மஞ்சை வசந்தன்
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் தந்தை பெரியாரின் வாழ்வே அர்ப்பணிப்பு வாழ்வு! அவருக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.
சராசரி பெண்ணின் கனவுகள் கற்பனைகளை-யெல்லாம் புறந்தள்ளி, உலகின் மாபெரும் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு உற்ற துணையாய், பெற்றதாயினும் உற்ற தாயாய், பணிப் பெண்ணாய், தந்தை பெரியாருக்குப் பின் இயக்கத்துக்கு தலைமை-யேற்ற தலைவராய், தனக்குப் பின்னும் சரியான தலைவரை இந்த இயக்கத்திற்கு அளித்த தொலைநோக்குடைய ஆற்றலாளராய். இந்தியா சந்தித்த அவசர நிலை காலத்தில் அஞ்சாது, அயராது, நெஞ்சு நிமிர்த்தி இயக்கம் நடத்தி, இயக்கம் காத்து, இந்தியாவே அதிர்ந்து பார்க்க இராவணலீலா நடத்திய சுயமரியாதைச் சுடரொளியாய், இனமானம் காத்த இணையில்லா பெண்மணியாய் சரித்திரத்தில் சாதனைப் பதிவுகளைச் செய்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.
பெரியாருடன் சந்திப்பு
வேலூரைச் சேர்ந்த கனகசபை என்னும் ‘பெருந்தகையார்’ பெரியாரின் நல்ல நண்பர்களில் ஒருவர். இவருக்கும் பத்மாவதி அம்மையாருக்கும் மகளாக 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் பிறந்தவர்தான் மணியம்மையார். பெற்றோர் இட்ட பெயர் காந்திமதி. தனித்தமிழ் ஆர்வலர் கு.மு.அண்ணல் தங்கோ காந்திமதி என்னும் பெயரை, அரசியல்மணி என்று மாற்றம் செய்தார்.
அம்மையாரின் தந்தை கனகசபை பெரியாருக்கு நலம் விசாரித்து கடிதம் எழுதுவது உண்டு. ஒருமுறை பெரியாரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது. “எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால், கூட இருந்து உதவி செய்ய யாருமில்லை. என்னமோ என் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்’’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனைப் படித்த கனகசபை துடித்துப் போனார்.
அதன் விளைவு 1943ஆம் ஆண்டு முதல் அம்மையார், பெரியாரின் அணுக்கச் செயலாளராக, தொண்டராகப் பணியாற்றத் தொடங்கினார். ஏற்கெனவே பெரியாரின் கொள்கைகளாலும் பேராட்டம் நிறைந்த வாழ்க்கையாலும் ஈர்க்கப்பட்ட அவர் இந்தப் பணியினை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
பெரியார் மற்றும் இயக்கம் தொடர்பான வரவு _ செலவுக் கணக்குகளை கவனித்துக் கொள்வது, பெரியாரின் சொற்பொழிவுகளுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துத் தருவது, பெரியாரின் சொற்பொழிவுகளைக் குறிப்பெடுப்பது, கூட்டங்களில் புத்தகங்கள் விற்பது – இதுதான் அம்மையாரின் பிரதான பணியாக இருந்தது.
இளம் வயதில் முதியவர்க்குத் தாயானவர்
பெரியாருக்கு உடல் நலம் குன்றியபோது, உணவு அளிப்பது, சரியான நேரத்தில் மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது போன்ற பணிகளைச் செய்தார். இதுபற்றி பின்னாளில் மணியம்மையார்,
“அவர் தொண்டுக்கு முழுக்க, முழுக்க என்னை ஆளாக்கி, அவர் நலத்தை கண்ணெனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னைப் பாவித்துக் கொண்டு, அவரை ஒரு சிறு குழந்தையாகவே மனதில் நிறுத்தி அந்தக் குழந்தைக்கு ஊறு நேராவண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கொண்டேன்” என்று குறிப்பிட்டார்கள்.
இளம்வயதில் ஒரு முதியவருக்குத் தாயானது அம்மையாரைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும்?
பெரியாருக்கு உதவியாளர் என்கிற வட்டத்துக்குள் நின்று விடாமல் மிகச்சிறந்த சொற்பொழிவாளராக, எழுத்தாளராக அம்மையார் விளங்கினார். நாகம்மையாருக்குப் பிறகு பெரியாருக்குப் பின்னால் பெண்களைத் திரட்டுவதில் பெரும்பங்கு கொண்டார். 1944ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ ஏட்டில் “இரண்டும் ஒன்றே’’ என்னும் தலைப்பில் கந்த புராண இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார்.
மேலும், நாட்டு நடப்புகள் குறித்த தனது கருத்துகளை அவ்வப்போது “குடிஅரசு’’வில் வெளியிட்டு வந்தார். 1948ஆம் ஆண்டு மொழி உரிமைப் போர் நடந்தது. கும்பகோணத்தில் நடந்த போராட்டத்துக்கு அம்மையார் தலைமை தாங்கினார். தடையை மீறியதாகக் கைது செய்யப்பட்ட அம்மையார் பாபநாசம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வேலூர் சிறையில் மூன்று மாதம் தண்டனை அனுபவித்தார். 1949ஆம் ஆண்டு சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலை தலைமை தாங்கி நடத்தினார்.
பெரியார்-மணியம்மையார் திருமணம்
இதே ஆண்டில் ஜூலை 9ஆம் நாள் தந்தை பெரியார் மணியம்மையாரை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இதுவரை அரசியல்மணி என்று அழைக்கப்பட்ட அம்மையாரை ஈ.வெ.ரா. மணியம்மை என்று பெயர் மாற்றினார் பெரியார்.
பெரியார், மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. விமர்சனங்கள் எழுந்தன. பெரியார் எதிர்ப்பாளர்கள் இதனைக் கொச்சைப்படுத்தி எழுதியும், பேசியும் வந்தனர். ஆனால், பெரியார் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தான் எடுத்த முடிவில் மிகத் தெளிவாக இருந்தார். தனது திருமணம் பற்றி அவர் இப்படிக் கூறினார்.
“மனைவி வேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. இயக்க நலனை பொதுத் தொண்டைக் கருதி எனக்கொரு துணை வேண்டு மென்று என்னுடைய பாதுகாப்புக்காக, என்னுடைய வசதியை உத்தேசித்து, ஒரு ஸ்திரீயை சட்டப்படி எனக்கு உதவியாளராக, உற்ற நண்பராக இருக்க வசதி செய்துகொள்கிறேன்” என்றார்.
சில காலத்திற்குள் விமர்சனங்களும், சர்ச்சைகளும் ஓய்ந்து மறைந்து போயின.
திருமணத்திற்குப் பிறகு அம்மையார் தீவிர இயக்கப் பணியில் ஈடுபடத் தொடங்கினார். 1954ஆம் ஆண்டு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக பெரியாரால் நியமிக்கப்பட்டார். அதோடு ‘விடுதலை’ இதழின் பதிப்பாசிரியராகவும், வெளியீட்டாளராகவும் பணியாற்றினார்.
1958ஆம் ஆண்டு “இளந்தமிழா புறப்படு போருக்கு’’ என்ற கட்டுரையைப் பிரசுரித்ததற்காக, அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் மணியம்மையாருக்கு பதிப்பாசிரியர் என்கிற வகையில் 100 ரூபாய் அபராதம் விதித்தது நீதிமன்றம். ஆனால், அம்மையார் அபராதத்தை கட்ட மறுத்து 15 நாள் சிறைத் தண்டனை அனுபவித்து, தான் ஒரு சிறந்த தன்மானமிக்க பத்திரிகையாசிரியர் என்பதை நிரூபித்தார்.
தந்தை பெரியார் சிறையில் இருந்த காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இயக்கத்தை வழிநடத்தினார். பெரியார் ஜாதி ஒழிப்பு போராட்டம் நடத்தியபோது, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது இயக்கத்தை வெளியில் இருந்து நடத்தும் பொறுப்பை பெரியார் மணியம்மையாரிடம் ஒப்படைத்திருந்தார் .
இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி என்னும் இரு தோழர்கள் சிறையிலேயே வீரமரணம் அடைந்தார்கள். இதில் ஒருவர் சடலத்தைக் கொடுத்த நிருவாகம், இன்னொருவர் சடலத்தைக் கொடுக்க மறுத்தது. இதனால் கோபம் கொண்ட அம்மையார் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்று அப்போதைய முதல்வர் காமராசர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப்பேசி இருவர் சடலத்தையும் பெற்றார். ஒருவர் உடலை சிறைக்குள்ளேயே புதைத்து விட்டார்கள்.
இருந்தாலும் தோண்டியெடுத்து வாங்கி பிரமாண்ட ஊர்வலம் நடத்தி நல்லடக்கம் செய்தார்.
திருச்சியில் பெரியார் கல்வி நிலையங்-களையும், மகளிர் காப்பகத்தையும் தொடங்கி அதன் நிருவாகத்தை அம்மையார் கையில் ஒப்படைத்தார். அவர் ஆற்றிய பணிகளால் இன்று அந்த நிறுவனங்கள் ஆல்போல் வளர்ந்துள்ளன. காப்பகத்தில் சேர்க்கப்பட்ட அனாதைக் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக அக்காலத்திலேயே ஒரு பெருந்தொகையை வங்கியில் போட்டு வைத்தார்.
தந்தை பெரியாரின் இறப்புக்குப் பின்…
1974ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 6ஆம் நாள் மணியம்மையார் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஒரு மிகப் பெரிய சமூக சீர்திருத்த இயக்கத்துக்கே ஒரு பெண் முதல் முறையாகத் தலைமையேற்றார். “அய்யா (பெரியார்) அவர்கள் ஒவ்வொன்றிற்கும் நல்ல வழிமுறைகள், செயல் திட்டங்கள், கொள்கை விளக்கங்கள், பயிற்சிகள் நமக்கு தந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதன் படியே ஒரு நூலிழை கூடப் பிறழாமல் இயக்கம் நடக்கும்“ என்று மணியம்மை உறுதியளித்து அதன்படியே தனது பணியினைத் தொடர்ந்தார்.
கிடப்பில் போடப்பட்டிருந்த ‘அனைவரும் அர்ச்சகராகலாம்’ என்னும் சட்டமன்றத் தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி, தான் தலைமைப் பொறுப்பேற்ற மூன்றே மாதத்தில் மிகப்பெரிய மறியல் போராட்டத்தை நடத்தினார். இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, டெல்லி வந்த மத்திய அமைச்சர் ஒய். பி. சவானுக்கு கருப்புக் கொடி காட்டினார்.
மணியம்மையாரின் புகழ் இந்தியா முழுவதும் பரவ ஒரு மிகப்பெரிய போராட்டம் காரணமாக இருந்தது. வடநாடுகளில் ‘இராவண லீலா’ என்னும் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று ஆண்டு தோறும் நடைபெறும். இராமாயண காவியப்படி, தீயவனான இராவணனின் உருவப் பொம்மைகளை எரித்து கொண்டாடுவார்கள். இராவணன் திராவிட மன்னன், மாவீரன் என்பது திராவிடர் கழகத்தின் கருத்து. எனவே, இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று திராவிட கழகம் கோரி வந்தது. 1974ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், குடியரசு தலைவர் பக்ருதின் அலி அகமதுவும் கலந்து கொள்வதாக இருந்தது. இது அம்மையாருக்குக் கோபத்தை உண்டாக்கியது. இருவரும் இதில் கலந்து கொள்ளக்கூடாது என்று கடிதம் எழுதினார். மீறிக் கலந்து கொண்டால் திராவிட மக்கள் தமிழ்நாடு முழுவதும் இராமனின் உருவப் பொம்மைகளை தீயிட்டுக் கொளுத்துவார்கள் என்று எச்சரித்தார்.
மணியம்மையாரின் கோரிக்கையை அவர்கள் நிராகரித்து விட்டனர். போராட்டம் அறிவித்த நிலையில் மணியம்மையாருக்கு உடல்நலம் குன்றியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார். இருந்தாலும் தளராத மனத்தோடு 1974ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி இராமன், சீதை லட்சுமணன் உருவ பொம்மைக்குத் தம் கைகளாலேயே தீ மூட்டினார். தடையை மீறி இந்தப் போராட்டம் நடைபெற்றதால் அம்மையார் கைது செய்யப்பட்டார். 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
நெருக்கடி காலத்தில், ஆசிரியர் உள்பட திராவிட இயக்கத்தவர் மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில், அன்னையார் அவர்கள், இயக்கத்திற்குத் தலைமை தாங்கி, விடுதலைக்கு தரப்பட்ட நெருக்கடியையும் சமாளித்துக் கொண்டு, இயக்கத்தைக் காப்பாற்றினார்.
உள்துறை அமைச்சராக இருந்த பிரம்மானந்த ரெட்டியாரை நெருக்கடி நிலை காலத்தில் சந்தித்தார் அன்னை மணியம்மையார்.
‘‘எதற்காக எங்கள் தோழர்களை சிறையில் வைத்திருக்கிறீர்கள்; அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? அதற்கான காரணத்தைச் சொல்லுங்கள்’’ என்று உரிமையோடு கேட்கிறார்கள். அவர்களுடைய சந்திப்பு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
உள்துறை அமைச்சர், ஆளுநரைப் பார்க்கிறார். அன்றைய ஆளுநராக இருந்தவர் மோகன்லால் சுக்காடியா, இராஜஸ்தானிலிருந்து வந்தவர். ஆளுநர் அவர்கள், ‘‘திராவிடர் கழகத் தோழர்களை விடுதலை செய்வதற்கு நாங்கள் உத்தரவு போடுகிறோம். ஆனால், ஒரு நிபந்தனை; அந்த நிபந்தனைக்கு நீங்கள் கட்டுப்பட்டால், அவர்களை அடுத்த நிமிடமே விடுதலை செய்கிறோம்’’ என்று சொல்கிறார்.
‘‘என்ன, சொல்லுங்கள்?’’ என்று அம்மா அவர்கள் கேட்கிறார்.
‘‘கலைஞர் கருணாநிதி தலைமையில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கமாட்டோம், என்று ஒரு அறிக்கை விடுங்கள்; அதுபோதும்’’ என்றார்.
உடனே அம்மா அவர்கள் சிங்கம் போன்று எழுந்தார்; ‘‘நாங்கள் கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்; எங்கள் தோழர்கள் எத்தனை ஆண்டுகாலம் வேண்டுமானாலும் சிறையிலேயே இருக்கட்டும்; அங்கேயே மடிந்து போகட்டும்; எங்களுக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. எடுத்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது எங்களுடைய வேலையல்ல’’ என்று சொல்லி, பெரியாரின் குரலாக அந்தக் குரல் ஒலித்தது; ஒரு வீர முழக்கம் ஒலித்தது. இது பல பேருக்குத் தெரியாத செய்தி!
ஒரு மாபெரும் தலைவனின், தத்துவ ஞானியின் உடலையும், உயிரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், அவர் உருவாக்கிய இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், அவரது கொள்கையைப் பரப்ப வேண்டிய பணி, அவர் தொடங்கி வைத்த சமுதாயப் பணிகளைத் தொய்வின்றி நடத்த வேண்டிய கடமை, இதுதவிர உரிமைகளுக்கான போராட்டங்கள் என்று தன் வாழ்க்கையையே போராட்டமாக அமைத்துக்கொண்ட மணியம்மையார் 1978ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் நாள் காலமானார்.
மணியம்மையார் தந்தை பெரியாரைக் காத்தார். அவரது இயக்கத்தைக் காத்தார். தமிழ் இனத்தைக் காத்தார். சாதாரண உதவியாளராகத் தனது வாழ்வைத் தொடங்கி ஒரு இயக்கத்தின் தலைவியாக வாழ்ந்தபோதும் தனக்கென்று அவர் எதனையும் சேர்த்து வைத்துக் கொண்டதில்லை. தந்தை பெரியார் அவருக்குத் தனிப்பட்ட முறையில் எழுதி வைத்த சொத்துகளைக் கூட அவர் இயக்கத்தின் பொதுச் சொத்தாக மாற்றினார்.
அவரது மறைவுக்குப் பின் ஒவ்வோர் ஆண்டும் அன்னையார் பிறந்த நாளில் அவரது நினைவை நாம் போற்றி அவர் பெயரால் எத்தனையோ மக்கள் நலத் தொண்டுகளைச் செய்து வந்தாலும், 10.3.2020 அன்று நடைபெறவுள்ள நூற்றாண்டு நிறைவு விழாவும் வரலாற்றுச் சிறப்புடையது ஆகும்.
எந்த வகையிலும் பிறவிப் பேதம் என்பது அழிக்கப்படவேண்டும் என்கிற நோக்கில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய தந்தை பெரியார் அவர்கள், ஜாதி ஒழிப்பை மட்டும் மய்யப்படுத்தவில்லை. அதைவிட முக்கியமாக, ஆண் எஜமானன் _- பெண் அடிமை என்னும் பிறவிப் பேதத்தையும் நீக்கவேண்டும் என்று பாடுபட்டார்கள். அதை தன் வாழ்நாள் முழுவதும் முதன்மைப் பணியாகக் கொண்டு செயல்பட்டவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.
உலகத்தில் அதிகமான இகழ்ச்சி; அதிகமான ஏளனம்; மிகக் கேவலப்படுத்தப்பட்ட சொற்கள்; இவை அத்தனையும் மிகப்பெரிய இடத்தில் இருந்துகூட இவரைநோக்கி வந்ததுண்டு. அத்தனையையும் தந்தை பெரியார் அவர்கள் எப்படி ஏற்றுச் சந்தித்தாரோ _ சாதித்தாரோ அதைப்போல, அத்தனையையும் அன்னை மணியம்மையார் அவர்கள் ஏற்றுக்கொண்டு, சாதனை புரிந்தார்கள்.
‘‘முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், அய்யாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டது; அய்யாவினால் சரியாக உணவு உண்ண முடியாமல் சங்கடப்படுவார்; அப்படிப்பட்ட அய்யாவை இவ்வளவு காலம் காத்தவர் மணியம்மையார்’’ என்று முதலமைச்சர் அண்ணா அவர்கள், ஆசிரியர் அவர்களிடம் கூறியுள்ளார்கள்.
‘‘இனிமேல் நான் ரொம்ப நாளைக்கு இருக்கமாட்டேன்’’ என்று “விடுதலை’’யில் தந்தை பெரியார் எழுதினார். ஆனால், அதற்குப் பிறகு அய்யா அவர்கள் 50 ஆண்டுகாலம் வாழ்ந்தார். காரணம், அன்னை மணியம்மையார் அவர்கள், தன்னுடைய வாழ்வையே அய்யாவுக்காக அர்ப்பணித்தார்கள். அதன் காரணமாகத்தான், அம்மா அவர்கள் 60 வயதைத் தாண்ட முடியாமல் மறைந்து போனார்கள்.
தன் உடல் நலிவுற்ற நிலையிலும் அய்யாவைப் பாதுகாக்கவேண்டும் என்று முயற்சி எடுத்தார்களே தவிர, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்காதவர் அம்மா. அது சமுதாயத்திற்காக; தனக்காக அல்ல. எந்த நோக்கத்திற்காக அவரிடம் சென்றாரோ, அது நடைபெற-வேண்டும் என்பதற்காக.
இப்படிப்பட்ட சரித்திர சாதனைக்குரிய அன்னையாரின் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்புடன் கொண்டாட ஒன்று திரள வேண்டியதும், அவரது தொண்டுப் பணியைத் தொடர வேண்டியதும் திராவிட இனத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் கடமையாகும். குறிப்பாக இளைய தலைமுறையின் இன்றியமையாக் கடமையாகும்!