நேயன்
இப்படிக் கூறும் இந்த நபர் யார்? அவர்தான் “தோசை மாவு புகழ்’’ ஜெயமோகன்
ஈ.வெ.ரா தத்துவத்தின் மொழியில் பேசியதில்லையாம். முழுதும் படிக்காமல், முழுதும் அறியாமல் கருத்து கூறினால் அது முட்டாள்தன்மையாய் முடியும் என்பது ஜெயமோகனின் இக்கருத்தின் வழியே விளங்கும்.
தந்தை பெரியாரின் “தத்துவ விளக்கம்’ என்னும் நூலைப் படித்தால் பெரியார் எப்படிப்பட்ட தத்துவமேதை என்பது விளங்கும். அது ஒரு கல்லூரியில் பேசிய உரை. ஓர் உரையே அப்படியென்றால் அவர் தகுதி என்ன என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
காந்தியோடு அவர் வாதிட்ட உரையாடலை ஜெயமோகன் படிக்கவில்லை. படித்திருந்தால் இப்படிப் படைத்திருக்க மாட்டார். இனி மேலாவது படிக்கட்டும். அவர் பேசியது, எழுதியது அனைத்துமே பல்துறை சார்ந்த தத்துவ முத்துக்கள் அல்லவா? நாகம்மையார் மறைவு பற்றிய பெரியாரின் கடிதம் ஓர் இலக்கியமல்லவா?
“பெண் ஏன் அடிமையானாள்?’’ நூலைப் படித்துப் பார்த்தவன் எவனாவது இப்படி உளறுவானா? பெரியார் முரண்பாடுகளின் மொத்தம் என்கிறார் ஜெயமோகன். முரண்பாட்டுக்கும், கொள்கைப் பார்வைக்குமான வேறுபாடு முட்டாள்களுக்குத் தெரியாது என்பது ஜெயமோகன் வழியாகத் தெளிவாகிறது.
காங்கிரஸ் ஒழியவேண்டும்; ஆனால், காமராஜ் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார். முரண்பாடாகத் தோன்றும். ஆனால், அது கொள்கைப் பார்வை; இனநல நோக்கு.
கடவுள் இல்லை என்பவர், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று போராடியது முரண்பாடாகத் தோன்றும். ஆனால், கடவுள் இல்லை என்பது கொள்கை; எம்மக்கள் ஏன் அர்ச்சகராகக் கூடாது என்பது உரிமைப் பிரச்சனை என்பது அறிவோடு நோக்கின் அறியலாம்.
அவரது செயல்கள், பேச்சுகள் எந்தக் கோணத்தில், எந்த வகையில் இருந்தாலும் இனநலம் என்பதும், மனிதநேயம் என்பதும் சமஉரிமை, பிறப்பொக்கும் என்பதுமான அவரின் இலக்கில் மாறியதே இல்லை. அவர் ஓர் இனத்தின் போராளி. அந்த இலக்கணத்தில் அவர் முரண்பட்டதே இல்லை; அந்தப் பார்வையில் அவர் தடம் மாறியது இல்லை!
அடுத்து வைக்கம் பிரச்சனைக்கு வருவோம்:
இந்த ஜெயமோகன், தான் சார்ந்தவை, தான் ஆதரிப்பவை எவ்வளவு அநீதியாக இருந்தாலும், அயோக்கியத்தனமாக இருந்தாலும் அதற்குச் சப்பைக் கட்டுக்கட்டி நியாயப்படுத்துவதிலும், எதிராளியிடம் என்ன சிறப்பு இருந்தாலும் நியாயம் இருந்தாலும் அதைச் சிறுமைப்படுத்துவதிலும் கைதேர்ந்தவர் என்பது அவரது கட்டுரையில் அப்பட்டமாகத் தெரிகிறது. வைக்கம் பிரச்சனையை அவர் கையில் எடுக்கும்போதே மிகவும் எச்சரிக்கையோடு பீடிகை போட்டுத் தொடங்குகிறார்.
“வரலாற்று நிகழ்ச்சிகளைப் பார்க்கையில் அவற்றை எளிமையான தப்பு சரிகளின் ஆட்டமாக அல்லாமல் சிக்கலான ஊடுபாவுகளின் பின்னலாக உருவகித்துக் கொள்வது உகந்தது.
கேரளத்தில் அன்றிருந்த தீண்டாமை முறை வைக்கத்திலும் இருந்தது… இங்கே கேரளச் சமூக இலக்கியங்களின் பின்புலத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். கேரளம் கடுமையான ஆசாரங்களால் கட்டுப்படுத்தப்பட்ட சமூகமாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது. அங்கிருந்த தீண்டாமை பிற இந்தியப் பகுதிகளில் நிலவியதைவிட அதிகம்.
ஏன் இந்த உக்கிரம் என்று யோசித்தால் தெரிவது, கேரளம் தமிழகம் சந்தித்த பிற அந்நியப் படையெடுப்புகள் ஏதும் அதிகம் நிகழாமல், மலைகளால் பொத்திப் பாதுகாக்கப்பட்ட நிலம் என்பதே! இவ்வாறு புறப்பாதிப்பு இல்லாத இடங்களில் இருப்பவர்களே தேங்கிப் போய் பழங்குடிகளாக நின்று விடுகிறார்கள். தொன்மையான பழங்குடி தமிழே பேசப்பட்ட பின்னர் சமஸ்கிருதம் கலந்து மலையாளமாகியது’’ என்று கதை சொல்லிக் கொண்டே செல்கிறார் ஜெயமோகன்.
வைக்கம் வீரர் யார்? என்னும் கேள்விக்கு பதில் காண முயன்றால் அங்கு நிலவிய கொடுமைகள் வெளிப்படும். ஏன் அங்கு போராட்டம் என்று புரியும். அப்படி அங்கு என்ன அநீதி நடந்தது என்று தெரிந்தால் ஆரிய சனாதனிகளும், அவர்களுக்குப் பக்கம் நின்ற உயர் ஜாதியினரும் என்னென்ன கொடுமைகளைச் செய்தார்கள் என்பதும் தெரியும். அவை தெரிந்தால் இன்றைய இளைஞன் எதிர் அணியில் சேர்ந்து விடுவான். அவ்வாறு நடக்காமல் அவனைக் கண்ணைக் கட்டி, தன் வழிக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் ஜெயமோகன் குறியாய் இருந்து இந்தப் பீடிகை போடுகிறார்.
தாழ்த்தப்பட்ட, ஈழவப் பெண்கள் மார்புத்துணி அணியக்கூடாது. முலை வரி விதித்து அவர்கள் கொடுமை செய்யப்பட்டார்கள். தெருக்களிலே தாழ்த்தப்பட்டவன் செருப்புப் போட்டு நடக்கக் கூடாது. கழுத்திலே கொட்டாங்கச்சி கட்டிக் கொண்டு செல்ல வேண்டும், எச்சிலை அதில்தான் துப்பிக் கொள்ள வேண்டும். வேறு ஓரமாகக் கூடத் துப்பக் கூடாது.
தாழ்த்தப்பட்டவர், ஈழவர் நிழல் உயர் ஜாதியினர் மீது படாமல் மாலையில் கீழ்ப் புறமாகவும், காலையில் மேற்புறமாகவும் நடந்து செல்ல வேண்டும். உயர்ந்த ஜாதியாரிடம் நெருங்கி நிற்கக் கூடாது; விலகி நிற்க வேண்டும். கண்ணில்கூட படக்கூடாது என்று கொடுமையும் உண்டு. நாயடிகள் என்னும் குறவர்குல மக்களைக் கண்ணில் கண்டாலே தீட்டு என்று ஒதுக்கி வைத்தனர். கேரளா என்பது சுத்தமான தமிழ்நாட்டின் ஒரு பகுதி, தூய தமிழ் பேசிய சேர நாடுதான் கேரளா, ஜெயமோகன் சொல்வது போல, அது தனித்தீவாக இல்லை. அயல்நாட்டார் படையெடுப்பு என்றால் அது இசுலாமியர், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர் என்கின்ற அளவிலே இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறார். ஆரியர்களும் அயல்நாட்டவர் என்கிற உண்மையைச் சாதுர்யமாக மறைக்கிறார். மற்றவர்களெல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்தனர். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சேர நாட்டிற்குள் நுழைந்த அயல் நாட்டவரான ஆரியர்கள் உருவாக்கிய அநீதிகள்தாம் இத்தனை சீர்கேடுகளும். தங்களை உயர்ந்தவர்களாக்கிக் கொள்ள, உயர்நிலையில், ஆதிக்க நிலையில் தொடர்ந்து தாங்கள் இருப்பதற்காக சாஸ்திர, புராணங்களின் பேரால் மாபெரும் அநீதிகளைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்தினர். அது வளர்ந்து பல ஜாதிப் பிரிவுகளாகி பல ஏற்றத் தாழ்வுகளாய் ஆனது. அநீதியை உண்டாக்கியவர்கள் ஆரியர்களே என்பதுதான் ஆணித்தரமான உண்மை.
இந்த ஆரியர்கள் பேசிய சமஸ்கிருதம் கலந்தே தமிழ் மலையாளமாயிற்று: தமிழோடு சமஸ்கிருதம், உருது போன்ற பிறமொழி கலந்தே கன்னடமாயிற்று, தெலுங்கு ஆயிற்று. ஆக தமிழ்கூறும் நல்லுலகும், ஜாதியற்ற தமிழர் வாழ்வும் ஆரிய ஊடுருவலால் கலப்படமாகி, தனித்தன்மை இழந்தது. ஜாதியில்லாத் தமிழரிடையே பல ஜாதிகள் ஆரியர் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டன.
சரியாகச் சொல்வதென்றால், அயல்நாட்டிலிருந்து வந்த ஆரியர்களும், ஆரியர் கலப்பால் உருவாகிய நாயர்களும் உயர்ஜாதியினர். கலப்படமற்ற சுத்தத்தமிழன், மண்ணின் மைந்தர்கள் ஈழவரென்றும், பறையர் என்றும் தாழ்த்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டனர். இந்த உண்மை தமிழனுக்குத் தெரிந்தால் ஆரியப் பார்ப்பனர் மீது ஆத்திரம் வரும் என்பதால், தந்திரமாக வரலாற்றைக் கொண்டு செல்கிறார் இந்த ஜெயமோகன். குற்றம் முழுக்க ஆரியர் மீது இருப்பதால் அதை மறைக்க வரலாற்றைத் தப்பு சரிகளின் ஆட்டமாகப் பார்க்கக் கூடாது என்கின்றார். திட்டமிட்ட ஆரியர் சதியைத் தப்பாகத்தானே பார்க்க முடியும்? இந்த வரலாறுகள் சொல்லப்படாததால்தான் சொந்தச் சகோதரர்கள் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர்விட மறுக்கிறார்கள். இப்படியே திராவிட இனத்தார் தங்களுக்குள்ளே மோதி அழிந்துபோக வேண்டும் என்பதே ஆரியர்களின் – சனாதனிகளின் திட்டம். எனவேதான் தந்தை பெரியாருக்கு வைக்கம் கொடுமையைத் தூளாக்கும் பணி தலையாய பணியாக்கப்பட்டது. அங்குள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் தமிழர்களே என்னும் பற்றும் அவரை உந்தித் தள்ளின.
தந்தை பெரியாரை ‘வைக்கம் வீரர்’ என்று பட்டம் சூட்டி அழைத்துப் பாராட்டியவர் திரு.வி.க அவர்கள். தந்தை பெரியாரோ, திராவிடர் இயக்கத்தவரோ தங்களுக்குத் தாங்களே சூட்டிக் கொண்டதல்ல.
(தொடரும்…)