– ந.வெற்றியழகன் M.A., B.Ed.,
கற்போர் (Students)
மாணவர்களின் மாண்புமிகு கடமை:
“நாம் விஞ்ஞானத்தில் மற்ற உலக மக்களைப்போல பல அதிசய அற்புதங்களைக் காணாததற்குக் காரணம். நம் அறிவைப் பயன்படுத்தாததேயாகும்.’’
அந்த அறிவை, நம் மொழி, இலக்கியம், புராணம், கடவுள், மதம், தர்மம், சாத்திரம், சம்பிரதாயம் என்பவை வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியாமல் தடை செய்துவிட்டன. இத்தடைகளை உடைத்தெறிய வேண்டியது, மாணவர்கள் கடமையாகும். (விடுதலை _ 5.8.1968)
மேலும் பெரியார் கூறுகிறார்:
“நமது மாணவர் சமுதாயம், நம் நாட்டை அந்நிய ஆதிக்கம் அந்நிய கலாச்சாரம் ஆகியவற்றிலிருந்து விடுவித்து மானமும் அறிவும் பெறச் செய்வதையே கடமையாகக் கொள்ள வேண்டும்.’’ (விடுதலை, 2.9.1972)
மாணவர்களின் குறிக்கோள்:
“ஒவ்வொரு மாணவரின் இலட்சியமும், தான் மனிதனாகப் பிறந்தது, மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றுவதற்காக என்று இருக்க வேண்டும்.’’ (விடுதலை, 20.12.1972)
மாணவர்க்கான நடத்தை நெறிமுறைகள்:
“மாணவ வாழ்க்கையில் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது எதையும் கற்பதிலேயே மனத்தைச் செலுத்தி, கற்றுத் தெரிந்து கொள்வதிலேயே இருக்க வேண்டும்.’’ (விடுதலை, 8.3.1956)
படிப்பும் பலனும்:
மேலும் கூறுகிறார், “மாணவர்கள் கிளர்ச்சிகளில் பங்கு கொள்ளக் கூடாது! மாணவர்கள் படிப்பிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்தினால் நல்ல பலனடைவர்.’’ (விடுதலை, 9.4.1962)
கட்டுப்பாடும் ஒழுங்கு முறையும்:
“முதலாவதாக, மாணவர்கள் ஆசிரியர்க்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அடுத்து, ஒழுங்கு முறை பழக வேண்டும். அதற்கு அடுத்தாற்போல் தான், பாடம் படிப்பதாகும்.’’ (விடுதலை, 15.9.1962)
மாணவர்க்கு அறிவுரை
“நமது மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். உலகைத் திருத்துவது மாணவர் வேலையல்ல; அதற்கு நாங்கள் இருக்கிறோம். கட்டுப்பாடு, ஒழுக்கம், பகுத்தறிவு இவையே மாணவர்கட்கு அவசியமாகும்.’’ (விடுதலை, 8.1.1970)
மாணவர்க்கு வேண்டுகோள்
“மாணவர்கள் படிப்பை விட்டு வேறு காரியங்களில் தங்கள் கவனத்தைத் திருப்பக் கூடாது! மாணவர்களுக்கு வேண்டியது இனப்பற்றும், பகுத்தறிவு உணர்ச்சியும்தான். நீங்கள் சமுதாயத்திற்கு என்ன செய்ய வேண்டும், சமுதாயம் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து நடக்க வேண்டும். திருமணத்தைத் தள்ளிப் போடுங்கள்! முடிந்தால் புறக்கணியுங்கள்!!’’ என்றார் தந்தை பெரியார். (விடுதலை 11.3.1972)
அதாவது, “சீவனத்திற்காக, வேலையோ, கூலியோ செய்கின்ற மக்களைப்போல வயிற்றுப் பிழைப்புக்காரர்களேயல்லாமல் உண்மையான ஆசிரியத் தன்மை உடையவர்கள் அல்லர் என்பதே என் அபிப்பிராயம்!’’ (“குடிஅரசு’’ 27.5.1928)
ஆசிரியர்க்கான தகுதிகள்
“ஆசிரியர் என்பவர் இயற்கை அறிவு பெற்றவராக அதில் மேம்பட்டவராக, உலக அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்தான், ஆசிரியத் தன்மைக்கு அருகதை உடையவராவார்.’’ (விடுதலை, 2.1.1950)
இதுபற்றி பெரியார் மேலும் பேசுகிறார், “ஆசிரியர்கள் பயன்படக் கூடியவர்களாக இருக்க வேண்டுமானால் அவர்கள் ஓரளவுக்காவது சுதந்திர புத்தியுடையவர்களாகவும் பகுத்தறிவுக்குச் சிறிதாவது மதிப்புக் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.’’ (“குடிஅரசு’’ 2.8.1936)
“அப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்கும் பிள்ளைகளே பரிட்சையில் “பாஸ்’’ செய்யாவிட்டாலும் அறிவுடையவர்களாவது ஆகலாம்!’’ (“குடிஅரசு’’ 2.8.1936)
ஆசிரியரைத் தேர்ந்தெடுக்கும் அளவுகோல்
பெரியார் கூறுகிறார்:
“ஆசிரியர்கள் அறிவாளிகளாக இருந்தால் அல்லவா
மாணவர்களை அறிவாளிகளாக்குவார்கள்?
மூடநம்பிக்கைக்காரர்களை ஆசிரியர்களாக்குவதால்
அவர்களால் சொல்லிக் கொடுக்கப்படுகின்ற
மாணவர்கள் முட்டாள்களாகின்றார்கள்.
ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும்போது
பகுத்தறிவுவாதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்’’
– “விடுதலை’’ 30.4.1971