பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த மான் கவுர் 1916இல் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் பிறந்தவர். அந்த காலகட்டத்தில் பிறந்த பெரும்பாலான இந்தியப் பெண்களுக்கு இருக்கின்ற ஒரேவிதமான டெம்ப்ளேட்டில்தான் மான் கவுரின் வாழ்க்கையும் அமைந்துள்ளது. சிறு வயதிலேயே தாய் இறந்துவிடத் தாத்தா – பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். படிப்பின் மீது நாட்டம் இல்லாத காரணத்தினால் சிறு சிறு வேலைகளை செய்துகொண்டு நண்பர்களோடு ஓடி, ஆடி விளையாடியுள்ளார்.
வளர்ந்ததும் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்கின் அரண்மனையில் பணிப்பெண்ணாக வேலை செய்துள்ளார். 1934இல் திருமணம் முடிந்த கையேடு குடும்பம், மூன்று பிள்ளைகள். குடும்பத்தை கவனித்துக்கொண்டு நகர்ந்தன மான் கவுர் நாட்கள்.
இதனிடையே, இவர் இரண்டாவது மகன் குருதேவ் சிங் சிறு பிள்ளையாக இருந்த காலத்தில் இருந்தே பள்ளி, கல்லூரி விளையாட்டு போட்டிகளில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளார். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை தனது மகன் குவித்திருந்ததை பார்த்து, தானும் அதுபோல் பதக்கங்களை வெல்ல வேண்டும்; தானும் தடகள வீராங்கனையாக உருவாக வேண்டும் என்னும் ஆசை மான் கவுருக்கு வந்தது. அப்போது அவரது வயது 93. தனது விருப்பத்தை மகனிடம் சொன்னார்.
பொதுவாக, 93 வயது அம்மா இப்படியொரு விருப்பத்தை சொன்னால், பெரும்பான்மை மகன்கள் அதற்கு தடைதான் போட்டிருப்பார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால், மான் கவுரின் மகன் குருதேவ் மறுகணமே – அம்மாவுக்கு தடகளத்தில் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்.
தனக்கு நடை பழக்கிய அம்மாவுக்கு ஓட்டத்தில் பயிற்சி கொடுக்க வேண்டிய டாஸ்க். உணவில் முறையான கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டுமென அம்மாவுக்கு கண்டிஷன் போட்டுள்ளார் குருதேவ். மான் கவுரும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டார். தடகள பயிற்சியை கடந்த 2009இல் தொடங்கியுள்ளார்.
“முதன்முதலில் அம்மாவை டிரேக்குக்கு அழைத்து சென்றதும் 400 மீட்டர் ஓட சொல்லி பார்த்தேன். ஆரோக்கியமான உடல்வாகு அம்மாவுக்கு கைகொடுக்க அந்த இலக்கை பொறுமையாக ஓடி கடந்தார். அதை பார்த்ததுமே அம்மாவால் நிச்சயமாக தடகள வீராங்கனையாக உருவாக முடியும் என்ற நம்பிக்கை வந்தது’’ என்கிறார் குருதேவ். தொடர்ந்து மகன் கொடுத்த ஊக்கத்தோடு ஓட்டத்தில் வேகத்தையும் தனது பலத்தையும் கூட்டியுள்ளார், மான் கவுர். திடகாத்திரமான இளைஞர்களே தயங்கும் கடுமையான பயிற்சிகள்; தினந்தோறும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து, தனது வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு ஆறு மணிக்கெல்லாம் பயிற்சிக் களத்தை அடைத்து விடுவாராம். நாற்பது நிமிடங்கள் பயிற்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்புவார். தினமும் 20 கிலோ மீட்டர் தூரம் ஓடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 2009இல் தொடங்கி இன்றுவரை தினந்தோறும் இந்த பயிற்சி அட்டவணையைத் தவறாமல் பின்பற்றி வருகிறார். ஓட்டம் மட்டுமல்லாது குண்டு எறிதல், ஈட்டி எறிதலிலும் மான் கவுர் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்.
ஆரம்பத்தில் தேசிய அளவில் தனது திறமைகளை வெளிக்காட்டிய மான் கவுர் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டத்திலும், ஈட்டி – குண்டு எரிதலிலும் ஒரு சுற்று வந்துள்ளார். தேசிய அளவிலான போட்டிகளில் 13 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். சர்வதேச அளவில் நடந்த போட்டிகளில் மொத்தமாக 31 தங்க பதக்கங்களையும் வென்றுள்ளார்.
கடந்த ஆண்டு போலந்தில் நடைபெற்ற முதியோருக்கான மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் என நான்கு போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்றார் மான் கவுர். உலகிலேயே நூறு வயதை கடந்த அதிவேகமாக ஓடும் தடகள வீராங்கனை என்ற சாதனையை இப்போது தன் வசம் வைத்துள்ளார் மான் கவுர். “நான் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் என் இறுதி மூச்சு வரை ஓடிக்கொண்டே இருக்க விரும்புகிறேன். அடுத்த ஆண்டு ஜப்பானில் நடக்க உள்ள முதியோருக்கான சர்வதேச தடகள தொடரில் சாதிக்க பயிற்சி எடுத்து வருகிறேன்” என்கிறார் மான் கவுர்.
தகவல் : சந்தோஷ்