எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : தமிழர் உரிமையை திராவிடத்தால் இழந்தோமா?

மே 16 - ஜுன் 15, 2020

நேயன்

 இன்றைக்குப் பெங்களூரிலும், கர்நாடகத்தின் பல பகுதிகளிலும், ஆந்திராவிலும், கேரளாவிலும் தமிழர்கள் இலட்சக் கணக்கில் வாழ்கிறார்கள், அதேபோல் அவர்களும் தமிழகத்தில் லட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். இன்றைக்குப் பொறியியல் படித்த தமிழ் இளைஞர்கள் பெரும்பாலோர் பெங்களூரில்தான் வேலை பார்க்கின்றனர்.

ஆனால், எந்த ஆரியப் பார்ப்பனர் நிறுவனத்திலாவது அவர்களைத் தவிர வேறு யாருக்காவது வேலை தந்திருக்கிறார்களா? பெரியார் ஆரிய எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிய காலத்தில், அவர்களின் ஆதிக்கமும், கொடுமையும், நம் மக்களை இழிவுபடுத்தியதும், தாழ்த்தியதும், உயர வரவிடாமல் நசுக்கியதும், நம் திறமைகளைப் பல நூற்றாண்டுகளாய் ஒடுக்கியதும் கொஞ்சம் நஞ்சமா? பழைய வரலாற்றை, நடப்புகளை திருப்பிப் பார்த்தால் உணர்வுள்ள தமிழனின் இரத்தம் கொதிக்குமே!

உண்மை இப்படியிருக்க தமிழன் எதிர்த்துப் போராட வேண்டியது ஆரியப் பார்ப்பனர்களைத்தானேயன்றி மலையாளிகளையோ, கன்னடர்களையோ, தெலுங்கர்களையோ அல்ல. நமக்கும் அண்டை திராவிட மாநிலத்தவர்களுக்கும் உள்ள சிக்கல்கள் உரிமை சார்ந்தவை. பங்காளிச் சண்டை போன்றது. ஒரு வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பி அடித்துக் கொள்ள வில்லையா? கொலைகூடச் செய்வதில்லையா? அப்படித்தான் இது.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கக் கூடாது என்று அடம் பிடித்தனர். அமைதியான புரிந்துணர்வு பேச்சின் மூலம் சிலை திறக்கப்பட்டது.

இப்படி காவிரி நீர்ச் சிக்கலானாலும், முல்லைப் பெரியாறு ஆனாலும், பாலாறு சிக்கலானாலும் ஒருவருக்கொருவர் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்து உரிமைப்படி, நீதிப்படி தீர்வு தர வேண்டும். இதுவே சரியான வழிமுறை.

இதற்காக நாம் அவர்களுடன் மோத வேண்டும் என்று குணா போன்றோர் உசுப்புவது, உண்மை எதிரிகளான  ஆரியப் பார்ப்பனர்களை ஒதுக்கிவிட்டு, நம் இனத்தவர்களுக்குள் மோத விடுவதும் அதற்கு வழிகாட்டும் செயலாகும்; தமிழர்களுக்குச் செய்யும் பச்சைத்  துரோகமாகும்.

ஆகவே, பெரியார் அன்றைக்கு ஆரியப் பார்ப்பனர்களை எதிரியாகக் கொண்டு, இனப்போர் செய்ததும், அவர்கள் ஆதிக்கத்தைத் தகர்த்து நம்மை தட்டி எழுப்பி உயர்த்தியதும் சரியான அணுகுமுறையாகும்.

தெற்காசியா முழுமைக்கும் உரிமையுடையவர்கள் தமிழர்கள். அந்தத் தமிழர்களுடன் அயலவர் கலந்தபோது அவர்கள் மொழியும் தமிழுடன் கலந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்றவையாக தமிழ் மாறி, மொழியால் தமிழர்கள் பிரிந்து கன்னடர், தெலுங்கர், மலையாளி என ஆயினும் அவர்கள் யார்? தமிழ் இனமக்கள் அல்லவா? ஆக, தமிழ் இன மக்கள் மொழியால் பிரிந்தாலும் இனத்தால் தமிழ் இனம் என்பதால் அவர்களை இரத்த உறவோடு சேர்த்துக்கொண்டதுதான் மெய்ம்மைக் கோட்பாடாகும். மாறாக, தமிழ் பேசுகின்றவர்கள் என்கின்ற அடிப்படையில், தமிழ்நாட்டில் இருப்பவர்கள் என்ற அடிப்படையில், தமிழர்களை மொழி அடிப்படையில் அணிசேர்க்கும்போது தமிழர் அல்லாதாரும், ஆரியர்களும் அக்கோர்வையில் வருகின்றனர். எனவே, மொழி அடிப்படையில் தமிழ் மண்ணில் செய்யப்படும் பாகுபாடு உண்மைக்கும், உறவுக்கும் மாறான பொய்மைக் கோட்பாடாகும்.

மேலை நாடுகளின் மக்கள் பகுப்பு மொழி அடிப்படையில் நிகழ்த்தப்பட்டபோது, அங்கு மொழியே இனத்திற்கு அடிப்படை ஆயிற்று. இங்கு ஓர் இனம் பல மொழியைப் பேசும் நிலை இருப்பதால் மொழி அடிப்படையில் இனப்பகுப்பு இயலாமல் போனது. இந்த இயல்பறிந்தே தந்தை பெரியார் திராவிடம் என்ற சொல் மூலம், இன அடிப்படையில் அணி சேர்த்தார்.

தெற்காசியப் பகுதிக்கு ஒட்டுமொத்த உரிமையுடைய தமிழினம் சிதைந்ததற்கும், தாழ்ந்ததற்கும், வீழ்ந்ததற்கும் ஆரியர் வருகையும் சமஸ்கிருத கலப்பும் அல்லவா காரணம்? இதை மொழியியலும், மாந்தவியலும் அய்யத்திற்கு இடமின்றி ஆதாரத்தோடு உறுதி செய்கின்றனவே. ஆரியருக்கு அடுத்து அரேபியர், மங்கோலியர், பாரசீகர் என்று பலரும் ஊடுருவியதன் விளைவல்லவா தமிழினம் கலந்து, சிதைந்து போகவும், தமிழில் பிற மொழி கலந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் என மாறவும் காரணம்.

இளங்கோ காலத்தில் மலையாளம் இல்லையே! அது சுத்த தமிழ் பேசிய சேர நாடல்லவா? சமஸ்கிருத கலப்பும், ஆரிய ஆதிக்கமும்தானே மலையாளம் உருவாகக் காரணம்? திராவிடமா காரணம்? திராவிடம் என்பது அப்போது இல்லையே!

பெரியார் காலச் சூழலுக்கும், இந்தியாவில் நிகழ்ந்த அரசியல், சமூக மாற்றங்களுக்கும் ஏற்ப தன்னுடைய அணுகுமுறைகளை மாற்றி வழி நடத்தினார். அதில் ஏற்படுவது மாறுபாடுகள், வேறுபாடுகள், முரண்பாடுகள் அல்ல. அவை பரிணாம வளர்ச்சிப் போக்குகள். அந்த அடிப்படையில்தான் அவர் சூழலுக்கேற்ப முதலில் திராவிட நாடு கோரிக்கையை எடுத்தார். அதன்பின், தமிழ்நாடு கோரிக்கையை எழுப்பினார்.

மொழியடிப்படையில் மாநிலப் பிரிவுகள் என்றவுடன், சென்னை இராஜ்யம் என்பதை, தமிழ்நாடு என்று பெயர் மாற்றவும் செய்யவேண்டும் என்று முதன்முதலில் கோரிக்கை வைத்தவர் பெரியார் என்பதை குணா எதிரிகள் குற்றஞ் சாட்டுவது மோசடியல்லவா? பெரியார் அப்போது கூறியவற்றைப் பாருங்கள்.

“திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டைவிட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புகூட, மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் (எதிர்ப்பிற்கும்) இடமில்லாத தமிழகத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக்கூடாது என்று பார்ப்பானும், வடநாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்துப் பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது.

இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும். எந்தத் தமிழனும், அவன் எப்படிப்பட்ட தமிழன் ஆனாலும் இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொண்டிருக்கமாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.

இதைத் திருத்த, தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை, டெல்லி, சட்டசபை, கீழ் மேல் சபை அங்கத்தினர்களையும் மிக மிக வணக்கத்துடன் இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்…’’ என்று 1955ஆம் ஆண்டே உரிமைக் குரலை உணர்வு பொங்க எழுப்பிய உன்னத தலைவர் பெரியார்.

-‘விடுதலை’ அறிக்கை, 11.10.1955

இதைவிட தமிழ் உணர்வுடன், தமிழர் பற்றுடன் வேறு என்ன கூறமுடியும். மேற்கண்ட பெரியாரின் வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தால் அவர் எவ்வளவு உண்மையாகவும், உணர்வு பூர்வமாகவும் இந்தக் கருத்தை, இக்கோரிக்கையை வைத்துள்ளார் என்பது எவருக்கும் விளங்கும்.

மொழிவழி மாநிலம் வந்தபின் இனி இந்தியாவில் பிரிவினை கோரிக்கை நடைமுறை சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார்.

உண்மை இப்படியிருக்க அவர் தமிழர் தேசிய மெய்ம்மையை மறைக்க திராவிடப் பொய்மையைத் திணித்தார் என்பது உள்நோக்கத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டு ஆகும்.

அவர், தமிழர் நாடு என்ற தமிழ்த் தேசிய உணர்வை மறைக்க விரும்பியிருந்தால், தமிழ்நாடு என்று பெயர் வேண்டி அவ்வளவு உருக்கமாக வேண்டுகோள் வைப்பாரா? தமிழ்நாடு தமிழனுக்கே என்ற முழக்கத்தை முதன்முதலில் வைத்திருப்பாரா?

தந்தை பெரியார் ஊட்டிய விழிப்பும், உணர்வும் பரவியதன் விளைவே இன்று தமிழ்த் தேசியம் பேசும் எழுச்சி எழுந்ததற்குக் காரணம்.

எனவே, இனப்பகை எது, உரிமைச் சிக்கல் எது என்பதற்கான வேறுபாடு அறிந்து தமிழர்கள் செயல்பட வேண்டும். பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு இல்லாத தமிழ்த் தேசியம் யாருக்குப் பயன்படும்? இதை எதிரிகள் சிந்திக்க வேண்டும். ஆனால், இவற்றைக் கருத்தில் கொள்ளாது எதிரிகள்  குற்றஞ்சாட்டுவது அறியாமையில் அல்ல, ஆரியத்தின் மீதுள்ள பற்றுதலால். எனவே, இவர்களிடமும் இவர்கள் பரப்பும் கருத்துக்களை ஏற்பதிலும் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில், அது ஆரியத்திற்கே ஆதாயம் தரும்! தமிழர்க்கு அழிவு தரும்!

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *