என்னருமை மக்களே இன்பத் திராவிடரே
இன்னல் வடக்கர்களை எள்ளளவும் நாடாதீர்!
உங்கள் கலை ஒழுக்கம் மிக்க உயர்ந்தனவாம்
பொங்கி வரும் ஆரியத்தின் பொய்க்கதைகள் ஒப்பாதீர்!
ஏமாற்றி மற்றவரை, ஏட்டால் அதை மறைத்துத்
தாமட்டும் வாழச் சதை நாணா ஆரியத்தை
நம்புவார் நம்பட்டும் நாளைக் குணர்வார்கள்
அம்பலத்தில் வந்ததின்றே ஆரியரின் சூழ்ச்சியெலாம்!
பிச்சை எடுப்பவர்கள் பேரதிகா ரம்பெற்றால்
அச்சத்தால் நாட்டில் அடக்குமுறை செய்யாரோ?
ஆட்சியறியாத ஆரியர்கள் ஆளவந்தால்
பாட்டாளி மக்களெல்லாம் பாம்பென்றே அஞ்சாரோ?
மிக்க மதவெறியர் மேல்நிலையை எய்திவிட்டால்
தக்க முஸ்லீமைத் தாக்கா திருப்பாரோ!
உங்கள் கடமை உணர்வீர்கள், ஒன்றுபட்டால்
இங்கே எவராலும் இன்னல் வருவதில்லை!
ஏசுமதத்தாரும் முஸ்லீம்கள் எல்லாரும்
பேசில் திராவிடர் என் பிள்ளைகளே என்றுணர்க!
சாதி மதம் பேசித் தனித்தனியே நீரிருந்தால்
தோதுதெரிந் தாரியர்கள் உம்மைத் தொலைத் திடுவார்
ஆரியன் இந்தி அவிநாசி ஏற்பாடு
போரிட்டுப் போக்கப் புறப்படுங்கள் ஒன்றுபட்டே!
ஆண்டேன் உலகுக்கே ஆட்சிமுறை நான் தந்தேன்
பூண்ட விலங்கை பொடியாக்க மாட்டீரோ!
மன்னும் குடியரசின் வான்கொடியை என் கையில்
இன்னே கொடுக்க எழுச்சியடையீரோ!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்