கவிதை : சாதிக்குச் சாவு மணி

மே 16 - ஜுன் 15, 2020

 

ஓதிவைத்த அறநெறியை உதறித் தள்ளி

 உலகோரைப் பிரிவினையில் வீழ்த்து கின்ற

சாதியினைக் கருவியென ஏந்தி யுள்ளோர்

 சாதிக்கப் போவதெது? சாற்று வீரா?

தீதியற்றிக் குமுகாய நலனை வீணே

 திட்டமிட்டுக் குலைக்கின்ற தியோர் தம்மை

ஏதிலியாய் ஆக்கிடுவீர்! வெகுண்டே ழுந்தே

 இருந்த இடம் தெரியாமல் அழிப்போம் வாரீர்!

 

அறிவியலும் அணுவியலும் ஏற்றம் நல்கும்

 அறிவார்ந்த வாழ்வியலின் போக்கை மாற்ற

வெறிபிடித்தே திரிகின்ற கூட்டத் தாரை

 வீழ்த்திடுவோம்! வென்றிடுவோம்; காலம் எல்லாம்

அறியாமை வறுமைகளின் குழியுள் ஆழ்ந்த

 அடித்தளத்து மக்களையே ஏய்த்து வாழும்

குறிக்கோளைக் கொண்டவரைக் களைகள் போன்ற

 கொடியவரைப் புறக்கணிக்கக் கற்றுக் கொள்வோம்!

 

முன்னேற்றம் விழையாதார்! வளர்ச்சி தன்னை

 முடக்கிவிட நினைக்கின்றார்! சூழ்ச்சி யாலே

பின்னணிக்கு மக்களையே இழுத்துச் செல்லும்

 பிழைசெய்து தம்மடியை நிரப்பு கின்றார்!

என்னாகும் இத்தகையோர் தலைமை ஏற்றால்?

 இருளாகும் நம்வாழ்க்கை! வீணாய்ப் போகும்;

தன்மான மறவர்களே! நம்மைச் சாய்க்கும்

 சாதிக்குச் சாவுமணி அடிப்போம் வாரீர்!

 

– கடவூர் மணிமாறன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *