பெண்களின் கல்வியே ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றமாகும். அந்த வகையில், கேரளாவில் நாட்டிலேயே அதிகமான விழுக்காடு கல்வி அறிவுப் பெற்றவர்களின் வளர்ச்சி உயர்ந்திருந்தாலும், அங்கிருந்த பழங்குடியினப் பெண் ஒருவர் அய்.ஏ.எஸ் தேர்வில் தேர்வு பெற்று முதல் முறையாக பயிற்சி கலெக்டராக பொறுப்பெற்று பின்தங்கிய சமூக மக்களின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறார். தந்தை பெரியாரின் பெண் விடுதலை நோக்கில் பெண்களின் அதிகார முன்னேற்றம் இன்றியமையாத ஒன்றாகும் அதிலும், பழங்குடிப் பெண்ணான ஸ்ரீதன்யா சுரேஷின் வெற்றி பெண்களின் எழுச்சிகளில் ஒன்று.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் கல்தான் பத்தேரி அருகே பொழுதனா பஞ்சாயத்து அம்பலக்கொல்லியிலுள்ள இடியம் வயல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதன்யா சுரேஷ். இவரது பெற்றோர் சுரேஷ், கமலா இருவரும் தினக் கூலித்தொழிலாளர்கள். இளம் வயதில் அரசுப்பள்ளியில் கல்வி கற்ற ஸ்ரீதன்யா கோழிக்கோடில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், காலிகட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பையும் முடித்தார்.
சிறுவயதில் இருந்தே கலெக்டர் ஆகிவிட வேண்டும் என்ற கனவு இருந்த போதிலும், தன் குடும்பச்சூழல் காரணமாக படிப்பை முடித்ததும், 2016 இல் வயநாட்டில் உள்ள அரசு பழங்குடியினர் வளர்ச்சித் திட்டப் பிரிவில் உதவியாளர் பணியில் சேர்ந்தார். அங்கு சீராம் சாம்ப சிவராவ் சார்-ஆட்சியராக இருந்தார் அவரின் தலைமையின் கீழ் பணிபுரிந்த நிலையில், தன்னுடைய அய்.ஏ.எஸ் கனவை அவரிடம் கூறினார். பின்பு அவரின் வழிகாட்டுதலின் பேரில் தேர்வுக்கு தயாராகும் பொருட்டு திருவனந்தபுரத்தில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார். தீவிர முயற்சி மேற்கொண்ட ஸ்ரீதன்யா 2019 ஆம் ஆண்டில் அய்.ஏ.எஸ் தேர்வில் அதில் இந்திய அளவில் 410 ஆவது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றார்.
முசௌரியில் அய்.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்துக் கொண்ட ஸ்ரீதன்யா, பின்பு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி ஆட்சியராக பொறுப்பு கிடைத்தது. தனது வழிக்காட்டியான சீராம் சாம்பசிவராவ் அவர்களின் தலைமையில் ஸ்ரீதன்யாவின் ஆட்சியர் பணியும் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கஒன்று.
கடந்த மாதம் வயநாடு தொகுதிக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி ராகுல் காந்தியை ஸ்ரீதன்யா தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ‘ஸ்ரீதன்யா குறித்து நாங்கள் மிகவும் பெருமையும். பெருமிதமும் கொள்கிறோம். அவரது வெற்றி பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் உத்வேகத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்’ என்றார். ஊரடங்கு அமலில் இருந்த மே – 17 ஆம் தேதி கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்திருக்கிறார்.
ஸ்ரீதன்யா, அவரது வெற்றியைப் பற்றி கூறுகையில், “வயநாடு மாவட்டம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் கணிசமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் இன்னும் பின் தங்கிய நிலையில் தான் உள்ளது. கல்வியால் மட்டுமே அவர்கள் (வாழும் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்.) பின்தங்கிய மக்கள் உயர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே என் முதன்மை லட்சியமாக இருக்கும்’’ என்கிறார் புதிய நம்பிக்கையுடன்.
தகவல் : சந்தோஷ்