இயக்க வரலாறான தன் வரலாறு(246) : இந்தி திணிப்பிதற்கு எதிராய் ரயில் மறியல் போராட்டம்!

மார்ச் 16-31 2020

அய்யாவின் அடிச்சுவட்டில் …

 

கி.வீரமணி

4.1.1993 அன்று தமது 85 வயதிலும் போராட்டக் குணத்தோடு, கொள்கை நெறியோடும் நம்மோடு வாழ்ந்து உற்சாகமூட்டி வந்த அம்மா பட்டம்மாள் பாலசுந்தரம் (பாவலரின் வாழ்விணையர்) மறைவுற்றார் என்கிற செய்தியை தொலைபேசி வாயிலாக அறிந்து ஆறாத் துயரம் அடைந்தேன்.

அப்போது, தமிழ்நாட்டின் கடைகோடியில் நாகர்கோயிலில் தீவிரப் பிரச்சாரத் திட்டப் பயணத்தில் இருந்ததால், இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

பாவலர் பாலசுந்தரம் அவர்கள் இயக்கத்திலே ஆற்றிய அரும்பணி நாடறிந்தது. அவர் மறைவுக்குப் பிறகு எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் இருந்த நிலையிலும் கழகம்தான் மூச்சு _ கழகம் போராட்டத்தை அறிவிக்கும் என்றால் அதில் ஈடுபடும் முதல் வீராங்கனை என்கிற உணர்வோடு நம்மோடு வாழ்ந்து வந்தார்கள். அவர்களை இயக்கம் பல வகையிலும் பராமரித்துப் போற்றியும் வந்தது என்பது நமக்கு ஒருவகையில் ஆறுதல் என்றாலும் 1938 இந்தி எதிர்ப்பு போராட்டம் தொட்டு, தளரா நடைபோட்டு வந்த மூதாட்டியை, வீராங்கனையை இழப்பது என்பது சாதாரணமானதல்ல! அவர்கள் உயிரோடு இருக்கும்போதே தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் “பட்டம்மாள் பாலசுந்தரம் பூங்காவை’’ அமைத்து அவரைப் பெருமைப்படுத்தியுள்ளோம்.

பட்டம்மாள் பாலசுந்தரம்

மூதாட்டியார் மறைந்தாலும் அவர்களின் தொண்டும் தீரமும் போராட்டக் குணமும் கட்டுப்பாடும் நம் நினைவில் என்றைக்கும் பசுமையாக இருக்கும்: வழிகாட்டியாகவும் இருக்கும் என்றும், மறைந்த அம்மாவின் அரை நூற்றாண்டுத் தூய தொண்டறப் பணிக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

12.1.1993 அன்று பம்பாயில் தமிழர்களின்மீது நடத்தப்படும் கொலைவெறித் தாக்குதல்களை நிறுத்த மத்திய _ மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும்  முக்கிய அறிக்கையை ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தோம். அதில், மராட்டிய மாநிலத் தலைநகர் பம்பாய் பகுதியில் இன்னமும் கலவரம், படுகொலைகள் அடங்கிய பாடில்லை. கடந்த 5 நாள்களாக தொடர் கொலை, கொள்ளை, சூறை, ஊரடங்கு ஆணை தளர்த்தப்படும்போது கொலை என்கிற கோரத் தாண்டவம். அரசு என்று ஒன்று இருக்கிறதா என்பதே புரியவில்லை.

இராணுவக் குழுக்கள் வந்த பின்புகூட நிலைமைகளைக் கட்டுக்குள் கொண்டுவர இயலாத வெட்கமும் வேதனையும் தாக்கும் விசித்திர நிலை.

லெப்டினன்ட்

கர்னல் கிட்டு

தமிழகம் திரும்பியுள்ள பம்பாய் தமிழர்களிடம் சரியான விவரங்களைச் சேகரிக்க  வேண்டும். இதற்கு தகுந்த பரிகாரம் தேடாவிட்டால், தமிழகம் அமைதிப் பூங்காவாகவே என்றும்போல இருக்குமா என்பது சந்தேகம்தான். இதை மத்திய அரசு உணர்ந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

12.1.1993 அன்று தருமபுரி மாவட்டத்தின் தலைசிறந்த இயக்கச் செயல்வீரரும் மத்திய நிருவாகக் குழு உறுப்பினரும், என்றும் கட்டுப்பாடு காத்த கருஞ்சட்டை வீரருமான ஊற்றங்கரை தோழர் பழனியப்பன் அவர்கள், மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்கிற செய்தி நமக்குப் பேரிடியான செய்தியாகும்.

சிங்கள இராணுவத்தின் செயல்பாட்டை கண்டித்து நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் உரையாற்றும் ஆசிரியர்.

‘விடுதலை’யில் எழுதியிருந்த இரங்கல் அறிக்கையில், தனி வாழ்க்கையில் உழைப்பால் உயர்ந்து வருபவராகத் திகழ்ந்த அவர், தந்தை பெரியார்தம் கொள்கையை வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தவர். இயக்க வளர்ச்சிக்காக தனது நேரத்தை ஒதுக்கி, சொந்த வாழ்வையும் இணைத்து எடுத்துக்காட்டாக முன்னேறிய ஒரு லட்சிய வீரர் அவர்.

தருமபுரி மாவட்டத்தில் ஊற்றங்கரைப் பகுதியை கழகப் பாசறையாக்க உழைத்த அந்த உன்னத லட்சிய வீரருக்கு நமது வீரவணக்கங்களும், பதறும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். 

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாணத்தின் தளபதியாக இருந்த தோழர் லெப்டினன்ட் கர்னல் ‘கிட்டு’வின் மறைவு குறித்து ‘விடுதலை’யில் இரங்கல் அறிக்கை எழுதியிருந்தோம்.

20.1.1993 அன்று தோழர் கிட்டு அவர்கள் யாழ்ப்பாணத்தில் தளபதியாக இருந்து நடத்திய போரில் அவர் ஒரு காலிழந்த நிலையில், சென்னை வந்து தங்கியிருந்தபோது, அவருடன் பழகும் வாய்ப்பு பல அதிகாரிகள், பல தலைவர்கள், பல நண்பர்கள் ஆகியோர் பெற்றதுபோல நானும் பெற்றேன். பெரிதும் எனது வீட்டிற்கு வந்து உரையாடி, உண்டு, பெரிதும் மகிழ்ந்து விடைபெறுவார். அவர் நேசித்த ஒரு தோழி எங்கள் வீட்டில்தான் சந்திப்பு _ தாய்வீடுபோல!

காட்சிக்கு எளியவர் அவர், கடுஞ்சொல்லர் அல்லர். கொள்கையில் தெளிவு, கொண்ட நெறியில் பிடிப்பும் கொண்ட சிறப்பான ஓர் இலட்சிய வீரர். புன்னகை தவழும் முகத்துடன் இலட்சியம் பொங்கும் உள்ளத்துடன் எவரிடமும் மிகுந்த மரியாதையுடன் அவர் பழகிய பாங்கினைக் கண்டு அவரைச் சந்தித்தத உளவுத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மத்திய அரசின் அதிகாரிகள்கூட வியந்து புகழ்ந்து பாராட்டியது உண்டு. அப்படிப் பட்டவரை பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி கைது செய்த சிங்கள இராணுவத்தையும் அதைத் தடுக்காத இந்திய மத்திய அரசையும் கண்டித்து எழுதியிருந்தோம்.

தந்தை பெரியார் தமிழ் இசை மன்றம் வழங்கும் மூன்று நாள் இசை விழா சென்னை பெரியார் திடலில் 19.1.1993 முதல் 21.1.1993 முடிய மூன்று நாள் நடைபெற்றது.

மூன்று நாள் நடைபெற்ற இசை விழாவில்  கலந்துகொண்டு இசைக்குழுவினருக்கு பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கி உரை நிகழ்த்தினேன்.

உரையாற்றும்போது, தமிழர் இசை மன்றங்களுக்கும் -_ பார்ப்பனர் நடத்தும் இசை மன்றங்களுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கியும், பார்ப்பன அமைப்புகள் வழங்கும் விருதுகளின் பெயர் அனைத்தும் வடமொழியிலேயே இருப்பதை பட்டியல் போட்டும் காட்டினேன். இசைக்கு மொழி இல்லை என்றும் கூறிக்கொண்டு, இப்படி வடமொழி உணர்வோடு செயல்படுவது ஏன் என்கிற கேள்வியை அப்போது எழுப்பினேன்.

தமிழிசை பாடும் கலைஞர்கள், தமிழர் வாழ்வியலைப் பற்றியும், அறிவியலைப் பற்றியும் பாட வேண்டும். தெலுங்கு கீர்த்தனைகளை அப்படியே தமிழ் மொழிப்படுத்தி பாடுவதில் பயனில்லை. பாடல்களின் கருத்துகள் மிக முக்கியம் என்று வலியுறுத்தினேன்.

‘கலைமாமணி’ ஏ.கே.காளீசுவரனுக்கு பாராட்டு – பொற்கிழி  வழங்குகிறார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

தமிழிசைக்கு முன்னோடியாக விளங்கிய முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசல கவிராயர் ஆகிய மூவரையும் பள்ளி, இசைக் கல்லூரி முதல்வர் திரும்பாம்புரம் சண்முகசுந்தரம் அவர்கள் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் ஒரு தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு என்னுரையை நிறைவு செய்தேன்.

இயக்குநர் பாரதிராஜா அவர்கள் மதுரை நாதசுரக் கலைஞர் பொன்னுத்தாய் அம்மையாருக்கு பொன்னாடை போர்த்தினார்.

விழாவில் “புரட்சிக்கலை வேந்தர்’’ பாரதிராஜா மதுரை நாதசுரக் கலைஞர் பொன்னுத்தாய் அம்மையார் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தினார். தந்தை பெரியார் தமிழிசை மன்றத்தின் சார்பில் பொற்கிழி வழங்கினார். சிறப்பான இசை விருந்தளித்த டி.எல்.மகராஜனுக்கு “தமிழிசைவாணர் விருதை’’  வழங்கினேன். பாரதிராஜா ஆடை போர்த்திப் பாராட்டினார்.

விழாவில் கலைத்துறையைச் சார்ந்த தோழர்களும் நமது இயக்கத் தோழர்கள், தோழியர்கள் உள்ளிட்ட நிருவாகிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

22.1.1993 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற “தமிழினப் படுகொலையும், அண்மைக்கால சம்பவங்களும்’’ என்னும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

கருநாடகம் _ பம்பாய் _ ஈழம் என்று தமிழர்கள் அகதிகளாவதையும், இனப் படுகொலைகளையும், எத்தனைக் காலம் பொறுப்பது? எனவே கட்சிகளை மறந்து _ இன எழுச்சி வெடிக்க வேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் அறைகூவல் விடுத்தேன்.

சுயமரியாதைச் சுடரொளி ஊற்றங்கரை பழனியப்பன் படத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்தார்

சுயமரியாதைச் சுடரொளி தருமபுரி மாவட்டம், ஊற்றங்கரை பழனியப்பன், நம் இயக்கத்தின் வீரவாளாகத் திகழ்ந்தவர். அவருடைய படத்திறப்பு விழாவில் 18.1.1993 அன்று ‘ஓம் சக்தி’ திருமணக் கூடத்தில் அவரின் படத்தைத் திறந்துவைத்து வீரவணக்க உரை நிகழ்த்தினேன். அப்போது 43 அகவை ஆண்டுகள் உள்ள வயது, இன்றைய நிலையில் அது ஒரு வயதே அல்ல. அந்த வயதிலே கூட அவர்கள் இடையறாது தொண்டு செய்திருக்கிறார்கள்.

ஒரு வட்டாரத் தளபதியாக இருந்து  தொண்டர்களைத் தயாரிக்கக்கூடிய அருமையான போர்த் தளபதியாகத்தான் பழனியப்பன் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக் கொண்ட காலத்திலிருந்து ஒரு கட்டுப்பாடு மிகுந்த இராணுவ வீரனைப்போல செயல்பட்ட ஓர் அருமையான இயக்கத்தினுடைய இலட்சியத் தொண்டர். அதை நினைக்க நினைக்க என்னால் அந்த இழப்பைப் பற்றி சுலபமாக சமாதானம் கொள்ள முடியவில்லை என்று மிகுந்த உணர்ச்சியுடன் எடுத்துரைத்தேன்.

10.2.1993 அன்று தொலைக்காட்சியில் இந்தித் திணிப்பை எதிர்த்து ரயில் நிலையம் மற்றும் அஞ்சல் நிலைய இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் என் தலைமையில், சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் உள்ள எழுத்துகளை அழிக்க, பெரியார் திடலிலிருந்து கழகத் தோழர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்று, எழும்பூர் புகைவண்டி நிலையத்தில் உள்ள ‘இந்தி எழுத்துகளை அழிக்கும் ஊர்வலத்திற்கு தலைமை ஏற்று புறப்பட்டுச் சென்றேன். பெரியார்

ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாகச் சென்றபோது காந்தி இர்வின் பாலம் சாலை சந்திக்கும் இடத்தில் காவல் துறையினரால் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டோம்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கழகத் தோழர்கள், நிருவாகிகள் போராட்டம் நடத்தி கைதானார்கள். அதனைத் தொடர்ந்து 11.2.1993 அன்று ‘விடுதலை’யில் முக்கிய அறிக்கையை வெளியிட்டிருந்தேன். அதில், தொலைக்காட்சி மூலம் இந்தித் திணிப்புக்கு வழி செய்யும் மத்திய அரசு, அதனைப் பின்வாங்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாடு அமளிக் காடாக மாறும் ஆபத்து உருவாகிவிடும் என்று  எச்சரித்து அறிக்கை வெளியிட்டிருந்தோம்.

தொலைக்காட்சியில் இந்தித் திணிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் பலத்த ஆரவாரத்துடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

18.2.1993 அன்று தியாகராயர் நகரில் நடந்த மறைந்த “பட்டுப் பாவலர்’’ உருவப் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு படத்தினை திறந்துவைத்து உரை நிகழ்த்தினேன். அப்போது, “மறைந்த மூதாட்டியார் பட்டம்மாள் பாலசுந்தரம் அவர்களின் சிறந்த தொண்டினை நினைவுகூர்ந்து அவரது தொண்டுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை தோழர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அம்மையார் அவர்களின் தொண்டு சாதாரண எளிய தொண்டு அல்ல. 1938லே “ஓடி வந்த இந்திப் பெண்ணே நில்; நீ நாடி வந்த நாடு இதுவல்ல _ செல்’’ என்று பாடி பாவலர் பாலசுந்தரம் அவர்களை வாழ்க்கைத் துணைவராக ஏற்ற அந்தக் கால கட்டத்திலிருந்து தன்னுடைய இந்தக் காலகட்டம் வரை கட்டுப்பாட்டோடு தொண்டு ஆற்றியவர்கள்.

இந்த இயக்கத்தில் பல சரிவுகள் ஏற்பட்டன. நிறைய பேர் சபலங்களுக்கு ஆளாயினர். ஆனால், மறைந்த பட்டம்மாள் அவர்கள் தன்னுடைய இறுதி மூச்சு வரை, 89 வயதானாலும், கட்டுப்பாட்டோடு கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் சிறப்பாக முன்னின்று பங்கேற்றவர். கழகம் எந்தப் போராட்டம் அறிவித்தாலும் அதில் முன்னின்று, மகளிரணியினருக்குத் தலைமையேற்று, ஊர்வலத்தில் முதலில் கழகக் கொடியினை ஏந்தி வருபவர். அப்படிப்பட்ட அவர்களுடைய இழப்பு திராவிடர் கழகத்தாருக்குப் பெரிய இழப்பாகும்.

1938லேயே இந்தி எதிர்ப்புக்காக சிறை சென்ற பட்டம்மாள் அவர்கள் _ பாவலரது மறைவுக்குப் பின்னும்கூட தாயும் மகளும் போட்டி போட்டுக்கொண்டு போராட்டங்களில் பங்கேற்றவர்கள். அவருடைய மகளின் உடல்நிலை மோசமாகி இறந்த நேரத்திலும்கூட எல்லா போராட்டங்களிலும் பங்கேற்று வந்தார். அப்படிப்பட்ட கொள்கைக் குடும்பம்’’ என்று பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துரைத்தேன்.

தமிழக சட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் செல்லப்பாண்டியன் அவர்களின் மறைவை அறிந்து தமிழ்நாடு மருத்துவமனையில் அவரது உடலுக்கு 18.2.1993 அன்று மலர் மாலை வைத்து இறுதி மரியாதையை செலுத்தினோம்.

இதுகுறித்து ‘விடுதலை’யில் இரங்கல் செய்தியில், “முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் திரு.செல்லப்பாண்டியன் அவர்கள், தந்தை பெரியார் அவர்களிடம் பேரன்பும் மரியாதையும் உடைய சீரிய காமராசரின் தொண்டர் -_ தோழர். பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமைகளில் _ சமூகநீதியில் மிகுந்த நம்பிக்கை உடையவர். அவரது இழப்பு தமிழ்நாட்டுப் பொது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடத்தக்க பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கு இயக்க சார்பில் ஆழ்ந்த இரங்கல் என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தோம்.

16.2.1993 அன்று சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற வரலாற்றுத் துறை மண்டபத்தில் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் டாக்டர் பி.ராசாராமன் தலைமையில் வரலாற்றுப் பேரவையைத் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினேன்.

“அண்மைக்காலத்தில் வரலாற்றுத் துறைக்கு நிரம்ப முக்கியத்துவம் வந்திருக்கிறது. இது நமது நாட்டுக்குத் தேவையான _ முக்கியமான சமுதாயப் பணியாகும். வரலாற்றுத் திரிபுவாதிகள் இப்போது அதிகமாக உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது நாட்டிலே நடைபெறுகின்ற கலவரங்கள். மனிதநேயத்துக்கு மாறான போக்குகள் இவையெல்லாம் மறைக்கப்படுகின்ற அல்லது திரித்துக் கூறப்படுகின்ற, வரலாற்று திரிபுவாதங்களிலேயே ஏற்படுகின்றன. எனவே, வரலாற்றைப் படிக்கின்ற நீங்கள் எதிர்காலத்தில் சரியான வரலாற்றினைக் கூறக்கூடிய வரலாற்று ஆசிரியர்களாக வாருங்கள். உண்மைகளை தெளிவாக எடுத்துக் கூறக்கூடியவர்களாக வாருங்கள்’’ என்று வலியுறுத்தினேன்.

சுயமரியாதை வீரர் அன்பில் தர்மலிங்கம்

6.3.1993 அன்று திருச்சி மருத்துவமனையில் தந்தை பெரியார் அவர்களின் செல்லப்பிள்ளை என்று அன்போடு வருணிக்கப்பட்ட சுயமரியாதை வீரர் அன்பில் தர்மலிங்கம் அவர்கள் மறைவு என்பது பேரிடி போன்ற செய்தியாகும்.

திராவிடர் கழக சுயமரியாதை வீரராக தன்னை இணைத்துக்கொண்ட அந்த நாளில் இருந்து இறுதி மூச்சு அடங்கும்வரை இலட்சியத்தை _ கொள்கைகளை விடாது கடைப்பிடித்த  ஒரு மாபெரும் தளபதி ஆவார்.

அவர் வாழ்வின் பெரும்பகுதிகள் _ போராட்டங்கள் _ சிறைச்சாலைகள், எதிர்ப்பினைக் கண்டு சளைக்காத எதிர்நீச்சல் இவையே ஆகும். சர்வ கட்சியினராலும் மதிக்கப்பட்ட கொள்கைவேள் ஆவார். அந்தோ! திராவிடர் இயக்கத் தூண்களில் ஒரு தூண் விழுந்ததே! இக்காலகட்டத்தில் அன்பில் அவர்களது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும் என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டோம்.

7.3.1993 அன்று சென்னை _ தேனாம்பேட்டை காமராசர் நினைவரங்கத்தில் உலகத் தமிழர் மாமன்றத்தின் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

மாநாட்டில் நான் உரையாற்றும்போது, “இருபத்தோராம் நூற்றாண்டை நோக்கித் தமிழர்கள் என்பதைப் பற்றி இம்மாநாட்டில் நாம் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இது ஒரு வரவேற்கத்தக்க சிந்தனை. இது கணினி யுகம்! இன்னும் நாம் பழம்பெருமை பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது _ அறிவியல் எந்த வளர்ச்சியை எட்டியிருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா?

தமிழர் முன்னேற்றத்துக்கு என்னென்ன செய்யப்பட வேண்டும் என்பதைப் பற்றி அருமையான தீர்மானங்கள் எல்லாம் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. பாராட்டுதலுக்குரிய தீர்மானங்கள் அவை. தொழில்துறையில் தமிழர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும்; உலகத் தமிழர் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் ஆக்கரீதியான சிந்தனைகள்.

இவற்றுக்கெல்லாம் அடிப்படை, தமிழன் முன்னேற வேண்டும். ஆனால், அவனின் சிந்தனையில் அடிப்படை மாற்றம் தேவை; புரட்சி தேவை! மூலையில் ஒதுக்கப்பட வேண்டியவை எல்லாம் தமிழன் மூளையிலே படிந்திருக்கின்றன.

தமிழனுக்கு என்று ஓர் ஆண்டு உண்டா? இப்பொழுது தமிழ்ப் புத்தாண்டு என்று அறுபது ஆண்டுகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அந்த அறுபது ஆண்டுகளில் ஓர் ஆண்டுக்காவது தமிழில் பெயர் உண்டா? எனவே, தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்க வேண்டும்’’ என்று விளக்கினேன்.

மேனாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்

மணி விழாவில் நினைவுப் பரிசினை

 தமிழர் தலைவர் வழங்குகிறார்.

4.3.1993 அன்று மதுரை மேலப் பொன்னகரம் முக்கிய வீதியில் நடைபெற்ற பண்பாளர் பி.டி.ஆர்.பழனிவேல்ராசனுக்கு மணி விழா நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு மணிவிழா நாயகருக்கு நினைவுப் பரிசினை வழங்கி நிறைவுப் பேருரை ஆற்றினேன்.

8.3.1993 அன்று திருச்சி பெரியார் மாளிகையில் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அய்யா சிலையினை திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினேன். விழாவில் அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் எழிலோடு தந்தை பெரியார் முழு உருவச் சிலையினை அமைத்திருந்தனர்.

சிலை திறப்பு விழாவுக்கு மாநில திராவிடர் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை முன்னிலை வகித்தார். பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பி.சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார்.

விழாவில், மாணவ, மாணவிகள், ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

(நினைவுகள் நீளும்…)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *