மே 16 – ஜூன் 15 ‘உண்மை’யில் வெளிவந்த ஆசிரியரின் தலையங்கம் நமக்கு வரலாற்றின் பக்கங்களையும், இனி நாம் எடுக்க வேண்டிய போராட்டங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. அதனை ஒட்டிய சில கருத்துகள்.
மருத்துவப் படிப்பு பயில்வதற்கு சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் மருத்துவம் படிக்க இயலும் என்றிருந்த அவலநிலையை அடியோடு துடைத்தெறிந்தவர் மானுடப் பற்றாளர் தந்தை பெரியார். இதன் பயனாய் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மருத்துவம் படித்து மனிதநேய மிக்க மருத்துவர்களாக கிராமப்புறங்களில் நாளும் மக்கள் சேவை ஆற்றி வருவது பாராட்டுக்குரியதாகும்.
இதனை ஜீரணித்துக்கொள்ள முடியாத உயர்ஜாதிப் பார்ப்பனர்கள் திட்டமிட்டு சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் கெட்ட நோக்கில் மருத்துவம் பயில ‘நீட்’ எனும் தகுதித் தேர்வை மாணவர்கள் மத்தியில் திணித்துள்ளனர். இதனால் ஏழை – எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவராகும் கனவு கானல்நீராகிப் போனது காலத்தின் அவலம். இதனால் மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த ‘நீட்’ எனும் சமூக அநீதித் தேர்வில் தேர்ச்சிபெற முடியாததால் மனமுடைந்த மாணவர்கள் விரக்தியின் விளிம்பிற்கேச் சென்று தங்களது இன்னுயிரைத் தாங்களே மாய்த்துக் கொள்வது வேதனையின் உச்சம்!
இத்தகைய அவலநிலையில், கடந்த ஏப்ரல் 24 – அன்று நடந்து முடிந்த மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைத்த இடங்கள் வெறும் 371 ஆகும். அதாவது 3.8 சதவீதம் மட்டுமே எனும் அதிர்ச்சித் தகவல் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தலையில் விழுந்த பேரிடி! தந்தை பெரியாரால் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை குழிதோண்டிப் புதைக்கும் நோக்கில் மத்திய பி.ஜே.பி அரசு வரிந்து கட்டிக்கொண்டு விரைந்து செயல்படுவது நாட்டின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கும் விபரீதப் போக்காகும்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்தக்கோரி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் பல்வேறு அறப்போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தியதன் பயனாய் மக்களிடையே போதிய விழிப்புணர்வும், புதிய எழுச்சியும் ஏற்பட்டது.
இத்தகைய சூழலில், சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் 1990 – ஆம் ஆண்டு பிரதமராக இருந்த நிலையில், இந்திய வரலாற்றில் முதன்முதலாக மத்திய அரசுப் பணிகளில் – வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 27 சதவீத இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்து சரித்திரச் சாதனை படைத்தார். ஆனாலும், அவை பல்வேறு இடையூறுகளைக் கடந்து 1992 – ஆம் ஆண்டுதான் செயல்பாட்டுக்கு வந்தது.
ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை மத்திய பி.ஜே.பி அரசு முற்றிலுமாகப் புறந்தள்ளி, சமூகநீதியை – இடஒதுக்கீட்டை குழிதோண்டிப் புதைத்துவிட்டு, முன்னேறிய வகுப்பினர் ஒருவர் மாதம் 66 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுபவராக இருப்பினும் அவரை பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினராக (EWS) கணக்கில் எடுத்துக்கொண்டு உயர்ஜாதியினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது சமூகநீதியின் மீது விழுந்த சம்மட்டி அடியாகும். இத்தகைய சமூக அநீதி என்பது நாட்டின் பெரும்பான்மை மக்களாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது மட்டுமன்றி அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாகும்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட இத்தகைய சமூக அநீதியை சமூகநீதிச் சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியத்தை தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உண்மை இதழின் வாயிலாக வெளியிட்ட தலையங்கம் பெரும்பான்மை மக்களாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி உள்ளது. ஆகவே, தமிழகம் பெரியார் பிறந்த மண், சமூகநீதியின் பிறப்பிடம், இடஒதுக்கீட்டில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலம் என்பதை இன எதிரிகளுக்கு உணர்த்தி சமூகநீதியை வென்றெடுப்போம்.
எஸ்.பத்ரா, வந்தவாசி.