இயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்!

ஏப்ரல் 01-15 2020

அய்யாவின் அடிச்சுவட்டில் …

கி.வீரமணி

8.4.1993 அன்று பட்டுக்கோட்டையிலும், 24.3.1993 அன்று ஆம்பூரிலும் நடைபெற்ற கழக வட்டார மாநாடுகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன். “மதவெறியை மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம்!’’ என்னும் முழக்கத்தோடு தொடங்கிய இம்மாநாடுகளில் தந்தை பெரியாரின் தொண்டைப் பற்றி எடுத்துரைத்தேன்.

 நெ.து.சுந்தரவடிவேலு

12.4.1993 அன்று கல்வி நெறிக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு மறைவுக்கு இரங்கல் அறிக்கையை ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தோம். அதில், ‘‘தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் வாழும் தமிழ் இளைஞர்களின் கல்விக் கண்ணை திறந்த கல்வி வள்ளல், நிரந்தர மதிப்புக்குரிய நமது ‘டைரக்டர்’, ‘நமது வைஸ்சான்ஸ்லர்’ என்று தந்தை பெரியார் அவர்களால் பாசத்தோடு அழைக்கப்பட்ட அய்யா நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் (12.4.1993) இரவு மறைந்தார் என்பது, கல்வி உலகத்துக்கும் மனிதநேயம் பேணுவோர்க்கும் இன, மொழிப் பற்றாளர்களுக்கும் பேரிடி போன்ற துயரச் செய்தியாகும்.

மைல்கற்களைத் தடைக் கற்களாக இருந்த, கல்வித் துறையில் அந்தத் தடைகளை நீக்கி, நாடெல்லாம் கல்வி நீரோடை பாயக் காரணமான கல்வி வள்ளல் அவர்கள்.

‘எல்லோருக்கும் கல்வி; ஒன்றாகக் கல்வி’ என்னும் அரிய தத்துவத்தினைச் செயல்படுத்தி கல்விப் புரட்சியை உருவாக்கிய இணையற்ற செயல்வீரர் அவர்! அவரது உடல் தளர்ந்தாலும், உள்ளம் கொள்கையோடு கல்வி நெறியில், சமதர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் சமநீதி விரும்பிய சரித்திரப் பெருமையாளராகக் கடைசி வரையில் வாழ்ந்துகாட்டியவர்.

கல்வித் துறையில் அளப்பரிய சாதனைகளைப் படைத்த அவரது மறைவு யாராலும் எளிதில் நிரப்ப முடியாத பெரும் பள்ளத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்திவிட்டது.

தந்தை பெரியார் அவர்களால் அவருக்கு மணிவிழா, மணவிழா எல்லாம் நடத்தப்பட்டன என்பதே, அய்யா அவர்களால் கல்வி வள்ளல் எவ்வளவு மதிக்கப்பட்டார் என்பதற்கு அடையாளம் ஆகும்.

காமராசர், அண்ணா, கலைஞர் ஆகியவர்கள் முதல்வர்களாக தமிழ்நாட்டில் இருந்தபோது அவர்கள் ஆற்றலை அடையாளம் கண்டு பல பொறுப்புகளில் அமர்த்திய பின்தான் நாடே பயனை அனுபவித்தது!

நல்ல பகுத்தறிவுவாதியாக, ‘‘சிறந்த சமதர்ம வீரராக, பொதுநலத் தொண்டராக, கல்வி வள்ளலாக, நேர்மையும், ஆற்றலும் ஒருங்கே இணைந்த நிருவாகியாக இருந்து உழைத்து சரித்திரம் படைத்த மாமேதை ஆவார். அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்!’’  என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தோம். அவரது உடலுக்கு நாம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம். என்னுடன் துணைவியார் மோகனா அவர்களும் வந்திருந்தார்.

நமது கல்வி நிறுவனங்கள் சார்பில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

நாகை காயிதே மில்லத் மாவட்ட திராவிட மகளிர் விடுதலை மாநாடு _ முற்றிலும் பெண்களே ஏற்பாடு செய்து, பெண்களே நடத்திய தனித்தன்மையான மாநாடு _ 10.4.1993 அன்று நடைபெற்றது. நாகை, திருவாரூர் சாலை வேளாங்கன்னிக்குச் சாலை பிரியும் இடத்தில் _ புத்தூரில் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவச் சிலையைத் திறந்து வைத்தேன். அதனைத் தொடர்ந்து பேரணி புறப்பட்டது. மகளிர் முன்வரிசையில் சென்றனர். கழகத் தோழர்கள் அணிவகுத்து சைக்கிளில் பின்வரிசையில் வந்தனர். “மதவெறியை மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம்!’’ என்னும் முழக்கம் முதல்நிலையைப் பெற்றது.

எஸ்.எஸ்.எம்.இராஜலட்சுமி

இந்த மகத்தான பேரணியில் மகளிர் அணிச் செயலாளர் க.பார்வதி, எஸ்.எஸ்.எம்.இராஜலட்சுமி,  எல்.இலட்சுமி,   மகளிரணிச் சகோதரிகள் எஸ்.பேபி, எம்.சமயம்பாள், கே.சரளா, எம்.சந்திரா உள்ளிட்ட பெண்மணிகள் இடம் பெற்றனர். அவர்களின் சீரிய முயற்சியால் மாநாட்டில், கருத்தரங்கம், கவியரங்கம், படத்திறப்பு, உரையரங்கம், தீர்மானம், கழகப் பொறுப்பாளர்களின் கருத்துரை, திருமணம், தாலி அகற்றுதல், கூட்டம், நிதியளிப்பு, எடைக்கு எடை நாணயம் வழங்குதல் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மலர் வெளியீடு, 170 ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு விருது மற்றும் சான்று வழங்குதல் எனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. எனக்கு “இனமானப் போராளி’’ பட்டம் வழங்கப்பட்டது. மாநாட்டு செலவு போக ரூ.50,000 நிதியும் இம்மாநாட்டில் வழங்கப்பட்டது.

23.4.1993 அன்று மண்டல் கமிஷன் பரிந்துரையினை அமல்படுத்துதல், பதவி உயர்விலும், இடஒதுக்கீடு கோருதல், இடஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மாற்றுதல், பிற்படுத்தப்பட்டோருக்கான பொருளாதார அளவுகோலைக் காட்டி இடஒதுக்கீடு பெற முடியாமல் ஆக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் திருத்தம் செய்தல் _ இவற்றை உள்ளடக்கிய கோரிக்கைகளுடன், திராவிடர் கழகம், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

என் தலைமையில் சென்னை பெரியார் திடலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றோம். இந்த ஊர்வலத்தில், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் சா.சுப்பிரமணியம் அய்.ஏ.எஸ். (ஓய்வு) ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார். தேவர் பேரவை நிறுவனர் டாக்டர் இராமகிருஷ்ணன், யாதவர் மகா சபையின் பொதுச்செயலாளர் புலவர் புகழேந்தி, தமிழ்நாடு கைவினைஞர்கள் சங்க மாநில அமைப்புகளின் செயலாளர் எஸ்.ஆறுமுகம், அகில பாரதிய விசுவகர்ம மகாசபை பொதுச்செயலாளர் ஏகாம்பரம் உள்ளிட்ட சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கழகக் கொடிகளை ஏந்தி, கோரிக்கை அடங்கிய அட்டைகளையும் ஏந்திச் சென்றனர்.

மண்டல் அறிக்கையை அமல்படுத்தக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கைதாகும்

ஆசிரியர் மற்றும் கழகத்தினர்

ஊர்வலம் ரிப்பன் கட்டடம் அருகே சென்றதும், “தடை செய்யப்பட்டுள்ளது’’ என்று காவல்துறை ஆய்வாளர் கூறினார். “மீறுவோம்’’ என்று கூறியதால் நூற்றுக்கணக்கான தோழர்களுடன் கைது செய்யப்பட்டோம்.

கழக மகளிர் அமைப்பாளர் நாகமணி, மாநில மகளிரணிச் செயலாளர் க.பார்வதி, ஏ.பி.ஜெ.மனோரஞ்சிதம், மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் செ.வை.ர.சிகாமணி, சென்னை மாவட்ட தொழிலாளரணித் தலைவர் பா.தட்சிணாமூர்த்தி, வடசென்னை மாவட்டத் தலைவர் க.பலராமன், தென்சென்னை மாவட்ட செயலாளர் எம்.கே.காளத்தி கி.இராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் உடன் கைது செய்யப்பட்டனர்.

18.04.1993 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மதவெறியை மாய்ப்போம் மனித நேயம் காப்போம் என்று தமிழ்நாடு முழுவதுமான பிரச்சாரப் பெரும் பயணத்தின் நிறைவு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, மதவெறி ஆபத்தானது என்பதை விளக்கி கடந்த ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி கன்னியகுமரியிலிருந்து சென்னை வரை நடைபெற்றது. நாடு முழுவதும் பிரச்சார செய்துள்ளோம். மதவெறியை மாய்ப்பதன் மூலமே மனித நேயத்தைக் காக்க முடியும் என்பதனை தெளிவாக அறிவித்திருக்கிறோம்!

எந்தப் புரட்சியானாலும், சமுதாயப் புரட்சியைப் பொறுத்த வரையிலே, அது தென்னாட்டில் – தந்தை பெரியார் பிறந்த மண்ணான தமிழ்நாட்டிலிருந்துதான் கிளம்ப வேண்டும் என்கிற அடிப்படையில்தான் இந்த ஒலி முழக்கத்தை நாம் கொடுத்தோம். அண்மையில் சமூகநீதி காவலர் வி.பி.சிங் அவர்களுடன் தமிழகத்திற்கு வந்த அன்பு சகோதரர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள், “டில்லி இந்தியாவின் தலைநகரம் என்று சொன்னாலும், சமூகநீதிக்கு இந்தியாவில் ஒரு தலைநகரம் உண்டு என்று சொன்னால் அது தந்தை பெரியார் பிறந்த மண்ணான தமிழ்நாடாகத்தான் இருக்க முடியும். ஆகவேதான், தமிழ்நாடு எப்படி வழிநடத்திச் செல்கிறது என்பதை எண்ணிப் பார்க்கிறோம்” என்று சொன்னார்.

ஆரியத்தின் உயிர்நாடி எதுவென்று கண்டறிந்து அந்த இடத்தில்தான் தந்தை பெரியார் கை வைத்தார்கள். அதன் காரணமாக குலதரும ஆட்டம் கண்டது. தந்தை பெரியாரின் தத்துவம் தென்னாட்டில் மட்டுமல்லாது வடநாட்டிலும் பரவ ஆரம்பித்தது என்று பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை எடுத்து விளக்கி உரையாற்றினேன்.

27.4.1993 அன்று பெரியார் – மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரியின் முதல்பட்டமளிப்பு விழா தஞ்சை வல்லத்தில் நடைபெற்றது.

அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர்எம்.அனந்தகிருட்டினன் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாச் சிறப்புரையாற்றினார்.

மாலையில் தொடங்கிய இவ்விழாவிற்கு பெரியார்- மணியம்மை கல்வி அறக்கட்டளைக் கழகத்தின் தலைவர் என்கிற முறையில் தலைமை வகித்தேன். பெரியார் -மணியம்மை பொறியியற் கல்லூரியின் தாளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் பேராசிரியர் பி.எஸ்.கோபால்சாமியின் கல்லூரி அறிக்கையைத் தொடர்ந்து, கல்லூரியின் முதல் அணி மாணவியருக்கு பட்டமளிப்பு விழா தொடங்கியது. விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் நல்.இராமசந்திரன், பேராசிரியர் சி.சுப்பிரமணியன் ஆகியோர் பட்டதாரிகளின் பெயர்களை அறிவிக்க, பட்டங்களையும், பதக்கங்களையும் மாணவியர்களுக்களித்து உரையாற்றினேன்.

பட்டமளிப்பு விழாவில் தமிழ்ப் பல்கலைக் கழக துணை வேந்தர் அவ்வை நடராசன், தொழிலதிபர் வீகேயென் நிறுவனர் எல்.கண்ணப்பன் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, ஆளுமைக் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.சாமி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

பட்டமளிப்பு விழாவில் ஏராளமான கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கல்லூரி மாணவர்களும், பெற்றோர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

28.04.1993 அன்று சென்னை பெரியார் திடல் நடிகவேள் ராதா மன்றத்தில், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகளின் சார்பாக புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழா சென்னை பாரதிதாசன் குடியிருப்பில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு வருகைதந்த நீதிபதி எம்.மருதமுத்து, நடிகர் சத்யராஜ், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், செய்யாறு ரவி, தென்கச்சி சாமிநாதன், மனசை பகீரதன் முதலியோர் பெரியார் திடலில் இயங்கிவரும் மருத்துவமனை மற்றும் பல நிறுவனங்களைப் பார்வையிட்டனர். இயக்குநர் திரு.வீ.சேகர் அவர்களை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ராசவேலு அறிமுகப்படுத்தி உரையாற்றினார். தொடர்ந்து இயக்குநர் வீ.சேகர் அவர்களுக்கு “சீர்திருத்த ஒளி” என்னும் விருதினை வழங்கினேன். தொடர்ந்து இயக்குநர் வீ.சேகர் ஏற்புரை ஆற்றினார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழாவில் ‘இனமுரசு’

என விருதினை சத்யராஜ்க்கு வழங்கும்

ஆசிரியர் மற்றும் கழகத்தினர்

 பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு “நகைச்சுவை நாயகம்” எனும் விருதினை வழங்கினேன்.

சத்யராஜ் அவர்களுக்கு சால்வை அணிவித்து ‘இனமுரசு’ எனும் விருதினை வழங்கி அவரது கொள்கை உணர்வையும், குடும்ப பாரம்பரியத்தைப் பற்றி எடுத்துரைத்தேன்.

29.4.1993 அன்று மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.வி.இராமசாமி அவர்கள் மீது குற்றச்சாட்டு (Impeachment) வந்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்து “விடுதலை’’யில் அறிக்கை எழுதினோம்.

அவர் மீதான குற்றச்சாட்டு இதுதான்:

“தனது அலுவலகத்திற்கு (வீடும் அலுவலகமும் இணைந்தும் இருக்க அங்குள்ள அரசு பாதுகாப்புக் கருதி தனிச்சலுகை அளித்துள்ளது என்பது பலருக்குத் தெரியாது) கம்பளங்கள், தட்டு முட்டுச் சாமான்கள், மேஜை, நாற்காலி, சோபாக்கள் வாங்கியது அளவுக்கதிகம் என்பதுதான்’’ பிரதான குற்றச்சாட்டு.

இவைகளை அவர் என்ன சொந்த வீட்டுக்கா எடுத்துக் கொண்டார்? இல்லையே! அடுத்த தலைமை நீதிபதி அலுவலகம்தானே அது?

அவரது விசேஷ பாதுகாப்புக்காக இரண்டு தங்கும் இடங்கள்; (Two Residences) அவரது குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக ஓர் இடத்தில் இருப்பது விரும்பத்தக்கதல்ல என்று பஞ்சாப் அரசே கருதி, குடும்ப உறுப்பினர்கள் பிரிந்து (சென்னை, பஞ்சாப்) இருக்க வழிவகை செய்த அரசின் ஆணை உள்ளது. தொலைபேசி தொடர்புக்கும், வசதி செய்து தரப்பட்டுள்ளதால், டிரங்கால் கட்டணம் கூடுதல் செலவாகியிருப்பது சட்ட சம்மதம் பெற்றதே!

அவர் மீது விசாரணைக்கு மூவர் நீதிபதிகள் குழு என்பது முறையானதா? சுப்ரீம் கோர்ட் நீதிபதியை விசாரித்த மூவர் குழுவில் ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதி, மற்ற இருவரில் ஒருவர், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி; மற்றொருவர், பம்பாய் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. இதுவே ஒரு தவறான முன்மாதிரி, இழுக்கான ஒன்று அல்லவா?

அக்குழுவினர் தங்கள் முடிவை அறிவிப்பதற்கு முன், அவரது கருத்தினையோ, சாட்சியத்தையோ பெற முயற்சிக்கவில்லை. (Natural Justice) கடிதங்களை அனுப்பவோ வேறுவகையிலோ முயற்சிக்கவில்லை.

ஒரு சாதாரண தொழிலாளியைத் தற்காலிக வேலை நீக்கம் செய்வதற்கு முன் அவரது கருத்தினை அறிய அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டதா என்று தொழில் தகராறில்கூட கேட்கும் நியாயம் உள்ள போது, உச்சநீதிமன்ற நீதிபதி விஷயத்தில், விஷயம் தெரிந்த “பெருமக்களான நீதிபதிகள்’’ இப்படி சட்டத்திற்கும், பொது நியாயத்திற்கும் முரணாக நடந்துகொள்வது எவ்வகையில் சரியானது?

17.05.1993 மற்றும் 18.05.1993 ஆகிய இரு நாள்களும் சென்னை பெரியார் திடலில் காஞ்சி சங்கராச்சாரியார்களின் மோசடிகளை விளக்கி சிறப்புரை நிகழ்த்தினேன். இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட தி.க. துணைத்தலைவர் குடந்தை கோவிந்தராசன் வரவேற்புரை ஆற்றினார். 10 ஆண்டுகளுகு முன்பு இதே தலைப்பில் நான் 10 தொடர் தலைப்புகளில் உரை நிகழ்த்தினேன், தனி நூலாக வெளி வந்துள்ளது. இதுரை அந்த நூலில் வந்த கருத்துகளுக்கு சங்கராச்சாரியார் தரப்பிலிருந்து எந்த விதமான மறுப்பும் வரவில்லை என்பதனை எடுத்துக்காட்டி உரை நிகழ்த்தினேன்.

சங்கராச்சாரியார்களைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது எங்களின் நோக்கமல்ல, அதை நாங்கள் விரும்பாதவர்கள். அவர்களின் கொள்கைகளின் அடிப்படையில் தன் கருத்துகளை நாம் எடுத்துரைக்கிறோம் என்று கூறி கருத்துகளைப் பதிவு செய்தேன்.

22.05.1993 அன்று தஞ்சை அண்ணா நகரில் நடைபெற்ற கழக இளைஞரணி அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனின் தங்கை இரா.ரமணி – கல்யாணகுமார் ஆகியோரது மணவிழாவினை தஞ்சாவூர் தந்தை பெரியார் சிலையிலிருந்து தொடங்கிய மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தின் முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடத்தி வைத்தேன். காலையில்தான் திருமணம் நடத்த வேண்டும் என்பதே ஒரு மூடநம்பிக்கையாகும். இந்த மணமக்கள் உட்கார நாற்காலிகூட எடுத்து வராமல் இரண்டு மாலைகளுடன் வந்து இவ்வளவு பெரிய கூட்டத்தில் எளிமையாக தங்களது திருமணத்தை நடத்திக் கொள்கிறார்கள்! இப்படி பொதுக்கூட்டங்களில் திருமணங்களை நடத்திக் கொள்ளக்கூடிய துணிச்சலை தந்தை பெரியார் கொடுத்திருக்கிறார். உலகத்திலேயே எந்த ஒரு தலைவரும் இவ்வளவு பெரிய புரட்சியைச் செய்ததில்லை என்று எடுத்துக்காட்டக்கூடிய நிகழ்ச்சிதான் ரமணி – கல்யாணகுமார் திருமண விழா என்று கூறி வாழ்த்துரை வழங்கினேன்.

29.05.1993அன்று கொளத்தூர் பேருந்து நிலைய திடலில் நடைபெற்ற அன்றைய கழக அமைப்புச் செயலாளர் கொளத்தூர் மணி அவர்கள் இல்ல மணவிழாவில் கலந்துகொண்டு விழாவினை நடத்தி வைத்து வாழ்த்துரை நிகழ்த்தினேன்.

இந்த திருமணத்திற்கு சேலம் மாவட்ட கழகத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் தலைமை விகித்தார்.

திருமணத்தை நடத்தி வைத்து உரையாற்றுகையில், “வீட்டைக் கட்டிப்பார் – கல்யாணம் பண்ணிப்பார்” என்று சொல்லக்கூடியவர்களுக்கு இரண்டும் தொல்லையான பணிகள் அல்ல; எளிமையானது என்பதை உணராதவர்களுக்கு உணரவைக்கவும், புரியாதவர்களுக்கு; புரிய வைக்கவும்தான் இந்த விழா.

ஆண் எஜமான் அல்ல; பெண் அடிமையும் அல்ல எனகிற மனித நேய அடிப்படையில் ஆடம்பரமின்றி எளிமையாக திருமணங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று எடுத்துரைத்தேன். மணவிழாவும் பொதுக்கூட்டமும் ஒரே நேரத்தில் சிறப்பாக நடைபெற்றது – எளிமைக்கும் கொள்கைப் பரவலுக்கும் வழிகாட்டலாக அமைந்தது.

மணமக்கள் இராசராசன் – தமிழ்ச்செல்வி வாழ்க்கைத் துணை நல

ஒப்பந்தத்தை நடத்தி வைக்கும் ஆசிரியர் மற்றும் கழகத்தினர்

 03.06.1993 அன்று திருவண்ணாமலை சா.கு.சம்பந்தம் – சூர்யகுமாரி ஆகியோரின் மகன் இராசராசன் – நாகை காயிதே மில்லத் மாவட்டம் கோட்டூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் வி.பாலசுப்பிரமணியன் ருக்மணி ஆகியோரின் மகள் தமிழ்செல்வி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தவிழா தஞ்சை வ.உ.சி நகர் கவிதா மன்றத்தில் திராவிடர் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்களின் தலைமையில் சீரும் சிறப்புடனும் நடைபெற்றது.

மணமகன் இராசராசன், என்னுடைய துணைவியார் மோகனா அவர்களின் தங்கையான சூர்யகுமாரி அவர்களின் மகனாவார். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினேன்.

அப்போது, உலக முழுவதும் உள்ள தமிழினக் குடும்பங்கள் அனைத்தும் நம் குடும்பங்கள் என்றாலும், சமுதாயப் போக்கில் – நடைமுறையில் இரத்த உறவைக் குறிப்பிட்டுக் குடும்பம் என்று சொல்லுகிறார்களே, அந்த முறையில்தான் இதனை எங்கள் இல்லத் திருமணவிழா என்று இங்கே குறிப்பிட்டதை வரவேற்பு உரையில் விளக்கினேன்.

எவ்வளவு படித்திருந்தாலும். எவ்வளவு பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும் அதைவிட கொள்கையில் பற்றுடனும் உறுதியுடனும் இருப்பதை நான் பெருமையாகக் கருதுவேன்.

அந்த முறையில் மணமகன் இராசராசன் கொள்கையில் தெளிவுடன் இருப்பது கண்டு எக்களுக்கெல்லாம் பெருமை, நாங்கள் யாரும் வற்புறுத்தாமலேயே கருப்புச்சட்டை அணிந்து மேடையில் வீற்றிருக்கிறார்கள்! அதுபோல மணமகள் தமிழ்ச் செல்வி நல்ல பெண், நமது பாலிடெக்னிக்கில் படித்து, அதன் விடுதி உதவி காப்பாளராக இருந்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றவர். அவரது தந்தையார் நல்ல கொள்கை உறுதியும், கழக ஆர்வமும் கொண்டவர் என்று குறிப்பிட்டேன்.

மணமக்களை உறுதிமொழி கூறச்சொல்லி மாலையும், மோதிரமும் அணியச் செய்து வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் நடத்தி வைத்தேன்.

6.6.1993 அன்று இரவு திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எனக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது.

கழகப் பொதுக்கூட்ட மேடையில் அமைக்கப்பட்டிருந்த தராசின் ஒரு தட்டில் என்னை அமர்த்தி எடைக்கு எடை நாணயம் அளித்தனர்.

அப்போது உரையாற்றும்போது, நீங்கள் எடைக்கு எடை கொடுத்த நாணயம் ஆனாலும் அல்லது மாலைக்கு பதிலாகக் கொடுத்த பணம் ஆனாலும் அது எங்களது வீட்டுக்குப் போகாது. மாறாக, தந்தை பெரியார் அவர்களின் காலத்திலிருந்து அவருக்கு மக்கள் கொடுத்த ஒவ்வொரு சல்லிக்காசும் எப்படி மக்களுக்காகவே பயன்படுகிறதோ, அதுபோல் தான் இந்தப் பணமும் மக்களுக்காகவே பயன்படும்.

சங்கராச்சாரியாருக்கு 100 கிலோ தங்கம் எங்கிருந்து வந்தது என்பது தெரியாமல் இருக்கிறது. பெரியார் பெருந்தொண்டர் வேளாங்கண்ணி முத்தையா அவர்கள் மிகப்பெரிய கட்டடத்தைக் கட்டி, அந்தக் கட்டடத்தில் அறிவியல் தொழில் நுட்பங்களை ஓவியமாகத் தீட்டியுள்ளார். அந்தக் கட்டடத்தை பெரியார் சுயமரியாதை நிறுவனத்துக்குத் தந்திருக்கிறார். அதோடு அதற்கு நிதியையும் தந்துள்ளார். அது மட்டுமல்லாமல் இப்போது சிறுதுளி பெருவெள்ளத்திற்கும் ரூ.1000த்தினை வழங்குவதாக அறிவித்துள்ளார். இப்படி பலதரப்பட்ட மக்களும் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள் என்று எடுத்துரைத்தேன்.

9.6.1993 அன்று முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதை வீரர்  நளம்புத்தூர் மானமிகு அ.பூவராகவன் அவர்கள் தமது 91ஆவது வயதில் சென்னையில் இயற்கை எய்தினார். சுயமரியாதை உலகுக்கும் நமது இயக்கத்துக்கும் மிகத் துயரத்தைத் தரக்கூடிய துன்பச் செய்தியாகும். பதிவுத்துறையில் சார்பதிவாளர்  என்கிற பதவியில் இருந்தவர், இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பே ஒவ்வொரு ஊரிலும் இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதற்குத் தோழர்களைத் தயாரித்த பாங்கும் அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகளும் தொல்லைகளும் ஏராளம்.

தந்தை பெரியார் அவர்களால் மதிக்கப்பட்டவர். அண்ணா அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர். அக்கால இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள், பேச்சாளர்கள் பலரும் அவரது உபசரிப்புக்கு ஆளானவர்கள் ஆவார்கள். எந்த நிலையிலும் கொள்கையை விட்டுக் கொடுக்காத வைரம் பாய்ந்த நெஞ்சுரம் கொண்டவர். நான், சில வாரங்களுக்கு முன் அவரது வீட்டில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கூறி சால்வை அணிவித்தேன். இறுதி மூச்சு அடங்கும் வரை அவர் ஒரு சுயமரியாதை வீரராகவே வாழ்ந்தவர்; பிறரை வாழவும் வைத்தவர்.

சுற்றுப்பயணத்திலிருந்தபோது, நேராக சென்று அவரது இறுதி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டேன்.

அவரது மகன் நண்பர் சோலையப்பன், டாக்டர் பழனியப்பன், மற்றும் ஏராளமான பேரன், பேத்திகள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தோம்.

(நினைவுகள் நீளும்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *