நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியக் குத்துச்சண்டை அணியில் பங்கேற்ற திண்டுக்கல் மாணவி கலைவாணி தங்கப் பதக்கம் வென்று திரும்பியுள்ளார். தன் சாதனைகள் பற்றி அவர் கூறுகையில்,
“எனக்கு சொந்த ஊர் திருத்தணி பக்கத்தில் இருக்கிற பூனிமாங்காடு. நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில் இருக்கிற எங்கள் பாட்டி வீட்டில்தான். எங்கப்பா சீனிவாசன் விவசாயம் செய்கிறார். பாக்ஸிங்கில் எனக்கு குரு அவர்தான்.
என்னுடைய அண்ணன் ரஞ்சித் குமாரும் பாக்ஸர்தான். அவன் பாக்ஸிங் பயிற்சிக்குப் போகும்போது நானும் அவனோடு போவேன். அப்போது சிறுவர்களுக்கான பாக்ஸிங் போட்டி நடந்து. ஒரு மாத பயிற்சிக்குப் பிறகு அந்தப் போட்டியில் கலந்துகொண்டேன். அதில் பெற்ற வெற்றி தந்த உற்சாகத்தில் அதன்பிறகு தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றேன். தொடர்ந்து வெற்றிகள்தான்’’ என்று கூறும் கலைவாணி, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளியில் படிக்கும்போது நடைபெற்ற, மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளில் அனைத்திலும் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இதனால் தேசிய அளவில் நடைபெற்ற ‘ஸ்கூல் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’ போட்டிகளில் தமிழக அணி சார்பாகக் கலந்துகொள்ள கலைவாணி தேர்வு செய்யப்பட்டார். அதிலும் இரண்டு முறை தங்கப் பதக்கம் வெல்ல, இவரைப் பாராட்டி பத்தாம் வகுப்பு படிக்கும்போதே பெஸ்ட் பாக்ஸர் விருது கொடுத்திருக்கிறார்கள்.
தொடர்ந்து, தேசிய அளவில் பாக்ஸிங் கழகத்தின் சார்பாக நடைபெறும் சப்ஜூனியர் பிரிவு பாக்ஸிங் போட்டியில் இரண்டு முறை கலந்துகொண்டார். ஒருமுறை தங்கமும் இன்னொரு முறை வெண்கலமும் வென்றார்.
ஒரு தனியார் நிறுவனம் இவருக்கு சிறப்புப் பயிற்சியை அளிக்க முன்வந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ரெனால்ட் சிம்ஸ் தலைமையில் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றார் கலைவாணி. அப்போது, பள்ளிப் படிப்பை முடித்திருந்தார்.
அதன்பிறகு, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பாக்ஸிங் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார். இதனால், தேசிய அளவில் ரேங்கிங் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு உயர்ந்தார்.
இந்நிலையில்தான், 48 கிலோ எடைப் பிரிவில் இந்திய பாக்ஸிங் அணியில் தேர்வு செய்யப்பட்டு நேபாள தலைநகர் காட்மாண்டு-வில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டு தங்கப் பதக்கத்தைத் தட்டி வந்துள்ளார் கலைவாணி.
“இந்த வெற்றியின் மூலம் வர இருக்கின்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. கடுமையாகப் பயிற்சி எடுத்து அந்தப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பேன்.
இப்போது நான் படிக்கும் ஜி.டி.என்.கலைக் கல்லூரியின் செயலாளர் ரத்தினம், இயக்குநர் துரை இருவரும் எனது பயிற்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள். இவர்கள் உதவியுடன் 2024 ஒலிம்பிக் போட்டியில் இந்திய பாக்ஸிங் அணியில் இடம் பெற்றுத் தங்கப் பதக்கம் பெறுவதே எனது லட்சியம். அதை நிச்சயம் சாதிப்பேன்.’’
“வீட்டில் எல்லோரும் பொம்பளை புள்ளைக்கி போயி பாக்ஸிங் கத்துக் கொடுக்கிறியே என்று என் தந்தையைக் கேட்டார்கள். இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல்தான் இதைச் சாதித்தேன்’’ என்றார்.
தகவல்: சந்தோஷ்