பெண்ணால் முடியும் ! : “இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி!”

பிப்ரவரி 16-29 2020

விழுப்புரத்திலிருந்து 50 கிலோ மீட்டர், அம்மா குளம் பழங்குடி இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் திவ்யா. எழுதப்படிக்கத் தெரியாத மக்கள் கூட்டத்தில் சிறுவயதில் இருந்தே படிக்கும் கனவோடு வளர்ந்தவர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவர் வசிக்கும் இருளர் குடியிருப்பில் இருந்து முதல் ஆளாகக் கல்லூரியில் கால்பதித்துள்ள பெண். செல்லூரில் முதலாமாண்டு வேதியியில் படித்துவருகிறார். ஜாதியப் புறக்கணிப்புகளைக் களைய தன் பகுதியில் உள்ள மக்கள் எல்லோருக்கும் எழுதப் படிக்கக் கற்றுத்தருபவர். மக்களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்த திவ்யாவுடன் பேசுகையில்,

“எத்தனையோ அவமானங்களைப் பார்த்தாச்சு. எங்க போனாலும் புறக்கணிப்புகள் நிழலாய்த் தொடருது. இங்க இருக்க யாரும் படிப்பு வரலைன்னு பள்ளிக்கூடத்துக்குப் போகாம இல்ல. அவமானங்களுக்குப் பயந்துதான் படிப்பை நிறுத்துறாங்க. ஜாதியைத் தலையில் தூக்கிவெச்சுக் கொண்டாடுற நிறைய பேருக்கு ஜாதியால எங்க வாழ்க்கையே அழிஞ்சுட்டு இருக்குன்னு தெரியுறது இல்ல. ஜாதி சார்ந்த புறக்கணிப்புகளுக்கும் அவமானங்களுக்கும் பயந்து எல்லாரும் ஒதுங்கிப்போனால் எங்க வாழ்க்கை மாறவே மாறாதுன்னு புரிஞ்சுது. எங்க கூட்டத்திலிருந்து ஒரு ஆள் படிச்சு ஜெயிச்சுட்டா போதும், அந்த வெற்றி எல்லோருடைய வாழ்க்கையின் ஆரம்பமாக இருக்குங்கிறதால், படிப்புக்காக நான் போராட ஆரம்பிச்சேன். ஜாதியைக் காரணம் காட்டி வகுப்புல சில பேர் ஒதுங்கிப்போவாங்க. `படிப்பு ஒழுங்கா வரல, உங்களுக்கெல்லாம் படிப்பு அவசியமான்னு ஆரம்பக் காலத்துல அவமானப்படுத்துவாங்க. எங்க ஏரியால பஸ்ஸை நிப்பாட்டாமப் போவாங்க. இப்படி அவமானப்படும் நிமிஷத்தில் எல்லாம் நான் படிக்கணுங்கிறது மட்டும்தான் என் மனசுக்குள் ஓடும்’’ என்கிறார் திவ்யா.

இந்தக் குடியிருப்பில் மொத்தம் 60 குடும்பங்கள் இருக்கோம். நிலையான தொழில்னு எதுவும் கிடையாது. ஒரு நாள் கூலி 150 ரூபாய். அதை வெச்சு குடும்பத்துல இருக்கற எல்லாரும் நிறைவா சாப்பிடுறதே பெரிய விஷயம். இதுல படிப்புக்குச் செலவழிங்கன்னு பெத்தவங்களைத் தொல்லை பண்ண முடியாது.

“எங்க வீட்டுல நாங்க அஞ்சு புள்ளைங்க. பல போராட்டங்களுக்குப் பிறகுதான் ஜாதிச் சான்றிதழ் கிடைச்சு எங்க அப்பா எங்கள பள்ளிக்கூடத்தில் சேர்த்தாங்க. பள்ளிப் படிப்புக்குப் பிறகு படிக்க வேண்டும் என அழுது அடம் பண்ணி, ஒரு தனியார் அமைப்பின் உதவியோடு காலேஜ் சேர்ந்தேன். அதுக்கு அப்புறம்தான் எனக்கு இதயப் பிரச்சினையும், கல்லீரல் பிரச்சினையும் வந்துச்சு. அடிக்கடி மயக்கம் வந்துரும், மூச்சு வாங்கும். அரசு ஆஸ்பத்திரிக்குப் போனால் ஒரு நாள் முழுக்க காக்க வெச்சு பதிலே சொல்லாமல் திருப்பி அனுப்புவாங்க. பெத்தவங்களுக்குக் கிடைக்குற அன்றாடக் கூலியும் இல்லாமல் போகும்.

உடம்பு சரியில்ல, படிப்பை நிறுத்திடலாம்னு வீட்டில் சொன்னாங்க. நான் பின்வாங்குனா, எங்க மக்கள் அடுத்த திவ்யா உருவாகுற வரை காத்திட்டிருக்கணும். என் உசுரைவிட எங்க மக்களின் எதிர்காலம் முக்கியம். அதனால் நோயைப் பத்தியெல்லாம் யோசிக்கிறதில்ல. மருந்து மாத்திரை மட்டும் எடுத்துட்டிருக்கேன். இவங்க எல்லாருக்கும் எழுதப் படிக்கத் தெரியுங்கறதில் முழுக் கவனத்தைச் செலுத்த ஆரம்பிச்சிருக்கேன். ஆரம்பத்தில் எல்லாரிடமும் தயக்கம் இருந்துச்சு. `இந்த வயசுல படிச்சு என்ன பண்ணப் போறோம்னு கேட்பாங்க. நம்மள நாலு பேரு மதிக்கணும்னா படிங்கன்னு சொன்னேன். இப்போ நான் யாரையும் கட்டாயப் படுத்துறது இல்ல. வேலை விட்டு வந்த உடன் சிலேட்டு குச்சியை எடுத்துட்டு வீட்டுக்கு வந்துருவாங்க. 10 வயசு பையனில் இருந்து 80 வயசு தாத்தா பாட்டி வரை ஒண்ணா உட்கார்ந்து படிக்க ஆரம்பிச்சிருக்காங்க.

இப்போ எங்க ஏரியால இருக்கற எல்லாத்துக்கும் அவங்க பெயரை எழுதக் கத்துக்கொடுத்துட்டிருக்கேன். இதெல்லாம் ஆரம்பம்தான் அடுத்த பத்து வருஷத்தில் நான் இருந்தாலும் இல்லைன்னாலும் இங்க நூறு திவ்யாக்கள் இருப்பாங்க’’ என்று தன் சமூகத்திற்கு மாற்றத்திற்கான விதையிட்டு உள்ளார்.

தகவல்:சந்தோஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *