(ஒரு நாடகத் தொடர்)
சிந்தனைச் சித்ரா
இடம்: நீதிபதி நெடுஞ்செழியப் பாண்டியன் தலைமையிலான நீதிமன்றம்.
கோர்ட் மீண்டும் கூடுகிறது.
எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள்.
மாண்பமை நீதிபதி நெடுஞ்செழியப் பாண்டியன் உள்ளே நுழைந்து இருக்கையில் அமர்கிறார்.
அனைவரும் (வழக்குரைஞர் புத்தியானந்தர், குல்லூகப் பட்டர், மண்டல், மற்றவர்கள்) உள்ளே அமர்ந்துள்ளனர்!
நீதிபதி: வழக்கை மேலே தொடரலாம்.
புத்தியானந்தர்:நித்தியானந்தாவைக் கைது செய்ய முடியாமல் காவல்துறையினர் தடுமாறுகின்ற படியே – தேடப்படும் குற்றவாளி என்ற நோட்டீஸ் ஒட்டியபடி உள்ளனர்.
அதுபோல இராமனுக்கு எப்படி சம்மன் அனுப்புவது எனத் தெரியவில்லை என்று கோர்ட் அதிகாரிகள் திகைக்கின்றனர். அதனால் கனம் கோர்ட்டார், அதிகாரிகளுக்கு விளக்க வேண்டும்.
வழக்குரைஞர் குல்லூகப்பட்டர்: நித்தியானந்தா கைலாசத்திற்கு சம்மன் அனுப்புவது போலவே, இராமனுக்கு விஷ்ணுலோகத்திற்கே அனுப்பலாம்.
வழக்குரைஞர் புத்தியானந்தர்: அப்ஜெக்ஷன் மைலார்ட்! நித்தியானந்தா தற்கொலை செய்து கொள்ளவில்லை; உயிருடன் இருக்கிறார். ஆனால் இராமன் அப்படி அல்ல. இராமாயண இதிகாசங்கள்படி சீதையைக் காட்டுக்கனுப்பி, லவ, குசா பிறந்த பின்பு அவர் (இராமன்) சராயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக எழுதியுள்ளனர்.
அவதாரம் எடுத்து கீழே இறங்கி வந்தவர் ஏன் இப்படி சராயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? மீண்டும் விஷ்ணுவாகவே அவர் உலகத்தில் ஆட்சி செய்யத்தானே போயிருக்க வேண்டும்.
குல்லூகப்பட்டர்: (குறுக்கிட்டு) அதற்கொருப் பிராப்தி வேண்டாமோ, அவர் பண்ணின பாபத்திற்காக அவரே தண்டனை கொடுத்திட்டார்; அதனால்தான் தற்கொலை! (எல்லோரும் சிரிக்கிறார்கள்). இப்போது சம்மன் எப்படி அவருக்கு, அனுப்ப முடியும்? அதுவும் ‘தேவர்களுக்கு’ எப்படி மனுஷாள் கோர்ட் சம்மனை அனுப்ப முடியும்?
புத்தியானந்தர்: தேவாள்தான் மனுஷாளாகத் தானே பூமியில் வந்து பிறந்தார்!
குல்லூகப்பட்டர்: நோநோ மைலார்ட்! ஸ்ரீஇராமபிரான் அவதாரமாக அல்லவா வந்தார். ‘அவதார்’ என்ற சமஸ்கிருதமான தேவபாஷையில் “கீழே இறங்குதல்” என்று பொருள் – தமிழில் நீச்ச பாஷையில் சொல்வதனால்….
புத்தியானந்தர்: அப்ஜெக்ஷன் மைலார்ட்! சமஸ்கிருதத்தை தேவபாஷை, என்றும், தமிழை நீச்சபாஷை என்றும் கூறுவதை ஏற்க முடியாது.
இரண்டும் செம்மொழிகள் என்று இந்திய அரசால் 10 ஆண்டுகளுக்குமுன்பே பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் கூட சமஸ்கிருதம் புரோகித வர்க்கத்தின் மந்திரங்களில்தான், பூஜை புனஸ்காரங்களில் மட்டும்தான் புழங்கும் மொழி. தமிழ் மாதிரி பேச்சு வழக்கில் மக்களிடையே புழங்காதமொழி. அப்படி இருக்கையில் இப்படி அவர் சொல்வது ஏற்கத்தக்கதல்ல.
குல்லூகப்பட்டர்: தேவபாஷைன்னு நாங்களா சொல்லுகின்றோம் – மைலார்ட்! இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பாகத்தில், ஹிந்திதான் ஆட்சி மொழி என்று, கூறும் பிரிவில் (Article 343 & 344) Hindi written in Deva nagari Script என்ற சொல்தான் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது!
நீதிபதி: 22 மொழிகள்தான் 8ஆவது அட்டவணையில்! அதில் இப்படி சமஸ்கிருதம் முன்பு இல்லை. சமஸ்கிருத எழுத்து ‘தேவ எழுத்து’ என்றும், ‘பாஷை தேவபாஷை’ என்றும், எப்படியோ இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே நுழைந்து விட்டது. மிகப் பெரிய அநீதி – அது ஒரு கட்டத்தில் திருத்தப்படல் வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு இந்த நீதிமன்றம் ஆணையிடுகிறது. அது சரி வழக்கை விட்டு நெடுந்தூரம் வந்து விட்டோமே! இராமனுக்கு சம்மன் எப்படி அனுப்புவது?
அயோத்தியில் இப்போது கரோனா வைரஸ் பரவல் பற்றிக்கூட கவலைப்படாது, இராமர் கோயில் கட்டும் பணியைச் செய்திட மத்திய அரசு, உச்சநீதிமன்றத் தீர்ப்பினைப் பெற்றுள்ளது. அவர்களுக்கே அனுப்பி, “இராமன், C/o இராமன் கோயில் கட்டும் குழு”ன்னு அனுப்ப உத்தரவிடலாமே!
குல்லூகப்பட்டர்: அப்ஜெக்ஷன் மைலார்ட்! ஸ்ரீஇராமர் இன்னும் அங்கே வரவில்லை. கோயில்கட்டி கும்பாபிஷேகம் பண்ண பிறகுதான் வருவார் மை லார்ட்!.
நீதிபதி: அப்போது விஷ்ணுலோகம் அனுப்ப உத்திர விடுகிறேன்.
கோர்ட் முடிகிறது. 15 நாள் கழித்து மீண்டும் கூடும்.
(தொடரும்)