கே:கோயிலையே மூடியதால் கடவுளுக்கு எந்த சக்தியும் இல்லை என்பதைக் கண்ட பின்னரும் கோயிலை நாடிச் செல்வோர் பற்றி? ‘கடவுளை மற. மனிதனை நினை’ என்ற அய்யாவின் சொற்களை இனியேனும் மக்கள் சிந்திப்பார்களா?
நெய்வேலி க.தியாகராசன்,
கொரநாட்டுக் கருப்பூர்.
ப: பக்தி போதை அவ்வளவு விரைவில் தீராது என்றாலும், தனியே சிந்திக்கும் சிலருக்காவது உரைக்கும்.
கே: சாராயக்கடைகளை இச்சூழ்நிலையில் மீண்டும் திறப்பது சரியா? எது சரியான நடவடிக்கையாக இருக்கும்?
மாரிமுத்து, மானாமதுரை.
ப: நிச்சயம் சரியான நடவடிக்கை ஆகாது. எனவே தான் தளபதி ஸ்டாலின் தி.மு.க. தலைமையில் மே 7ஆம் தேதி அவரவர் வீட்டு முன் நாடு தழுவிய நிலையில் அறப்போராட்டம் – நடந்தது!
கே: மலர் தூவுவதும், கைத்தட்டுவதும் தீர்வாகுமா? ஏழைகளைப் புறக்கணித்து, கார்ப்பரேட்களுக்கு கைக்கொடுக்கும் மோடி அரசைப் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
அர்ச்சனா, மேட்டுப்பாளையம்.
ப: வித்தைகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை! வித்தைகளை வைத்து எவ்வளவு காலம் தான் ஓட்டுவார்கள்.
கே: இந்த நெருக்கடியான நேரத்தில் கூட எதிர்கட்சிகளை கலந்து பேசுவதைப் பிடிவாதமாய் தவிர்க்கும் எடப்பாடி அரசுக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?
கண்ணபிரான், காட்பாடி.
ப: இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும். என்கிற குறளை; படிக்கட்டும்.
கே: ஊரடங்கின் பயனை கோயம்பேடு கூட்டம் தவறான செயல்பாடுகளால் பாழாக்குவது தமிழக அரசின் நிர்வாக திறனின்மைத்தானே?
தங்கமணி, மயிலாப்பூர்.
ப: ஆம். அதிலென்ன சந்தேகம். மகா வெட்கம்!
கே: முகக்கவசம் கூட எங்களுக்கு இல்லை என்று சுட்டிக்காட்டிய மருத்துவரை பணிமாற்றம் செய்த தமிழக அரசின் செயல்பாடுக் குறித்து தங்கள் கருத்து என்ன?
முருகேசன், திருவண்ணாமலை.
ப: ஜனநாயகத்தில் உள்ள நாட்டின் உச்சகட்ட அடாவடித்தனம் இது! கண்டனத்திற்குரியது.
கே: கோயில் கருவறையில் துப்புரவு பணியாளர் நுழைந்து தூய்மை செய்துள்ளார்கள்! “அவாள் புனிதம்’’ புஸ்வானம் ஆகியதைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
அசோக், குன்றத்தூர்.
ப: கோயில் கருவறையைக் கட்டி உருவாக்கியவரும் அவர்கள் அல்லவே. இப்போது உரியவர் ‘ஆபத்பாந்தவனாக’ – அனாதரட்சனாக உள்ளே நுழையாவிட்டால் அவாள் அங்கு தங்கள் பக்தி வியாபாரத்தைத் தொடர முடியுமா? இதை நம் ‘பக்தகோடி’ மடையர்கள் உணர்வார்களா?
கே: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனிதநேயமிக்க தொண்டறப்பணிப் பற்றி தங்கள் கருத்து என்ன?
மாசிலாமணி, மதுரை.
ப: ஈடு இணையற்ற தொண்டறம்; தந்தை கலைஞரை மிஞ்சிய ஆற்றல் – செயலாற்றல்! – மிகை அல்ல.
கே: இந்த கட்டாய ஓய்வு காலத்தில் தங்களின் புதிய படைப்புகள் உருவாகும் என்ற வாசர்கள் எதிர்பார்ப்பு சரியா?
சீனிவாசன், சேலம்
ப: ‘வாசகர்கள்’ நிச்சயம் ஏமாற மாட்டார்கள். அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்