தலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா?

ஏப்ரல் 16 - மே 15 2020

கொரானா-19 (Covid-19) தொற்று நோய் என்ற கொள்ளை நோய் இதுவரை உலகம் முழுவதிலும் பரவி, பல லட்சக்கணக்கில் மனித உயிர்களைப் பலி கொண்டுள்ளது!

இதற்கு இன்னமும் மருத்துவ விஞ்ஞானிகள் தடுப்பு – ஒழிப்பு மருந்து ஒன்றைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் முயற்சிகளை பற்பல நாடுகளும் செய்த வண்ணம் உள்ளன. விரைவில் வெற்றி பெறுவர் என்பது நம் நம்பிக்கை.

உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் (12.5.2020 கணக்கின்படி)

42,27,245

பலியானவர்கள் – 2,85,260

குணம் அடைந்தவர்கள் – 15,12,700

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் – 67,152

5 மாநிலங்களில் கொரானா அதிகமானவர்களை உயிரிழக்கச் செய்துள்ளது.

மராட்டியத்தில் – 832 பலி

குஜராத்தில் – 493 பலி

மத்திய பிரதேசம் – 215 பலி

மேற்கு வங்கம் – 185 பலி

ராஜஸ்தான் – 107

மற்ற மாநிலங்களில்… 100க்குள்

நாடு முழுவதும் 44,029 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 2 (8,002)

பலியானவர்கள் – 53 பேர்

வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளல், தனி நபர் இடைவெளியில் நிற்றல், அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவுதல், முகக்கவசம் இன்றியமையாமல் அணிதல், நோய் எதிர்ப்பு சக்தியை உடம்பில் வளர்த்துக் கொள்ளல் கூட்டம் கூட்டமாக கூடி மேலும் பலருக்குப் பரவாது இருத்தல் தவிர வேறு எந்த தடுப்பும் சிகிச்சையும் பலனளிக்காது. மருந்துகளும்- பரிசோதனைக்குப் பிறகு ஓரளவுக்குப் பயன் தருகின்றன.

இந்நிலை இவ்வாண்டு செப்டம்பர் வரை கூட நீடிக்கலாம்.

இந்த தொடர்ந்த 45 நாட்களுக்கு மேலான வரலாறு காணாத – ஊரடங்கு, வீட்டுக்குள் முடங்கிய நிலை, தொழில் அமைப்புகளும், கடைகளும், தொழிற்சாலைகளும் மூடியதால் ஏற்பட்டுள்ள பொருளாதாரக் கீழிறக்கம் – அதன் பாரதூர விளைவுகளான பசியும் வேலையில்லாத நிலையும் வறுமையும் பெரிதும் தொழிலாளர்களையும் வெகு மக்களையும் விவசாயிகளையும், பல்வேறு பணித்துறை மூலம் வருவாய்த் தேடி வாழ்க்கை நடத்துவோரையும் மிகவும் பாதித்துள்ளது.

கொரானா நோய் ஒரு பக்கம் பயமுறுத்தல் – அச்சமும், அவதியும் – நிதிப் பற்றாக்குறையின் தாக்கம் மறுபக்கம் மானிடத்தை – அதிலும் நம் நாட்டையும் மிரட்டி, ஒரு வகையான பொருளாதார மந்த – வறட்சிக்கு வித்திட்ட வேதனை.

இம்மாதிரி – மக்களின் வாழ்க்கையை பல முனைகளிலும் புரட்டிப் போடும் இந்த கொடூர கொரானாவின் கோரத்தாண்டவம் மூலம் உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம்.

1. மருத்துவம், சுகாதார சேவைகளுக்கும் கல்விக்கு துறைக்கும் தரவேண்டிய முன்னுரிமை – தங்கள் நாட்டு பட்ஜெட்டில், இராணுவத்திற்கு அதிகம் செலவழித்துள்ளதை மறுபரிசீலனை செய்து நிஞிறி என்ற மொத்த வளர்ச்சி விகிதத்தை பொது சுகாதாரம் – மக்கள் நல்வாழ்வுக்கு தந்திட 5, 6 சதவிகிதமாவது செலவழிக்க முன்வரும் மறுசிந்தனையாக அறிவியல் கல்வியும் ஆராய்ச்சியும் பெருகினால் வழிமுறைகள் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளன.

கல்விக்கும் அடிக்கட்டுமான வளர்ச்சிக்கும் அதிகம் செலவழித்து, தங்களது வெளியுறவுக் கொள்கையை மனிதநேய நட்புறவுடன் வைத்துக் கொள்ள முனைய வேண்டும்.

நம் நாட்டில் ஜாதி, தீண்டாமை, மூடநம்பிக்கை – பக்தி எல்லாம் கொரானா முன்னாலே காணாமற் போய்விட்டது. வர்க்க பேதம் – வருணபேதம் ஏதும் இல்லை.

கோயில்களும், மசூதிகளும், சர்ச்சுகளும் வழிபாட்டுத் தலங்களும், திருவிழாக்களும், மத விழாக்களும், அரசியல் கட்சி கூட்டங்களும்கூட கூடவில்லை. மக்கள் நடமாட்டம் குறைந்த – சுற்றுச்சூழல் மாசு குறைந்துள்ளது என்பது – மறைமுக நன்மை என்றாலும் – அம்முறை தீர்வாகாது.

தனி மனிதர்கள் சமூகத்தில் ஆடம்பரமற்ற சிக்கன, எளிமையான வாழ்க்கையை வாழக் கற்றுக் கொண்டு அது அவர்களை எந்த இக்கட்டான சோதனை காலங்களையும் சமாளித்து, வாழும் நிம்மதியைத் தந்து, மனக்கவலையைப் பெரிதும் மாற்றச் செய்யும்.

தேவைகள் குறைந்த வாழ்க்கை மறுபுறம் சேவைகள் நிறைந்த சமூகத்திற்கான அடிப்படை.

மனித நேயம் முக்கியம். பணத்தையும், பதவியையும், படாடோபத்தையும் பகட்டையும் விரும்பாமல் அன்பால், கருணையால், வெறுப்பற்ற அரவணைப்பால், மனித குலம் வாழ இனியாவது அற்ப பிரச்சினைகளை புறந்தள்ளி, வாழும் வாழ்க்கையை அன்பும் அருளும், மனிதநேயமும் பொங்கும் புதுமுறை வாழ்க்கையை கூடிவாழ்ந்தால் அதன் மூலம் எந்தக் கொடுமையையும் எதிர்கொண்டு வெல்லலாம் என்ற பாடத்தையும் கற்கவேண்டும். அதன்படி நிற்க வேண்டும்.

 கி.வீரமணி,

உண்மை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *