ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புதிய நோய்க் கிருமிகள் உருவாகி மனித குலத்தை அச்சுறுத்தி வருகின்றன. அவ்வகையில் சில மாதங்களுக்கு முன்பு சீன நாட்டின் வூகான் நகரில் உருவான கெரோனா எனும் வைரஸ் கிருமி உலகையே உலுக்கி வருகிறது. 180 – க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இத்தகைய கொடூர கெரோனோவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டும் பலியாகியும் வருகின்றனர். கெரோனோ வைரஸ் நோயின் கோரத் தாண்டவத்தால் உலக வல்லரசு நாடுகள் நிலை தடுமாறி திணறி வருகின்றன. இந்தியாவிலும் கெரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள், கூலித் தொழிலாளர்கள், வானமே கூரையாய் வசிக்கும் பாமர மக்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது வேதனையின் உச்சம்! மக்கள் நலன் கருதி கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் என அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் இங்கு யாரும் வரவேண்டாம் என்று கூறி அடைக்கப்பட்டுவிட்டன.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கடவுள் என்று நம்பப்படுகின்ற கற்சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்து அவற்றை பாதுகாத்து வருவது வேடிக்கை -வினோதம்! உலக நாடுகளுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கும் கெரோனா வைரஸ் கிருமியால் உருவாகும் உயிர்க்கொல்லி நோயினைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் நமது இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கெரோனா வைரஸ் கிருமிகளை அழித்தொழித்து மனிதகுலத்தைக் காப்பாற்ற இரவு – பகல் பாராமல் போராடி வருகின்றனர் என்பது பாராட்டுக்கும் – போற்றுதலுக்கும் உரியது. கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளின் வாயிற்கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், விலை மதிப்பற்ற மனித உயிர்களைக் காக்கும் மருத்துவர்கள்-செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரின் மகத்தான சேவையை, மனிதநேயத்தை, தொண்டுள்ளத்தை மனிதகுலம் நன்றியுடன் நாளும் நினைத்து பாராட்டுகின்றது. மக்கள் நலனைப் பற்றியே நாளும் சிந்தித்துக் கொண்டிருக்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி, சுய கட்டுப்பாட்டுடன் ஒவ்வொருவரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பதும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதும் அவசியமானது.
கெரோனா வைரஸ் கிருமிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது ஒன்றே இதற்கு சரியான தீர்வாக அமையும். தனித்திருப்போம்! – விழித்திருப்போம் !
விலகி இருப்போம்! எனும் சுய கட்டுப்பாடு
நமக்காக நாட்டுக்காக என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். –
சீ.இலட்சுமிபதி,
தாம்பரம்.