அய்யாவின் அடிச்சுவட்டில் …
கி. வீரமணி
12.6.1993 சென்னை கலைஞர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில் கலந்து கொண்டு அகில இந்திய ஜனதா தள பொதுச் செயலாளர் சரத் யாதவ் உரையாற்றுகையில் “தந்தை பெரியார் மட்டுமே பார்ப்பனரை எதிர்க்கும் போராட்டத்தில் வெற்றிபெற்றார்கள். இந்த வெற்றி தமிழ்நாடோடு முடிந்துவிடக்கூடாது. தந்தை பெரியாரின் கொள்கைகள் இந்தியா முழுமைக்கும் பரவி பார்ப்பனர் ஆதிக்கத்தை, கலாச்சாரத்தை வீழ்த்தியாக வேண்டும். நமது ஒரே வேலை ஒரே குறிக்கோள் அது தான் தந்தை பெரியாருக்கு பின் நண்பர் கி.வீரமணி அதனை சிறப்புறச் செய்து வருகிறார்’’ என தனது உரையில் சரத்யாதவ் கூறினார்.
பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சமூகநீதி மாநாட்டில்
பங்கேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்யாதவை
வரவேற்கும் ஆசிரியர் கி.வீரமணி.
நான் உரையாற்றுகையில் “மண்டல் குழுப் பரிந்துரைகள் அமலாக்கப்படும் ஒரு நெருக்கமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில்தான் நம் பணிகளும், முயற்சிகளும் மிகவும் தீவிரமாகவும், சிறப்பாகவும் இருக்க வேண்டும். இங்கே நமது சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் சரத்யாதவ் அவர்கள் நாடாளுமன்றத்தில் சமூகநீதிக்காக வலுவான குரலைக் கொடுத்துக் கொண்டு இருப்பவர். மண்டல் பரிந்துரைகளை வெளிப்படையாக எதிர்க்க இந்நாட்டில் ஒரு கட்சியும் கிடையாது. ஆனாலும், திரைமறைவில் அதற்குத் தடைப் போட முயலும் சக்திகள் உண்டு. “கிரீமிலேயர்” என்று ஒன்று வந்து புகுந்து இருக்கிறது. இதன்மூலம் மேலும் காலதாமதப்படுத்தி விடலாம் என்கிற நினைப்பில் இருக்கிறார்கள்.
நியாயமற்ற பிரச்சினை
பிற்படுத்தப்பட்டவர்களுள் மேல்தட்டு என்பது பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களே தவிர, ஆதிக்கவாதிகள் அல்ல. மத்திய அரசுத்துறைகளில் இதுவரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்பது அறவே கிடையாது. எல்லாவற்றையும் பார்ப்பனர்களே அனுபவித்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசுத் துறைகளில் இடஒதுக்கீடு என்பது இப்பொழுது தான் முதன் முதலாக அமலாக்கப்பட இருக்கிறது. அதற்குள்ளாகவே பிற்படுத்தப்பட்டவர்களுள் மேல் தட்டு ‘கிரீமிலேயர்’ என்றெல்லாம் கூப்பாடு போடுவதில் அர்த்தம் இருக்கமுடியுமா? நியாயம் இருக்க முடியுமா?
நீதிமன்ற அவமதிப்பு
“உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மார்ச் 15ஆம் தேதிக்குள் மண்டல் குழுப் பரிந்துரை அமலுக்கு வந்திருக்க வேண்டும். மத்திய அரசு மார்ச் 15ஆம் தேதிக்குள் அமல்படுத்தத் தவறியதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி இருக்கிறது. இது வெளிப்படையாகக் கோர்ட் அவமதிப்புக் குற்றமாகும் (Contempt of court). உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் மண்டல் குழுப் பரிந்துரை அமலாக்கத்தில் பொருளாதார அளவு கோலை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது? இதுபோல பல விஷயங்களை விரிவாக எடுத்துரைத்தேன்.
4.6.1993 மாநில பகுத்தறிவு ஆசிரியரணியின் இணைச் செயலாளர் புலவர் வை.கண்ணையன் இல்ல மணவிழாவை நான் தலைமையேற்று நடத்தி வைத்தேன்.
அருப்புக்கோட்டை காமராசர் திருமண அரங்கில், கண்ணையன் – இலக்குமி ஆகியோர் மகன் எழிலன், திருச்சி சிவசுப்பிரமணியன் – ருக்மணி ஆகியோர் மகள் தமிழ்ச்செல்வி ஆகியோரது மணவிழாவிற்கு நான் தலைமை வகித்தேன். மதுரை மாநகர் மாவட்டக் கழகத் தலைவர் கல்வி வள்ளல் பே.தேவசகாயம் முன்னிலை வகித்தார்.
அருப்புக்கோட்டை கவிமாமணி ஆயை மு.காசாமைதீன் அனைவரையும் வரவேற்று உரையாற்றியதைத் தொடர்ந்து, நான், மனித நேயத்தின் அவசியத்தை விளக்கி உரையாற்றி மணவிழாவினை நடத்தி வைத்தேன். தமிழர்கள் இல்லத்து மணவிழாவினை, தமிழர்கள் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன். மணமக்களை வாழ்த்தி அறிஞர் பெருமக்கள் பலர் உரையாற்றியதைத் தொடர்ந்து இறுதியாக புலவர் வை.கண்ணையன் நன்றி கூறினார்.
புலவர் வே.கண்ணையன் இல்ல மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தும் ஆசிரியர்,
மணவிழாவில் அருப்புக்கோட்டை கவிமாமணி ஆயை மு.காசாமைதீன் – சுபைதா ஆகியோர் மகள் மறைந்த மு.கா.மல்லிகையின் நினைவாக, வல்லம், பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரி வளர்ச்சி நிதிக்கு ரூ.1000 என்னிடம் வழங்கினர்.
2.07.1993 மேனாள் அமைச்சர் ஜி.விஸ்வநாதன்- – ராஜேஸ்வரி ஆகியோரின் மகன் சேகர், ஆந்திர மாநில தலைமை வனப் பாதுகாவலர் பாரெட்டி-கபூர் ஆகியோரின் மகள் சந்தியா ஆகியோரது மணவிழா சென்னை பெரியார் திடலில், எம்.ஆர்.ராதா மன்றத்தில் சிறப்போடு நடைபெற்றது. மணவிழாவில் அறிஞர் பெருமக்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
ஜி.விஸ்வநாதன் மகனின் திருமண விழாவில் உரையாற்றும் ஆசிரியர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள்
காலை 9.30 மணிக்கு தொடங்கிய மணவிழாவில், விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று முன்னாள் அமைச்சர் ஜி.விஸ்வநாதன் பேசினார். மணவிழாவிற்கு முத்தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமை வகித்து நடத்தி வைத்தார். மணவிழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினேன்.
நாஞ்சில் கி.மனோகரன், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், கேரள போக்குவரத்துத் துறை அமைச்சரும், கேரள காங்கிரஸ் தலைவருமான பாலகிருட்டிணப் பிள்ளை, முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமது, டாக்டர் ம.பொ.சிவஞானம், மத்திய நல்வாழ்வுத் துறை இணை அமைச்சர் தங்கபாலு, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ப.வரதராசன், சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி எஸ்.எஸ்.ராமச்சந்திரன், மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம், க.ராசாராம், சட்டமன்ற உறுப்பினர் குமரி அனந்தன், முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் அப்துல் லத்தீப், வடாற்காடு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சோலை, கேரள முன்னாள் ஆளுநர் பா.ராமச்சந்தின், சினிமா நடிகர் ராமராஜன், எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க. தலைவர் திருநாவுக்கரசு, நாடாளுமன்ற இ.காங்கிரஸ் உறுப்பினர் கிருட்டினசாமி, இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்கள்.
மிகவும் எளிமையாகவும், சிறப்பாகவும் நடைபெற்ற ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு தமிழக ஆளுநர் மேதகு சென்னா ரெட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் தண்டாயுதபாணி, ‘தினத்தந்தி’ அதிபர் சிவந்தி ஆதித்தன், ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியர் சோ, இந்தியன் வங்கி தலைவர் கோபாலகிருட்டிணன், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். இறுதியாக முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு நன்றி உரை ஆற்றினார்.
ஆர்.வெங்கட்ராமன்
முன்னதாக மேனாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன்,காலை பெரியார் திடலுக்கு வந்தபோது, பெரியார் அருங்காட்சியகத்துக்கு வந்தார். நான், ஆர்.வெங்கட்ராமனுக்கு பொன்னாடை போர்த்தினேன். பெரியார் அருங்காட்சியகம் முழுவதையும் ஆர்.வெங்கட்ராமன் சுற்றிப் பார்த்தார். என்னிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றுச் சென்றார். தான் ஒரு சுயமரியாதை திருமணத்தை முதன் முதலாக இப்போது தான் நேரில் கண்டதாக தெரிவித்தார்.
வி.கே.இராமு – தனத்தின் மகள் செல்விக்கும், நாத்திகன் ஆர்.சின்னதம்பி – ருக்குமணியின் மகன் காமராஜிக்கும் சுயமரியாதைத் திருமணத்தை தலைமையேற்று நடத்தும் ஆசிரியர் மற்றும் கவிஞர் கலி.பூங்குன்றன்
1.8.1993 திருவாரூர் எத்திராசு திருமண மண்டபத்தில், செருநல்லூர் வி.கே.இராமு — தனம் ஆகியோரின் செல்வி பெரியார் செல்விக்கும், நாகூர் நாத்திகன் ஆர்.சின்னதம்பி – ருக்மணி ஆகியோரின் செல்வன் காமராஜிற்கும் மணவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நான் தலைமை வகித்து நடத்தினேன். தலைமை நிலைய செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்று, மணமக்களின் பெற்றோரினை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
நான் மணவிழாவை நடத்தி வைத்ததற்குப் பின் தொடர்ந்து தலைமை நிலைய செயலாளர் ஆனூர் ஜெகதீசன், பிரச்சார செயலாளர் துரை.சக்கரவர்த்தி, மாநில மகளிரணி செயலாளர் க.பார்வதி, தஞ்சை மாவட்ட தி.க. தலைவர் ஆர்.பி.சாரங்கன், மாவட்ட செயலாளர் ராசகிரி கோ.தங்கராசு, காயிதே மில்லத் மாவட்டத் தலைவர் திருவாரூர் எஸ்.எஸ்.மணியம், அந்நாள் ‘விடுதலை’ துணை ஆசிரியர் க.இராசேந்திரன் ஆகியோர் பேசியபின் மணமகள் பெரியார் செல்வி நன்றி கூறினார். மணவிழாவிற்கு மாவட்டம் முழுவதுமிருந்து பெருவாரியாக தோழர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மணவிழாவிற்கு வருகை தந்த என்னை வாயிலில் மணமக்கள் வரவேற்றனர். வெற்றிச்செல்வி எனக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
தாலி இல்லாமல் ஆடி மாதத்தில் நடைபெற்ற ஜாதி ஒழிப்புத் திருமணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
4.8.1993 மொழி, இனம், பண்பாடு, சமூகநீதி அமைப்புகளை தடை செய்யும் கறுப்புச் சட்டத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டேன். அந்த அறிக்கையில், மதத்தை அரசியலில் பயன்படுத்துவதை தடுக்கப் போவதாகக் கூறி, கொண்டு வரப்படும் மசோதாவில், அதை மட்டும் வலியுறுத்தாமல் – ஜாதி, இனம், மொழி, பிறப்பிடம், தொழில் உரிமை எதையும் மய்யப்படுத்தி எந்த அமைப்புகள் இயங்கினாலும், அது தடை செய்யப்படலாம் உரிமை பறிக்கப்படலாம், அதனை நடத்துவோரின் உரிமைகளைப் பறிப்பதோடு, சொத்துகளையும் உடன் பறிமுதல் செய்து அரசு கையகப்படுத்தும் என்பது போன்ற கொடுமையான, கடுமையான விதிகள் இடம் பெற்றிருப்பது, காங்கிரஸ் ஆட்சியின் உள்நோக்கம் என்னவென்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!
மனித உரிமை பறிப்பு, கருத்துரிமை பறிப்புக்கு இதைவிட மோசமான சட்டம் வேறு இருக்க முடியாது, சர்வாதிகாரிகள் ஆளும் நாட்டிலோ ஒரு கட்சி மாத்திரம் இருக்கக்கூடிய நாட்டிலோ கூட கொண்டு வர அஞ்சும் வகையில் இச்சட்டம் உருவாக வகை செய்யப்படுவது நமது ஜனநாயகத்திற்கு (அச்சட்டம் நிறைவேறினால்) மிகப் பெரும் மரண அடியாக அமைந்து விடுவது உறுதி.
எனவே, நாடே திரண்டு இந்த கலப்புச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை மக்கள் மன்றத்திற்கு தோலுரித்துக் காட்டி செல்வாக்கிழக்கச் செய்வதே சரியான அணுகுமுறையாகுமே தவிர, சட்டத் தடியைக் காட்டி மிரட்டுவது மூலம் அல்ல. சில சட்டங்களால் உருவாகும் எதிர்வினைகள், எதிர்பாராத நிலைமைகளை, திருப்பங்களை நாட்டில் உருவாக்கும் என்பதையும் ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.
இளையராஜா
5.8.1993 இளையராஜா அவர்கள் உலகப் புகழ்பெற்ற லண்டன் ‘ராயல் பில் ஹால் மோணிக்’ இசைக் குழுவினரின் அழைப்பை ஏற்று, அக்குழுவினர் வியந்து போற்றும் வகையில் குறுகிய நாட்களில் ‘சிம்பொனி’ இசை வடிவம் அமைத்துக் கொடுத்து உலகப் புகழ் பெற்றுள்ள தமிழனாக உயர்ந்துள்ளார். அவரை நேரில் சென்று சால்வை போர்த்தி வாழ்த்தி பாராட்டினேன். அப்போது “உங்களுக்குக் கிடைத்த புகழ் உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமை” என்று நான் பாராட்டினேன். மிகவும் மகிழ்ச்சியுடன் “நன்றி நன்றி” என்று கூறினார்.
6.8.1993 காரைக்குடியில் கழகத்தூண்களில் ஒன்று, பசும்பொன் தேவர் மாவட்ட திராவிடர் கழகப் பொருளாளர் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தோழர் சுப்ரமணியன் அவர்கள் சென்னையில் மருத்துவமனை ஒன்றிற்கு பரிசோதனை செய்வதற்காகச் செல்லும் வழியில் திடீரென மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ந்தேன்.
கட்டுப்பாடுமிக்க இராணுவ வீரனைப்போல் கழகத்திற்கு உழைத்த கருஞ்சிறுத்தை அவர்! அனைத்துக் கட்சி நண்பர்களாலும், வியாபாரப் பிரமுகர்களாலும் பெரிதும் நேசிக்கப்பட்ட பண்பாளர். எப்போதும் எதையும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் பக்குவம் பெற்ற பகுத்தறிவாளர்.
அய்யா தந்தை பெரியார் அவர்களிடமும், அன்னையாரிடமும் எப்படி மரியாதை – அன்பு செலுத்தினார்களோ அப்படியே நம்மிடமும் பாசத்தையும் அன்பையும் பொழிந்தவர்.
ஏற்கெனவே பலமுறை இருதய நோய் அறுவை சிகிச்சை செய்தபோதெல்லாம் தக்க மருத்துவர்களின் துணையோடு தப்பிய அவரை இறுதியில் இப்படி இயற்கை ஆக்கிவிட்டதே.
அவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டும் இழப்பு அல்ல நம் இயக்கத்திற்கும் ஆகும்.
அவரது துணைவியார் நம் அன்பு சகோதரியாருக்கும் அவரது செல்வங்களுக்கும் கழகம் ஆறுதல் கூறி இரங்கலைத் தெரிவித்தோம்..
அவரது இறுதி ஊர்வலத்தில் (காரைக்குடியில்) கழகத்தின் சார்பில் தலைமை நிலைமை செயலாளர் கலி.பூங்குன்றன் கலந்து கொண்டார்.
11.8.1993 பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் தேசிய ஒன்றியத்தின் தலைவரும், ஜனதா கட்சி அரசாங்கத்தின் போது மத்திய அமைச்சராக இருந்தவரும், டில்லி மாநில முதலமைச்சராக இருந்தவரும், கழகம் நடத்திய சமூக நீதி மாநாடுகளில் எல்லாம் கலந்துகொண்டவருமான முதுபெரும் சமூகநீதி வீரர் சவுத்ரி பிரம்பிரகாஷ் இன்று டில்லியில் மறைவுற்றார் என்ற செய்தியை அறிவிக்கப் பெரிதும் வருந்துகிறோம். நான் இரங்கல் செய்தி அனுப்பினேன்.
15.08.1993 திராவிடர் கழக தலைமை நிலையத்தில் பணியாற்றி வருகின்ற வடசென்னை மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் கி.இராமலிங்கம் – -லட்சுமி ஆகியோரது மணவிழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தேன்.
சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடந்த மணவிழாவினை தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று தலைவரை முன்மொழிந்தார்.
பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரி முதல்வர், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் க.பலராமன், மாவட்ட செயலாளர் அ.குணசீலன், புரசை பகுதி தி.மு.க. செயலாளர் சிட்டிபாபு, தென்சென்னை மாவட்டக் கழக தலைவர் எம்.பி.பாலு, மாவட்டச் செயலாளர் எம்.கே.காளத்தி, வடசெங்கை எம்.ஜி.ஆர். மாவட்ட செயலாளர் ஆவடி இரா.மனோகரன், செம்பியம் வட்ட தி.மு.க. செயலாளர் ரெங்கநாதன், தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் எம்.கே.டி.சுப்ரமணியன், மாநில இளைஞரணி செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில மகளிரணி செயலாளர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், ‘விடுதலை’ நிர்வாகி சி.ஆளவந்தார், தலைமை நிலையச் செயலாளர் ஆனூர் ஜெகதீசன், சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன், கழக சட்டத்துறை செயலாளர் வழக்குரைஞர் செ.துரைசாமி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சாமிதுரை ஆகியோர் மணமகன் இராமலிங்கத்தின் சிறப்புகளையும், தொண்டுகளையும் பாராட்டி வாழ்த்தி உரையாற்றினார்கள்.
ஏராளமான கருஞ்சட்டைக் குடும்பத்தினரும், நண்பர்களும் திருமண விழாவிற்குத் திரண்டு வந்திருந்தனர்.
(நினைவுகள் நீளும்…)