கவிஞர் கலி.பூங்குன்றன்
பாரதீய ஜனதா கட்சி என்றாலே அது பார்ப்பனர் ஜனதா தான். சமூக நீதிக்கு எதிரானது அதன் கொள்கை.
மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒரு பகுதியான வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடங்களை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு பிரதமர் வி.பி.சிங் அறிவித்தார் என்பதற்காக – அவ்வாட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வந்த பார்ப்பன ஜனதா கட்சியான பா.ஜ.க. தனது ஆதரவை விலக்கிக் கொண்டு அந்த சமூக நீதி ஆட்சியைக் கவிழ்க்கவில்லையா?
மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்தக் கூடாது என்று பார்ப்பனர் உண்ணாவிரதம் இருக்கவில்லையா? அதனை எதிர்த்து திராவிடர் கழகம் உண்ணும் விரதத்தை அறிவித்து அந்தப் போராட்டத்தை முறியடிக்கவில்லையா?
இந்தப் பின்னணியை எல்லாம் புரிந்து கொண்டால்தான் மத்தியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி – இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் சட்ட விரோதமாகவும், வஞ்சகமாகவும் நடந்து வரும் போக்கின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.
மாநிலங்களிலிருந்து மத்திய அரசு தொகுப்புக்கு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 15 விழுக்காடும், முதுநிலைப் படிப்புக்கு 50 விழுக்காடு இடங்களும் தாரை வார்க்கப்பட்டு வருகிறது (இதுவே அநியாயம். அந்தந்த மாநிலங்கள், மக்கள் வரிப்பணத்தில் மருத்துக் கல்லூரிகளை ஏற்படுத்துவது, நடத்துவது, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள இருபால் மாணவர்களும் மருத்துவர்களாக ஆக வேண்டும் என்பதால் தானே! – அதனைத் தட்டிப் பறிக்கும் பெரியண்ணன் வேலையில் மத்திய அரசு மூர்க்கத்தனமாக ஈடுபட்டு வருகிறது என்பது நினைவில் இருக்கட்டும்?).
2013 ஆம் ஆண்டு முதல் மத்திய தொகுப்புக்கு மாநிலங்கள் அளித்த இடம் 72,500. இதில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடங்கள் பூஜ்யம்! பூஜ்யம்!! பூஜ்யமே!!! ஆம் பட்டை நாமம்! பட்டை நாமம்!! பட்டை நாமமே!!!
அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் இருந்துவரும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசின் ஆணையும், சுற்றறிக்கைகளும் கண் எதிரே இருந்தும். அதனைப் பின்பற்றாதது அயோக்கியத் தன்மை என்று நாகரிகமாகக் கூற வேண்டும்.
ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட மக்களின் வயிற்றில் அடிப்பதுதானே! ஆரியத்தின் வருணாசன தர்மம்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கேட்டால் பா£ப்பன பா.ஜ.க. அரசு சொல்லும் பதில் என்ன தெரியுமா? அது பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதுதான் காரணம் என்று கூறித் தப்பிக்கப் பார்க்கிறது.
உண்மை என்ன?
உ.பி.யைச் சேர்ந்த சகோனி குலாரி என்ற மாணவி தொடுத்த வழக்கு என்பது இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் – கொடுத்திருந்தால் தனக்கும் கிடைத்திருக்கும் என்பதுதான்.
கொடுக்கக்கூடாது என்பதல்ல வழக்கு. இங்கு எங்கிருந்து வந்தது நீதிமன்ற அவமதிப்பு (SUBJUDICE)
மத்திய அரசு ஒரு நிமிடம் செலவழித்து இடஒதுக்கீடு அளிக்கிறோம். அது எங்கள் கொள்கைதான் என்ற பதிலைச் சொல்ல வேண்டியதுதான் பாக்கி. – உடனே, பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அந்த நொடி முதலே செயலுக்கு வந்து விடுமே!
இந்த ஒரே ஒரு நிமிடம் செலவு செய்து ஒரே ஒரு வார்த்தையைச் சொல்லுவதற்கு பா.ஜ.க. அரசுக்கு மனம் வரவில்லையே – ஏன்?
இதற்கு இத்தனை ஆண்டுகள் தேவையா? அடேயப்பா! எத்தகைய கல்லு நெஞ்சம்!
‘கன்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்தும் காகத்தை யென் செயப்படைத்தார்?‘ என ‘விவேக சிந்தாமணி’யின் பாடல் (எண் 82) தான் நினைவிற்கு வந்து தொலைகிறது.
இதில் ஆரிய பிஜேபி ஆட்சியின் செயல்பாட்டைக் கோடிட்டுக் காட்ட வேண்டிய படு பாதகமான தகவல் ஒன்றுண்டு.
பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று அவசர அவசரமாகச் சட்டம் இயற்றிய ஒரே வாரத்தில் பந்தயக் குதிரைப் பாய்ச்சலில் செயல்படுத்தினார்களே, அது எப்படி?
மூன்று ஆண்டு காலமாக சட்டப்படி கிடைக்க வேண்டிய இடங்களை இழந்து தவிக்கும் பிற்படுத்தப்பட்டோரையும் சட்ட விரோதமாக அவசர அவசரமாக உயர் ஜாதியினரக்குக் கொண்டு வரப்பட்ட 10 விழுக்காட்டையும் கண்முன்னே நிறுத்திக் கருத்தூன்றிப் பார்க்கட்டும். இந்த ஆரிய பார்ப்பன நயவஞ்சக நஞ்சின் கொடூரம் – உக்கிரம் – படம் எடுத்தாடும் பாம்பின் தன்மை எத்தகையது என்பது பளிச்சென்று புரியுமே!
இன்னொரு செய்தி உண்டு. மருத்துவக் கல்வியில் மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஏன் இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்று கேட்டால், அது பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்று கூசாமல் சொன்னார்கள் அல்லவா! அவர்களைத் திரும்பியடித்துக் கேட்க முடியும்.
உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான (EWS) இடஒதுக்கீட்டை எதிர்த்து மூன்று வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளனவே – அப்படி இருக்கும்பொழுது, இது மட்டும் அமல்படுத்தப்படுவது எப்படி?
1.தி.மு.க., 2.விடுதலைச் சிறுத்தைகள், 3.பூனாவைச் சேர்ந்த தொழிலதிபர் தெஹ்சீன் பூனாவல்லர்.
இவர்கள்தான் அந்த வழக்கைத் தொடுத்தவர்கள்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்றால் ஒரு நீதி, உயர் ஜாதிகாரர்களுக்கு என்றால் வேறொரு நீதியா?
ஒரு குலத்துக்கொரு நீதி என்னும் பார்ப்பன மனு தர்மம் இன்றும் இறுமாந்து நிற்கிறது என்பதைத்தானே இது காட்டுகிறது.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கிட இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளதா என்று கேட்டால் – இல்லை. இல்லவே இல்லை என்பதுதான் பதில்.
பி.வி.நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருந்தபோது, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 இடஒதுக்கீடு என்று கொண்டு வரப்பட்ட திட்டத்தை உச்சநீதிமன்றம் (1992) செல்லாது என்று கறாராகத் தள்ளுபடி செய்துவிட்டதே – இது இந்த பா.ஜ.க. அரசுக்குத் தெரியாதா?
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தலைமை தாங்கி நடத்தியக் கிளர்ச்சியால் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தின் போது சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு இடஒதுக்கீடு என்பதோடு பொருளாதார அளவுகோலும் சேர்க்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட திருத்ததிற்கு எதிராக 243 வாக்குகளும் ஆதரவாக 5 வாக்குகளும் மட்டுமே கிடைத்தன என்பது இவர்களுக்குத் தெரியுமா?
கருவிலேயே சிதைக்கப்பட்ட கிள்ளி எறியப்பட்ட ஒன்றை மத்திய அரசு உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஒன்றை அவசர கதியில் கொண்டு வந்து செயல்படுத்தியும் காட்டி விட்டார்களே.
இதன் விளைவு என்ன?
மாதம் 66 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டும் உயர்ஜாதியினர் ஏழைகளாம்! எப்படி இருக்கிறது?
2003இல் பிஜேபி ஆட்சியில் பொதுப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளித்திட அமைச்சர் குழுவை மத்திய பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. அந்தக் குழு 2004ஆம் ஆண்டு அறிக்கையை அளித்த நிலையில் எதிர்க்கட்சிகளும் கூட்டணி கட்சிகளும்கூட எதிர்ப்புப் புயலைக் கிளப்பியதால் அது கைவிடப்படவில்லையா?
மருத்துவக் கல்வியில் மத்தியத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடக்க வேண்டிய 7,737 இடங்கள் இழந்தனர் என்றால், 7,733 பிற்படுத்தபடுத்தப்பட்ட குடும்பங்களில் வரவேண்டிய டாக்டர்களின் வாய்ப்பு கெடுக்கப்பட்டது; தட்டிப் பறிக்கப்பட்டது என்றுதானே பொருள்.
எத்தகு கொடுமை! இழந்தது இழந்ததுதானே – அதனை ஈடு செய்வது எப்படி?
பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்திட்ட இந்த 371 இடங்கள் கூட இடஒதுக்கீடு அடிப்படையில் கிடைக்கப் பெற்றதல்ல – பொதுப் போட்டியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற வகையில் அவர்களுக்குக் கிடைக்கப் பெற்றதாகும். அப்படிப் பார்த்தாலும் அது 3.8 விழுக்காடே!
அதே நேரத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் என்ற பெயரால் அவர்கள் பெற்ற இடங்கள் 635 (அதாவது பிற்படுத்தப்பட்டோருக்கு 371 இடங்கள் – உயர்ஜாதி ஏழைகளுக்கு 635 இடங்கள்).
மக்கள் தொகையில் 52 விழுக்காடுள்ள (மண்டல் குழு பரிந்துரை அறிக்கைப்படி) பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்து 371 இடங்கள்! 10% உயர்ஜாதியினருக்குக் கிடைத்ததோ 635 இடங்கள். இதைத்தான் தந்தை பெரியார், “இந்தியாவில் நடப்பது ஜனநாயகமல்ல – பார்ப்பன நாயகம்’’ என்றார்.
மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி யாருக்கானது என்பது புரியாதவர்களுக்கும் இப்பொழுது புரிந்திருக்குமே!