Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நேர்காணல் : ‘கரோனா’ பரவாமல் தடுக்க முடியும்

சிவகங்கையில் பொது மருத்துவராகப் பணியாற்றி வருபவர் பரூக் அப்துல்லா அவர்கள். மருத்துவப் பணியைக் கடந்து சமூகம் சார்ந்த செய்திகளை முகநூல் வழியாக அதிகம் எழுதி வருபவர். நுழைவுத் தேர்வு, இட ஒதுக்கீடு குறித்த இவரின் பதிவுகள் பெரும் விழிப்புணர்வை ஊட்டியனவாகும்.  இன்றைக்குக் கரோனா குறித்த அச்சத்தில் இருக்கிறோம். இந்நோய் ஜனவரி மாதம் சீனாவின் வூகான் நகரில் தொடங்கியது முதலே, தனது முகநூல் பக்கத்தில் எழுதி வந்தவர் மருத்துவர் பரூக் அப்துல்லா. தவிர CORONA VIRUS DIESEASE #COVID-19 எனத் தனியே ஒரு பக்கம் தொடங்கி அறிவியல் பூர்வமாக, ஆதாரங்களுடன் எழுதி வருகிறார்.  இன்றைக்குத் தமிழகம் முடங்கி இருக்கிற சூழலில் ‘கரோனா’ குறித்து விரிவாக நம் சந்தேகத்திற்கு அளித்த பதில்கள்.

கேள்வி: வணக்கம் டாக்டர்!  கரோனா வைரஸ் என்று சொல்கிறார்களே,  இதுபோன்ற கொள்ளை நோய் எப்படி உருவாகிறது?

பதில்: சமூகத்தில் எப்போதும் இல்லாத அளவு ஒரு நோய் பரவும் போது அதைக் கொள்ளை நோய் (EPIDEMIC) என்கிறோம். இந்த நோய் உருவாகக் காரணமான முதல் நோயாளியை CASE ZERO (OR) PATIENT ZERO  என்கிறோம். அவர் இந்த நோயை வேறு எங்கிருந்தோ பயணம் செய்து வாங்கி வந்திருப்பார் அல்லது வேறு ஒரு விலங்கிடம் இருந்து இந்தத் தொற்று கடத்தப்பட்டிருக்கும். இப்படியாக இந்த  CASE ZERO உருவாகிறார்.

இவரிடம் இருந்த இந்தத் தொற்றுப் பிறருக்குப் பரவுகிறது. இப்போது இவர் மிழிதிணிசிஜிளிஸி ஆகிறார். அதாவது தொற்றைப் பரப்புபவர். இவரிடம் இருந்து தொற்றைப்  பெறுபவர் INFECTEE ஆகிறார்.

இப்படியாக ஒரு INFECTOR எத்தனை INFECTEE – க்களை உருவாக்குகிறார் என்பதை R-NAUGHT என்ற அளவு கொண்டு பார்க்கிறோம். கரோனா வைரஸ் 2019 இன் R-0 என்பது 2 முதல் 4 ஆகும்.

அதாவது ஒரு சமூகத்தில் ஒரு தொற்றாளர் உருவானால், அவர் சராசரியாக 2 முதல் 3 பேருக்கு இதைப் பரப்புவார். சிலர் 20 முதல் 30 பேருக்கும் பரப்பக் கூடும். இவர்களை SUPER SPREADERS என்று அழைக்கிறோம். (தென் கொரியாவில் 34 ஆவது தொற்றான பெண்மணி ஒரு SUPER SPREADER  ஆக மாறியது கவனிக்கத்தக்கது)

கிருமித் தொற்று ஒருவருக்கு ஏற்பட்ட உடனேயே அறிகுறிகள் தெரிவதில்லை. தொற்று ஏற்பட்டு,  நோயின் அறிகுறிகள் வெளியே தெரியும் வரை எடுத்துக் கொள்ளும் காலம் INCUBATION PERIOD  ஆகும். இதை நோய் பரப்பக் காத்திருப்புக் காலம் என்று கூறுகிறோம்.

இப்படியாக இந்தக் கரோனா வைரசின் PATIENT ZERO தனக்கு அடுத்த மூன்று பேருக்குப் பரப்ப, அவர்களின் காத்திருப்புக்  காலம் முடிந்து, அவர்கள் மூவரும் தனித் தனியாக மூவருக்குப் பரப்ப என்று அய்ந்தே சங்கிலித் தொடரில் கிட்டத்தட்ட 300 முதல் 400 பேருக்குப் பரப்பி இருப்பர். இப்போது வைரஸ் தனது இருப்பை நிலை கொள்ள செய்து பரவியிருக்கும்.

சீனாவின் வூகான் நகரில் நடந்தது இதுதான்!

கேள்வி: இந்தக் கொரோனா வைரஸ் எந்தெந்த வழிகளில் மக்களைத் தொற்றுகிறது?

பதில்: தற்போது வரை கிடைத்திருக்கும் மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் கரோனா வைரஸ் ஓர் தொற்றுப் பரவும் முறையாகும்!

1) ஒருவர் இருமும் போது அல்லது தும்மும் போது அவரது மூக்கு மற்றும் வாயில் இருந்து வெளிப்படும், காற்றுடன் கலக்கக் கூடிய வைரஸ் கிருமிகளால் இது ஏற்படுகிறது.

2) ஒருவர் தும்மிய அல்லது இருமிய இடத்தில் இருந்து சுமார் ஒரு மீட்டர் தூரம் வரை இருக்கும் இந்தச் சளித்துகள்களில்  கரோனா வைரஸ் கிருமி வீற்றிருக்கும். இதற்கு முன் வந்த ‘சார்ஸ் கரோனாவில்’  செய்யப்பட்ட ஆய்வில் இத்தகைய வைரஸ் இரண்டு மணி நேரம் முதல் ஒன்பது நாட்கள் வரை உயிரோடு இருப்பது தெரிய வந்தது.

3) கரோனா தொற்று ஏற்பட்டவரின் மலத்தில் ஒரு கரப்பான்பூச்சி உட்கார்ந்து, அந்தப் பூச்சி நாம் உண்ணும் உணவில் உட்கார்ந்தாலும் இந்த வைரஸ் பரவும்.

கேள்வி: இருமல், காய்ச்சல், உடல் சோர்வு, மூக்கு ஒழுகுதல் இருந்தால் அவருக்குக் கரோனா பரிசோதனை செய்ய வேண்டுமா?

பதில்: மேற்சொன்ன அனைத்தும் கரோனா தொற்றின் சாதாரண அறிகுறிகள் தான். இது  80% பேருக்குச் சாதாரண தொற்றாக வரும். இந்த  அறிகுறிகள் மட்டும் இருப்ப வர்களுக்கு  எந்த சிகிச்சையும் தேவையில்லை. உங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது. உங்கள் தாத்தா,  பாட்டிகளுக்குப் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு வந்திருப்பது கரோனாவா இல்லை ப்ளூவா என்று அறிவதை விட, உங்களுக்கு வந்த தொற்றை அடுத்தவருக்குப் பரப்பாமல் இருப்பது  மிக முக்கியம்.

பிறகு யாருக்குப் பரிசோதனை செய்ய வேண்டும்?  அந்தப் பரிசோதனையை யார் முடிவு செய்வது என்றால் உங்களுக்குச்  சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தான் முடிவு செய்வர்.

அரசு ஒவ்வொரு கரோனா பரிசோதனைக்கும் ரூபாய் 6 ஆயிரம் வரை செலவு செய்கிறது (ஆதாரம் – ICMR). சாதாரண சளி, இருமல் இருப்போர் அனைவருக்கும் இந்தப்  பரிசோதனையைச் செய்தால், தேவையானவர் களுக்கு இந்தப்  பரிசோதனை கிடைக்காமல் போகும்.

எனவே ,உங்களுக்கு இருமல், காய்ச்சல், உடல் சோர்வு, மூக்கு ஒழுகுதல் இருந்தால் நீங்கள் 80% க்குள் வருகிறீர்கள். மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத் திணறல் ஏற்பட்டால் நீங்கள் 20%க்குள் வருகிறீர்கள். அப்போது அரசு மருத் துவமனை செல்லுங்கள். கரோனா சிறப்பு மருத்துவ வார்டுகள் தயாராக இருக்கின்றன.

கேள்வி: இந்தத் தொற்றில் இருந்து நம்மையும், பிறரையும் பாதுகாப்பது எப்படி?

பதில்: 1) சளி, இருமல், காய்ச்சல் வந்தால் நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்வது (SOCIAL DISTANCING) அவசியமான தாகும்.

2) வெளியே சென்றே ஆக வேண்டு மெனில்  இருமும் போதும், தும்மும் போதும் வாயிலும், மூக்கிலும் “டிஸ்யூ” பேப்பர் அல்லது சுத்தமான கைக்குட்டைக் கொண்டு வாயை மூடிக் கொள்ள வேண்டும். எதுவுமே இல்லாத போது முழங்கையைக் கொண்டு வாயையும், மூக்கையும் மூடித்  தும்ம வேண்டும்.

3) வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் முகக்கவசம் (MASK) அணியலாம். எந்த அறிகுறியும் இல்லாதவர்கள் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை.

கேள்வி: குழந்தைகளுக்கு இந்தக் கொரோனா தொற்றுப் பரவும் சூழல் எப்படி இருக்கிறது?

பதில்: சீனாவின் தொடக்க நிலை ஆராய்ச்சியில்  0-19 வயதுள்ளவர்களுக்கு  2.4% மட்டுமே தொற்று இருப்பதாக முடிவு வந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான முக்கிய ஆராய்ச்சியில் குழந்தைகளும் 13% வரை நோய் தொற்றுக்கு ஆளாகி யுள்ளனர் என்று தெரிய வந்தது.

எனவே குழந்தைகளிடம் கரோனா தொற்றுப் பரவாது என்கிற பொய் நம்பிக்கையில் இருக்க வேண்டாம்.

கேள்வி: வெயில் அதிகம் இருக்கும் நம் நாட்டில் கரோனா தாக்கம் அதிகம் இருக்காது என்கிறார்களே?

பதில்: வெயில் கரோனாவை கொன்று விடும், 27 டிகிரிக்கு மேல் கரோனா வாழாது போன்ற அறிவியல் ஆதாரமற்ற செய்திகளைச் சிலர் பரப்புகின்றனர். கரோனா வைரஸ் தொற்றின் பரவும் விகிதம் ப்ளூ வைரசை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகம்

கரோனா வைரஸ் பரவும் வேகம் ஆய்வு முடிவுகளில் R-0 3.8. அதாவது சாதாரண சீசனல் ப்ளூவை விட மூன்று மடங்கு வேகத்தில் பரவக்கூடியது.  அதேநேரம் வெயில் காலத்தில் இதன் பரவும் தன்மை குறையும். எனினும்  R-0 எண் 3.8 இல் இருந்து எவ்வளவு  குறையும் என்பது தெரியாது

“புதிய கரோனா தொற்றை வெயில் ஓரளவு மட்டுமே தடுக்கும் என்றும், அடுத்தடுத்த மனிதருக்குப் பரவுவதை தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகள் இல்லாமல் குறைத்திட முடியாது”, என்றும் கூறுகிறார்.

வெயில் நம்மை காப்பாற்றும் என்று நம்பி, அரசின் அறிவுறுத்தல்களை மதிக்காமல் பயணங்கள் செய்து கொண்டிருந்தால் அபாயம் வந்து சேரும்.

கேள்வி: பிராய்லர் கோழியின் மூலம் இதுபோன்ற நோய்கள் உருவாகிறது என்றும், அதனால் மாமிசம் சாப்பிடாமல் இருப்பது நல்லது என்றும் பரப்பப்படுகிறதே?

பதில்: கட்டாயம் உணவில் புரதச்சத்து போதுமான அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். முட்டை மற்றும் மாமிசத்தை உண்பதை நிறுத்தினால் நமக்குப் பிரச்சனைகள் தான் அதிகமாகும். எனவே நோய்த் தொற்றில் பாதுகாத்துக் கொள்ள உணவில் தினமும் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள், மாமிசம், மீன்சாப்பிடுங்கள்.

மாமிசம் உண்ணாத மக்கள் நிலக்கடலை, பால், பருப்பு, பன்னீர் பாதாம் போன்ற கொட்டைகள் சாப்பிட வேண்டும். புரதம் தான் நம்மை நோயில் இருந்து காக்கும் கவசம் ஆகும்.

நேர்காணல்  – வி.சி.வில்வம்