வரலாற்றுச் சுவடுகள் : ‘நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதிச் சொற்பொழிவு (1)

ஜுன் 16 - ஜூலை 15, 2020

தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் மாணவர் பருவம் முதலே ஈர்க்கப்பட்டு மேடைகளில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர். தாம் ஏற்றுக் கொண்டக் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்து, அதனை எல்லா வகையிலும் நடைமுறைப்படுத்த முயன்று, சிலவற்றை நடைமுறையும் படுத்தியவர் நாவலர் ஆவார். அவருடைய பிறந்த தினமான ஜூலை 11 ஆம் தேதி நூற்றாண்டு பிறந்தநாள் அதனை ஒட்டியச் சில நினைவுகள்

சென்னை பெரியார் திடலில் 31.12.99 அன்று நடைபெற்ற பெரியார் புத்தாயிரமாவது ஆண்டு விழாவில் ஆற்றிய உரை வீச்சு.

ஏசு பிறந்தாரா? இறந்தாரா? என்பது எவருக்கும் தெரியவில்லை என்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் புத்தாயிரமாவது ஆண்டு விழாவில் அ.தி.மு.க. அவைத் தலைவர் டாக்டர் நாவலர் கேள்வி எழுப்பினார்.

கி.வீரமணி அவர்கள் சொன்னார்கள்

முதலில் உங்கள் அனைவருக்கும் பெரியார் புத்தாயிரம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் உள்ளபடியே நான் பூரிப்பும், பெருமையும் கொள்கின்றேன் இந்த விழாவினுடைய சிறப்புக்குரிய நோக்கத்தை எனக்கு முன்னால் பேசிய நண்பர் கி.வீரமணி அவர்கள் உங்களுக்கு சுருக்கமாகவும், விளக்கமாகவும் சொல்லியிருக்கின்றார்கள். நாம் பெரியார் அவர்களுடைய புத்தாயிரமாவது ஆண்டைக் கொண்டாடுவதன் மூலம் அவருடைய கொள்கைகள் கோட்பாடுகள், குறிக்கோள்கள் மனித சமுதாயத்தை வாழ வைப்பதற்காக அவர்கள் எடுத்துச் சொன்ன அறிவுரைகள், கருத்துரைகள் ஆகியவைகள் எல்லாம் அடுத்தடுத்து வருகின்ற ஆண்டுகளிலேயும், அடுத்தடுத்து வருகின்ற நூற்றாண்டு விழாக்களிலேயும் அது பரவ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் இந்த விழாவை ஏற்பாடு செய்வது மட்டுமல்லாமல், பகுத்தறிவு குடும்பங்களைச் சார்ந்த அத்துணை பேரும், ஒன்றாக இணைந்து தங்களுடைய மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கிற வகையில் இந்த விழாவை இந்த ஆண்டு ஏற்பாடு செய்திருப்பது மிக, மிக போற்றுதலுக்குரிய ஒன்றாகும்.

செவிக்கும், வயிற்றுக்கும் உணவு உண்டு

‘செவிக்கு உணவு இல்லாதபொழுதுதான் சிறிது வயிற்றுக்கு ஈயப்படும்’ என்று வள்ளுவப் பெருந்தகையார் குறிப்பிட்டார். இங்கு செவிக்கும் உணவு உண்டு. வயிற்றுக்கும் உணவு உண்டு – என்ற முறையில் நண்பர் கி.வீரமணி அவர்கள் இந்த விருந்தினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஆண்டுதோறும் பெரியார் விழா

பெரியாருடைய கருத்துகள் நாடெங்கும் பரவி, மனித சமுதாயம் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் இந்த விழா இங்கே கொண்டாடப்படுகின்றது என்றும், இப்படிப்பட்ட விழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பெரும் முயற்சியில் ஈடுபடுவோம் என்றும் நண்பர் கி.வீரமணி அவர்கள் தன்னுடைய முன்னுரையிலே எடுத்து சொல்லியிருப்பதையும் பாராட்ட வேண்டிய ஒன்று.

பம்பரமாகச் சுற்றி…

அது மட்டுமல்ல, பெரியாருடைய பேச்சுகளை எல்லாம் ஒலி நாடாக்களாக ஆக்கி அவற்றில் பத்து ஒலி நாடாக்களை உருவாக்கி – அவற்றை வெளியிடுகின்ற விழாவாகவும் இந்த விழா ஏற்பாடு செய்து எல்லோரும் மகிழ்ச்சி தரத்தக்க வகையில் நண்பர் து.மா.பெரியசாமி அவர்கள் இதை செய்திருக்கிறார்கள். அவர் மாணவப் பருவ காலத்திலிருந்தே பகுத்தறிவு இயக்கத்திலே நீங்காப் பற்றும், தணியா ஆர்வமும் கொண்டு, அரும்பணி ஆற்றி வருகிறவர் ஆவார். அவர் 1944ஆம் ஆண்டிலிருந்தே நன்கறிவேன். அவர் எப்பொழுதும் பம்பரமாகச் சுற்றிச் சுற்றிச் சுழன்று திருச்சி மாவட்ட பகுதிகளில் கழகத்தின் பகுத்தறிவு கருத்துகளைப் பரப்புகின்ற பணியில் நம்முடைய நேரத்தையும், நினைப்பையும், உழைப்பையும், ஆற்றலையும் சிறப்பாகப் பயன்படுத்தி வருகின்ற ஓரு நல்ல நண்பராவார்.

பெரியார் கருத்துகள் இளைய தலைமுறையினருக்கு…

அவருடைய முயற்சியில் இந்த ஒலி நாடாக்கள் வெளிவருவது மிக, மிக பாராட்டுதலுக்குரிய ஒன்று நாங்கள் எல்லாம் பெரியாரோடு இருந்து அவருடைய குரல் கேட்டு – அவருடைய பேச்சு வன்மையை எல்லாம் அறிந்து நாங்கள் எல்லாம் மகிழ்ந்திருக்கிறோம். இந்த தலைமுறையினர் தந்தை பெரியார் அவர்களுடைய அழுத்தந் திருத்தமான கருத்துகளைக் கேட்க வாய்ப்பில்லாத நிலையில் ஆக அறிவியல் தொழில் நுட்ப உதவியின் பேரிலே ஒலி நாடாக்களைத் தயாரித்திருப்பதன் காரணமாக – பெரியாருடைய கருத்துகளை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் இந்த ஒலிநாடாக்களை உருவாக்கித் தந்திருப்பது மிக மிகப் பாராட்டுக்குரிய ஒன்று.

கிட்டத்தட்ட 250, 300 ஒலிநாடாக்கள் வெளிவரும் என்று அவர்கள் சொல்லியது உள்ளபடியே எதிர்காலப் பரம்பரையினருக்குப் பயன்படக் கூடிய ஒன்றாகும். ஆக, பெரியாருடைய கருத்துகள் உலகெங்கும் பரவுவது என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் பெரியார் புத்தாயிரமென்ற இந்த விழாவைக் கொண்டாடுகின்றோம்.

காலக் கணக்கீடு தேவை

உள்ளபடியே காலக் கணக்கீடு தேவைப்படுகிறது. மனித சமுதாயத்திற்கு வரலாற்று நிகழ்ச்சிகளை அறிய அவை எவ்வப்பொழுது நடைபெற்றது? எங்கெங்கு நடைபெற்றது? யார் யாரால் நடைபெற்றது என்பதைத் தெரிந்து கொள்ள, வரலாற்றுச் செய்திகளை அறிய, வரலாற்றுத் தன்மைகள் எப்பொழுது ஆரம்பித்தது, எப்பொழுது முடிந்தது? என்பதை அறிந்து கொள்ள இதற்கெல்லாம் காலக் கணக்கீடு தேவைப்படுகிறது. ஆக, ஆண்டுக் கணக்கு, நாள் கணக்குத் தேவைப்படுகிறது.

ஆண்டுப் பிறப்பு வேறுபடுகிறது

இந்த ஆண்டு முறை கணக்குகள் நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் வேறுபட்டுக் கொண்டே போயிருக்கிறது. ஆக ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு ஆண்டு உண்டு தமிழர்களுக்கென்று ஓர் ஆண்டு உண்டு. அது ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி என்று உண்டு தெலுங்கர்களுக்கு என்று ஓர் ஆண்டு பிறப்பு உண்டு. கேரள மக்களுக்கு கொல்லம் ஆண்டு என்று உண்டு. இஸ்லாமியர்களுக்கு என்று ஓர் ஆண்டு உண்டு. ஆக உலகெங்கும் பரவலாக ஆகி, எல்லோருக்கும் பழக்கப்பட்டு, எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற அளவுக்கு கிறித்துவை அடிப்படையாக வைத்து கி.பி. 2000 என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உள்ளபடியே வரலாற்றை எல்லாம் புரட்டிப் புரட்டிப் பார்த்தால் கிறித்து எப்பொழுது பிறந்தார் என்று யாருக்கும் தெரிவதில்லை.

ஏசு பிறந்ததும், மறைந்ததும் தெரியாது

ஏசு எப்பொழுது மறைந்தார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை (கைதட்டல்). அதை அவர்களே ஒத்துக் கொள்கிறா£கள்.

கிறித்து பிறந்ததும் யாருக்கும் தெரியாது. முதலில் ‘மாஸ் ஆப் தி கிரைசஸ்’ என்று வைத்தார்கள். நாளடைவில் அது கிறிஸ்துமஸ் என்று ஆகிவிட்டது.

 பகுத்தறிவாளர் கூட்டம் எல்லாம் இங்கு ஒன்றாக நாம் சேர்ந்திருக்கிற மாதிரி டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் என்று கொண்டாடுகின்றார்கள். அப்பொழுது தான் அவர் பிறக்கிறார் என்று சொல்கின்றார்கள்.

ஜனவரி 1ஆம் தேதி எதை ஒட்டி வருகிறது? பிறந்த நாளை ஒட்டி வருகிறதா? அல்லது வேறு எதையாவது ஒட்டி வருகிறதா என்று தெரியவில்லை.

ஏசு இறந்துவிட்டதாக அவர்கள் ஏற்பதில்லை

ஆனால், சொல்லுகின்ற பொழுது பி.சி. என்று சொல்லுகிறார்கள். அதாவது பிஃபோர் கிரைஸ்ட் என்பது அவர் இறப்பதற்கு முன்னாலேயா? அல்லது ஏசு பிறப்பதற்கு முன்னாலேயா? கிரைஸ்ட் என்று இருக்கிறது ‘பிஃபோர் தி டெத் ஆஃப் தி கிரைஸ்’ என்று இல்லை அல்லது ‘ஆஃப்டர் தி டெத் ஆஃப் தி (ஏ.டி.) கிரைஸ்ட்’ என்று சொல்லவில்லை. ஆக கிறிஸ்தவர்கள் ஏசு இறந்துவிட்டதாக அவர்கள் ஒத்துக் கொள்வதே இல்லை.

                                                                (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *