கே: நோய்த் தொற்று உச்சத்திலிருக்கும் போது கோயில்களைத் திறந்து மக்களைக் கூட்டும் அரசின் செயல்பாடு சரியா?
– மணி, மதுரை
ப: இதில், மத்திய அரசின் உள்துறைதான் முக்கிய காரணியாக இருப்பதாகத் தெரிகிறது. டில்லி, ஆந்திரா (திருப்பதி) போன்றவற்றில் மீண்டும் கூட்டம் சேருவது கொரோனா நோயால் பாதிக்கப்பட கூடியவர்கள் எண்ணிக்கைப் பரவ வாய்ப்பு அதிகம் உண்டே! என்ன அழுத்தமோ, அல்லது கோயில் வருமான இழப்பைச் சரிகட்டவோ? இப்படி ஓர் அவசரத்தனம் போலும்! அறங்காவலர் சேகர்ரெட்டியே, திருப்பதியில் இரண்டு அர்ச்சகர்களுக்கு கொரோனா என கூறியுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன! இந்தியாவில் மூன்று லட்சம் பாதிப்பு!
‘தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பான் கோவிந்தன்’ என்பதெல்லாம் புரட்டு என்பது புரிந்து விடவில்லையா இப்போது? கடவுள் சக்தி கொரோனா தொற்று சக்திக்கு முன்னே என்னாயிற்று? பக்தர்கள் சிந்திக்கட்டும்.
கோயிலைத் திறக்கவேண்டுமென ஒற்றைக்காலில் நின்றும், தரையில் உருண்டும் சாதிக்கும். ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி பக்தகோடிகளே, ஆண்டவன் எங்கும் இருக்கிறார் என்று சொல்லும்போது கோயிலுக்குப் போய் தான் அவனை கொரோனா தொற்று அபாயத்தில் சந்திக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசின் உறுதியான முடிவு சிறந்த முடிவு இதைப் பொறுத்தவரை.
கே: பெரியார் பற்றாளர் என்பதற்காக சிவகுமாரையும் அவரது குடும்பத்தாரையும் காவிகள் தொடர்ந்து காழ்ப்பைக் கக்கி, தொல்லைத் தரும் நிலையில் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?
-அருண்குமார், சென்னை
ப: ஹிந்த்துவ ஆர்.எஸ்.எஸ். தூண்டுதல் பின்னணி, மத்திய அரசின் கல்விக் கொள்கையைப் பற்றிய கருத்தை நடிகர் சூர்யா சொன்னதிலிருந்தே, ஏதோ ஒரு சாக்கை வைத்து இப்படி அழிவழக்கு! இதனால் அவர்களது புகழும், பெருமையும் வளருமே தவிர குறையாது. அவர்களும் நேர்மையானவர்கள். இதைச் சந்திக்க
அஞ்சமாட்டார்கள். நீதி வெல்லும்; நேர்மை நிலைக்கும்; காவிகள் கரையும்!
கே: எதிர்க்கட்சித் தலைவரும் மற்றத் தலைவர்களும் சொல்லும் போது கேட்காது, காலங் கடந்து ஏற்பதையே எடப்பாடி அரசு வாடிக்கையாக்கிக் கொண்டது பற்றி தங்கள் கருத்து என்ன?
-மகேஷ், கிருஷ்ணகிரி
ப: “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்’’ –குறள்
வீம்பு, தன்முனைப்பு ஆட்சியாளருக்கு அதுவும் ஜனநாயகத்தில் இருப்பது கூடாது; இருந்தால் அது ஆட்சிக்குத்தான் கேடு! மக்கள் பிரதிநிதிகளின் – மக்கள் தலைவர்களின் கருத்துரைகளை கலந்து ஆலோசிப்பதும் மிக்க பயன் தரும் – என்பது இது போன்ற இக்கட்டான காலகட்டங்களில் அரசியல் பாலபாடம்!
கே:அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீட்டிற்கு அவசரச் சட்டம் மட்டும் போதுமா? இன்னும் கூடுதல் சட்டப் பாதுகாப்புத் தேவையா?
– சுப்பிரமணி, பட்டுக்கோட்டை
ப: அவசரச்சட்டமா? மாநில அரசு வழக்குத்தான் போடமுடியும். மத்திய அரசு இதற்குரிய ஆணை பிறப்பித்தாலே போதும் தவறுகள் திருத்தப்பட வாய்ப்பு தானே உண்டாகும். இது சமூகநீதி உயிர்ப்பிரச்சினை என்பதை உணர வேண்டும். 10 சதவிகிதத்திற்குக் காட்டிய அவசரத்தை மாநில அரசு, 50 சதவிகித இழப்பின் போது மவுனம் சாதிப்பது எவ்வகையில் நியாயம்? கொதி நிலை உள்ள ஒடுக்கப்பட்டோரின் பிரச்சினையில்.
கே : கடவுள் சிலைகளுக்கே முகக்கவசம் போட்டு, கோயில்களைச் சாத்திய பின்பும், கடவுளை நம்புவதும், கடவுளுக்குச் சக்தியுண்டு என்று நம்புவதும், நம்மைக் காக்கும் என்று நம்புவதும் பைத்தியக்காரத்தனம் அல்லவா?
– வளவன், சிதம்பரம்
ப: என்ன செய்வது? மனநலகாப்பகம் (பைத்தியக்கார ஆஸ்பத்திரி என்று சொல்லக்கூடாது) இன்னமும் இருக்கிறதே? தேவைப்படுகிறதே! ‘டாஸ்மாக் போதையைவிட ஆபத்தானது பக்தி போதை!’
கே: சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் அவர்களிடம் தங்களைக் கவர்ந்த சிறப்பு எது?
– கார்த்திக், சென்னை
ப: தன்னை ஆழித்துக் கொண்டு எரிந்த ஒரு கருப்பு மெழுகுவர்த்தி! தொண்டறத் தோழன்! உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத வெகுளித் தனம் கொண்ட தோழன்! இயக்கத்தின் இராணுவத் தளபதி போல களம் கண்டவன்! உயிர் தந்து உலகுக்கு ஆபத்தை உணர்த்தி வரலாறான எம் தோழன்!
கே: உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்புக்கு சந்திரசேகரன் என்பவரை நியமித்ததில், நிறைய தவறு இருப்பதாக செய்தி அடிப்படுகிறதே அதைப் பற்றிய தங்களின் கருத்து?
-மகிழ், சைதை
ப: நம் விடுதலையில் சென்றவாரம் விடுத்த அறிக்கையைப் படியுங்கள். ‘விண்ணப்பம் போடவே தகுதியற்ற’ ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான விதிமீறல் அது பற்றி மேலும் பல குமுறல்கள் இன்னும் வெளிவரும்!
கே: அண்மையில், கோவையில் பத்திரிகையாளர் மற்றும் தி.மு.க.வின் மீது அமைச்சர் வேலுமணி காவல் துறையைக் கொண்டு கைது நடவடிக்கையை செய்வது சரியான நடவடிக்கையா?
– சசிக்குமார், வேலூர்
ப: பத்திரிக்கையாளர்கள் மற்றும் தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு அரசியல் வன்மத்தின் வெளிப்பாடு! மக்கள் மன்றம் தரவிருக்கும் தண்டனையிலிருந்து குற்றவாளிகள் தப்ப முடியாது.!
கே: தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் நள்ளிரவு கைது நடவடிக்கை, எதிர் கட்சிகளின் குரலை முடக்கும் செயலை செய்யலாமா?
– முரளிதரன், கோவை
ப: மேற்சொன்ன பதில் தான்! பழிவாங்கும் அரசியல், விமர்சனம் கண்டு எரிச்சல் – அதிகார துஷ்பிரயோகம் – இவைகள் காலங்காலமாக தோற்றுத்தான் போயுள்ளன. ஜனநாயக வரலாற்றில்!