அவசரச் சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு, பகத்சிங், சுகதேவ், ராஜகுரு என்னும் புரட்சி வீரர்களான மூன்று இளைஞர்களுக்கும் 7.10.1930 அன்று மரண தண்டனை விதித்தது. இத்தண்டனையை லண்டனில் இருந்த பிரீவி கவுன்சில் உறுதி செய்தது. இந்திய வைஸ்ராயும் அதை உறுதி செய்தார்.
தூக்குத் தண்டனைக் கைதிகளின் அறையில் தூக்கிலிடப்படும் நேரத்திற்காகக் காத்திருந்த நாள்களிலும், பகத்சிங் கொஞ்சங்கூட அஞ்சவில்லை; கலங்கவில்லை. வழக்கம்போல் படிப்பதும், எழுதுவதும், வாதிடுவதும், கலகலப்பாக நகைச்சுவை ததும்பப் பேசுவதுமாக இருந்தார்.
தன்னுடைய மரண தண்டனையை எப்படி நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதிலும் அவர் அதிகம் சிந்தித்தார். தூக்குக் கயிற்றில் தொங்குவதைவிட சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று விரும்பினார். சுத்த புரட்சியாளனும், வீரனுமான தான், துப்பாக்கியால் சுடப்பட்டே இறக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இந்த விருப்பத்தைக் கோரிக்கையாக எழுதி அக்கடிதத்தை பஞ்சாப் மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். அதில் பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் மூவரும் கையொப்பம் இட்டிருந்தனர்.
பெறுநர்
பஞ்சாப் மாகாண ஆளுநர்,
அய்யா,
விரல்விட்டு எண்ணக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்திய உழைக்கும் மக்களும், அவர்தம் இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் வரை எங்கள் போர் தொடரும்; தொடரவும் வேண்டும். அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளி இந்திய முதலாளிகளின் கலப்பாக இருக்கலாம் அல்லது கலப்பற்ற இந்திய முதலாளிகளாகக்கூட இருக்கலாம். அவர்கள் தங்களின் நயவஞ்சகமான சுரண்டல்களை, பிரிட்டிஷ் மற்றும் இந்தியக் கலப்பு அரசு இயந்திரத்தைக் கொண்டோ, கலப்பற்ற இந்திய அரசு இயந்திரத்தைக் கொண்டோ நடத்தி வரலாம். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் முன்னணிப் படையாகிய புரட்சிக்கரக் கட்சியானது, மீண்டும் ஒருமுறை போர்முனையில் தனித்து விடப்பட்டாலும் அதுவும் எங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. …………….
பகத்சிங்
தங்கள் இன்னுயிர் உட்பட, தங்கள் கணவன், உடன் பிறந்தோர், உறவினர் அனைவரையும் தியாகம் செய்த, செய்யத் தயாராய் இருக்கின்ற பெண் தொழிலாளர்களைப் பற்றி, சமாதானப் பேச்சு வார்த்தையின்போது ஒரு வார்த்தைகூட பேசாமல், கண்டுங் காணாததுபோல் இருக்குமளவிற்கு உணர்ச்சிப் பிண்டங்களாய் எம் இந்தியத் தலைவர்கள் (அஹிம்சா தலைவர்கள்) ஆகிவிட்டனர். என்றாலும், எம்போர் தொடரும். இப்போர் வெவ்வேறு காலக் கட்டங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கும். அப்போர் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ இருக்கலாம்; வெறும் கிளர்ச்சியாகவும் இருக்கலாம். அல்லது வாழ்வா? சாவா? போராட்டமாகவும் இருக்கலாம். இப்போர் இரத்தம் தோய்ந்ததாக இருக்க வேண்டுமா? அல்லது வேறு வகையில் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் நீங்கள்.
ராஜகுரு
ஒரு புதிய உத்வேகத்துடன் சோசலிச குடியரசு நிறுவப்படும் வரையில், அதன் மூலம் எல்லா வகையான சுரண்டல்களும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, மனிதகுலம் உண்மையானதும், நிரந்தரமானதுமான யுகத்துக்குள் அடியெடுத்து வைக்கும் வரையிலும் ஓயாது அப்போர் தொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
சுகதேவ்
முதலாளித்துவ ஏகாதிபத்தியச் சுரண்டலின் நாள்கள் எண்ணப்படுகின்றன. இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதும் இல்லை. வரலாற்று நிகழ்வுப் போக்குகளினாலும், நிலவும் சூழ்நிலைகளாலும், தவிர்க்க முடியாததே இப்போர்.
திரு தாஸின் ஈடு இணையற்ற தியாகத்தாலும், தோழர் பகவதிசரணின் துன்பம் நிறைந்த உன்னதமான தியாகத்தாலும், எங்கள் அன்பிற்குரிய ஆஸாத்தின் பெரும் பெருமைமிக்க மரணத்தாலும் பிழையின்றி அணி செய்யப்பட்ட தியாகச் சங்கிலியின் ஓர் இணைப்புக் கண்ணியே (கோர்வையே) எங்களது இந்த எளிய தியாகங்கள்!
எங்களது இறுதி முடிவைப் பற்றிய கேள்வியைப் பொறுத்து எங்களைச் சில வார்த்தைகள் கூற அனுமதியுங்கள். எங்களைக் கொல்வதென்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் அதனைக் கட்டாயம் நிறைவேற்றி விடுவீர்கள். உங்கள் கையில் அதிகாரம் உள்ளது. அதிகாரமே நியாயத்தைக் கொடுக்கிறது. நீங்கள் எது செய்தாலும் அது நியாயம்தானே! எங்கள் விசாரணையே அதற்கு ஒரு சான்று.
நாங்கள் எதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம் என்றால், நாங்கள் உங்கள் அரசுக்கு எதிராய்ப் போர் தொடுத்துள்ளோம். உங்கள் தீர்ப்பிலும் அவ்வாறே சொல்லப்பட்டுள்ளது. எனவே, எங்களைப் போர்க் கைதிகளை நடத்துவது போலவே நடத்த வேண்டும். அதாவது போர்க் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும்போது, சுட்டுக் கொல்வதுபோல் எங்களையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். அதற்கு நீங்கள் இராணுவத் துறைக்கு உத்தரவிடுவீர்கள் என்று நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.
தங்கள்,
பகத்சிங்
ராஜகுரு
சுகதேவ்
(ஆதாரம்: தியாகி பகத்சிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், சிவவர்மா, 1986 வெளியீடு)
இணையில்லா எதிர்காலத்தை இந்தியா இழந்தது!
ஆம். அவரைத் தூக்கிலிடத் தீர்மானிக்கப்பட்ட நாள் (23.3.1931) வந்தது. அன்று மாலை 7:30 மணிக்குத் தூக்கிலிட நேரம் குறித்தனர். பொதுவாக விடியற் காலையில்தான் தூக்கிலிடுவார்கள். ஆனால், ஆங்கில ஆதிக்கவாத அரசுக்கு அதிலும் அவசரம்.
தன் மகனைப் பார்க்கத் துடித்த தந்தைக்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. பொழுது இருட்டியது. சிறைக் கதவுகள் அடைக்கப்பட்டன. சிறைக் கண்காணிப்பாளர்கள், நீதிபதி, காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் ஓர் அறையில் இருந்தனர்.
ஏழரை மணியை கடிகார முள் எட்டியது.
பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் அறையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுடைய கண்கள் கட்டப்பட்டன.
மூவரும் தூக்குமேடையில் ஏறி நின்றனர்.
முதலில் பகத்சிங்கின் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்பட்டது.
வருகிறேன் சுகதேவ்! வருகிறேன் ராஜகுரு! கலங்காத குரலில் கம்பீரமாய் விடைபெற்றார்.
பகத்சிங் வாழ்க! சுகதேவும், இராஜகுருவும் பலமுறை முழங்கினர். மூவர் உள்ளத்திலும் உணர்வுக் கொந்தளிப்பு.
சரியாக மணி 7:35
இன்குலாப் ஜிந்தாபாத்!
(புரட்சி நீடூழி வாழ்க!)
பகத்சிங்கின் இறுதி முழக்கம் எங்கும் எதிரொலித்தது!
ஆம் அடுத்த நொடியில் சுருக்குக் கயிறு, அந்த அரிய புரட்சி மனிதரின் கழுத்தை நெருக்கியது! இணையில்லா எதிர்காலத்தை இந்தியா இழந்தது!
அடுத்து ராஜகுருவும், அதற்கடுத்து சுகதேவும் தூக்கிலிடப்பட்டனர்.
அவர்களின் உடலையாவது இறுதியாகப் பார்க்கலாம் என்று எதிர்பார்த்து சிறைக்கு வெளியே காத்திருந்த உறவினர்களுக்குக்கூட காட்டாமல், இறுதிச் சடங்குக்கு ஏற்றிச் சென்றனர்.
இந்துப் புரோகிதர் ஒருவரும், சீக்கியப் புரோகிதர் ஒருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
யாருடைய உடல்கள் என்ற விவரம் புரோகிதர்களுக்குச் சொல்லப்படவில்லை. விளக்கொளியில், இறந்தவர்களின் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் வருவதை மட்டும் அவர்கள் கண்டனர். அச்சத்தில் வாய் தடுமாற மந்திரங்களை அவர்கள் ஓதினர். ஒரு காவலர் உடல்களிலிருந்து ஆடைகளைக் கிழித்தான். ஒரே சிதையில் மூன்று உடல்களையும் அடுக்கினர். மேலும் கீழும் விறகு எளிதில் எரிய மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டது.
ஆதிக்கத்திற்கு அடங்காத ஆற்றலாளர்களின் உடல்கள் அல்லவா! அடம்பிடித்து எரிய மறுத்தன. செத்தும் எதிர்ப்பா? எரிச்சல் அடைந்த காவலர்கள், அவர்களின் உடலை துண்டு துண்டாக நறுக்கி தீயில் போட்டனர்.
இரண்டு மணி நேரம் போராடி எரித்து முடித்த சாம்பலை ஒரு கம்பளியில் அள்ளினர். சட்லஜ் ஆற்றில் அச்சாம்பல் கரைக்கப்பட்டது.
ஓடும் நீரில் சாம்பலாய் அவர்கள் கரைந்தாலும், ஒவ்வோர் இந்தியர் உள்ளத்திலும், ஏன் உலக மக்களின் உள்ளத்திலும் நிறைந்து உணர்வூட்டிக் கொண்டிருக்கிறார்கள் _ எரியும் போது ஒன்றாக எரிந்து, சாம்பலாய் ஒன்று கலந்த அம் மூவரும்.
வாழ்க பகத்சிங்கின் புகழ்!
(பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் தூக்கிலிடப்பட்ட நாள்: 23.3.1931)
– மஞ்சை வசந்தன்