஆசை கொப்பளிக்க, சந்தனம் கமழும் திரண்ட தோள்களில் வாரி அணைத்துக் கொள்வான் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு -வெண்ணிலாப் பாதங்களுக்கு பூச சொரிந்த இராமனின் அன்பில் மிதக்கவும் இனிய சொல்லைப் பருகவும் பெரு வேட்கை கொண்டிருந்தவளுக்கு எத்தனை பெரிய அதிர்ச்சி; ஏமாற்றம்!
“இந்தக் கொடிய தண்டனையைப் பெற நான் என்ன குற்றம் செய்தேன்?’’
“இராவணன் உன்னிடம் இச்சை கொண்டான். காமம் வழியும் கண்களால் உன் திரண்ட அழகைக் கண்டான். தொட்டெடுத்துத் தூக்கிச் சென்றான்.’’
“அது நான் செய்த குற்றமல்லவே! இராவணன் செய்த குற்றம் – என் அழகு செய்த குற்றம் – சூர்ப்பனகையைப் பங்கப்படுத்தியவர்கள் குற்றம்“ – வேதனையில் தன்னை மறந்து பேசினாள் சீதை.
“பத்துத் திங்கள் வரை இராவணன் அந்தப்புரத்தில் அவனது ஆற்றலுக்கும் அதிகாரத்துக்கும் உட்பட்டிருந்தாய்!’’
“வேறென்ன செய்ய முடியும்? நான் பெண். அவனோ அளவற்ற வீரமும் வலிமையும் கொண்டவன். என் பிறன் வசப்பட்டது. ஆனால் என் மனமல்ல.’’
“களங்கமற்ற ‘இச்வாகு’ குலத்தில் பிறந்தவன் எப்படி மாற்றானால் தீண்டப்பட்டவளை ஏற்றுக் கொள்ள முடியும்? உலகம் என்னைப் பார்த்து சிரிக்காதா?’’
சீதையின் ஆறாத்துயரும் அழுத முகமும் இராமனிடம் மனிதத் தன்மையை உண்டாக்கவில்லை. எல்லோருக்கும் உரித்தான சந்தேகமும் ஆத்திரமும் கோழைத்தனமும் அவனை ஆட்டிப் படைத்தன.
“அப்போதும் இப்போதும் எப்போதும் என் மனம் உங்களிடம் தான் இருக்கிறது. நான் உங்களை விரும்பி மணந்தது நீங்கள் அரசிளங்குமாரன் என்பதாலல்ல; பல முடி புனைந்து மன்னர் மன்னனாக அரியாசனம் வீற்றிருப்பீர்கள் என்பதனாலுமல்ல. என் கண்ணிற்கும் கருத்திற்கும் ஏற்றவர் என்பதால் என் ஆசையைக் கொள்ளை கொண்ட பேராற்றலும் பெருவனப்பும் படைத்தவர் என்பதால்,’’ சீதையின் சொற்கள் இராமனின் நெஞ்சைத் தொட்டன.
“சீதா! வேறுவழியில்லை எனக்கு. வேண்டுமானால் ஒரே ஒரு சோதனை இருக்கிறது உன் மீட்சிக்கு’’
“எதுவானாலும் சொல்லுங்கள். உங்களைவிட எனக்கு எதுவுமே பெரிதல்ல.’’
அவளிடம் இரக்கம்காட்டாத இராமனிடம் அவளுக்குத் தான் எத்தனை ஆர்வம், பிரேமை!
“தீ வளர்த்து அதில் நீ குளிக்க வேண்டும். அதன் மூலம் உன் தூய்மையை உலகம் அறிய வேண்டும். பிறகு தான் அயோத்தியில் இராமன் மனைவியாக நீ வாழ முடியும்.’’
சீதை சோதனைக்கு ஒப்புக் கொண்டாள்.
தீ வளர்க்கப்பட்டது. புனித நீராடி, புத்தாடை உடுத்தி இராமனின் பாதந்தொட்டு வணங்கினாள் சீதை. கொழுந்து விட்டெரியும் தீக்குண்டத்தை மும்முறை வலம் வந்து கைக்கூப்பிக் கண் மூடினாள், “மனத்தினான் வாக்கினான் மறுவுற்றேன் எனின் சினத்தினால் சுடுதீயால்! தீச் செல்வா!’’
அடுத்தகணம் சீதை தீயிடையே பாய்ந்து விட்டாள். சுற்றி இருந்தவர்கள் கண்களை மூடிக் கொண்டனர்.
என்ன ஆச்சரியம்!
தீக்கடவுள் சீதையின் பழுதிலா நிலையை நிரூபித்து விட்டாள். விண்ணிலிருந்து தேவர்கள் பூச்சொறிந்து நின்றனர்.
சீதை மெய்மறந்து நின்றாள்.
விண்ணவர் வாழ்த்த, வானவர் வியப்புற, தென்னவர் வழியனுப்ப சீதை அயோதிக்கு இராமனுடன் புறப்பட்டாள்.
ஆனால் இந்த மீட்சி நிரந்தர மீட்சி அல்ல என்பது அவளுக்குத் தெரியவில்லை. தர்மத்தை நிலைநாட்ட வந்த இராமனை அதர்மம் அலைக்கழிக்கப் போகிறது என்பதை அவன் அறியவில்லை.
இராமனுக்கே அது தெரியவில்லையே!
-இப்போது இராமனும் சீதையும் அயோத்திக்குத் திரும்பி விட்டனர். களையிழந்து கிடந்த அயோத்தியில் களி துவங்கிற்று. அப்பி இருந்த இருள் பெயர்ந்து வீழ்ந்து வானம் சிவந்ததுபோல, கோடையின் கானல் முடிந்து வசந்தத்தின் பசுமை தழைத்ததுபோல அயோத்தி நகர் புதுக்கோலம் பூண்டது.
அலங்காரங்களும், ஆடல்களும், பாடல்களும் எங்கும் காட்சிகளாயின. இளங்கன்றின் சிவந்த மாமிசமும், சோமரசமும், இவையிரண்டின் சுவையும் கொண்ட அழகிகளும் வரப்பிரசாதங்களாயின.
இராமனும் சீதையும் கண் நிறைந்து காணப்பட்டனர். எனினும் இருவருமே மாறிப் போயிருந்தனர்.
இராவணனால் சிறை எடுக்கப்பட்ட சீதையும் இராமனால் மீட்கப்பட்ட சீதையும் வெவ்வேறாக இருந்தனர் அசோகவனம் அவளை மாற்றி இருந்தது சீதையிடம் முன்பிருந்த விளையாட்டுத் தன்மையும், கோவிலை சுபாவமும் இப்போதில்லை. மழை பெய்து விட்டதுபோல அமைதியோடு இருந்தாள். நடையில் முன்பிருந்த துள்ளல் இல்லை. ஏதோ காற்றில் மிதப்பது போல நடந்தாள், போகிறவர்களைத் தடுத்து நிறுத்தும்படியாக ‘சுளீ’ரெனச் சிரிப்பதில்லை அதிராத அடக்கமான சிரிப்பு தான், ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் கண்கள் இப்போது சலனமற்றிருந்தன.
இராமனிடம் முன்பு போலவே இப்போதும் அன்பு செலுத்தினாள். ஆனால் அதில் முன்பிருந்த குறும்புத்தனமும் வேட்கையும் இப்போதில்லை மதிப்பும் மரியாதையுமே இருந்தன.
இந்த மாறுதல் எப்படி ஏற்பட்டது. எதனால் ஏற்பட்ட என்பது சீதைக்குத் தெரியவில்லை. விரைவில் தாயாகப் போறோம் என்ற நினைப்பினால் விளைந்த மாறுதலோ என்னவோ!
சீதையிடம் ஏற்பட்ட மாறுதலைக் கண்டு இராமனுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதைவிட ஆச்சரியம் எப்படியோ தானும் மாறி இருக்கிறோம் என்பதை அவன் உணர்ந்ததுதான்.
இலங்கைப் படையெடுப்புக்கு முன்னர் சீதை அவனுக்கு ஓர் இலட்சியமாகவே விளங்கினாள். அவளுடைய அஞ்சனம் தீட்டிய விழிகளின் இமைகளில் அவனது கனவுகள் தங்கியிருந்தன. பூ மணக்கும் மெல்லிய தோள்களில் அவனது ஆசைகள் பின்னிக் கிடந்தன. செம்பஞ்சு தடவிய சிற்றடிகளுக்கு அவனது உணர்ச்சிகள் சதங்கைகளாகி, அவள் அடியெடுத்து வைத்த போதெல்லாம் கொஞ்சின.
ஆனால் இப்போது அவன் தான் அவளுக்கு எல்லாமாக இருந்தானே தவிர, அவள் அவனுக்கு எல்லாமாக இருக்கவில்லை. அவளிடமிருந்த கவர்ச்சிதான் குறைந்து விட்டதா அல்லது அந்தக் கவர்ச்சியில் தனக்கிருந்த பற்றுதல் தான் குறைந்துவிட்டதா என்பது புரியாமல் தத்தளித்தான். சீதை தாயாகப் போகிறாள் என்பதுகூட அவன் உணர்ச்சிகளை சிலிர்க்க வைக்கவில்லையே!
எது எப்படி இருப்பினும் இராவணனுக்கும் சீதைக்கும் இடையே இருந்த கோலாகலமும், இனிமையும் தீர்ந்து விட்டன என்பது மட்டும் உயமைதான். இதழின் லெப்பை விழிவாங்கிய அந்த நாட்கள் கலை நெகிழ, இடை துவழ, முகை குலுங்க சிருங்காரம் சாகரமாகபெருக்கெடுத்து ஓடிய அந்த தினங்கள் அவையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கக்கூடிய இனிமைகளாகி விட்டன.
ஒருநாள் இராமன் அரண்மனையில் உப்பரிகையில் நின்று கொண்டு, அயோத்தி நகரையும் அதை சுற்றியுள்ள சோலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் பரதனும் நின்றிருந்தான்.
நீண்ட நேரமாக இருவருமே பேசிக் கொள்ளவில்லை. இருவர் மனதிலும் இரு வேறுபட்ட எண்ணங்கள் – ஆனால் இரண்டுமே ஒன்றைப் பற்றிதான்! இராமனுக்கு அதை எப்படி பரதனிடம் கேட்பது என்று புரியவில்லை. பரதனுக்கு அதை எப்படி இராமனிடம் சொல்வதென்று புரியவில்லை.
இந்த மௌனத்தின் பயங்கரத்தை இராமனால் தாங்க முடியவில்லை.
“பரதா! அயோத்தி மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருப்பது போலத் தென்படுகிறதே?’’
“ஆமாம். தங்கள் இலங்கை வெற்றியின் பெருமை தான் இன்னும் வீதியெங்கும் பேசப்படுகிறது. நாற்சந்திகளிலும் கடைவீதிகளிலும் தங்கள் வில்லாற்றல் புகழப்படுகிறது. வலியதையும் சேதுபந்தனமும் இராவணன் அழிவும் கதை கதையாகச் சொல்லப்படுகின்றன.’’
“அப்படியா?’’
“ஆனால்…’’ பரதன் சொல்லவேண்டியதைச் சொல்லி விடுவது என்று முடிவு செய்துவிட்டான்.
“என்ன விஷயம் பரதா?’’
“சொல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது.’’
“பரவாயில்லை. எதுவானாலும் சொல்லு’’
“சீதாபிராட்டியின் மீட்சியை மேலுலகமும் கீழுலகமும் அங்கீகரித்துவிட்டன. ஆனால் இந்தப் பூவுலகம் ஏற்க மறுக்கிறது.’’
“நீ என்ன சொல்கிறாய் பரதா’’, இராமனின் முகத்தில் இருள் கப்பியது.
“அபவாதம் காட்டுத்தீ போலப் பரவிவிட்டது சீதா தேவியாரின் அக்கினிப் பிரவேசம் அயோத்தி மக்களுக்கு தகுந்த சமாதானமாகப் படவில்லை.’’
எதிர்பார்த்த அதிர்ச்சிதானென்றாலும் அது வந்தபோது வரவேற்கக் கூடியதாக இல்லை.
பகைவனிடம் பத்து திங்கள் வரை இருந்து திரும்பியவளிடம் தூய்மை இருக்க முடியாது என்று, சரியாகவோ தவறாகவோ ஆனால் நிச்சயமாக அயோத்தி மக்கள் நினைத்தார்கள்.
“மக்கள் பேசிக்கொள்வது காது கொடுத்துக் கேட்கக் கூடியதாக இல்லை. நம்முடைய மனைவியரும் சீதையைப் போலானால் நாமும் சகித்துக் கொள்ள வேண்டியதுதான். அரசன் எவ்வழியோ அவ்வழிதானே குடிகளும் என்றெல்லாம் கேவலமாகப் பேசுகிறார்கள்.
நேற்றுக்கூட ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆடை வெளுப்பவன் ஒருவன்…’’
“போதும் பரதா, போதும். என்னைச் சித்திரவதை செய்யாதே’’ – காதுகளைப் பொத்திக்கொண்டு அலறினான் இராமன். மற்றவர்களுக்கெல்லாம் ஒரு ‘மாதிரி’யாகப் புகழப்பட்ட அந்த ‘உதாரண புருஷன்’ அப்போது தனக்குள்ளே புழுவாக நெளிந்தான்.
“போ பரதா, போ, என்னைத் தனிமையில் விட்டு விட்டுப் போ!’’
பரதன் அவ்விடத்தைவிட்டுச் சென்றான். இராமனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. போர்க்களத்தில்கூட கலங்காதவன் இப்போது அஞ்சி அஞ்சி வியர்த்தான்.
நீண்ட நேரத்துக்குப் பின்னர் ஏதோ ஒரு முடிவோடு அவன் சீதையின் அந்தப்புரம் நோக்கிச் சென்றான்.
-சீதை அந்தப்புரத்தில் சேடியர் சூழ அமர்ந்திருந்தாள். தாய்மையின் மினுமினுப்பு அவள் உடலெங்கும் மெருகிட்டிருந்தது அப்போது அவளுடன் கைகேயியும் இருந்தாள்.
ஏதேதோ பேசிக் கொண்டிருந்த கைகேயி திடீரென்று சீதையைப் பார்த்துக் கேட்டாள்:
“ஏன் சீதா, இலங்காபுரி செல்வச் செழிப்புள்ள தாமே’ மாடமாளிகைகள் பிரமிக்க வைக்குமாமே. அங்குள்ளவர்கள் வீரத்திலும் அழகிலும் சிறந்தவர்களாமே!’’
கைகேயியின் நோக்கத்தைச் சீதையால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“எனக்கென்ன தெரியும்? நான் தான் அசோக வனத் திலே சிறைவைக்கப்பட்டிருந்தேனே.’’
“மறந்துவிட்டேன் இராவணன் போரில் புலியாம். அவன் போர் வீரத்தைப் பற்றி வீரர்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள்.’’
சீதை பதில் பேசவில்லை.
“ஏன் சீதா, நீ இராவணனைப் பார்த்திருக்கிறாயே, அவன் எப்படி இருப்பான்? அழகானவனா? அல்லது பயங்கரமாக இருப்பானா?’’
“என்னை ஒன்றும் கேட்காதீர்கள். இப்போது அதெல்லாம் எதற்கு?’’ – மறக்க விரும்பிய, மறக்க முயன்றுகொண்டிருந்த இலங்கை நினைவுகளை மீண்டும் கிளறிவிட சீதைக்கு துணிச்சலில்லை.
“இராவணனைப் பற்றிச் சொல்வதென்றால் உனக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும், அவனது உருவத்தையாவது படமாக வரைந்துகாட்டேன். ஒரு பெண்ணுக்காகத் தனக்கும், தன் நாட்டுக்கும் அழிவு தேடிக்கொண்டவன் எப்படி இருப்பான் என்பது எங்களுக்கும் தெரிய வேண்டாமா?’’
சீதை ஆன மட்டும் மறுத்துப் பார்த்தாள். கைகேயி விடுவதாக இல்லை. சாமர்த்தியமாகப் பேசி சிதையின் உறுதியைக் கலைத்துவிட்டாள்.
வேறு வழியின்றி, திரைச்சீலையை எடுத்து வைத்து தூரிகையை வர்ணங்களில் தோய்த்து இராவணன் உருவை எழுதலானாள் சீதை. அப்போது தான் இராமன் உள்ளே நுழைந்தான். படத்தை அப்படியே போட்டுவிட்டு சீதை எழுந்து நின்றாள்.
கைகேயியை வணங்கிவிட்டு இராமன் அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்தான். சீதை அரைகுறையாக வரைந்து இருந்த அந்தப் படம் அவன் கண்களில் தட்டுப்பட்டது. எடுத்துப் பார்த்தான்.
இராவணன் படம்!
“யார், சீதையா இதை எழுதியிருக்கிறாள்! அற்புதமாக இருக்கிறதே’’ – அவன் குரலில் தொனித்த ஏளனத்தைச் சீதை உணர்ந்தாள்.
“இராமா! மனிதர்களுக்குப் பிரியமானவர்கள் அடிக்கடி அவர்கள் நினைவுக்கு வருமாம். பெண்களின் மனதைக் கண்டறிந்தவர்கள் யார்?’’-இதைச் சொல்லிவிட்டு கைகேயி அகன்றாள். குறி தப்பாது அம்பெய்வதில் அவள் எப்போதுமே கெட்டிக்காரிதான்.
இராமன் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த நெருப்பு இப்போது – கொழுந்து விட்டெரிந்தது. கையிலிருந்த இராவணன் படத்தை வீசி எறிந்தான்.
“ஜானகி! நீ இன்னும் இராவணனை மறக்கவில்லை போலிருக்கிறதே.’’
“பிரபோ! நான் பாபமறியாதவள், இராவணனுடைய உருவை வரைந்து காட்டும்படி அவர்கள் வற்புறுத்தினார்கள். மறுக்கமுடியாமல்…’’
“புரிகிறது சீதா, புரிகிறது. அயோத்தி மாந்தர் பேசுவதிலும் அர்த்தமிருக்கத்தான் செய்கிறது. நான் தான் தவறு செய்து விட்டேன்.’’
“வேண்டுமானால் என்னை உங்கள் கையாலேயே கொன்று விடுங்கள். இப்படி அபாண்டமாகப் பழியால் சித்கிரவதை செய்யாதீர்கள்’’ கண்களில் மழைபொழியச் கெஞ்சினாள் சீதை.
“உன்னைக் கொல்லும் இன்னொரு பாவத்துக்கு நான் ஆளாகமாட்டேன். செய்த பாவத்துக்குப் பரிகாரம் தேட வேண்டியது தான் பாக்கி.’’
சேடியர்களைக் கூப்பிட்டு இலக்குமணனை அழைத்து வரச் சொன்னான் இராமன். வந்த இலக்குமணனிடம் “இலக்குமணா சீதையைக் காட்டில் கொண்டு விட்டு விட்டு வா’’ என்றான்.
இலக்குமணன் திகைத்து நின்றான்.
“நீங்கள் என்னண்ணா சொல்கிறீர்கள்?’’
“இதுதான் பாபவிமோசனம்!’’
“யார் செய்த பாவத்துக்கு, யாருக்குத் தண்டனை?’’
“அயோத்தி மக்கள் அப்படி நினைக்கவில்லையே’’
“அதற்காக இந்தக் கொடுமையா? தர்மத்தை நிலை நாட்ட வந்தவர் நீங்கள். அதர்மத்துக்கு அடிபணிவது விந்தையிலும் விந்தை.’’
“செய்த முடிவு செய்தது தான் – சரியானாலும் தவறானாலும் இனி மாற்றுவதற்கில்லை.’’
சீதைக்கு இப்போது திகைப்பும் சோகமும் நீங்கி விட்டன. ஆத்திரம் பீறிட்டு வந்தது.
“நானே போய்விடுகிறேன்… செல்வமும் செல்வாக்கும் நிறைந்த இடத்தில் பிறந்தேன். சீரும் சிறப்போடும் அயோத்தியில் புகுந்தேன், இராவணனால் சீரழிக்கப்பட்டேன். அதுகூடப் பெரிதல்ல. இப்போது நிறைவயிற்றோடும் நீங்காப் பழியோடும் துரத்தப்படுகிறேனே இது தான் கொடுமையிலும் கொடுமை…’’
இராமன் தலைகுனிந்து நின்றான். சீதை வார்த்தைகளைப் பொரிந்து தள்ளினாள்.
“நான் அசோகவனத்தில் உயிர்விடாதிருந்தது அரசு வீற்றிருந்த ஆள்வதற்கல்ல.
இராமனுக்குத் தலை சுற்றியது.
“அறம் வெல்லும் என்று நினைத்தேன். இதோ அறம் அபவாதத்தின் முன் புழுப்போல் நெளிகிறது. இராவணனோடு போரிட்டபோது உங்கள் தோள் வலிமை தெரிந்தது. இப்போது உங்கள் உள்ளத்தின் பலவீனம் தான் பளிச்சிடுகிறது.’’
ஒரு கணம் இராமனின் நெஞ்சு நெகிழ்ந்து கலங்கிற்று. ஆனால் மறுகணமே பரதனோடு நிகழ்ந்த உரையாடலும் இராவணன் சித்திரமும் பின்னணியில் எழுந்தன.
இளகிய இதயம் இறுகிற்று.
“இலக்குமணா’’ என்றான் இராமன்.
“இதோ போய்விடுகிறேன். போகுமுன் என் மனதிலுள்ளதையும் சொல்லி விடுகிறேன்…. இராவணன் பெற்றது தோல்வி அல்ல – அது வீரச்சாவு. அவன் எண்ணமும் செயலும் தவறாயிருக்கலாம். ஆனால் அதற்காகத் தன் உயிரையும் பணயம் வைத்தான். இராவணனிடம் நீங்கள் பெற்றது எல்லா வீரர்களுமே போர்க்களத்தில் பெறக்கூடிய சாதாரண வெற்றிதான். ஆனால் இப்போது அபவாதத்தை எதிர்த்து நம்பியவளைக் காப்பாற்றி இருந்தால் உலகம் உங்களை மாபெரும் வழிகாட்டியாக – ‘உதாரண புருஷனாக – கொண்டாடுவதில் அர்த்தமிருக்கிறது. இராவணனிடம் பெற்ற வெற்றியைவிட இப்போது நீங்கள் பெற்ற தோல்வி மகத்தானது. இலங்கை வெற்றியினும் அயோத்தியில் அடைந்த தோல்வி பெரிது.’’
“சீதா, நீ எல்லை மீறிப் பேசுகிறாய்’’ என்று கோபத்தால் முகம் சிவக்கக் கத்தினான் இராமன். தேவ அருள் சித்தித்த அந்த ஆதர்ச புருஷனுக்குக் கூட தன்னிடமுள்ள குறைபாடுகளைக் கேட்கப் பிடிக்கவில்லை.
“மன்னித்துவிடுங்கள் பிரபோ! இதோ போகிறேன், இதை மட்டும் மறந்துவிடாதீர்கள், இரக்கமற்ற அரக்கனான இராவணனின் ராஜ்யத்தில்கூட எனக்கு ஓர் அசோக வனம் இருந்தது. ஆனால் இந்த இராம ராஜ்யத்தில் அது கூட எனக்குக் கிடைக்காமல் போய்விட்டது.’’
சீதை திரும்பிப்பாராமல் சென்றாள். இலக்குவண் பின் தொடர்ந்தான்.
சிலைபோல் நின்றிருந்த இராமன் திரும்பினான். அவன் கண்களில் சீதை வரைந்த இராவணனின் படம் தென்பட்டது, அதையே உற்றுப் பார்த்தான். இராவணனின் உதடுகளில் வெற்றிப்புன்னகை உறைந்திருப்பது போலத் தென்பட்டது.
(திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதை தொகுப்பிலிருந்து)