எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு!

ஏப்ரல் 16 - மே 15 2020

நேயன்

 

பிற மதத்தினரை படுகொலை செய்வதற்கு அவர் சொல்வது, சுத்தப்படுத்துவதாம்! அதாவது சுத்தமான இந்துத்துவா உருவாக கிறித்துவ, இஸ்லாமிய மதச் சார்பற்றவர்கள் என்கிற அசுத்தங்களை அகற்ற வேண்டுமாம்!

இப்படியொரு சிந்தனையை இன்றளவும் பேசி, வெறியைத் தூண்டும் ஆரியப் பார்ப்பனர்களை எதிர்க்காமல், நிலத்திற்கும், நீருக்கும் சண்டை போடுகிறவர்கள் தொழில் நடத்தி வருவாய் ஈட்டுகிறவர்களை எதிர்க்க வேண்டும் என்கிறார் குணா என்றால்… அவர் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரரோ என்கிற அய்யம் எழுகிறது. எனவே, குணாக்களிடம் தமிழர்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.

காந்தியடிகள் சென்னைக்கு வந்த முதன்முறை சீனிவாச அய்யங்கார் வீட்டுக்குச் சென்றபோது, இந்தியாவின் மாபெரும் தலைவரை வீட்டுக்குள் அழைத்துச் செல்லாது திண்ணையிலே உட்கார வைத்துப் பேசி அனுப்பினார். பார்ப்பனர் அல்லாதவர் காந்தி என்கின்ற ஒரே காரணத்திற்காக அவரை வீட்டுக்குள் விடவில்லை ஆரியப் பார்ப்பனர்கள். ஒரு நாட்டின் தந்தை என்னும் தகுதியுடைய, இந்திய மக்களின் ஓர் உயரிய தலைவரையே ஆரியப் பார்ப்பனர்கள் திண்ணையோடு திருப்பியனுப்பினர் என்றால், மற்றவர் நிலை அன்றைக்கு என்ன என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

அதே காந்தியார் இரண்டாவது முறையாக அதே சீனிவாச அய்யங்கார் வீட்டுக்குச் சென்ற போது கூடத்துக்குள் அழைத்துச் சென்று உபசரித்தனர். அதன்பின் பேட்டியளித்த காந்தி, திண்ணையோடு அனுப்பப்பட்ட எனக்குக் கூடத்துக்குள் குந்திப் பேச இடம், அய்யர் வீட்டில் கிடைத்ததற்குக் காரணம் ஈ.வெ.ரா. பெரியாரின் பிரச்சாரங்களும், தொண்டுமேயாகும்‘’ என்று நன்றியுடன் கூறினார் என்றால் பெரியாரின் திராவிடத்தின் பங்கு இந்தத் தமிழ்மண்ணுக்கும் தமிழன் நிமிரவும் எந்த அளவுக்கு உதவின என்பதை குணாக்கள் மனச்சான்றோடு சிந்திக்க வேண்டும். காந்திக்கே இந்த நிலையென்றால் அன்றைக்கு ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கம் எந்த அளவுக்குத் தமிழர்களை ஒடுக்கி அடக்கி உயரவிடாமல் செய்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கும்பகோணம் நகராட்சியில் ஒரு தீர்மானம் போட்டார்கள். ஆரியப் பார்ப்பனர் வீட்டில் கழிவுகளையும், மலத்தையும் எடுக்க தாழ்த்தப்பட்ட தோட்டி வரக்கூடாது. அதைவிட மேம்பட்ட ஜாதியினர் அள்ளவேண்டுமாம்! ஆக, பார்ப்பனர் வீட்டில் மலம் அள்ளக்கூட தாழ்த்தப்பட்டவனுக்கு அனுமதியில்லை என்கிற அநியாயம் நிலவிய காலத்தில் பெரியார் ஆரியப் பார்ப்பன எதிர்ப்பை எடுத்தது எப்படித் தவறாகும்?

அவனவன் அவனவன் ஜாதித் தொழிலைச் செய்யவேண்டும். வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியதில்லை; குலத்தொழிலைச் செய்தால் போதும். எல்லோரும் படித்தால் வேலை எங்கிருந்து கிடைக்கும்? இப்படிப் பேசியவர் யார் தெரியுமா? குணாவால் போற்றப்படும் இராஜ கோபாலாச்சாரியார்தான். அதுவும் எங்கு பேசினார் தெரியுமா? சென்னை திருவான்மியூரில் 29.6.1952இல் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் – இவர் முதலமைச்சராக இருந்தபோது பேசியது (‘தி ஹிந்து’, 30.6.1952).

சலவைத் தொழிலாளர் மாநாட்டிலே ஒரு முதலமைச்சரே இப்படிப் பேசினார் என்றால் இந்தத் தமிழ்நாட்டில் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் பார்ப்பனர்களா? கன்னடர், தெலுங்கர், மலையாளிகளா? தமிழர்கள் சிந்திக்கவேண்டும். இதே ராஜாஜி, ஜாதியை ஒழிக்கக்கூடாது என்று அழுத்தந் திருத்தமாய்ச் சொன்னார்.

ஜாதி முறை ஒழிய வேண்டும் என்று பலர் குறை கூறுகிறார்கள். அதை ஒழிக்க முடியாதென்றும், இதை நன்கு யோசித்துத்தான் நம் முன்னோர் வர்ணாசிரம முறையை வகுத்தனர். அதன்படி அவரவர் தங்கள் முறைக்கு (ஜாதிக்கு ஏற்றவாறு நடந்து (தொழில் செய்து) மக்களுக்குத் தொண்டு புரிய வேண்டும்.

(கரூர் பசுபதிபாளையத்தில் 29.1.1961இல் ஆச்சாரியார் பேச்சு சுதேசமித்திரன் 1ஆம் பக்கம்)

இந்த ஆரியப் பார்ப்பனரின் யோக்கியதைப் பற்றி காமராசர் என்ன சொல்லியுள்ளார் பாருங்கள்: 1937இல் அவர் (இராஜாஜி) முதலமைச்சராக வந்தபோது 2500 பள்ளிகளை மூடினார். 1952இல் மீண்டும் முதலமைச்சராக வந்தபோது 6000 பள்ளிகளை மூடி, மீதியுள்ள பள்ளிகளிலும் அரை நேரம் படிப்பு; அரைநாள் ஜாதித் தொழிலைச் செய்ய வேண்டும் என்றார் என்று சுட்டிக்காட்டும் காமராசர், ஆச்சாரியார் முதல் மந்திரியாக இருந்தபோது 15,000 பள்ளிகள் இருந்தன. இப்பொழுது 27,500 பள்ளிகளாக உயர்த்தி இருக்கிறோம். 1952இல் எல்லா இடத்திலும் பள்ளியைத் திறக்க விரும்புகிறேன்… என்றும் கூறியுள்ளார்.

(ஆதாரம்: ‘ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்’ – தந்தை பெரியார் – திராவிடர் கழக வெளியீடு, பக்கம் 108).

காமராசரின் இந்தப் பேச்சு போதாதா? – பெரியார் பார்ப்பனர்களை எதிர்த்து தமிழர்களுக்குக் கல்வி கொடுத்துக் காப்பாற்றியதே மிகச் சரியான செயல் என்பதற்கு

அதனால்தான் காமராசர், சுயமரியாதை என்பது என்ன? அறிவுக்கும், உழைப்புக்கும் உயர்வு தரும் பண்புதான். இந்த சுயமரியாதை இயக்கத்தின் பயனாகத்தான் தமிழ்நாட்டில் ஒரு புதிய உணர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

நம்மிடையே நிலவி வரும் பலவிதமான வேற்றுமைகளும், ஜாதி முதலிய பேதங்களும் கூடாது. அவற்றை அடியோடு அகற்ற வேண்டும். அதுதான் சுயமரியாதை வாழ்வு. அதுதான் இந்த நாட்டுக்குத் தேவை! என்றார்.

(17.8.1961இல் காமராசர் சென்னையில் பேசியது. ‘நவ இந்தியா’, 18.8.1961, 4ஆம் பக்கம்).

ஆரியப் பார்ப்பனர்களை எதிர்ப்பதே நம் முதல் கடமையாக இருக்க வேண்டும் என்று தமிழறிஞர் மறைமலையடிகள் வலியுறுத்திக் கூறியதாவது:

தமிழ் மக்கள் எல்லார்க்கும் தொடர்ந்து தீது புரிந்து வரும் ஆரியப் பார்ப்பனரை நஞ்சினுங் கொடியவராக நினைத்து, அவர் எவ்வகையிலும் நம்பால் அணுகுதற்கு இடந்தராது விழிப்பாயிருத்தலே தமிழர் ஒவ்வொருவரும், கருத்தூன்றிக் கைக் கொள்ளற்பாலதாகிய முழுப் பெருங் கடமையாகும்.

(மறைமலையடிகளாரின் வேளாளர் நாகரிகம் – பக். 87)

தமிழன் இடம், தமிழன் கட்டிய கோயில் சிதம்பரம் நடராசர் கோயில். அந்தக் கோயிலில்  ஆறுமுகசாமி என்கிற முதியவர் திருவாசகம் பாடியதற்காக, வயிற்றுப் பிழைப்புக்கு வந்த தீட்சதர் கூட்டம் அவரை அடித்து உதைத்துக் கொடுமை செய்தது. இச்செய்தி 4.6.2000 ‘கல்கி’ ஏட்டிலே வந்துள்ளது. பெரியார் இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்திய பின்பு, இன்றைக்குக்கூட இக்கொடுமை நடக்கிறது என்றால் அன்றைக்கு நிலை என்ன?

தமிழர்களுக்குச் சமஸ்கிருத ஆண்டைத் திணித்துத் தமிழ்ப் பண்பாட்டைக் கொடுத்தனர்; தமிழர் வீர வழிபாடு, பத்தினிப் பெண்டிர் வழிபாடு, குலப் பெரியோர் வழிபாடுகளை, சடங்கு வழிபாடுகளாக ஆக்கிப் பண்பாட்டுச் சீரழிவை உண்டாக்கி, கும்பாபிஷேகம், பாலாபிஷேகம், தேனாபிஷேகம்,

திருமஞ்சனம், யாகம் என்று எண்ணற்ற மூடத்தனங்களைத் திட்டமிட்டுப் புகுத்தி அறிவோடு வாழ்ந்த தமிழினத்தை மடமையில் வீழ்த்தி, அடிமையாக்கினர். இதையெல்லாம் கன்னடர்களும் தெலுங்கர்களுமா செய்தனர்?

                                                                  (தொடரும்)

                                                               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *