ஓய்வு என்றால் ஓய்ந்திருப்பது அல்ல; மற்றொரு வேலையைச் செய்வதுதான் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அவரே அப்படி நடந்தும் காட்டிவருகிறார். அப்படி, பள்ளிக்கூடம் எனக்குப் பணி ஓய்வு வழங்கிவிட்டாலும் நான் ஓய்வே எடுத்ததில்லை என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார் சென்னை ஆவிச்சி மேல்நிலைப் பள்ளியில், உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி தற்போது 80 வயதை எட்டியிருக்கும் அரங்கசாமி.
அரங்கசாமி, தற்போதும் காலையில் இளைய தலைமுறையினருடன் இணைந்து கைப்பந்து, பூப்பந்து, இறகுப் பந்து என தினமும் உடற்பயிற்சியை விளையாட்டாகவே மேற்கொண்டு வருகிறார்.
அவரது வயதை எண்ணி நம்ப இயலாமல் அப்படியா! என்று நாம் வியப்போடு கேட்டால், 2009 ஆம் ஆண்டிலிருந்து இப்ப வரைக்கும், 4 முறை மாநிலப் போட்டிகளிலும், 4 முறை தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்துகிட்டு இதுவரை 45 பதக்கங்களும் 19 விருதுகளும் வாங்கியிருக்கேன் என்று பெருமையுடன் அவற்றை அள்ளிக்காட்டி, நமது வியப்புக்கு மேலும் வியப்பைக் கூட்டுகிறார்.
அவரது மகிழ்ச்சியில் உள்ள உற்சாகமும், அந்த உற்சாகத்தின் பின்னணியிலுள்ள உழைப்பும் நம்மை வியக்க வைக்கிறது. சரி, உடற்பயிற்சி ஆசிரியர், அதனால் தடகளவீரர் என்று அவரை சுருக்க முடியவில்லை! தேனி மாவட்டம் கோம்பை என்னும் கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு பக்கத்து ஊர்க்காரர்தான் இன்றைய இசையமைப்பாளர் இளையராஜா! 1967 முதல் அவர்களது அண்ணன் பாவலர் வரதராஜன் நடத்திய இசைக்குழுவில் பாட ஆரம்பித்திருக்கிறார் அரங்கசாமி. அதன் தொடர்ச்சியாக இவர், தனது மகளுக்கு எம்.எல். வசந்தகுமாரியின் நினைவாக அவரது பெயரைச் சூட்ட, அவரும் ஒரு பாடகியாகி, அப்பாவும் மகளும் இணைந்து வசந்த ராகங்கள் எனும் கலைக் குழுவை நிறுவி, இன்றும் இசைத்து வருகிறார்கள். ஆயிரம் பழைய பாடல்களை தாள லயத்தோடு பாடுவதில் அப்போதும் சரி, இப்போதும் சரி, அரங்கசாமிக்கு நிகர் அரங்கசாமிதான்!
அவ்வளவுதானா அரங்கசாமி? இல்லையில்லை! இந்த விளையாட்டு வீரரிடம் இசைக்கலைஞரிடம் – நடிகரிடம் – ஓவியத்திறனும் சேர்ந்தேயுள்ளது!
தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிடர் இயக்கத்தின் பல்வேறு தலைவர்களின் ஓவியங்களை, உணர்ச்சிகள் வெளிப்படும் வகையில் தீட்டியுள்ளார் அரங்கசாமி! அதுமட்டுமல்ல; விளம்பரப் பலகைகளில் எழுதுவதிலும் வல்லவர்தான்! இவரைச் சகலகலா வல்லவர் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?
எல்லாவற்றிலும் சிறப்பு, மானிட குணங்களிலேயே சிறந்த குணமான உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர்! மனம் விட்டுச் சிரிக்கும் தன்மையர்! இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், அந்த உற்சாகத்தை நமக்கும் தொற்றவைக்கும் சிறப்புக்குரியவர்!
இவர் பெற்ற 40 க்கும் மேற்பட்ட பதக்கங்கள், நினைவுப் பரிசுகளைப் போலவே, விருதுகளின் பட்டியலும் நீளம்தான்!
அத்தனைக்கும் தகுதியானவர்தான் இந்த அரங்கசாமி!
உணவே மருந்து என்று 80 வயதிலும் சுறுசுறுப்பாகச் சுற்றிச் சுழன்று வரும் . அரங்கசாமி அவர்கள், நிச்சயம் இன்றைய தலைமுறையினர்க்கும், இளைய தலைமுறையினர்க்கும் சேர்த்து ஓர் அரிய செய்தியைச் சொல்கிறார்! அந்தச் செய்தி, தமிழர் தலைவர் சொல்வதுபோல, “ஓய்வெடுப்பது என்பது ஓய்ந்திருப்பதல்ல; தனக்குப் பிடித்த வேறு ஏதாவது ஒரு வேலையைச் செய்வதுதான்!’’ இந்த அரிய முன்னுதாரணத்தை விளையாட்டு போலக் கடைப்பிடிக்கும் அரங்கசாமி மேலும் பல்வேறு சிறப்புகள் பெறுவது உறுதி!
– உடுமலை வடிவேல்