கவிஞர் கலி.பூங்குன்றன்
எத்தனையோ பேராசிரியர்களை நாடு கண்டு இருக்கிறது. ஆனால், இனமானப் பேராசிரியர் என்று ஏற்றுக்கொள்ளத்தக்க _ போற்றிப் புகழத்தக்க _ வரலாற்றில் நிலைக்கத் தக்கவர் _ தி.மு.க.வின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகாலம் செம்மாந்து நின்ற மானமிகு க.அன்பழகன் அவர்களே ஆவார்!
நேர்கொண்ட பார்வை _ இரு பொருள் தரும் சொற்களைப் பேசாமல் -_ எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதுதான் அவரின் அணுகுமுறையும் நடைமுறையுமாகும்!
பதவிக்காக வளைவது _ குனிவது _ நழுவுவது என்பது எல்லாம் அவரைப் பொருத்தவரை எதிர்மறைச் சொற்களே!
தி.மு.க. என்பது இந்து மதத்திற்கு எதிரானது _ இந்துக்கள்தான் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் _ எனவே பெரும்பான்மையான மக்களுக்கு தி.மு.க எதிரானது என்று நிலைநாட்ட பார்ப்பன சக்திகள் படாத பாடு படுகின்றன.
பார்ப்பனர் இந்து மதம் என்கிற போர்வையிலே தங்களின் (பார்ப்பன) ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதையும் _ இந்து மதம் என்று சொன்னால் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களை சூத்திரர்கள், பஞ்சமர்கள், அடிமைகள், இழி ஜாதியினர் என்று நசுக்கி மிதிப்பதையும் எடுத்து விளக்கும்பொழுதுதான் இவர்களின் இந்து மதப் பூச்சாண்டியின் பற்களை உடைக்க முடியும்.
நீ கீழ்ஜாதி _ நீ அடிமை _ நீ சேரியிலே வாழக்கூடியவன் _ நீ படிக்கக் கூடாது _ பஞ்சமன் _ தீண்டத்தகாதவன் என்று ஒடுக்கி வைத்து _ ஒதுக்கி வைத்து, அவர்களையும் இந்து மதம் என்னும் வலைக்குள் சிக்கவைத்து, பக்திப் போதை ஊட்டி, மயக்கி அடியாள்களாக ஆக்கிக் குளிர்காயலாம் என்று அந்த குல்லூகப்பட்டர் பரம்பரை விரிக்கும் சூழ்ச்சி வலையைக் கிழித்துத் தள்ளினால் _ இவர்கள் ஒண்டுவதற்கு இந்த மதம் எங்கே மீதி இருக்கப் போகிறது?
தாழ்த்தப்பட்டவன் இந்துவா? பிற்படுத்தப்பட்டவன் இந்துவா? அப்படியானால் அவர்களுக்கு இடஒதுக்கீடு என்கிறபோது ஏன் எதிர்க்கிறாய்? அவர்களும் இந்துக்கள் தானே? அவர்கள் இந்துக் கோயில் கருவறைக்குள் செல்ல உரிமை தேவை என்கிற போது, ஏன் எதிர்க்கிறாய்? அதற்காகச் சட்டம் செய்தால் ஏன் உச்சநீதிமன்றம் செல்லுகிறாய்?
ஆகமங்களைத் தூக்கிக் காட்டி சாஸ்திரங்களை சாட்சிக்கழைத்து இவர்கள் கோயில் கருவறைக்குள் சென்றால் சாமி தீட்டாகி விடும் _ ஏன் சாமி செத்துப் போய்விடும் _ அதற்காகத் தீட்டுக் கழிக்க வேண்டும். ஆயிரம் புதிய கலசங்களைச் செய்து வைக்க வேண்டும் _ பிராமண போஜனம் நடத்த வேண்டும் என்று சங்கராச்சாரி பார்ப்பானிலிருந்து சவுண்டிப் பார்ப்பான் வரை காட்டுக் கூச்சல் போடுவது ஏன்?
தினமலரும், தினமணியும், துக்ளக்கும் வரிந்து கட்டிக்கொண்டு ஆமாம் ஆமாம் என்று அவுட்டுத் திரியை அவிழ்த்துப் போட்டு ஆந்தைகள் போல அலறுவானேன்?
இதைப் பற்றி எல்லாம் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் எத்தனை எத்தனைக் கூட்டங்களில் எடுத்துக் கூறியிருப்பார்கள்? எத்தனை எத்தனை மாநாடுகளில் விரிவுரையாற்றி இருப்பார்கள்?
இதற்கெல்லாம் நாணயமான பதில் சொல்லும் பண்பாடும், நாணயமும் இல்லாதவர்கள் தாங்கள் அடிமைப்படுத்து வதற்கு ஒரு கூட்டம் வேண்டும் _ பெரும்பான்மை என்னும் பலத்தைக் காட்டி சிறுபான்மையினரைச் சீண்ட வேண்டும் _ அதன் மூலம் எல்லா வகையிலும் ஆதாயக் குளிர் காய வேண்டும் என்கிற தந்திரம் தந்தை பெரியார் சகாப்தத்தில் நடக்காது என்று நிரூபிக்க வேண்டும்.
அதனால்தான் “இந்து என்று சொல்லாதே இழிவைத் தேடிக் கொள்ளதே’’ என்னும் முழக்கத்தை திராவிடர் இயக்கம் முன்வைக்கிறது என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்.
இதுதான் நமது கொள்கை. இதற்கெல்லாம் சமாதானம் சொன்னால் எதிரி ஜெயித்துவிடுவான் என்பார் தந்தை பெரியார். இந்த வகையில் மறைந்த இனமானப் பேராசிரியர் சிந்தனைகள் சீர்தூக்கத்தக்கவை.
பள்ளத்தூரில் இனமானப் பேராசிரியர் பேசி ‘விடுதலை’யில் (25.3.1982) வெளிவந்த அந்தக் கருத்து முத்திரை இதோ:
“‘பிராமண’ருக்கு முன்னாலே அத்தனை பேரும் சூத்திரர்கள்தான். செட்டி நாட்டரசர் முத்தையா செட்டியாரும், ‘பிராமண’ருக்கு முன்னாலே சூத்திரர்தான். இங்கே ஏழையாக இருக்கிற வலையரும், ‘பிராமண’ருக்கு முன்னாலே சூத்திரர்தான். எங்களைப் போல அமைச்சர்களாக இருந்தவர்களும் சூத்திரர்கள்தான். ஆக, எல்லோரும் சூத்திரர்கள்தான். நான் இதைச் சொல்லுகிறபோது பிராமணர்களைக் கண்டிப்பதற்குக்கூட அல்ல; நமக்குப் புத்தி வரவேண்டும் என்பதற்காகத்தான் சொல்லுகிறேன்.
‘பிராமண’ரிடத்திலேயா நாம் கோபித்துக் கொள்வது? என்னுடைய முட்டாள்தனத்தை வைத்து நீ என்னை ஏமாற்றலாமா? என்று கோபித்துக் கொள்வதைப் போல _ நாம் முட்டாளாக இருந்தால் எவனும் நம்மை ஏமாற்றத்தான் செய்வான். ஆகவே, நாம் யார் என்று கேட்டால், நாம் ஜாதி அடிப்படையை ஒத்துக்கொள்ளாத _ ஏற்றுக்கொள்ளாத வள்ளுவர் வழியிலே வந்த _ வடலூர் வள்ளலார் வழியிலே வந்த _ தமிழ்ப் பண்பாட்டு வழியிலே வந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற காரணத்தாலேதான் இந்துக்கள் என்று சொல்லுவதிலேகூட எங்களுக்கு அக்கறை இல்லை.
இங்கே பேசிய நண்பர்கள் சொன்னார்கள். நம்முடைய முகவை ராமச்சந்திரன் பேசியபோது சொன்னார். கிறிஸ்துவர்களை, இஸ்லாமியர்களைக் கண்டிப்பீர்களா? இந்துவைத்தானே கண்டிக்கிறீர்கள் என்று வேறு ஒரு கட்சியிலே உள்ள ஒருவர் சொன்ன கருத்தை இங்கு எடுத்துச் சொன்னார்.
நான் இந்துவைக் கூட கண்டிக்கவில்லை. எங்களை இந்து என்று சொல்கிறான். இந்து என்று சொன்னால், இந்தப் படிக்கட்டுகளிலே ஏதாவது ஒரு படிக்கட்டிலே நின்றாக வேண்டும். நான் இந்து இல்லை என்று சொன்னால் படிக்கட்டிலே நிற்க வேண்டியதில்லை. இந்து என்று சொன்னால் நான் சூத்திரன். இந்து என்று சொன்னால் நான் ‘பிராமண’ருடைய உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து என்று சொன்னால் நான் நால்வகை ஜாதிக்கும் ஆட்பட வேண்டும். என்னை அந்த நிலைமைக்கு ஆளாக்குகிற காரணத்தால்தான் நான் தமிழனே தவிர, இந்து அல்ல என்று சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் இந்து அல்ல என்று சொன்னால் இந்துக்களுக்கு விரோதமாக இருக்கிறேன் என்று அர்த்தம் அல்ல; நான் இந்துவும் அல்ல; முஸ்லிமும் அல்ல; கிறிஸ்துவனும் அல்ல; இன்னும் சொல்லப்போனால் புத்த மதத்தைச் சேர்ந்தவனும் அல்ல. எனக்கு என்று ஒரு மதம் இருந்தால் நான் மனிதன் என்ற மதத்தைச் சேர்ந்தவன்.’’
இன்றைக்கு இன எதிரிகளுக்கு இந்து என்ற கூண்டு வைத்து தி.மு.க.வை வீழ்த்திடலாம் என்று வியூகம் வகுக்கும் கும்பலுக்கு 38 ஆண்டுகளுக்கு முன்பே இனமானப் பேராசிரியர் சவுக்கடி கொடுத்திருக்கிறார்.
கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் (26.5.1983) தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் ஆற்றிய உரை: கழகக் கண்மணிகளின் காதுகளில் ‘கணீர் கணீர்’ என்று ஒலிக்க வேண்டியவையாகும்.
இதோ அந்த இனமான முழக்கம்:
“தமிழர்களை ஓர் இனமாக ஆக்கிப் பார்க்க வேண்டும். ஆட்சி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, நண்பர் சுப்பு அவர்கள் பேசும்போது இந்த ‘ஆட்சி’யை விட ‘இலட்சியம்’ முக்கியமானது என்று சொன்னபோது நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் இந்தச் சமுதாயம் மெல்ல மெல்ல அழிந்துகொண்டே போகின்ற ஒரு சமூகம். தமிழினம் மெல்ல மெல்ல அழிந்துகொண்டே போகிறது.
தமிழ்நாட்டில் எத்தனையோ காரணங்களால் தமிழ்ச் சமூகம் மெல்ல மெல்ல அழிந்துகொண்டு போகிறது என்பதை கடந்த 45 ஆண்டுகால அனுபவத்தில் உணர்ந்து வேதனைப்படுபவன் நான்.
இந்தச் சமூகம் வாழவில்லை; இந்தச் சமூகத்திற்கு வாழ்வதற்கான ஆற்றல் இல்லை; தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வல்லமையைப் பெற்றிருக்கவில்லை. இந்தச் சமூகத்திற்கு, தான் ஒரு சமூகம் என்கிற உணர்ச்சியே இல்லை.
ஒரு சமூகம் என்கிற உணர்வு ஏற்படவேண்டும். வகுப்புவாதத்திற்காக அல்ல; இன்னொரு இனத்தாரைப் பகைப்பதற்காக அல்ல; நம் இனத்தின் வீழ்ச்சியை மாற்றுவதற்காக.
இந்த இனத்திற்கு ஏற்பட்டு இருக்கின்ற வீழ்ச்சி ஒரு வரலாற்று வீழ்ச்சி. கரிகால் பெருவளத்தான் காலத்தில் தமிழன் கொடிகட்டி ஆண்டான். அந்த வரலாற்றைச் சொல்ல நேரமில்லை.
ஓர் ஆயிரம் ஆண்டுக் காலமாக தமிழருடைய கலை, பண்பாடு, நாகரிகம் மெல்ல மெல்ல சீரழிக்கப்பட்டுவிட்டது.
சீரழிக்கப்பட்டது என்றால், ஓர் உயர்ந்த கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, அதை பூசை செய்ய பார்ப்பனர்தான் இருக்க வேண்டும் என்று எழுதிவைத்த காரணத்தாலே தமிழர்களுடைய கலை, பண்பாடு, கோயில்களிலே அழிக்கப்பட்டன. கடவுள் வழிபாட்டிலேயே தமிழனுடைய பண்பாடு அழிக்கப்பட்டது என்றால் மற்ற துறைகளிலே அழிப்பது என்பது மிகச் சாதாரணம். ஒருவனை ஆண்டவன் பெயராலே முட்டாளாக்கி விட்டால் எப்போதுமே அவனை அடிமையாக இருக்க வைக்கலாம்.
கடவுள் பெயராலே நம் மக்களை முட்டாளாக ஆக்கியதற்குப் பின்னர் நம்மை அடிமைகளாக வைத்திருக்க எவனெவனுக்கோ முடிந்தது. நம்மைப் பொருத்தவரையிலே எவனெவனுக்கோ அடிமையாக இருந்த காரணத்தால் இன்றைக்கு இவனுக்கு அடிமையாக இருக்கிறோம்.
என்ன காரணம்? தமிழனுக்கு தமிழன் என்கிற உணர்வு இல்லை.’’ இவ்வாறு பேராசிரியர் அன்பழகன் உரையாற்றினார்.
இனமானப் பேராசிரியர் இன்று நம்மிடையே உடலால் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் ஆற்றிய இந்த இனமான சங்கநாதம் செப்பேடாக _ சங்கப் பலகையாக நம் முன் என்றென்றும் எச்சரித்துக்கொண்டே இருக்கும். சறுக்கல் வராமல் தடுத்தாட் கொள்ளும் பிரகடனங்கள் இவை!
எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசக்கூடிய அறிவு நாணயம் என்பது இனமானப் பேராசிரியருக்கான தனித்தன்மையான முத்திரை இதோ:
“சுயமரியாதை இயக்கத்தின் பொன்விழா தஞ்சாவூரில் 1976 ஜனவரி 22 முதல் 24 முடிய சீரும் சிறப்புடனும் நடைபெற்றது. அவ்விழாவில் மாயவரம் சி.நடராசன் படத்தைத் திறந்து வைத்து இனமானப் பேராசிரியர் மானமிகு க.அன்பழகன் தெரிவித்த _ தெளிவித்த கருத்து _ வரலாற்றின் ஒளிவிளக்காகும்.
“சமுதாயத்தில் வளர்ந்து இருக்கின்ற ஜாதித் தன்மைகளால் மனிதன் மனிதனாக நடத்தப் பெறவில்லை. மனிதனாக நடக்கும் தன்மையை இழந்திருக்கிறார்கள் என்பதை ஓயாது எடுத்துச் சொன்ன காரணத்தினால்தான், அந்த வித்து முளைத்து, மரமாகி, அதிலிருந்து விழுதுகளாய்க் கிளம்பியதுதான் பகுத்தறிவு, சுயமரியாதை, திராவிடர் கழகம் ஆகும். நாங்கள் எல்லாம் பெரியார் தொண்டர்களாக இருந்ததால்தான் அமைச்சர்களானோம். தஞ்சையில், கரந்தையிலே ஒரு மாநாடு நடந்தது. அதிலிருந்து இயக்கம் அரசியலில் இயங்க வேண்டும் என்ற கருத்து தோன்றினாலும் பெரியாரை எதிர்க்க எங்களுக்குத் தெம்பு கிடையாது. ஆனதினால், பெரியாரிடமிருந்து விலக நாங்கள் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தோம்.’’ (‘விடுதலை’ 31.1.1976 பக்கம் 2)
திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தைத் தொடங்கி வைக்கும் இனமானப் பேராசிரியர். உடன் தமிழர் தலைவர் ஆசிரியர், பேராசிரியர் இராமசாமி.
பெரியார் _ மணியம்மை திருமணம் என்பது ஒரு சாக்காகக் கூறப்பட்டதே தவிர, அரசியலில் செல்ல வேண்டும் என்பதுதான் தங்களின் நோக்கம் என்பதை வெளிப்படையாகச் சொல்லும் துணிவு கலந்து அந்த அறிவு நாணயத்தை எத்தனை பத்தரை மாற்றுத் தங்கத்தாலும் எடைபோட்டுப் பாராட்டலாம்! இதுதான் இனமானப் பேராசிரியருக்கான அறிவு ஆளுமை. கருத்துகளை ஆழமாக வெளிப்படுத்தும் அழகும் அடடே, எத்தனை கம்பீரம் -_ எடுப்பு!
இன்றைக்குத் திராவிடமா? தமிழா? என்ற கேள்வி சில தரப்பில் திட்டமிட்டு எழுப்பப்படுகிறது. ஏன், இன்னும் சொல்லப்போனால் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறுவோரும் கிளம்பியிருக்கிறார்கள்.
இதுகுறித்து இனமானப் பேராசிரியர் வெளிப்படுத்திய கருத்து விவேகமானது.
சென்னைப் பெரியார் திடலைத் தலைமையகமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தை’த் தொடங்கி வைத்து தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் தெரிவித்த கருத்துதான் அது. (7.9.2010)
அந்த உரை “திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் _ தேவையும்’’ எனும் தலைப்பில் திராவிடர் கழக (இயக்க) வெளியீடாக வெளிவந்துள்ளது.
“அந்தக் காலத்திலே தந்தை பெரியாரும், அறிஞர்அண்ணாவும் சேர்ந்து நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றி அமைத்த பொழுது, சில பேராசிரியர்கள் கூட என்னிடத்திலே கேட்டார்கள்.
பெரியார் திடலில் அன்னை நாகம்மையார் அரங்கத்தை
இனமானப் பேராசிரியர் திறந்து வைக்கிறார்.
“எதற்காகத் தமிழ்நாட்டில் தமிழர்களாகிய நாம் திராவிடர் கழகம் என்று பெயர் வைக்க வேண்டும்? தமிழர் என்னும் பெயருடன் கழகம் இருக்கக் கூடாதா?’’ என்று கேட்டார்கள்.
நான் அவர்களுக்கெல்லாம் சொல்லும் விளக்கம் இதுதான்:
பார்ப்பனரை விலக்காத பெயர் ‘தமிழன்’. பார்ப்பனரை விலக்கிய பெயர் ‘திராவிடன்’. என்று பளிச்சென்று சொன்னார். (அரங்கே அதிரும் அளவுக்குப் பலத்த கரவொலி)
‘தமிழர்’ என்று கூறிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்; ‘திராவிடர்’ என்பதால் நான் உரிமை பெறுகிறேன் என்றும் அழுத்திக் கூறினார்.
மேலும், அந்த உரையில், “ஏன் இந்தத் திராவிட இன உணர்வும் பற்றும் நமக்கு ஏற்பட்டது? இந்த உணர்வு _ தமிழரை இழிவுபடுத்தியதை, சூத்திரன் என்று தாழ்த்தியதைப் பொறாமல் உரிமைக் குரல் எழுப்பியபோது ஏற்பட்டது.’’ என்று கூறினார்.
திராவிடர் என்பதற்கான விளக்கமும் விவேகமும் இதற்கு மேல் தேவைப்படாது. எவரைச் சந்தித்தாலும் கைகொடுத்துக் குலுக்கும் அந்தச் சமத்துவ உணர்வு _ தந்தை பெரியாரின் சுயமரியாதை _ பகுத்தறிவு _சமதர்ம சித்தாந்தத்தின் கருப்பையில் தோன்றியது. இனமானப் பேராசிரியர் உடலால் மறைந்திருக்கலாம். ஆனால், அவர் எழுப்பிய கொள்கை முழக்கம் என்றும் நம்மிடையே ஒலித்துக்கொண்டே இருக்கும்.