சிறுகதை : பெரிய இடம்

மார்ச் 16-31 2020

இராம.அரங்கண்ணல்(திராவிட இயக்க எழுத்தாளர்)

அன்புள்ள கமலி,

ஆபீசிலிருந்தபடி சினிமாவுக்குப் போய் வருவதாக அவர் சொல்லியனுப்பியிருந்தார். மகனுக்குக் காய்ச்சல் என்று  வேலைக்காரியும் வீட்டுக்குப் போய்விட்டாள். விளக்கைப் போட்டுவிட்டு, பொழுது போகாததால், சன்னல் ஓரம் வந்து நின்றேன். உனக்குத்தான் தெரியுமே, எதிர் வீட்டிலிருப்பவள் எப்படிப்பட்டவள் என்று!! கற்பை விற்று வாழும் பெண்களை ஏண்டி, இந்த ஆண்டவன் படைத்தான்? ஆண்டவனே, துணிந்து வழிகாட்டியதால்தான் அபாக்கியவதிகள் பெருத்தார்கள் என்று, சீரங்கம் மட்டையடித் – திருவிழாவையும் புன்னைமரக் கண்ணனையும் உதாரணம் காட்ட ஆரம்பித்து விடுவாய் நீ. உண்மையில் கமலி, இந்தப் பெண் சென்மமே புண்சென்மம்தான். எதிர் வீட்டுக்கு, அவள் குடிவந்தது முதல், இரவு நேரத்தில், நான் வெளியில் வரமாட்டேன். “நாம சரியாகயிருக்கும் வரையில் நமக்கென்ன பயமாடி பத்மா?’’ என்று, என் கணவர்கூடச் சொல்வார்.

அவர்கள் ஆண்பிள்ளைகள். எதையும் தைரியமாகச் செய்யலாம்; சொல்லலாம் நம்முடைய நிலை அப்படியா? நல்ல பெண்மணி, ஒரு தடவை புத்தி பேதலித்துவிட்டால் பிறகு எவ்வளவு பரிகாரம் செய்தாலும் அந்தக் கறையைப் போக்கிக் கொள்ள முடியாதே! நான் புத்தி பேதலிக்கவுமில்லை; என் உள்ளத்தில் அப்படியொரு ‘தப்பு’ எண்ணமும் உண்டாகவில்லை; ஆனாலும், வம்பில் மாட்டிக்கொண்டு விழிக்கிறேன்.

ஆமாண்டி, தப்பித் தவறி இந்தச் சேதி, என் கணவர் காதுக்கு எட்டிவிட்டால், ஆறோ குளமோ தேடி நான் சாவதைப் பற்றிக்கூடப் பயப்படவில்லை; ஆனால், என்மீது உயிரையே வைத்திருக்கும் அவர் மனம் என்ன பாடுபடும் என்பதை எண்ணும்போதுதான் என்னால் தாங்கமுடியவில்லை.

வழக்கம்போல், எதிர்வீட்டுக்காரி, வாலிபால் அளவுக்குத் தலையில் பூ, காலணா அளவுக்கு நெற்றியில் குங்குமம், பளிச்செனத் தெரியும்படி முகத்தில் பவுடர் போட்டுக்கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள். ‘முந்தானை’, ‘கண்’, ‘கை’ முதலிய சாடைகளைக் கண்டு, அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு வீதியில்போன ஒரு வாலிபன் அவள் வீட்டுக்குள் நுழைந்தான்.

சீ! எவ்வளவு ருசியாக வீட்டில் செய்து போட்டாலும் வேகாத பலகாரத்தைத் தேடி ஓட்டலுக்கு ஓடும் இந்த ஆண்களைப் பற்றி என்னடீ சொல்வது!! இந்தக் கன்றாவியைப் பார்க்கவா கதவைத் திறந்தோம் என்று, சன்னலைச் சாத்திவிட்டுத் திரும்பினேன். சாத்தும்போது, காற்றில் பறந்து கொண்டிருந்த சேலையின் முந்தானை கதவு இடுக்கில் சிக்கிக் கொண்டுவிட்டது. வீட்டில்தான் யாருமில்லையே என்கிற எண்ணத்தில் சிக்கிய முந்தானையை இழுக்க சன்னலைத் திறந்தேன். என்னையுமறியாமல் என் சேலை, நழுவிச் சரிந்தது. யாரோ ஒரு வயதானவன் எதிரேயிருந்த விளக்குக் கம்பத்தினடியில் எதிர் வீட்டின்மீது வைத்த கண்ணை, கதவுச் சப்தம் கேட்டு என் பக்கம் திருப்பினான். எக்கச்சக்கமான என்னுடைய தோற்றத்தை எங்கே அவன் பார்த்துவிட்டானோ, செச்சே! ஒரு நாளுமில்லாமல் இன்று ஏன் இங்கே வந்து நின்றோம் என்கிற எண்ணத்தால் பயத்தோடும் அவசரத்தோடும் சேலையைச் சரி செய்துகொண்டேன்.

பனிக்காலத்தில் பாழும் கதவுகளுக்கும் உயிர் வந்து விடும் போலிருக்கிறது. உடனே மூடமுடியவில்லை. கொஞ்சம் இழுத்துத்தான், சன்னல் கொக்கியை மாட்ட வேண்டியிருந்தது. அதற்காக மீண்டும் ஒருதரம் சன்னலைத் திறந்தேன். இளித்துக்கொண்டு, என் வீட்டுச் சன்னலைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தான் அவன். பகீரென்றது எனக்கு! வேகமாகச் சன்னலை இழுத்து மூடி, கொக்கியைப் போட்டுவிட்டு, கூடத்துக்கு வந்தேன். அங்கே கண்ட காட்சி, என்னை அப்படியே திடுக்கிட வைத்துவிட்டது. வேலைக்காரி, கதவைச் சாதாரணமாகச் சாத்திவிட்டுப் போயிருந்ததை, நானும் கவனிக்கவில்லை. கதவு திறந்திருந்திருக்கிறது போலிருக்கிறது. கூடத்திலுள்ள சோபாவில் விளக்குக் கம்பத்தினடியில் நான் கண்ட ஆள் வந்து ஜம்மென்று உட்கார்ந்திருந்தான். எப்படியிருக்கும் எனக்கு என்பதை, நீயே நினைத்துப்பார்.

நேரமோ இரவு. வீட்டிலே யாருமில்லை. நானிருப்பதோ அறைக்குள். அவனிருப்பதோ கூடத்தில். தற்செயலாக மாட்டிக்கொண்ட முந்தானையை இழுக்க அதை சாடை என்று எண்ணிக்கொண்டான் போலிருக்கிறது கிழவன்? நாற்பது அய்ம்பது வயதுக்கு மேலிருக்கும். நரைத்த தலை. வழுக்கையும்கூட. நல்ல நிலைமையிலிருப்பவன் என்பதை தோற்றம் காட்டியது. நான் என்ன செய்யமுடியும்? நாடகத்தில் வரும் கண்ணகியா? _ கனல் கக்கும் வசனத்தைப் பொழிந்து, அவனை விரட்ட!

கதிகலங்கித் திகைத்துப் போய் நின்றதைக் கண்ட அவன், “ஏன் நிக்கிறே; இப்படி வா!” என்று அருகேயிருந்த சோபாவில் உட்காரச் சொல்லி என்னை அழைத்தான்.

என் வீட்டுச் சோபாவில், இரவு நேரத்தில், யாரோ ஒரு பயல் என்னைக் கூப்பிட்டு உட்காரச் சொல்கிறான்? முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு “அய்யா? தவறாக வந்துவிட்டீர்கள் போலிருக்கிறது. இது குடும்பப் பெண் வாழுகின்ற இடம். போங்கள், வெளியே?’’ என்று சொல்ல வேண்டும் என்று எண்ணினேன். ஆனால், “என் கணவர் வந்து விடுவார்’’ என்பதை மட்டுமே, அதுவும் அறைகுறையாகச் சொல்ல முடிந்தது.

என் குழம்பிய நிலையை அவன் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அவன் என்னைப் பார்த்து என்ன பேசினான் என்பதை உன்னிடம் சொல்லாமல் யாரிடம் கமலி, சொல்வேன்?

“வந்தால் வரட்டும், அஞ்சோ, பத்தோ எடுத்து நீட்டி காப்பி சாப்பிட்டு வா என்றால் போய்விட்டுப் போகிறான். நீ வா’’ என்றான்.

அஞ்சோ, பத்தோ எடுத்து நீட்டினால் என் கணவன் பேசாமல் போய்விடுவாராம்? இதைச் சொன்ன அவன் நாக்கைப்பிடுங்கி எறிய நான் ஒரு ‘காளி’யாக இல்லையே என்று துடித்தேன். கொஞ்ச நஞ்சமிருந்த தைரியமும் எனக்குப் போய்விட்டது. அப்போதுதான், ‘மணி எட்டரை ஆகிவிட்டது. இன்னும் அரைமணி நேரத்தில் உன் கணவர் வந்துவிடுவார். அவர் வரும் சமயத்தில் இங்கே இவனைக் கண்டால்?’ என்று கேட்பதுபோல் கடிகாரம், மணி அடித்து நிறுத்தியது. பயங்கரமான புலி எதிரே உட்கார்ந்திருப்பது போலவும், இன்னும் கொஞ்ச நேரத்தில் அதன் வாயில் விழுவதைத் தவிர வேறு வழியில்லையென்பது போலவும் பயம் பரவியது எனக்கு.

என்ன செய்வேன், நான்! எங்காவது ஓடிப்போய் ஒளிந்துகொள்ளலாம்; சமையல் அறையிலோ, அல்லது இருக்கும் அறையின் கதவுகளையோ மூடிக் கொண்டு நான் இருக்கலாம். கணவர் வரும் வரையில், எனக்காக இந்தக் காதகன் காத்திருந்தால்! ஒருவேளை, அவரிடமே இணங்காத என்னைப்பற்றி, எதையாவது சொல்லிவைத்தால்? எதையடி, கமலி, நான் நினைப்பது?

ஒன்றும் புரியாமல், நின்ற என் உதடுகள், என்னையறியாமலே, “அய்யா, நான் ஒரு குடும்பப் பெண்’’ என்கிற வார்த்தைகளை உச்சரித்தன.

இதைக் கேட்டதும் அந்தப் பாவி என்ன சொன்னான் தெரியுமோ? “இந்தத் தொழிலிலே மாமூலா இதைச் சொல்றதுதான் வழக்கம். உன்னைப் பார்த்தா இளவெட்டாயிருக்கு. நீ கேட்கிறதுக்குமேலே பத்தோ இருபதோ தர நான் தயார். அதானே, நீ கேட்க வந்தது?’’ என்றான்.

புரியாத மொழி! இதுவரையில் நான் கேட்டிராத பேச்சு.

சொன்னதோடு இல்லாமல், “எங்கே, உன்னைப் பார்க்கலாம்?’’ என்று ஏதோ ஆடுமாடு வாங்குபவனைப் போல் என்னருகே, நெருங்கலானான். அவன் என்னைப் பார்த்த பார்வையில், அப்படியே பூமி பிளந்து உள்ளே போய்விடக் கூடாதா? என்றிருந்தது. எனக்கு என்ன செய்வது, இனி எப்படித் தப்புவது என்றே புரியவில்லை.

ஏதாவது சொல்லி, அவன் வாயில் விழாமல் இன்று தப்பிவிட்டால் போதும் என்றிருந்தது. என்ன சொன்னால் போவான் என்று யோசித்தேன். என் வாயால் அதைச் சொல்லவே, நா கூசியது. இருந்தாலும், ஆபத்துக்குத் தோஷமில்லையல்லவா? அதனால், “நாளைக்கு வாருங்கள்’’ என்று மென்று விழுங்கிக்கொண்டே சொன்னேன். இதைச் சொல்லும்போதே என் உயிர் போய்விடும் போலிருந்தது.

“நிச்சயமா நாளைக்கு வரலாமா?’’ என்று குழைந்தான் அவன்.

உடனே, திக்கென்றது எனக்கு. நாளைக்கு, நான் சொன்னேன் என்று வந்து, அந்தச் சமயம் என் கணவரும் இருந்து, அவருக்கு இவன் அஞ்சோ பத்தோ தந்து, ‘ஓட்டலுக்குப் போய்வா’ என்றால்…? அப்போதுதான், எனக்கு உன் கவனம் வந்தது.

உன் வீட்டு விலாசத்தைச் சொல்லி அவனை, நாளை மாலை அங்கே வரச் சொல்லியிருக்கிறேன்! “அடிப்பாவி, நீ வம்பிலிருந்து தப்ப, என்னை மாட்டி விட்டாயே!’’ என்று நீ கோபிப்பாய். இந்த நிலையில், வேறு எனக்கு எந்த யோசனையும் தோன்றவில்லை. என்னை மன்னித்துவிடு. கடிதத்தை உடனே அடுப்பில் போடு. இந்த ரகசியம் வெளியில் தெரியாமல் என்னைக் காப்பாற்று.

உன்,

பத்மா.

“உன் பெயரென்ன?’’ என்று என்னை அந்தப் பாவி கேட்டதற்கும் ‘கமலி’ என்று உன் பெயரையே சொல்லியிருக்கிறேன்.

* * *

புலியூர்புரம், 22.10.1960

மதிப்பிற்குரிய மங்களத்துக்கு,

நம்முடைய சிநேகிதி பத்மாவால், இருதலைக்கொள்ளி எறும்புபோல் விழிக்கிறேன் நான். நேற்று மணி மூன்றுக்கு, அவள் எழுதிய கடிதத்தை வேலைக்காரி கொண்டு வந்து கொடுத்தாள். வாங்கிப் படித்ததும், எனக்குத் தலை சுற்றுவது போலிருந்தது. அவள் தப்பிக்க, என் பெயரைச் சொல்லிவிட்டாள். நான் யார் பெயரைச் சொல்ல முடியும்? எப்படி அவள் தன் கணவனுக்காகப் பயப்பட்டாளோ, அது போல என் கணவருக்கு நான் பயப்படாமல் இருக்க முடியுமா? நான் என்ன செய்வேன்! உனக்கு, என்ன நடந்தது பத்மாவுக்கு என்கிற விவரம் தெரியாது என்றுதான் இத்துடன் அவளது கடிதத்தையும் வைத்திருக்கிறேன். இந்தக் கடிதத்தையும், அந்தக் கடிதத்தையும், என்னைப் போல் நீயும் யாருக்காவது வைத்து அனுப்பாமல், தவறாமல் அடுப்பில் போட்டுவிட வேண்டும். நம்முடைய மாதர் சங்கத்தின் தலைவியான நீ பொறுப்பையுணர்ந்தவள் என்பதால், நேற்று மாலை என்ன நடந்தது என்கிற விவரத்தை எழுதுகிறேன்.

சரியாக மணி ஆறடிக்குமுன்பே வேலைக்காரியையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நாமும் எங்காவது போய்விட்டால் என்ன என்று நினைத்தேன். ஒருவேளை அவன் வந்து பார்த்து, கதவு பூட்டியிருப்பதைக் கண்டு, மீண்டும் பத்மா வீட்டுக்குப் போய் ஆசாபாசமாகி விட்டால் என்ன செய்வது? என்றைக்குமில்லாமல் இன்றைக்கென்று என் கணவர் நாலு மணிக்கே கம்பெனியிலிருந்து வந்துவிட்டார். அவரிடம் உண்மையைச் சொல்லி, அவன் வந்தால் பிடித்துக் கொண்டு போய் போலீசில் ஒப்படைக்கச் செய்தால் என்ன என்றும் எண்ணினேன். எந்த விஷயம் வெளியே தெரியக் கூடாதென்று பத்மா துடிக்கிறாளோ, அது போலீசுக்குப் போனால், நாளைய பத்திரிகையிலேயே வந்து, பகிரங்கமாகி விடும்! என்ன செய்வது? அவன் வந்து கேட்கும்போது, என் கணவர் இருந்துவிட்டாலும் வம்புதான்!

அதனால், டப்பாவிலிருந்த காப்பித் தூளையெல்லாம் பூனை உருட்டி வீணாக்கி விட்டதாகச் சொல்லி அவரை மவுண்ட்ரோடுக்கு அனுப்பினேன். கோடம்பாக்கத்திலிருந்து பஸ்சைப் பிடித்து அவர் போய்த் திரும்ப, எப்படியும் ஒன்பது மணியாகிவிடும். வேலைக்காரியையும், எட்டணா காசைக் கொடுத்து ஏதாவது சினிமாவுக்குப் போய்விட்டு வா என்று அனுப்பிவிட்டு, அவனுடைய வரவுக்காகத் தயாரானேன். பத்மாவைப்போல் பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். ஆனால், “கமலீ! கமலீ!” என்கிற ஆண் குரல் கேட்டதுதான் தாமதம், என் தைரியமெல்லாம் எங்கோ போய் விட்டது. வெளியில் போவதா, வேண்டாமா என்கிற வேதனையான நிலைமை! அழுதாலும் அவள்தானே பெற்றாக வேண்டும் என்பதுபோல், இதற்கு நான்தானே ஏதாவது ஒரு வழி செய்தாக வேண்டும்.

“ஓகோ! கமலீ சொன்னது நீங்கதானா? வாங்க’’ என்று நடுங்கிக்கொண்டே சொன்னேன். என் நடுக்கத்தை நடிப்பு என்று எடுத்துக்கொண்டான் போலிருக்கிறது!

“ஆமா. நீ யார்? அவளுக்குத் தங்கையா? நீயும் அவளைப் போலத்தானா? ஆள் அவளைவிட நன்றாகத் தானிருக்கிறாய்… உன் பெயரென்ன?’’ என்று மூச்சுவிடாமல் என்னுடைய பதிலுக்கும் இடைவெளி தராமல் கேட்டபடியே, நாற்காலியில் அமர்ந்தான்.

“கமலி, எனக்கு அக்கா வேணுங்க! என் பேரு பத்மா’’ என்றேன்.

“பத்மா! நல்ல பெயர்தான். பெயரைப் போலவே ஆளும். அப்ப சரி, அவ வராவிட்டால் பரவாயில்லை… குடிக்கக் கொஞ்சம் உன் கையால் தண்ணி கொண்டா’’ என்றான்.

உண்மையில் மங்களம், என் கையில் விஷமிருந்திருந்தால் கொஞ்சம்கூடத் தயங்கியிருக்க மாட்டேன் அவனுக்குக் கொடுக்க.   என்ன பண்ணுவது? உள்ளே போய் ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து வந்தேன். என்ன தண்ணீர் தெரியுமா? தொட்டியில் கைகால் கழுவ வைத்திருந்த அழுக்கு நீர்தான்! அதை எடுத்துக் குடித்துவிட்டு, “அமுதமாயிருக்கு. எல்லாம் உன் கை விசேஷம்… இந்தா பர்ஸ்!’’ என்று தன் பணப்பையை எடுத்து வைத்தான். இதற்கு மேலும் வளரவிட்டால், நிச்சயம் வரும் ஆபத்து என்பது புரிந்தது!

“அய்யா, கோவிக்கக் கூடாது. எதிர்பாராதவிதமா எங்க சொந்தக்காரங்க வந்திருக்காங்க. அதனாலேதான் அவ இங்கே வரல்லே. வேண்டுமானால், எங்களை அவசியம் இந்த அட்ரசுக்கு வரச் சொன்னா’’ என்று நான் முன்பே யோசித்திருந்தபடி, உன் பங்களா விலாசத்தைக் கொடுத்தேன்.

கொஞ்சம் ஏமாற்றத்துடன் அதை வாங்கிக் கொண்ட அவன், “அப்போ இந்த இடத்துக்கு உன் அக்காகூட நாளைக்கு நீயும் வருவாயா?’’ என்றான்.

”ஓ! வருகிறேன்!’’ என்று சொல்லி அவனை அனுப்பிய பிறகுதான், உயிர் வந்தது எனக்கு.

அதனால் மங்களம், நாளைக்கு நானும் கமலியும் நிச்சயம் நம்முடைய மாதர் சங்க விழாவுக்கு வந்து கலந்துகொள்ள மாட்டோம். உன் பங்களாவின் மாடியில்தானே சங்கம் இருக்கிறது. நிச்சயம், அவன் கீழேயுள்ள உன் வீட்டுக்கு வருவான். உன் பெயரைத்தான் கொடுத்திருக்கிறேன். கவனித்துக் கொள் சரியாக. இந்த சிக்கல் தீர உன்னைத் தவிர வேறு வழி தெரியவில்லை. நாளைக்கு நடைபெறும் மாதர் சங்க விழாவில் பிரசங்க பூஷணம் அருளானந்த வாரியாரும், சித்துக்குளி சீரங்கதாசாவும் கலந்துகொண்டு சிறப்பிப்பதைக் காண எங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. அந்த இரண்டு பெரியார்களுடைய ஆசிர்வாதத்தையும் வாங்கி எங்களுக்கு அனுப்பு.

இப்படிக்கு,

கமலி.

* * *

காந்தி நகர், 24.10.1960

மெய் நண்ப,

மடல்கள் கண்டதும் தடங்கல் சொல்லாது உடன் வருக! ஒப்புவமையில்லாத இரு கனிகள் கிடைத்துள்ளன. உனக்கு எது தேவையோ அதை நீ புசிக்கலாம். கனி இரண்டும் இதுவரை நாம் காணாதது. பழனியில் சென்ற கிழமை நாம் இரண்டு பேரும் பருகினோமே, அதைவிடச் சிறந்த பஞ்சாமிர்தம் இவை. தவறிவிடாதே. உன்னையும் நம்பி இரண்டையும் வரச் சொல்லியிருக்கிறேன். நிற்க, ஒன்று மறந்து விட்டேன்; திருப்பதியில் நீ பெற்றதாகச் சொன்னாயே, வரப்பிரசாதம். அதுபற்றி டாக்டரைக் கலந்தாயா? என்ன சொன்னார்? காயம் சரியாயிருந்தால்தான் நம்மைப் போன்றவர்கள், பிறவி எடுத்ததன் பயனைச் சரியாக அனுபவிக்க முடியும். சீரங்கத்தில் ஒரு சாமியார் கொடுத்தாரே, ஒரு காயகல்ப லேகியம் _ அதில் மிச்சமிருந்தால் கைவசம் கொண்டு வா. காலையிலேயே வந்தால், விருந்து அருந்தி விட்டு, பிறகு நம் வேலையைக் கவனிக்கப் போகலாம்.

இப்படிக்கு

உன்

முருகன் துணை.

* * *

கமலிக்கு மாதர் சங்கத் தலைவியான மங்களம் எழுதுவது,

விவரத்தைப் படித்ததும், அழுவதா சிரிப்பதா என்றே எனக்குப் புரியவில்லை. அதோடு, இன்று நம் சங்க ஆண்டு விழா வேறு. தலைமை வகிப்பவர்களையும், சொற்பொழிவாளர் களையும் நான் தேடிப் பிடிப்பதா, நீ சொன்ன ஆள் வந்தால் ‘ஆவன’ செய்வதா என்று ஒன்றும் புரியாமல் திண்டாடிப் போய்விட்டேன். பங்களாவின் மாடியில் நம் சங்கம் இருந்தாலும், கீழேயுள்ள என் வீட்டுக்கும் அதற்கும் தொடர்பு இல்லையென்பதுதான் உனக்கே தெரியுமே! வருகிறவர்களை உபசரிக்கவும், நாற்காலி பெஞ்சுகளைச் சரியாகப் போடவும், மாலை வாங்கி வரச் சொல்லவுமான காரியங்களைக் கவனிக்கவே என்னால் முடியவில்லை. இதனால், என்ன செய்வது என்று புரியாமல், நம்முடைய ஞானத்தை, கீழே என் வீட்டில் வைத்தேன். அவள் கணவன் போலீஸ் இன்ஸ்பெக்டரல்லவா! அவரையும் அழைத்து வரச் சொல்லி, அந்த ஆசாமிகளுக்குச் சரியான பாடம் போதிக்க வேண்டுமென்று கீழே ஒளிந்திருக்கும்படி செய்திருந்தேன்.

இப்படிப்பட்ட ஆசாமிகளுக்குச் சரியான பாடம் கற்பித்து, நம்முடைய ஆண்டு விழாவில், பெண்மையின் சிறப்பை விளக்கச் சரியான சந்தர்ப்பம் கிடைத்ததென மகிழ்ந்தேன். நீ சொன்ன ஆள் வந்தான். அவனிடம் நைசாக ஞானம் பேச்சுக் கொடுப்பது; அதேசமயம் இன்ஸ்பெக்டர் பிடித்துக்கொள்வது; பிறகு முக்காடு போட்டுக் கொண்டு வந்து நம்முடைய விழாவின்போது மேடையில் நிறுத்தி அவமானப்படுத்துவது என்பது என் திட்டம். மேலே ஆக வேண்டிய காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்தேனே ஒழிய, என் மனசெல்லாம் கீழேயே இருந்தது. நீ சொன்ன ஆள் வந்திருக்கிறான் _ ஒருவனாக அல்ல, கூட இன்னொருவனையும் இழுத்துக்கொண்டு. இரண்டு பேரிடமும், உங்களுடைய சொந்தக்காரியைப்போல ஞானம் பேச்சுக் கொடுத்திருக்கிறாள். அதேசமயம், இரண்டு கான்ஸ்டேபிள்களுடன் மறைந்திருந்த இன்ஸ்பெக்டர், நான் முன்னதாகவே கொடுத்திருந்த கருப்புத் துணியைப் போட்டு மூடி மேடைக்கு இழுத்து வந்தார். அந்த இரண்டு ஆள்களும் எவ்வளவோ முண்டினார்கள். இன்ஸ்பெக்டர் விடுவாரா? ‘மனோகரா’ நாடகத்தில் கேசரிவர்மன் பேயாக வருவதைக் காட்டுவார்களே அதுபோல, கருப்புடையினை நன்றாகக் கயிற்றால் போட்டுக் கட்டி, திரையின் பின்னே மேடையில் இரண்டு நாற்காலிகளில் உட்கார வைத்திருந்தார். வந்திருந்த பலருக்கு அவர்கள் யாரென்பதையும், இப்படிப்பட்ட அயோக்கியர்களிடம் பெண்கள் எவ்வளவு ஜாக்கிரதையாகப் பழக வேண்டுமென்றும், நான் வீராவேசமாகப் பேசினேன். நான் ஏற்பாடு செய்திருந்த அருளானந்த வாரியாரும், சித்துக்குளி சீரங்கதாசாவும் இடையில் ஒரு நிகழ்ச்சியைக் கவனித்துவிட்டு வருவதாகச் சொல்லியனுப்பி இருந்தார்கள் ஆள்மூலம். எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்திவிட்டால் தாங்கள் வந்து பேசிவிட்டுச் செல்ல வசதியாயிருக்கும் என்று சொல்லியனுப்பியிருந்தார்கள். அருளானந்த வாரியார் அடுத்த தடவை கார்ப்பரேஷன் தேர்தலுக்கு நிற்க வேண்டுமென்று, இப்போது முதல் வேலை செய்து வருகிறார். அதனால், வெளி வேலைகளைக் கவனித்துவிட்டு வர நேரமாகுமாதலால், கருப்புடையிலேயிருக்கும் இரண்டு ஆத்மாக்களையும் அறிமுகம் செய்துவைத்து அவமானப்படுத்தலாம் என்று இன்ஸ்பெக்டரிடம் சொல்ல, அவர் கருப்பு அங்கிகளை எடுத்தார். என்னடீ சொல்வேன்? என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை! எனக்கு மட்டுமென்ன, வந்திருந்த பலரும் திகைத்துப் போய் விட்டார்கள்.

மயக்கம் போட்டு விழுந்துவிடாமலிருக்க வேண்டி கெட்டியாகத் தூணைப் பிடித்துக்கொண்டேன். இவர்களா காமப் பேய்கள்? எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

“இரண்டு பேரையும் இழுத்துக்கொண்டு போய் லாக்கப்பில் போட்டுப் பூட்டுங்கள்’’ என்று வெறிபிடித்தவளைப்போல் இன்ஸ்பெக்டரிடம் கத்தினேன்.

அதற்கு சட்டம் இல்லையாம், அதோடு தன் பதவிக்கு ஆபத்து வந்தாலும் வந்துவிடும் என்று ஞானத்திடம் அவள் கணவன் காதைக் கடித்தார்.

அந்த இரண்டு பிறவிகளும் யாரென்பதை உன்னிடம் சொல்லவே எனக்கு வெட்கமாயிருக்கிறது. கமலி, என்னை மன்னித்துவிடு! நல்லவர் என்று நம்பி நான் அழைத்திருந்தேனே நம் விழாவுக்கு, அந்த சித்துக்குளி சீரங்கதாசர்தான் உன் வீட்டுக்கு வம்பு செய்ய வந்த ஆள்! அவருடன் இன்று வந்து அகப்பட்டுக் கொண்டவர்தான் சிவப்பழமும் சீலமுள்ளவராகவும் பேசப்படும் அருளானந்தசாமியார்!

உண்மையில், அவர்கள் பேச்சுகளைக் கேட்கும்போது இருக்கும் தோற்றத்துக்கும், இன்று இங்கே உன்னைப் பார்க்க வந்த தோற்றத்துக்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு. மந்திரிகளைப் பார்க்கப்போனால் கதர், ‘மைனர்’ விளையாட்டுக்குச் சென்றால் ‘சில்க்’ என்று பலர் இல்லையா? இதே சுபாவம், ‘அரகரநமப் பார்வதி பதயே’ சொல்லும் ஆத்மாக்களுக்கும் இருக்கிறது. பிரசங்க மேடையில் பக்தர் கோலம்! அந்திநேர பவனிக்கு அலங்கார உடை!! செச்சே, இந்த மாதிரி ஆள்களையே பெண்களாகிய நாம் இனிமேல் நம்பக் கூடாது; பெரிய மனிதர்கள் என்றும் போற்றக் கூடாது. பிற நேரில்.

உன்,

மங்களம்.

(இராம. அரங்கண்ணல் அவர்களின் சிறுகதை தொகுப்பிலிருந்து..)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *