நிகழ்வுகள் : ’ நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்!

பிப்ரவரி 16-29 2020

– மஞ்சை வசந்தன்

‘நீட்’ தேர்வு மற்றும் புதியக்கல்விக் கொள்கையால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள _ ஏற்படவுள்ள பேராபத்துகளை விளக்கி தமிழக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் தமிழர் தலைவர் ஆசிரியர். பாசிச மத்திய அரசின் மனுதர்ம ஆட்சியின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க அரசையும் கண்டித்தும், நீட்டை விரட்டியே தீருவோம் என்கிற முழக்கத்தோடு 2020 ஜனவரி 20ஆம் தேதி நாகர்கோவிலில் தொடங்கி 2020 ஜனவரி 30 சென்னை வரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடர் நெடும் பயணத்தை மேற்கொண்டார்கள். அனைத்து இடங்களிலும் கழகத் தோழர்கள் தோழமைக் கட்சி நிருவாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாகத் திரண்டுவந்து தங்களது ஆதரவைத் தெரிவித்து உரை கேட்டு உணர்வு பெற்றனர்.

சமூக நீதிக்களத்தில் தமிழர் தலைவர் சாதனைகள்:

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் இட ஒதுக்கீட்டுக்கு ரூ.9000 வருமான வரம்பு ஆணையை கொண்டுவந்த பொழுது அவற்றைத் தொடர்ந்து எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தோல்வியே காணாத எம்.ஜி.ஆர். அவர்களை நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியுறச் செய்து (2 தொகுதிகளில் மட்டும்தான் அ.இ.அ.தி.மு.க வெற்றி) எம்.ஜி.ஆரை உணரச் செய்து ரூ.9000 வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ய வைத்து இடஒதுக்கீட்டை 69 சதவிகிதமாக உயர்த்தக் காரணமான தலைவர், ஆசிரியர் அவர்கள். மத்திய அரசில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு இருந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு பெற மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கையை குழிதோண்டிப் புதைத்த நிலையில் தொடர்ந்து இந்தியா முழுவதும் சமூகநீதித் தலைவர்களை ஒருங்கிணைத்து, 42 மாநாடுகள், 16 போராட்டங்களை நடத்தி, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் காலத்தில் மண்டல் கமிஷன் அறிக்கையை நிறைவேற்றச்செய்து, மத்திய அரசு வேலைவாய்ப்பில் 27% பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கக் காரணமான சமூகநீதிக் காவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் காலம் வரை தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 49 விழுக்காடாக இட ஒதுக்கீடு இருந்தது.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் காலத்தில் 69 விழுக்காடாக இட ஒதுக்கீடு உயர்வு பெற்றது.  69%  இட ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தில் ஆபத்து வந்த பொழுது 31சி என்னும் சட்டத்தை தமிழக அரசுக்கு எழுதிக்கொடுத்து சட்டமாக்கி இந்திய அரசியல் சட்டம் 9 ஆவது அட்டவணையில் சேர்ப்பதற்கு முதல்வர், பிரதமர், குடியரசுத்தலைவர் ஆகிய மூன்று பார்ப்பனர்களையும் பயன்படுத்தி தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பை உருவாக்கிய தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் காலத்தில் சமூக நீதிக்காக இந்திய அரசியல் சட்டம் முதல் திருத்தம் செய்யப்பட்டது.  ஆசிரியர் அய்யா அவர்களின் காலத்திலும் சமூக நீதியை பாதுகாக்க அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக எம்.ஜி.ஆர் அரசால் கொண்டு வரப்பட்ட நுழைவுத்தேர்வை தொடர்ந்து 21 ஆண்டுகள் எதிர்த்துப் போராடி, டாக்டர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தனிச்சட்டத்தை நிறைவேற்றி, நுழைவுத்தேர்வை  ஒழித்து கட்டிய தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சி.பி.எஸ்.சி பள்ளிகளில் மதிப்பெண் முறைகேடுகள் நடந்து அந்த மாணவர்களுக்கு 5 முதல் 15 வரை கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதைக் கண்டுபிடித்து நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்பட்ட சமூக அநீதியை தடுத்த தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும், வளர்ச்சி பெற்ற அமெரிக்காவில் கூட தனியார் துறையில் இட ஒதுக்கீடு உள்ள நிலையில் இந்தியாவில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாகப் போராடிவரும் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

மத்திய அரசில் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட பொழுது இந்தியாவிலேயே முதல் எதிர்ப்புக் குரலைக் கொடுத்து மற்ற தலைவர்களுக்கு வழிகாட்டும் தலைவராகத் திகழ்பவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நாகர்கோவிலில் நடைபெற்ற ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு நெடும்பயணம் வரவேற்புப் பொதுக்கூட்டத்தில்  ஆசிரியர் மற்றும் கழகத்தினர்

தூத்துக்குடி நெடும்பயணம்:

நாகர்கோவில் பொதுக்கூட்டம் (20.01.2020)

ஜனவரி 20ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு விடுதியிலிருந்து பயணக்குழு தோழர்களுடன் ஆசிரியர் அவர்கள் புறப்பட்டு நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டுத்திடல் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடைக்குச் சென்றார். காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் இராதாகிருஷ்ணன் சி.பி.அய்.எம் மாவட்டச் செயலாளர் செல்லசுவாமி, சி.பி.அய் மாவட்டச் செயலாளர் இசக்கிமுத்து, ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், வி.சி.க தொகுதி பொறுப்பாளர் பகலவன் ஆகியோர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்தி வழியனுப்பினார்கள். மாவட்டத் தலைவர் தலைமையேற்றார் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், நல்லபெருமாள், ஞா.பிரான்சிஸ், உ.சிவதாணு ஆகியோர் முன்னிலையேற்றார்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார். இளங்கோவன் நன்றி கூறினார். 6:40 மணிக்கு நெல்லை நோக்கிப் புறப்பட்டது பிரச்சாரப் பயணக்குழு.

திருநெல்வேலி பொதுக்கூட்டம் (20.01.2020)

நாகர்கோவிலில் புறப்பட்ட பரப்புரை பயணக்குழு இரவு 8:20 மணிக்கு திருநெல்வேலி சிந்துபூந்துறையில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்தது. நீட் எதிர்ப்பு பெரும்பயண வரவேற்பு பொதுக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் காசி தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர்  இராஜேந்திரன் வரவேற்றார். ரெத்தினசாமி, அரியமுத்து, டேவிட் செல்லதுரை, வழக்குரைஞர் வீரன், பொன்ராசு, வேல்முருகன், அய்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையேற்றனர். கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார். இரவு 9:50 மணிக்கு கூட்டம் நிறைவு பெற்றது. திருநெல்வேலி ஆரியாஸ் தங்கும் விடுதிக்கு இரவு 10:00 மணிக்குச் சென்று இரவு உணவுக்குப் பின் ஆசிரியர் ஓய்வெடுக்கச் சென்றார்.

கோவில்பட்டி பொதுக் கூட்டம் (21.01.2020)

21.1.2020 அன்று மாலை 5:30 மணிக்கு கோவில்பட்டி காமராஜர் சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த பொதுக் கூட்ட மேடையை வந்தடைந்தார் தமிழர் தலைவர். பொதுக் குழு உறுப்பினர் தமிழரசி தலைமையேற்றார். மாவட்டத் தலைவர் பெரியாரடியான் முன்னிலையேற்றார். மண்டலத் தலைவர் மா.பால்ராசேந்திரம், வெற்றிவேந்தன் தூத்துக்குடி காசி, செல்வராசு ஆழ்வார் பூ.வசந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர். தோழமைக் கட்சித் தோழர்கள் ஆசிரியர் அவர்களை வரவேற்று சிறப்பு செய்தார்கள். மாலை 5:50க்கு உரையை தொடங்க 6:25 வரை  35 நிமிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

செய்தியாளர் சந்திப்பு

கோவில்பட்டி பொதுக்கூட்டம் முடித்து புறப்பட்ட தமிழர் தலைவர் அவர்களை செய்தியாளர்கள் சூழ்ந்து நின்றனர். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து ‘நீட்’ பரப்புரைப் பயண வெற்றி குறித்து எடுத்துரைத்து 7:35க்கு தமிழர் தலைவர் வாகனம் சாத்தூர் நோக்கிப் புறப்பட்டது.

சாத்தூர் பொதுக்கூட்டம் (21.01.2020)

சாத்தூர் வடக்கு ரத வீதியில் அமைக்கப்பட்ட பொதுக் கூட்ட மேடைக்கு இரவு 7:00 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வருகை தந்தார்.  விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் வானவில் ம.மணி, ப.க.புரவலர், ந.ஆனந்தம், மாவட்டச் செயலாளர் விடுதலை ஆதவன், சாத்தூர் நகரத் தலைவர் கா.அ.நடராசன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பா.அசோக் அனைவரையும் வரவேற்றார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 7:05 மணிக்கு தனது உரையை தொடங்கி 7:30 வரை  30 நிமிடம் சிறப்புரையாற்றினார். ‘நீட்’ தேர்வின் பேராபத்தை பொது மக்கள் உணர்ந்தனர்.

பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு

சாத்தூர் பொதுக்கூட்ட மேடை எதிரே அமர்ந்து ஆசிரியர் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் சாத்தூர் நடராஜன், அவரது வாழ்விணையர் மற்றும் செல்வம் ஆகியோரை நீண்ட நாள் கழித்து பார்ப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என தனது உரையில் குறிப்பிட்ட ஆசிரியர் அவர்கள், மேடையை விட்டுக் கீழே இறங்கியதும் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து நலம் விசாரித்து அவர்களிடம் விடைபெற்று இரவு 7:40க்கு மதுரை நோக்கிப் புறப்பட்டார்; தமிழர் தலைவர்.

மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆசிரியருடன், கழகத்தினர்

மதுரை பொதுக்கூட்டம் (21.1.2020)

மதுரை, முனிசாலை, ஒபுளா படித்துறையில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9:05 மணிக்கு வந்தடைந்தார் ஆசிரியர் அவர்கள். நிகழ்விற்கு மதுரை மாவட்டச் செயலாளர் முருகானந்தம் தலைமையேற்றார். முன்னாள் மாவட்டச் செயலாளர் க.அழகர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் முனியசாமி, தென்மாவட்டப் பிரச்சாரக்குழு தலைவர் தே.எடிசன்ராஜா, அமைப்புச் செயலாளர் வே.செல்வம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு, மண்டலத் தலைவர் பவுன்ராசா, மண்டலச் செயலாளர் நா.முருகேசன், மாவட்ட துணை செயலாளர் சுப.முருகானந்தம், வழக்குரைஞர்கள் கணேசன், சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலையேற்றனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரவு 9.20 மணிக்கு தொடங்கி 10 மணி வரை 40 நிமிடங்கள் நீட் தேர்வின் அவலங்கள் பற்றி விளக்கவுரையாற்றினார். பெருந்திரளாக பொது மக்கள் கூடி நின்று ஆசிரியர் அவர்களின் உரையைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

22.01.2020 ஹார்விப்பட்டி இராமசாமி உடல்  மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பு

காலை உணவை முடித்து விடுதியிலிருந்து காலை 10:30 மணிக்குப் புறப்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு வருகை தந்தார் தமிழர் தலைவர். இயக்கத்தின் புரவலர், 60 ஆண்டு கால விடுதலை வாசகர் மதுரை ஹார்விப்பட்டி பெரியார் பெருந் தொண்டர் இராமசாமி அவர்கள் உடலை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் கொடையாக வழங்கினார். முன்னதாக நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் தமிழர் தலைவர் அவர்கள் இரங்கலுரையாற்றினார். 21.1.2020 அன்று மறைவுற்ற பெரியார் பெருந்தொண்டர் இராமசாமி அவர்களுக்கு மதுரை பொதுக் கூட்ட மேடையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

 

காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மகளிரணி அமைப்பாளர்களுடன் ஆசிரியர்

காரைக்குடியில் பொதுக்கூட்டம் (22.01.2020)

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை 6:45 மணிக்கு விடுதியிலிருந்து புறப்பட்டு 7:00 மணிக்கு காரைக்குடி அய்ந்து விளக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்தார்கள். மாவட்டச் செயலாளர் ம.கு.வைகறை அனைவரையும் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமி தலைமையேற்றார். மண்டலத் தலைவர் சாமி. திராவிடமணி, மாநில மகளிரணி அமைப்பாளர் மு.சு கண்மணி, மாநில மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார், தலைமைக் கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, மண்டலச் செயலாளர் அ.மகேந்திரராசன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிவேல், சிவகங்கை வழக்குரைஞர் ச.இன்பலாதன், சுப்பையா, ராஜாராம், அனந்தவேல், மாவட்ட துணைத்தலைவர், கொ.மணிவண்ணன், நகரத்தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையேற்றனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரவு 7:20 மணி முதல் 8:05 மணி வரை 45 நிமிடங்கள் சிறப்புரையாற்றினார். நகரச் செயலாளர் தி.க.கலைமணி நன்றி கூறினார்.

புதுக்கோட்டை பொதுக்கூட்டம்  (22.01.2020)

இரவு 9:00 மணிக்கு புதுக்கோட்டை நகர எல்லையில் கழக இளைஞரணி தோழர்கள் இருசக்கர வாகனத்தில் ஏராளமானோர் வருகைதந்து பயணக் குழுவினரை வரவேற்று இரவு 9:05 மணிக்கு புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்தனர்.  மாவட்டத் தலைவர் கு.அறிவொளி வரவேற்றார், மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமை வகித்தார். மண்டலச்செயலாளர் சு.தேன்மொழி, பொதுக்குழு உறுப்பினர்கள், இரா.புட்பநாதன், இரா.சரஸ்வதி, மாவட்டச் செயலாளர், ப.வீரப்பன், அறந்தாங்கி மாவட்டச் செயலாளர் இளங்கோ, மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து ஆகியோர் முன்னிலையேற்றனர்.  இரவு 9:20 மணி முதல் 10:00 மணிவரை 40 நிமிடங்கள் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். பெருந்திரளாக பொதுமக்கள் கூடி நின்று தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

‘நீட்’ தேர்வு எதிர்ப்பு நெடும் பயணத்தின் போது குழந்தைகளுடன் பேசி மகிழும் ஆசிரியர்.

இரவு  திருச்சி பெரியார் மாளிகை

22.1.2020 இரவு 10:00 மணிக்கு புதுக்கோட்டையில் புறப்பட்டு பயணக் குழுவினர் வரும் வழியில் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி தமிழர் தலைவர் ஆசிரியர் உள்பட இரவு உணவை முடித்து இரவு சரியாக 11:30க்கு திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்து ஓய்வெடுக்கச் சென்றார் ஆசிரியர்.

கரூர் பொதுக்கூட்டம் (23.1.2020)

23.1.2020 மாலை 6:45 மணிக்கு நான்காவது நாள் பரப்புரைக்காக கரூர் அரசினர் விடுதியிலிருந்து புறப்பட்டு கரூர் குமரன் சிலை முன்பு அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6:55 மணிக்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், மாவட்டச் செயலாளர் ம.காளிமுத்து வரவேற்றார், மாவட்டத் தலைவர் ப.குமாரசாமி தலைமை தாங்கினார், சே.அன்பு, ம.பொம்மன், பொத்தனூர், க.சண்முகம், மு.க. இராஜசேகரன், க.நா.சதாசிவம் ஆகியோர் முன்னிலையேற்றனர். 7:20 மணிக்கு உரையை தொடங்கி தமிழர் தலைவர் 8:05 மணிக்கு நிறைவு செய்தார். மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் பெருந்திரளாகக் கூடி உரையைக் கேட்டு மகிழ்ந்தனர்.  நகரச் செயலாளர் ம.சதாசிவம் நன்றி கூறினார். 8:10 மணிக்கு கரூரிலிருந்து ஈரோடு நோக்கிப் புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

ஈரோடு பொதுக்கூட்டம் (23.1.2020)

23.1.2020 ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9:40 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேடை ஏறியவுடன் நேரடியாக உரையைத் தொடங்கி இரவு 10:00 மணிக்கு நிறைவு செய்தார். மாவட்டச் செயலாளர் சிற்றரசு வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் நற்குணம் தலைமையேற்றார். கோபாலகிருஷ்ணன், த.சக்திவேல், இரா.சீனிவாசன், ந.சிவலிங்கம், ப.காளிமுத்து, த.சண்முகம், ப.பிரகலாதன், பெ.இராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையேற்றனர்.  மணிமாறன் நன்றி கூறினார்.    

                               (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *