வரலாற்றுச்சுவடு : ஆரியம் தகர்த்த அயோத்திதாசப் பண்டிதர்

மே 16 - ஜுன் 15, 2020

சிகரம்

1845ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாள் சென்னை தேனாம்பேட்டையில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் கந்தசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்த அயோத்திதாசர், தேர்ந்த, சிறந்த ஆய்வுநுட்பங் கொண்ட மருத்துவர். தென்னகத்தில் ‘புத்தம்’ மறுமலர்ச்சியடைய காரணமாய் அமைந்தவர். மனித விரோத ஜாதி, மதம், தீண்டாமை இவற்றிற்கு எதிராய் மிகத் தீவிரமாய்ப் போராடியவர். அவர் நடத்திய போர் அறிவு சார்ந்தது. தனது புலமையினால், ஆய்வு நுட்பத்தினால் உண்மைகளைக் கொண்டு வந்து, எதிரிகளின் சூழ்ச்சியை வீழ்த்தியவர்.

அயல்நாடுகளிலிருந்து வந்தேறிய ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராய் உறுதியுடன் போராடியவர்.

அமெரிக்க மக்கள் உரிமைப் போராட்ட வீரர் கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் அவர்களின் நெருங்கிய நண்பர்.  தீண்டத்தகாதவர்களாய் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டவர். சென்னை அடையாறு பகுதியில் தியோசபிகல் சொசையிட்டியை 1884இல் நிறுவக் காரணமாய் அமைந்தவர்.

1894இல் கர்னல் ஆல்காட் அவர்களுடன் இலங்கை போன்ற பவுத்த நாடுகளுக்குச் சென்று பவுத்த தர்மக் கொள்கைகளை விளக்கிப் பேருரையாற்றியவர். தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கத்தைச் சென்னையில் நிறுவியவர். இந்தச் சங்கம்தான் பிற்காலத்தில் தென்னிந்திய பவுத்த சங்கம் என்ற பெயரில் செயல்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களிடையே மீண்டும் பவுத்தத்தைப் பரவச் செய்ய, ‘தமிழன்’ என்ற இதழை நடத்தினார்.

ஆதிதிராவிடர்கள் பவுத்தர்கள்; அவர்களை இந்துக்களுடன் சேர்த்து சென்செஸ் கணக்கெடுக்கக் கூடாது என ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்தார். இவரது கோரிக்கையில் உள்ள நியாயத்தை அறிந்த ஆங்கில அரசு, 1910ஆம் ஆண்டு சென்செஸ் முதல், ஆதிப் பழங்குடியினர் ஒரு தனித் தேசிய இனம் என்று கணக்கிடப்பட்டது.

ஒடுக்கப்பட்டோரின் உரிமைகள் எங்கு பறிக்கப்படுகிறதோ, எங்கு அவர்கள் இழிவாக, அடிமைகளாக நடத்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்திய பெருமை இவரைச் சாரும்.ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெறுவதன் மூலமே தம்மை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதால், அவர்களின் கல்விக்காகப் பள்ளிகளைத் திறக்கவும், அங்கு பகலுணவு இலவசமாக அளிக்கவும் பின்னால் வந்தவர்கள் செய்த விரைவான நடவடிக்கைகளுக்கு விதையிட்டவர் இவரேயாவார்.

ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும், அறிவைத் திருடவும், தமிழ் இலக்கியங்களில் அவர்கள் செய்த செருகல்கள், தில்லுமுல்லுகள் எல்லாவற்றையும் சான்று காட்டி வெளிப்படுத்திய மாபெரும் பண்டிதர் இவர்.

இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களை ஊருக்குப் புறத்தே ஒதுக்கித் தள்ளி, அவர்கள் பொது வீதியில் நடக்கக்கூடாது, பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது, நல்ல குடிநீர் குடிக்கக்கூடாது, படிக்கக் கூடாது, நல்ல பெயர்களைக் கூடச் சூட்டிக் கொள்ளக் கூடாது, பொதுக்கோயிலில் வழிபடக்கூடாது, தீண்டிக் கொள்ளக்கூடாது என்று வந்தேறிய அந்நிய நாட்டு ஆரியர்கள் அநியாயமாக கூறுவதை ஏற்றுக் கொண்டு வாழலாமா? என்று சொந்த உரிமை பற்றியும், சுயமரியாதைப் பற்றியும் உணர்வூட்டினார்.

ஜாதி பேதத்தை நிலைநாட்டும் இந்துமதம், சிலருடைய தன்னலத்திற்காக, அவர்களது பிழைப்புக்காக, அவர்களது ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதே தவிர, பொது நலன்கருதி உருவாக்கப்பட்டது அல்ல என்ற அப்பட்டமான உண்மையையும் ஆணியடித்தாற் போன்று கூறினார்.

ஆரியர்களுக்கென்று சொந்த அறிவுத்திறன் எதுவும் இல்லை என்றும், தமிழர்களுடையதை, புத்தருடையதை, வள்ளுவருடையதைத் திருடி, அதைத் தங்கள் மொழியில் பெயர்த்து, அந்தச் சிறந்த கருத்துகள் தங்களால் கூறப்பட்டதாக ஒரு பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களை நம்பச் செய்தனர் என்று ஆய்வு செய்து கூறினார் அயோத்திதாச பண்டிதர்.

மனு முதலான ஆரிய நூல்கள் உழவுத் தொழிலை இழி தொழில் என்று கூறிய நிலையில், அர்த்த சாஸ்திரம் உழவுக்குச் சிறப்பிடம் அளித்தது. இது திருக்குறளை ஏற்றதன் விளைவு என்றார். அர்த்த சாஸ்திரம் கி.பி. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று மேலைநாட்டு ஆய்வாளர்கள் கூறும் முடிவும் இதை உறுதி செய்கிறது.  மேலும் அர்த்த சாஸ்திரம் ஒரு தொகுப்பு நூல் மட்டுமே. இதற்கு முன்னிருந்தோர் கூறிய கருத்துகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டது இது என்பதும் ஆய்வின் மூலம் புலப்படுகிறது.

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை’’ என்ற குறளின் அடிப்படையில்தான் அர்த்த சாஸ்திரத்தில் உழவின் சிறப்பு கூறப்பட்டது.

அர்த்த சாஸ்திரத்தின் முதல் அத்தியாயத்திலும் பத்தாம் அத்தியாயத்திலும் அரசன் ஆராய்ந்து அறிவது பற்றி கூறப்படும் கருத்து.

“அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறம்தெரிந்து தேறப் படும்’’

என்ற குறளிலிருந்து பெறப்பட்டது.

அமைச்சர் இயல்பு பற்றி அர்த்த சாஸ்திரத்தில் கூறப்படும் கருத்து.

“அகலாதணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்’’

என்ற குறளிலிருந்து பெறப்பட்டது.

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு’’

என்ற குறளின் கருத்தையே,

பொருளை அடைதலும், பெற்றன காத்தலும், காத்தவற்றை வளர்த்தலும், அவற்றை நல்வழியில் பயன்படுத்தலும்.. என்ற அர்த்த சாஸ்திரப் பகுதி ஏற்றுக் கூறுகிறது.

“கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம்’’

என்று வள்ளுவர் கூறியதையே,

கொடுந்தண்டம் மக்களை நடுக்கமுறச் செய்யும்; குறைந்த தண்டம் அவமதிக்கப்படும்; தகுதியான தண்டம் நன்கு மதிக்கப்படும் என்று அர்த்த சாஸ்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

“கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும்’’

என்ற வள்ளுவர் கருத்தையே,

மகிழ்ச்சியுடையாரை மிகுதியாகப் போற்றுதல் வேண்டும். மகிழ்ச்சியல்லாதாரை மகிழ்விக்கும் பொருட்டுப் பொருட் கொடையாலும், இன்சொற்களாலும் சிறப்பிக்க வேண்டும் என்று அர்த்த சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

“பொருள்கருவி மூலம் வினைஇடனொ டைடுந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்’’

என்று குறள் கூறுவதை,

காரியத்தைத் தொடங்குவதற்குரிய உபாயம், வினை செய்வாரும் பொருளும் நிரம்ப உடைமை, ஏற்ற காலம், இடங்களை அறிதல், இடையூறு களைதல், காரியத்தின் பயன் என்னும் அய்ந்தும் சூழ்ச்சிக்கு உறுப்புகளாகும்.. என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்’’

என்ற குறளிலிருந்து பெறப்பட்டது என்று எடுத்துக்காட்டி உறுதி செய்த அயோத்திதாசர்,

சுக்கிர நீதியும் திருக்குறளை பல இடங்களில் எடுத்துக் கொண்டுள்ளது என்று ஆணித்தரமாக உறுதி செய்கிறார்.

தமிழன் வார இதழில் 1907 முதல் 1914 வரை அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் அவரது திறமைக்குச் சரியான சான்றுகள்.

அக்காலத்தில் வெளிவந்த “சுதேசமித்திரன்’’, “இந்தியா’’ போன்ற தமிழ் இதழ்களின் கட்டுரைகளோடு ஒப்பிடுகையில் இவரது கட்டுரைகள் ஆழமும், செறிவும், நுட்பமும் உடையவை.

புகையிலை, மதுவுக்கு எதிராக முழங்கியதோடு, அவற்றின் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்றார். இத்தகு மாமனிதர் 05.05.1914இல் மரணமடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *