நாடகம் : புது விசாரணை – (4)

மார்ச் 1-15, 2020

ஒரு புதுமை நாடகத் தொடர்

“சிந்தனைச் சித்ரா’’

[தந்தை பெரியார் என்னும் புரட்சியாளரின் அறிவுப் புரட்சியினால், புத்தாக்கச் சிந்தனைகளுக்கு ஆளான பல, பழைய (மனு) அநீதிகள் – சட்டக் கொடுங்கோன்மைகள் மீது ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியாக வேண்டும் என்கிற உத்வேகம் பலரை மக்கள் மன்றத்திலிருந்து மனிதநேய நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளது;

சாஸ்திர, புராண, இதிகாசங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளின்மீது மறு விசாரணைக்கான மனு, வழக்குரைஞர் புத்தியானந்தாவால் தாக்கல் செய்யப் பட்டு, மாண்பமை நீதிபதி நெடுஞ்செழிய பாண்டியன் அவர்களால் விசாரிக்கப்படுகிறது.]

காட்சி 4 – நீதிமன்றம் மீண்டும் கூடுகிறது

நீதிமன்றத்தினுள் அனைவரும் அமர்ந்துள்ளனர். புது விசாரணை கோரி வழக்குத் தொடுத்துள்ள புத்தியானந்தரும் எதிர் தரப்பு வழக்குரைஞர் குல்லூகபட்டரும், சாட்சியமளித்த பி.பி.மண்டலும் வந்து விசாரணைக்குத் தயாராக இருக்கின்றனர்!

நீதிபதி நெடுஞ்செழிய பாண்டியன் மன்றத்திற்குள் நுழைகிறார்.

வணங்கிவிட்டு இருக்கையில் அமருகிறார்.

நீதிபதி: வழக்குரைஞர் புத்தியானந்தர் சற்று விரிவாகவே விளக்குவதற்குக் கூடுதலாக நேரம் கேட்டார்; அனுமதி வழங்குகிறேன், துவக்குங்கள்.

வழக்குரைஞர் புத்தியானந்தர்: மாண்பமை நீதிபதி அவர்களே, நன்றி! தர்மானுஷ்டானம், கர்மானுஷ்டானம் என்பன பற்றியெல்லாம் கற்றறிந்த எனது நண்பர், எதிர்க்கட்சி வழக்குரைஞர் குல்லூகபட்டர் கூறியதை நான் ஆதாரபூர்வமாக விளக்குகிறேன்.

மனுதர்மத்தில் _ முதல் அத்தியாயத்தில் 87ஆவது சுலோகத்தில்,

“அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களை தனித்தனியாகப் பகுத்தார். அதன்படி,

பிராமணனுக்கு ஓதுவித்தல், ஓதல், எக்கியஞ் செய்தல், எக்கியஞ் செய்வித்தல், தானங் கொடுத்தல், தானம் வாங்குதல் _ இவ்வாறு தொழிலை ஏற்படுத்தினார்.

(மனு : அத்தியாயம்_1, சுலோகம் : 88)

க்ஷத்திரியனுக்கு பிரசைகளைத் தருமமாகக் காத்தல், தானங்கொடுத்தல், வேதமோதுதல், பாட்டு கூத்து ஸ்த்திரி முதலிய விஷயங்களில் மநஞ்செல்லாமை இவை நான்கையும் ஏற்படுத்தினார். எக்கியஞ் செய்தல் முதலான தருமகாரியங்களும் அவனுக்குண்டு.

(மனு : அத்தியாயம்_1, சுலோகம்: 89)

வைசியனுக்கு பசுவைக் காப்பாற்றுதல், தானங் கொடுத்தல், வேதமோதுதல், சலத்திலும் பூமியிலுமுண்டான இரத்தினம், நெல்லு முதலியவைகளின் வியாபாரஞ் செய்தல், வட்டி வாங்குதல், பயிரிடுதல் இவ்வாறையும் ஏற்படுத்தினார்.

(மனு: அத்தியாயம்_1, சுலோகம்: 90)

சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றிப் பணி செய்வதை முக்கியமான தருமமாக ஏற்படுத்தினார்.

இதனால் அவனுக்கு தான முதலியவையு-முண்டென்று தோன்றுகிறது.

(மனு : அத்தியாயம்_1, சுலோகம்: 91)

இதுதான் தர்மம் _ வர்ணதர்மம் _ இதன்படி நடந்தே தீரவேண்டும்!

இப்படி நடந்தால் இவர்கள் அடுத்த ஜென்மத்திலே _ வேறு பிறவியிலே _ ஒரு வேளை பதவி உயர்வு போல வர்ண உயர்வை எதிர்பார்க்கலாம் என்றும் கூறுகிறார்கள். அது அவர்களின் கர்மானுஷ்டானத்தைப் பொறுத்தது!

மனுதர்மத்தில் வர்ணம் பிறப்பு பற்றி இப்படி,

பகவான் கிருஷ்ணன் உபதேசித்த (போர்க்-காலத்தில் _ எதிரிப் படையை நிறுத்தி வைத்துக்கொண்டு உபதேசித்த) “-ஸ்ரீமத் பகவத் கீதையிலே 4ஆவது அத்தியாயத்தில், சுலோகம் 13இல்’’,

‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்’ _ நாலு வர்ணத்தையும் நானே உருவாக்கினேன், அவரவர் தர்மப்படியே குணங்களையொத்து தொழிலைச் செய்ய வேண்டும் _ ஜாதிக்கு வர்ண குணப்படி _ இதனையொட்டிய தர்மப்படி _ செய்யும் தொழிலை நால்வகை வர்ணத்தால் உருவாக்கினேன். நானே நினைத்தாலும் மாற்றிடவே முடியாது; அதற்குப் பெயர் சுதர்மம் என்று பகவான் அவதார கிருஷ்ணன் கூறுகிறார்!

நீதிபதி: குறுக்கிட்டு… நீங்கள் மேற்கோடிட்டு ‘மார்க்’ செய்யவும். என்ன இரண்டும் (Exhibits) சான்றுகளாகப் பதிவு செய்தவை? ஒன்றுக்-கொன்று முரணாக அல்லவா இருக்கிறது?

பிரம்மா உருவாக்கினாரா?

மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்து அவர் உருவாக்கினார் _ வர்ணங்களையும் அதையொட்டிய தர்மங்களையும்.

குல்லூகபட்டர்: கனம் கோர்ட்டார் அவர்களுக்கு எனது தாழ்மையான விண்ணப்பம். பெரியவா எழுதி வைத்த சாஸ்திரங்களை, ஹிதிகாசங்களை, புராணங்களை கோடானு-கோடி பேர் நம்பறா.  இதில் முரண்பாடு _ பொருந்தவில்லை என்றெல்லாம் குறுக்குக் கேள்விகளை நீதிமன்றம் கேட்கவே கூடாது!

                நம்பினால்தான் நடராஜா!

                நம்பினோர் கெடுவதில்லை.

புத்தியானந்தர்: (குறுக்கிட்டு), மேன்மைதங்கிய நீதிபதி அவர்களே! நான் இதை ஆட்சேபிக்-கிறேன். பகுத்தறிவுள்ள மனிதர்கள் வெறும் நம்பிக்கையோடு நின்றிருந்தால்,  காட்டு-மிராண்டியாக வேட்டையாடி, உணவு சேகரித்த பருவத்திலிருந்து மாறி, ஒரு செல்பேசியில் உலகத் தகவல்களையெல்லாம் அடக்கி பயன்படுத்தும் அறிவார்ந்த நிலை வந்திருக்குமா? எனவே, வெறும் நம்பிக்கை உண்மையாகி விடாது.

‘கண்மூடிவழக்கமெலாம் மண்மூடிப் போக’ என்று வடலூர் வள்ளலார் கூறியபடி, தமிழ்நாட்டில் மாலை நேரப் பொதுக் கூட்டங்களையே பகுத்தறிவுப் பிரச்சார மூடநம்பிக்கை ஒழிப்பு போதிக்கும் வகுப்பறையாக மாற்றிய தந்தை பெரியார் போன்றவர்களின் உழைப்பால் கல்வி அறிவு, பகுத்தறிவு சாணை பிடிக்கப்பட்டது! அதன் விளைவுதான் இது.

குல்லூகபட்டர் குறுக்கிட்டு… “அப்ஜக்ஷன் யுவர் ஆனர்!’’ வாதிக் கட்சி வக்கீல் நாஸ்திக இராமசாமி நாயக்கரை ஏன் இதில் இழுத்துக் கொண்டு வருகிறார்?

நீதிபதி: (அப்ஜக்ஷன் ஓவர் ரூல்டு)

உடனே புத்தியானந்தர்: நோ மை லார்டு, தந்தை பெரியார் என்று பலராலும் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் நாஸ்திகர்தான். நான் குறிப்பிட்டதை ஆட்சேபிக்கும் அளவிற்கு நாஸ்திகம் ஒன்றும் வெறுக்கத்தக்கது அல்ல; சமூக விரோதமும் அல்லவே! வால்மீகி இராமாயணத்தில் கூட தசரதனுக்கும் இராமனுக்கும் இருந்த மந்திரி ஜாபாலி என்பவர் நாஸ்திகர்தானே! எதிர்க்கட்சி வக்கீல் மாறுபடுகிறாரா?

நாஸ்திகரை ஏன் மந்திரியாக வைத்திருந்தார் என்றால்,  அவர்தான் பயனுள்ள பகுத்தறிவு யோசனைகளைக் கூறுவார் என்பதால்தான்!

நீதிபதி: வாதங்கள் எங்கெங்கோ போகின்றன. முன்பு எடுத்த விஷயத்திற்கான ஆதாரங்களைப் பற்றி மட்டும் பேசுங்கள்!

புத்தியானந்தர்: துரோணாச்சாரியார் ஏகலைவனுடைய கட்டை விரலை வெட்டித் தரவேண்டும் என்று குருதட்சணை கேட்டது மனுதர்ம அடிப்படையில்தான். அதை மண்டல் தனது அறிக்கையில் எழுதியுள்ளார்.

துரோணாச்சாரியார் எவ்வளவு நயவஞ்சகமாக ஏகலைவனின் கட்டை விரலை வெட்டித் தரக் கேட்டிருக்கிறார். வேடர் குலத்தின் முக்கியத் தொழிலான வேட்டையாடுதலுக்கு வில்லில்  அம்பை வைத்து எய்வதற்கு முக்கிய விரல் கட்டை விரல்தானே! அதைத்தான் வெட்டித் தரக் கேட்டார். அதற்குப் பிறகு ஏகலைவன் வில்வித்தையை தொடர முடியவில்லை. இது எவ்வளவு பெரிய சமூக அநீதி!

வாதங்கள் தொடரும்;

வழக்கு மறுதேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. நீதிமன்றம் கலைகிறது.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *