ஆசிரியர் பதில்கள் : ”அட கூறுகெட்ட குமுதமே!”

பிப்ரவரி 16-29 2020

கே:       பெரியாரை விமர்சனம் செய்த ரஜினிகாந்த் சரியான ஆதாரங்களைக் காட்டி உங்களை வென்று விட்டதாக ‘குமுதம்’ எழுதியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?

                – மகிழ், சைதை

ப:           “அட கூறுகெட்ட குமுதமே’’, ரஜினி காட்டியது சரியான ஆதாரமா? ‘துக்ளக்’ ஏட்டினையா ஆதாரம் காட்டினார்; ‘துக்ளக்’ ஏட்டில் ஆசிரியர் குழுவில் உள்ள ரமேஷ்கூட, “ராமன்_சீதைக்கு செருப்பு மாலை போடவில்லை; நிர்வாணமாகக் கொண்டு வரவில்லை’’ என்று எழுதியுள்ளது கூடவா அந்த ஏட்டிற்குப் புரியவில்லை! மகா வெட்கம்!

நிர்மலா சீதாராமன்

கே:       பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் “பட்ஜெட்’’ படிக்கும்போது “சரஸ்வதி சிந்து நதி’’ என்று கூறியதை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாமா?

                – ப.ஆறுமுகம், காஞ்சி

ப:           நீதிமன்றங்களில் வைக்கும் நம்பிக்கை இராமர் கோயில் தீர்ப்பு முதல் ‘நீட்’ வரை மக்களிடையே நாளுக்கு நாள் குறைந்து வருகிறதே! மக்கள் மன்றமே ஒரே தீர்வு _ காலந்தாழ்ந்தாலும்கூட!

கே:       தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முறைகேடு, ‘நீட்’ தேர்வு முறைகேடுகள் எதை உணர்த்துகின்றன?

                – வே.கோவிந்தன், திண்டிவனம்

ப:           தேர்வு மதிப்பெண்கள் மீது வைக்கப்படும் அதீத நம்பிக்கை வீண். மீள வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

பாரதிராஜா

கே:       பாரதிராஜா போன்றவர்கள் இப்போது தமிழ்நாட்டை தமிழர்கள்தான் ஆளவேண்டும் என்று கூறுவது பற்றி தங்கள் கருத்து என்ன?

                – சசிகுமார், அமைந்தகரை

ப:           அவருடைய இனஉணர்வு எப்போதும் மங்கியதே இல்லை!

கீழடி அகழ்வாராய்ச்சி

கே:       அதிகாரிகள் மாற்றத்தைப் பார்க்கும்போது, கீழடி அகழாய்விலும், தியாகராய நகர், ‘திடீர் பிள்ளையார்’ மோசடி நடக்குமோ?

                – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:           இப்போதெல்லாம் எங்கும் எதுவும் நடக்கலாம்! மிருக பலம் _ மற்றும் தலையாட்டும் தம்பிரான்களாக தமிழக அரசு _ இருக்கும் வரை.

கண்ணகி சிலை

கே:       அண்மையில் நடந்து முடிந்த இந்து ஆன்மிக கண்காட்சியில் கண்ணகி சிலை வைக்கப்பட்டது பற்றி தங்கள் கருத்து என்ன?

                – செல்வகுமார், மதுரை

ப:           தமிழ் உணர்வுப் பக்கம் திரும்புவதாகக் காட்டிக் கொள்ளும் மயக்க பிஸ்கட்! அவ்வளவுதான்! 20_21ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான ஆர்.எஸ்.எஸின் முன்னோட்டம்!

கே:       திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் என்பதில் முன்னேற்றக் கழகத்தில் ‘ர்’ இல்லை. திராவிடர் கழகத்தில் ‘ர்’ உள்ளது. என்ன வித்தியாசம்?

                – வி.தங்கமணி

ப:           “திராவிடர் என்பது பார்ப்பனரல்லாதார்’’ என்னும் பொருளைக் குறிக்கவே! இந்த இயக்கம். “திராவிட என்றால் நிலப்பரப்பு’’ என்னும் பொருளும் கொள்ளப்படலாம். அப்படி ஒரு விளக்கமும் முன்பு சிலரால் சொல்லப்பட்டது!

அன்னை

மணியம்மையார்

கே:       அன்னை மணியம்மையார் பெயரில் விருது வழங்குவீர்களா?

                – இளசையான்

ப:           நிச்சயம் உண்டு. மார்ச் 10 _ நூற்றாண்டு விழா நிறைவில் அறிவிப்பு வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *