சென்ற இதழ் தொடர்ச்சி…..
நெய்வேலி க.தியாகராசன் பாராட்டுரை
தலைகுனிந்து நின்ற தமிழகத்தைத் தலைநிமிர வைத்த தந்தை பெரியார் துவக்கிய ஏடுதான் ‘உண்மை’. உண்மை ஏட்டின் பொன்விழாவில் கலந்துகொண்டு பேச வாய்ப்பளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும் மற்றும் அனைத்துத் தோழர்களுக்கும் முதற்கண் என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் பாட்டனார் ஒரு பக்திமான். அவர் சுவாமிமலை கோவிலுக்குச் சென்று வழிபடச் சென்றார். பார்ப்பனர்கள் அவரை அனுமதிக்கவில்லை. “சரி, நாங்கள் எப்படி வேண்டுவது?’’ எனக் கேட்க, “நீங்கள் கோபுரத்தை மட்டும் பார்த்து வணங்கினால் போதும்’’ என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். அது முதல் என் தந்தையும், நானும் கோவிலுக்குச் செல்வதை முழுவதுமாய் தவிர்த்துவிட்டோம்.
அந்த உணர்வை எங்களுக்கு ஊட்டினார். அதன் பிறகு அவருக்கு தந்தை பெரியார் எழுதிய ‘விடுதலை’ வாசிக்கக் கிடைக்கிறது. ‘விடுதலை’ இதழை தினந்தோறும் வீட்டுக்கு வரவைத்தார். அதுமுதல் நான் விடுதலை படிக்க ஆரம்பித்தேன். சுயமரியாதையும், பகுத்தறிவும் கற்றுத் தந்தது பெரியாரின் ‘விடுதலை’ ஏடுதான். 16 வயதில் ‘விடுதலை’யும், அதனைத் தொடர்ந்து ‘உண்மை’யும் படிக்கப் பெற்றேன். என் வாசிப்பு எல்லை விரிவடைந்தது. தொடர்ந்து விடுதலையும், உண்மையும் கொடுத்த அங்கீகாரம்தான் என்னை உங்கள் முன் பேச வைத்திருக்கிறது.
பெரியார் அவர்கள் நெய்வேலியில் சுற்றுப் பயணம் செய்யும்போது என் மாமனார் வீட்டில் தான் தங்குவார். அந்த நேரத்தில் என் சொந்தக்கார குழந்தைகளுக்குப் பெயர் வைத்தார். வைத்த பெயர் – ராஜா, துரை. “ஏன் நான் இவ்வாறு பெயர் வைக்கிறேன் என நீங்கள் கேட்கவில்லையே’’ என அவரைப் பார்த்து பெரியார் கேட்டார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. “நீங்கள் வைத்து விட்டீர்கள். நாங்கள் உங்களிடம் கேட்க முடியுமா?’’ எனக் கூறினார். அதற்கு பெரியாரே பதில் சொன்னார், “இதோ பார், நம்ம குழந்தை பெயர் ராஜா, துரை. நம்மை அவங்க அழைக்கும்போது ராஜா வா, துரை வா என அழைப்பார்கள்.’’ அவர்கள் வாயாலேயே சொல்ல வைக்க வேண்டும். அப்போது அவர்களைவிட நாம் உயர்ந்தவராக, அவர்கள் உணர வேண்டும்’’ எனக் கூறினார். எத்தனை மதிநுட்பத்தோடு பெயர் வைத்திருக்கிறார் தந்தை பெரியார் என நாங்கள் அகம் மகிழ்ந்தோம்.
நான் நெய்வேலியில் பணிபுரியும்போது அங்கு பகுத்தறிவுக் கழகம் பெரிய அளவில் இல்லை. எல்லாம் பஜனை மடங்களாக இருந்தன. நானும், ஜெயராமன் போன்றவர்களும் அங்கு புதிய பெரியாரிய பகுத்தறிவு மன்றங்களைத் துவங்கி உள்ளோம். இன்று பெரும் முதலாளிகளிடம் ஊடகம், பத்திரிகைகள், இணையம் போன்றவை உள்ளன. ஆனால், நம்மிடையே ‘உண்மை’, ‘விடுதலை’, ‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ போன்ற பத்திரிகைகள்தாம் உள்ளன. அந்த மலைபோன்ற ஊடக பெரும் முதலைகளை அணுகுண்டுகளாகி வெடித்துத் தகர்ப்பதற்கு பெரியார் துவங்கிய உண்மையும், விடுதலையும் போதும். அவர்களுடைய எண்ணம் சுக்குநூறாக உடையும் எனக் கூறி, எனக்கு வாய்ப்பளித்த ஆசிரியருக்கு மீண்டும் நன்றி பல கூறி அமைகிறேன்.
சுப.வீரபாண்டியன் பாராட்டுரை
தமிழர் தலைவர் ஆசிரியர் உள்பட அனைவருக்கும் வணக்கம். பொதுவாக 25 வயதில் பத்திரிகை துவங்க வேண்டும் என ஆசைப்பட்டவரும், 40 வயதில் பத்திரிகை துவங்கியவரும் உண்டு. ஆனால், நான் அறிந்த வரையில் 91 வயதில் ஒரு பத்திரிகையை துவங்கினார் என்றால் அது அய்யா பெரியாரால் மட்டுமே முடியும்!
ஒரே நாளில் இரண்டு ஏடுகள் துவங்கப்பட்டதாக கவிஞர் கூறினார். அந்த ஏடுகள் ‘உண்மை’, ‘துக்ளக்’. துக்ளக் ஏட்டின் முதல் அட்டைப்படம் கழுதைகள்; உண்மை ஏட்டின் அட்டைப்படம் புத்தர். பாருங்கள், அவரவர் எண்ணத்திற்கு ஏற்பதான் படங்களும் வந்து சேரும். பெரியாருக்குத் தெரிந்திருக்கிறது புத்தர் படம் போட வேண்டும் என்கிற எண்ணம். ஆனால், புத்தருக்கும் தெரியாது, கழுதைக்கும் தெரியாது – தங்கள் படம் அட்டைப் படத்தில் வந்திருப்பது. ஒருவேளை தெரிந்திருந்தால், அய்யாவே அவரை ஏற்றிருப்பதால் புத்தர் மகிழ்ந்திருப்பார். அந்தக் கழுதை வெட்கப்பட்டு இருக்கும். அய்யோ, இந்த ஏட்டில் வந்து விட்டோமே என வருந்தி இருக்கும்.
“உண்மை’’யில் எத்தனை மொழிபெயர்ப்புகள் சார்லஸ் பிராட்லாவின் கட்டுரை, இங்கர்சால் கட்டுரை, ஆஸ்திகரும் நாஸ்திகரும் என எத்தனை மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. அன்றைய விலையில் வெறும் 25 காசுதான். இந்த வரலாறு எல்லாம் குருமூர்த்திக்கும் தெரியாது; ரஜினிக்கும் தெரியாது. அவ்வளவு தெரிந்திருந்தால் அறிவாளிகளாக இருந்திருப்பர்.
எனக்கு இருப்பதிலேயே மிக ஆச்சரியமான விஷயம் எதுவென்றால், ‘குரோமோசோம்’ பற்றி ஒரு கட்டுரை “உண்மை’’யில் வந்துள்ளது. அந்தக் கட்டுரையை இறையன் மொழிபெயர்த்துள்ளார். வெறும் அறிவியல் பாடமில்லை அது. அதற்குள் ஒரு சமூக சிந்தனை உள்ளது. 19ஆம் நூற்றாண்டு இறுதியில்தான் ஜெர்மானிய அறிஞர்கள் குரோமோசோம் பற்றி கண்டறிந்து உலகுக்குக் கூறினர். ஆனாலும்கூட, 1950 வரை குரோமோசோம் என்பது 24 ஜோடிகள் என மொத்தம் 48 என்கிற கணக்குதான் இருந்தது.
குரோமோசோம்கள் 48 இல்லை; 23 ஜோடிகள்தான், மொத்தம் 46 என கண்டறிந்தது 1956இல்தான். அந்தச் செய்தி 1970இல் “உண்மை’’யில் வெளிவருகிறது. உலக அறிஞர்கள் கண்டறிந்த செய்தியை வெளிஉலகுக்குத் தருவது உண்மை. வீட்டில் குழந்தை பிறக்காத பெண்ணை ‘மலடி’ என சமூகம் கூறும், அதன் பிறகுதான் ஓர் உண்மை வெளிவந்தது. பிறக்கும் குழந்தை ஆணா _ பெண்ணா எனத் தீர்மானிக்கும் குரோமோசோம் ஆணிடம்தான் உள்ளது; பெண்ணிடமில்லை என்கிற உண்மையை மக்களிடையே வெளிப்படுத்தியது ‘உண்மை’ இதழ். இந்த அறிவியல் உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தி உதவியவர் தந்தை பெரியார்தான்!
சிருங்கேரி சங்கராச்சாரியார் கூறிய கூற்றை உண்மை வெளியிட்டது. அந்தக் கூற்று “தீண்டாமை பிறவியில் ஏற்படுகிறது. தீண்டாமை என்னும் செயலை எந்த சோப்பு போட்டுக் குளித்தாலும் தீர்க்க முடியாது’’ என சங்கராச்சாரியார் கூறியதாக “உண்மை’’ ஆதாரபூர்வமாகக் கூறியுள்ளது. ‘பிவீஸீபீu வீபீமீணீறீs’ என்னும் புத்தகத்தில் கூறப்பட்டதை அப்போதே ‘உண்மை’ வெளியிட்டுப் பெருமை தேடிக்கொண்டது. நன்றி!
பேராசிரியர் அருணன் பாராட்டுரை
தமிழர் தலைவர் உள்பட அனைவரையும் வணங்கி சுருக்கமாகப் பேச முயல்கிறேன். ‘மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை’ என்னும் நூல் எழுதியவன் நான். அந்த நூலில் நல்ல நேரம், சோதிடம், ராசிபலன் என பட்டியல் எடுத்துக்கொண்டு அவை எப்படி மூடநம்பிக்கை என அறிவியல்படி விளக்கி இருப்பேன். அப்போது எனக்குத் தெரியாமல் போச்சு _ நான் வரிசைப்படுத்திய மூடநம்பிக்கைகளைவிட பெரிய மூடநம்பிக்கை ஒன்று உண்டு என்று! அது என்னவென்றால், ‘துக்ளக்’ வைத்திருப்பவன் ‘அறிவாளி’ என்னும் மூடநம்பிக்கை. இப்படி ஒரு மூடநம்பிக்கை சூப்பர் ஸ்டாருக்கே இருந்தால், சங்கடமாக இருக்கு. _ தமிழகத்தின் நிலையைப் பார்த்து. எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை இது! ரொம்ப பயமாக இருக்கு. அந்த விழாவில் ‘துக்ளக்’ ஆசிரியர் மூடநம்பிக்கையை மீண்டும் வளர்த்தெடுத்தது எங்கள் சோதான் எனப் பேசுகிறார். பிறகு பேசிய சூப்பர் ஸ்டார் அந்தப் பத்திரிகையை வைத்திருப்பவர்தான் அறிவாளி என்கிறார்.
சுப்ரமணியசாமி பெரிய அறிவாளி. ஏன் என்றால், அவர் ‘துக்ளக்’ படித்திருப்பார். அதனால் சொல்கிறார் ரூபாய் நோட்டில் லட்சுமி படம் போட்டால் ரூபாய் மதிப்பு உயரும் என்கிறார். அவர் கண்டிப்பாக ‘துக்ளக்’ படித்த அறிவாளிதான்! அதில் யாரும் சந்தேகப்படத் தேவையில்லை. எப்படி அறிவு கொழுந்துவிட்டு எரியுது பாருங்கள். எவ்வளவு கெட்ட நோக்கு பாருங்கள். லட்சுமி படம் போட்டால், அதற்குப் பதில் காந்தி படத்தை எடுக்க வேண்டும் என்னும் கேடுகெட்ட அரசியல் உள்ளது. இன்னொரு அறிவாளி சொல்கிறார் _ ராமர் அம்பிலும் அணு ஆயுதமிருந்தது என்று! நம்ம ஆள் சொல்கிறார், அப்போ கல்கத்தாவிலும் ‘துக்ளக்’ விற்பனையாகிறதுபோல! சொன்னவரு மேற்கு வங்க கவர்னர். இவர்களுக்குப் பதில் சொல்லும் வகையில் நம்ம அறிவுக்கு அறிவு கொடுத்தவர் தந்தை பெரியார் என்றால் அது மிகையில்லாத உண்மை.
‘உண்மை’யின் முதல் இதழில் தந்தை பெரியார் தெளிவாகக் கூறுகிறார் மக்களை பகுத்தறிவுப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என தெளிவாகக் கூறுகிறார். எத்தனை வகையான மூடநம்பிக்கைகள் உள்ளன? அவையெல்லாம் புராணங்கள், விஷ்ணு, சிவன், பிரம்மா, இந்திரன் போன்ற கடவுளைக் கொண்டே இந்த மூடநம்பிக்கைகள் கட்டமைக்கப்பட்டு, இவற்றிற்கு தெய்வாம்சம் கொடுக்கப்படுகிறது. பெரியார் இதனை எதிர்த்து ‘உண்மை’யில் இந்த மூடநம்பிக்கைகள் வரலாற்றுக்கு முன்பே உருவாக்கப்பட்டுள்ளன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்து மதம் என்பது ஒற்றை மதம் அல்ல, அது ஒரு கூட்டமைப்பு. இதற்குள் உள்ள இதர மத அமைப்புகளை எல்லாம் ஆட்டிப் படைக்க முயல்வது ஆதிகால வேத மதம் _ பிராமணிய மதம் என்னும், கடவுள்கள் அந்த சமஸ்கிருத மொழி சூத்திர, பஞ்சமர் கடவுளையும் ஆட்டிப் படைக்க முயல்கின்றனர். பிராமணியத்தின் ஆதிக்கம் இதில்தான் உள்ளது.
இதில் ராமன், கிருஷ்ணனை சுற்றித்தான் வர்ணாஸ்ரமம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆண் ஆதிக்கம் கட்டமைக்கப்படுகிறது. இந்தக் கடவுளைச் சுற்றித்தான் பலவிதமான மூடநம்பிக்கைகள் கட்டமைக்கப்படுகின்றன. அவற்றை சித்தாந்த ரீதியாக நாம் எதிர்கொள்ள வேண்டிய நேரமிது.
இன்றைக்குக் கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்கிற சட்டங்களுக்கு மக்கள் தன்எழுச்சியாகப் போராடத் துவங்கிவிட்டனர். மாணவர்கள் போராட்டத்தில் நுழைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் மட்டும் போராட்டத்தில் முதல்வர் யோகியால் 21 பேர் பலியாகியுள்ளனர். அந்த 21 பேரும் முஸ்லிம்கள். இதற்கு இல.கணேசனிடம் கேட்டதற்கு பதில், “பகவான் கிருஷ்ணரே இதுபோல ஆள்களை சுட்டுக்கொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்’’ என்று கூறுகிறார்.
இப்போதுதான் புரிகிறது _ பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார் என்று. கடவுள் பேரைச் சொல்லி எங்கள் மக்களை நீங்கள் சுட்டுக் கொல்வதற்கு என்றால் எங்களுக்கு கடவுளே வேண்டியதில்லை. ஏன் இந்த பிற மத வெறுப்பு? பா.ஜ.க. தலைவர்களிலேயே மென்மையானவர் இல.கணேசன்தானாம்! ரொம்ப மென்மையானவர் இல்லையா அவர், பாருங்கள். இப்போது பாருங்கள், நம்முடைய பணி எவ்வளவு கடினமானது என்பதை உணர்ந்து காண்பதாலும் பெரியார் தேவை. காலந்தோறும் உண்மை தேவை. அப்போதுதான் இந்த மூடநம்பிக்கைகளையும், ஜாதிகளையும், கடவுள்களையும் ஒழிக்க முடியும். நன்றி!
எழுத்து வடிவம்: சந்தோஷ்
(தொடரும்…)