மரு. இரா. கவுதமன் அவருடன் ஒரு நேர்காணல்
தருமபுரியில் பென்னாகரம் என்ற பின்தங்கிய கிராமத்தில் பிறந்தவர்! அந்த மாவட்டத்தின் முதல் பல் டாக்டர்! அந்த மாவட்டத்தில் எம்.பி.பி.எஸ் படித்த முதல் மருத்துவர்! 1985 ஆம் ஆண்டு தொடங்கி, நீலகிரியில் 22 ஆண்டுகள் உட்பட குன்னூர், கோத்தகிரி, கூடலூர், ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் 30 ஆண்டுகளாக அரசு மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்! குன்னூரில் மட்டும் 8500 முக அறுவை மருத்துவங்களைச் செய்திருப்பவர்! எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகத்தின் வெள்ளிவிழா நிகழ்வில், சிறந்த முக அறுவை மருத்துவருக்கான மதிப்புறு சான்றிதழ் பெற்றவர்! 71 வயதிலும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருப்பவர்! கெரோனா நோய்க் காலத்தில் கூட அவசரகால மருத்துவம் செய்வதற்கான அனுமதியைப் பெற்று மருத்துவம் செய்து கொண்டிருப்பவர்! இவ்வளவு சிறப்புகளையும் பெற்றவரான குன்னூர் மருத்துவர் கவுதமனிடம் கெரோனா பற்றி உரையாடியதிலிருந்து…
வைரஸ் என்றால் என்ன? கெரோனா பற்றிய அறிமுகம்?
பாக்டீரியா என்பது சாதாரணமாக நுண்ணாடியில் பார்க்க முடியும். வைரஸ் எலக்ட்ரானிக் நுண்ணாடியில்தான் பார்க்க முடியும். வைரஸ் என்பது அரை உயிரி. நம் உடலில் இருக்கும் எல்லா செல்களிலுமே நியூக்கிளியஸ் என்ற ஒன்று இருக்கும். அந்த செல்லில் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. என்று இரண்டு பிரிவுகள் இருக்கும். அந்த டி.என்.ஏ.தான் நம்முடைய மரபுகளை உருவாக்குவது. வைரஸில் ஆர்.என்.ஏ. மட்டும்தான் இருக்கும். அதை சுற்றி ஒரு கொழுப்புப் படலம் இருக்கும். அந்த கொழுப்புப் படலத்தை உடைத்து விட்டால் வைரஸ் இறந்து விடும். இது எந்த செல்லோடு சேருமோ, அப்போது வைரஸ்சுக்கு உயிர் வந்துவிடும்.
கரோனா வைரஸ் கிரவுன் என்ற வார்த்தையிலிருந்து வந்தது. கிரவுன் என்றால் மகுடம். சூரியனை சுற்றி இருக்கும் ஒளிவட்டத்திற்கும் கெரோனா என்றுதான் பெயர். இவற்றை வைத்துதான் கெரோனா என்று பெயரிட்டார்கள். இது இந்த குடும்பத்தின் ஏழாவது வைரஸ், முதல் கெரோனா வைரஸ் 1960லேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இளம்பிள்ளை வாதம், எல்லா அம்மை நோய்களும், அக்கி, எய்ட்ஸ் போன்ற நோய்களும் வைரஸ்சால்தான் வருகின்றன.
வைரஸ் எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது?
உலகத்தின் முதல் கொள்ளைநோய் என்பது வைசூரி எனும் பெரியம்மைதான். 1880களில் அந்த நோய் வந்தபோது உலகளவில் ஏறக்குறைய 3 கோடிபேர் இறந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நோயை எப்படி குணமாக்குவது என்று உலகமே விழிபிதுங்கிக் கொண்டிருக்கும்போது, எட்வர்ட் ஜென்னர்தான் முதன்முதலில் அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்தார். அவருடைய வீட்டில் மாட்டுத் தொழுவத்தில் ஒரு பெண் வேலை செய்து கொண்டிருந்தாள். மாட்டுக்கு சிஷீஷ் திஷீஜ் நோய் இருந்திருக்கிறது. பசுவின் பால்மடியில் கொப்புளங்கள் இருக்கும். வைசூரி நோய் அய்ரோப்பிய நாடுகளில் கடுமையாக பரவிக்கொண்டிருந்த நேரம் அது. அப்போது அந்தப் பெண்ணை பெரியம்மை நோய் தாக்கவில்லை. உலகம் முழுவதும் இருக்கிறது, ஊர் முழுவதும் இருக்கிறது, அந்தப்பெண் வாழும் தெரு முழுவதும் இருக்கிறது. ஆனால் அந்த பெண்ணுக்கு வரவில்லை! இது எட்வர்ட் ஜென்னரை சிந்திக்க வைத்தது. சிஷீஷ் திஷீஜ் தொற்றுள்ள பசுவைப் பராமரிக்கும் அந்தப்பெண்ணுக்கு நோய் வராமல் போயிருக்கக் காரணம், சிஷீஷ் திஷீஜ் கிருமிதான் என்றொரு முடிவுக்கு வந்தார். அந்த சிஷீஷ் திஷீஜ் கிருமியை எடுத்து மிருகங்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்தார். அவைகளுக்கெல்லாம் அந்த பெரியம்மை நோய் வரவில்லை. பசுக்களுக்கு கொஞ்சமாக செலுத்தியபோது பசுக்களுக்கும் அந்த நோய் வரவில்லை. இப்படித்தான் வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசி போட்டபிறகுதான் எல்லா மாரியம்மன்களும் ஓடிப்போனார்கள்.
வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?
ஆராய்ச்சி ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு ஏறக்குறைய இன்னும் ஓர் ஆண்டுகாலம் ஆகும். ஏனென்றால், முதலில் அந்த தடுப்பூசியை கண்டுபிடித்து மிருகங்களுக்குப் பயன்படுத்திப் பார்த்து, அதற்கு எதாவது பக்கவிளைவுகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பிறகுதான் உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதியின் பேரில் மனிதர்களுக்கு செலுத்தி, அதிலுள்ள சாதக, பாதகங்களை அறிந்த பிறகுதான். மனிதர்களுக்கு இயல்பாக கொடுக்க முடியும். ஆகவே நிச்சயம் தாமதம் ஏற்படத்தான் செய்யும்.
இப்போதைக்கு, மருத்துவமனையில் நோய் அறிகுறிகளுக்கான சிகிச்சை மட்டும்தான் அளிக்கிறார்கள். இப்படி மருந்துகளை கொடுத்துக்கொண்டே வரும்போது, ஏழு நாட்களுக்குள் உடலில் உள்ள எதிர்ப்பணுக்கள் உற்பத்தியாகி வைரசை தானாகவே அழித்துவிடும். இதுதான் இப்பொழுது கெரோனாவுக்கு செய்து கொண்டிருக்கிற சிகிச்சை.
மத்திய, மாநில அரசுகளின் தடுப்புப் பணிகள் போதுமானதாக இருக்கிறதா?
நவம்பர் மாதத்திலேயே சீனாவில் வூகான் மாகாணத்தில் முதல் தொற்று கண்டறியப்பட்டுவிட்டது. டிசம்பரில் 3,000த்திற்கும் மேற்பட்ட தொற்றுகள் ஏற்பட்டது. அப்போதே மத்திய அரசு எச்சரிக்கையடைந்திருக்க வேண்டும். ஜனவரியிலிருந்து இந்தியாவிற்கு பல்வேறு விமான நிலையங்களின் மூலம் வந்தவர்கள் வெறும் 5 இலட்சம் பேர்தான். அவர்களுக்கு மட்டும் உரிய சிகிச்சை அளித்திருந்தால், இப்பொழுது 135 கோடி மக்களையும் சிரமப்படுத்த வேண்டியது வந்திருக்காது. பொருளாதார வீழ்ச்சியிலும் இவ்வளவு கீழே போயிருக்கத் தேவையில்லை. அந்த நேரத்தில், நமஸ்தே டிரம்ப் என்று டிரம்ப்க்கு வரவேற்பு அளித்துக் கொண்டிருந்தோம். டில்லியில் முஸ்லிம்களை படுகொலை செய்து கொண்டிருந்தோம். ஆகவே, கெரோனாவை நாம் கட்டுப்படுத்தத் தவறிவிட்டோம். சீனா நமது அண்டை நாடு. நமக்கு உடனடியாக பரவுவதற்கு சாத்தியங்கள் அதிகம். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போலவே மத்திய அரசு இதிலும் தவறு செய்திருக்கிறது,
முன்னெச்சரிக்கை இல்லாதது மட்டுமல்ல, பிரதமர் திடீரென்று ஒரு ஞாயிற்றுக்கிழமை தடையுத்தரவு என்கிறார். 5 மணிக்கு கைத்தட்டுங்கள் என்கிறார். பிரதமரின் ஆதரவாளர்கள், 135 கோடி மக்கள் கையொலி எழுப்பினால் -கிருமி செத்துவிடும் என்றார்கள். அப்புறம் 9 மணிக்கு வௌக்கேத்துன்னு சொன்னார். எதுக்கு? அறிவியல் பூர்வமான அணுகுமுறை இல்லை. அதற்கெதிராக மக்களை மதரீதியாக மூளைச் சலவைச் செய்வதில்தான் குறியாக இருக்கிறார்களே தவிர, கெரோனாவை ஒழிப்பதற்கான சரியான திட்டமிடல் இவர்களிடம் இல்லை. ஊரடங்குக்குப் பிறகான திட்டங்களையும் அரசு இன்னமும் அறிவிக்கவில்லை. வெளிமாநிலத் தொழிலாளர்கள் பசி பட்டினியால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையிலும் நாட்டை விட்டு ஓடியவர்களுக்கு 68,000 கோடியை தள்ளுபடி செய்திருக்கிறார். இது மத்திய அரசின் அப்பட்டமான தோல்விதான்.
தமிழக முதல்வர் திடீர்னு 4 நாள் முழு ஊடரங்கு அறிவிச்சு. அவ்வளவு பேரும்போய் கோயம்பேட்டில் நின்னாங்க. இப்போது, கோயம்பேடு நோய்த்தொற்றின் மய்யமாகிவிட்டதாக செய்திகள் வருகின்றன. தமிழக அரசுக்கு இதில் சரியான திட்டமிடல் இல்லை. தமிழக அரசு போன மாதம் 1000 ரூபாய் கொடுத்தாங்க. இந்த காலக்கட்டத்தில் இது சாதாரணமான தொகை. அதேபோல மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோரின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிசெய்வில்லை. ஆகவே அவர்களுக்கே தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. குன்னூரில் எனது சொந்தப்பொறுப்பில் காவலர்கள் சுகாதாரப் பணியாளர்கள் பலருக்கும் கையுறைகள், முகக்கவசம் போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இதிலும் தமிழக அரசு கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அந்த வகையில் தமிழக அரசுக்கும் இது தோல்விதான்.
அமெரிக்காவில் கெரோனா தொற்று அதிகமாகப் பரவ என்ன காரணம்?
இந்தியாவில் தொற்று தொடங்கிய சில நாட்களுக்கு அமெரிக்காவிலும் தொடங்கியது. அமெரிக்காவில் 12 லட்சத்திற்கு மேல் தொற்று பரவியிருக்கிறது. 75,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருக்கின்றனர். இந்தியாவில் பாதிப்பு 55,000 க்கு மேல்தான் வந்திருக்கிறது. 1,800 க்கும் மேற்பட்டோர்தான் இறந்திருக்கின்றனர். ஏன் இவ்வளவு வேறுபாடு? ஒன்று, இந்தியாவில் அசுத்தங்களுக்கிடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, நாள்தோறும் கோடிக்கணக்கான வைரஸ்களை இயல்பாகவே நாம் சுவாசித்து, இயல்பாகவே நமதுஉடலில் எதிர்ப்பு சக்தி உருவாகப் பெற்றிருக்கிறோம். ஆகவே, கெரோனோ பாதிப்பு குறைவாக இருக்கிறது. அமெரிக்காவில் இதற்கு நேர் எதிரான நிலை. ஆகவே அமெரிக்கர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைவாகப் பெற்றிருக்கிறார்கள் என்பது எனது கருத்து. இரண்டாவது, பி.சி.ஜி. என்பது காசநோய் வருவதை தடுப்பதற்காக போடப்படும் தடுப்பூசி. இந்தியாவைப் பொறுத்தவரையில் 3 நாட்கள் ஆன குழந்தைகளுக்குக்கூட இந்த தடுப்பூசியை போட்டுவிடுகிறார்கள். இது நமது நுரையீரலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். ஆனால் அமெரிக்காவில் காசநோயும் கிடையாது. பி.சி.ஜி.யும் கிடையாது. இதுவும் ஒரு காரணம் என்று அங்கிருக்கும் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
கெரோனாவுக்கு வெவ்வேறு சிகிச்சை முறைகள் ஏன்?
பொறியியல் போல் அல்லாமல், மருத்துவம் என்பதே யூகத்தின் அடிப்படையில் செய்வதுதான். கெரோனாவை முதலில் நுரையீரல் மண்டல நோய் என்று கணித்தார்கள். இப்போதோ இரத்தக்குழாய்களுக்குள்ளேயே, இரத்த உறைவை உண்டாக்குகிறது. இதனால் இதயம் பாதிக்கப்பட்டு மரணம் ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியிடம் சண்டையிட்டு ஒரு கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை வாங்கினார். ஆனால் அந்த மருந்து இதயத்தைப் பாதிக்கிறது என்பதால் அதை கொடுக்க வேண்டாம் என்று இப்போது, அவரே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆகவேதான் யூகங்களின் அடிப்படையில் சிகிச்சைகள் மாறுகின்றன. எந்த வைரஸூக்கும் உலகளவில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அடிப்படையில் நமது நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
மாநில அரசுகளின் செயல்பாடுகள் எப்படியிருக்கிறது?
குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் 40 விழுக்காடு பெற்று தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. அதேபோல அதிக பரிசோதனைகளைச் செய்த மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடம். அதற்குக் காரணம், திராவிடர் இயக்ககளின் சாதனைகளுள் ஒன்றெனச் சொல்லப்படும், மருத்துவத்துறையின் அடிப்படை கட்டுமானங்கள்தான். ‘நீட்‘
தேர்வு எழுதாத மருத்துவர்களின் சிறப்பான பணிகள்தான் இதற்குக் காரணம். தமிழகத்தில் இதுவரை இறந்தவர்கள் வெறும் 40 பேர் மட்டும்தான். விழுக்காட்டளவில் 0.68 தான். அதாவது 100 பேருக்கு ஒருவர்கூட சாகவில்லை.
தமிழகத்தைப் போலவே கேரள அரசை எடுத்துக்கொண்டால் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், மிகச்சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். முதல் தொற்று கேரளாவில் வந்தபோதே, தேவையான நிவாரண நிதியை அறிவித்து. எல்லாருக்கும் இலவசமாக ரேசன் பொருள், எல்லோருக்கும் 5000 ரூபாய் நிவாரணத் தொகை, பரிசோதிப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தியது, பிளாஸ்மோதெரபியை அய்.சி.எம்.ஆர்.அய். கேட்காமலேயே துணிச்சலாக பயன்படுத்தியது ஆகியவை குறிப்பிடத்தக்கன. கேரளாவில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை வெறும் 4 மட்டும்தான்.
அதற்கடுத்து இந்தியாவிலே பாராட்டத்தக்க இன்னொரு மாநிலம், பிஜு பட்நாயக் மகன் நவீன் பட்நாயக் முதலமைச்சராக இருக்கும் ஒடிசா. அவரும் இதேபோல அறிவியல் ரீதியாக இதை அணுகியதால் கொரோனா நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மற்ற மாநிலங்கள் சிறப்பாக செயல்படவில்லை.
தமிழகத்தில் சமூகப்பரவல் தொடங்கிவிட்டதா?
நமது மக்கள்தொகைக்கு லட்சக்கணக்கான மக்களுக்கு வந்திருக்க வேண்டும். இப்பொழுதுதான் பரிசோதனைகள் அதிகமாக செய்ய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதால் தொற்றுகளும் அதிகமாக கண்டுபிடிக்கப்படுகின்றன. அதைவைத்து சமூகப்பரவல் தொடங்கிவிட்டதாகக் கருதவேண்டிய அவசியம் இல்லை. முதலில் 500 பேருக்கு மட்டும்தான் பரிசோதிக்க வேண்டிய வாய்ப்பு இருந்தது. இப்போது நாளொன்றுக்கு 10,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். தமிழ்நாட்டில் இதுவரையிலும் 1.50 லட்சம் பேருக்கு மேலேயே பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதிலும் ஏறக்குறைய 6,000க்கும் மேற்பட்டோருக்கு மட்டும்தான் தொற்று அறியப்பட்டிருக்கிறது. அதிலும் 1600க்கு மேற்பட்டவர்கள் குணமடைந்திருக்கிறார்கள். 40 பேர்தான் இறந்திருக்கிறார்கள். நியூயார்க் நகரில் மட்டும் ஒரு நாளில் 2800 பேர் இறந்திருக்கிறார்கள். அதுதான் சமூகப் பரவல். இதுவும் தமிழக அரசின் தவறுகளினால் ஏற்பட்டதுதான். சென்னையின் மக்கள்தொகை மட்டுமே 1.25 கோடி அதில் ஓர் ஆயிரம் பேருக்கு மட்டுமே வந்தால், அது எப்படி சமூகப் பரவலாகும். ஆகவே சமூகப் பரவல் என்கின்ற நிலைக்கே நாம் போகவில்லை. இந்தியாவைப் பொறுத்த வரையிலுமே போகவில்லை.
(நேர்காணல்: உடுமலை வடிவேல்)