“மனது’’ எங்கே இருக்கிறது?
“மனது’’ (மனசு), மனசாட்சி, இரக்கம் போன்றவை பற்றி குறிப்பிடும்பொழுது எல்லோரும் இயல்பாக இதயம் இருக்கும் பகுதியைத் தொட்டுக் காண்பிப்பதைப் பார்க்கிறோம். காதலுக்கும், அன்புக்கும் அடையாளமாக இதயம் காண்பிக்கப்படுகிறது. “Oh, my sweet heart” என்றுதான் காதலர்கள் சொல்கிறார்களே ஒழிய, யாரும், “Oh, my sweet kidney” என்றோ, “Oh, my sweet brain” என்றோ யாரும் சொல்வதில்லை. அறிவுக்கு, மூளையைச் சுட்டிக்காட்டினாலும், அன்பு, பாசம், நேசம், இரக்கம், பரிவு, நட்பு, காதல் போன்ற உணர்வுகளுக்கு இதயமே அடையாளப் படுத்தப்படுகிறது. ஆனால், உண்மை என்ன? இதயமோ ஒரு மனித உடலின் ஓய்வறியாப் பொறியாக (Mechine) நாம் உருக் கொண்டது முதல், முடிவெய்தும் நொடிவரை தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டே இருக்கிறதே ஒழிய, மேற்கண்ட உணர்வுகளுக்கும், அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இல்லாத கடவுளின் மேல், எல்லாச் செயல்களுக்கும் (அவனன்றி ஓர் அணுவும் அசையாது) காரணமாக்குவதைப் போல், எல்லா வகை உணர்வுகளுக்கும் இதயத்தையே காரணமாக்குகின்றோம். மேற்சொன்ன அத்துணை உணர்வுகளுக்கும், உண்மையான காரணம், நம் மூளையே ஆகும். “பாவம் ஓரிடம், பழி ஓரிடம்’’ எனக் கூறுவதுபோல் மூளையின் எண்ணங்களுக்கும், கற்பனையான உணர்வுகளுக்கும், நாம் இதயத்தை அடையாளப்படுத்துகிறோம்.
******
டைகர் சார்க் (Tiger Shark) எனப்படும் புலி சுறாக்களுக்கு பத்தாண்டு கால வாழ்நாளில் 24 ஆயிரம் பற்கள் முளைப்பது உயிரியல் வல்லுநர்களை வியப்படைய வைத்துள்ளது.
உலகில் நீளமான சுரங்கப்பாதை நார்வேயில் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்துள்ளனர்.
******
செயற்கை மழை
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தண்ணீர் பிரச்சனை தலைதூக்கி வருகிறது. இப்பிரச்சனையை சமாளிக்க பல்வேறு நாடுகளும் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் ஒன்றாக மேக விதைப்பின் மூலம் செயற்கை மழை பொழியச் செய்வது என்பது அதிகரித்து வருகிறது. மேக விதைப்பு என்னும் முறையில், மேகங்களில் செயற்கையாக ரசாயனப் பொருள்களை கலந்து மழை பெய்யும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறார்கள். இதில் உபயோகப்படுத்துவது கார்பன்- டை-ஆக்ஸைடு. சில்வர் அயோடைடு அல்லது கால்சியம் குளோரைடு போன்ற வேதிப் பொருள்கள் இதில் ஒருவகை உப்புகளை மேகங்களில் தூவினால் மேகத்தின் எடை அதிகரித்து மழையை வரவழைக்கச் செய்கிறார்கள். ஆனால், மழை பெய்ய சிறிய வாய்ப்பு இருக்கும்போது இந்த மேகங்களை மேலும் வலுப்படுத்தி மழை பெய்ய வழிவகுக்கும். உலகம் முழுவதும் இந்த நவீன முறையை 150க்கும் மேற்பட்ட நாடுகள் செயல்படுத்தியுள்ளன. ஆண்டுதோறும் இம்முறை செயல்படுத்துவது அதிகரித்து வருகிறது. பல நாடுகள் சோதனை முயற்சியாகவும் சில நாடுகள் இதனை தொடர்ச்சியாகவும் செயல்படுத்தி மழையை பெற்று வருகின்றன.
உலக அளவில் சீனா இதில் முதலிடம் வகிக்கிறது. அதிகபட்சமாக ஆண்டுக்கு 90 மில்லியன் டாலர் செலவு செய்து 10 சதவிகிதம் கூடுதலாக மழையைப் பெறுவதாக சீனா சொல்கிறது. அமெரிக்கா 15 மில்லியன் டாலர் வரை செலவு செய்கிறது. ஜனவரி முதல் கடந்த மாதம் வரை அய்க்கிய அரபு அமீரகம் 88 முறை மேக விதைப்பு செய்து கூடுதல் மழையைப் பெற்றுள்ளது. சீனாவில் அதிகளவில் செயற்கை மழை பொழியச் செய்துள்ளது.