சென்ற இதழின் தொடர்ச்சி
ஆசிரியர்: பாவலர்மணி புலவர் ஆ. பழநி
காரைக்குடி
நூல் விவரப் பட்டியல்
நூலின் பெயர் : பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா?
ஆசிரியர் : பாவலர் மணி புலவர் ஆ. பழநி
முதற் பதிப்பு : 1989, அக்டோபர்
இரண்டாம் பதிப்பு : 2007, டிசம்பர்
விலை : ரூ. 45.00 பக்கங்கள்: 120
இன்னும் கடவுளின் பெயராலும், விதியின் பெயராலும் வருக்கபேதம் இயல்பானதுதான் என்று கூறுபவர்களையும் எதிர்த்து இவ்வாறு பாடுகிறார்.
‘நடவுசெய்த தோழர்கூலி நாலணாவை ஏற்பதும்
உடலுழைப்பி லாதசெல்வர் ஊரையாண் டுலாவலும்
கடவுளாணை என்றுரைத்த கயவர்கூட்ட மீதிலே
கடவுளென்ற கட்டறுத்துத் தொழிலுளாரை ஏவுவோம்’
என்று உழைக்கும் பிரிவினர் கடவுள் என்ற கட்டை அறுத்தெறிய வேண்டும் என்று வற்புறுத்துகின்றார். எல்லாவற்றுக்கும் தெய்வத்தையே நம்பிநின்ற பாரதியாருக்கு, தெய்வத்தை எதிர்த்து நின்ற பாவேந்தர் எப்படித் தாசனாவார்?
இந்தியா விடுதலை பெறவேண்டும் என்பதற்கும் பாரதியார் தெய்வத்தையே வேண்டுகின்றார்.
‘எத்தனை நாள்கள் அடிமையாகக் கிடப்பது? அருள்புரி கண்ணா’ என்று வேண்டுகோள் விடுக்கின்றார். ‘சுதந்திர தினம்’ என்னும் தலைப்பில் உள்ள பாரதியாரின் பாடல் வருமாறு:
‘என்று தணியுமெங்கள் சுதந்திர தாகம்
என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம்
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே
வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ
மெய்யடி யோமின்னும் வாடுதல் நன்றோ?
அன்றொரு பாரதம் ஆக்க வந்தவனாகிய கண்ணனிடம், இந்த வெற்றி நின்னாலல்லவா கிடைக்க வேண்டும்? எங்கள் விலங்குகளை எப்பொழுது உடைப்பாய்? என்று கேட்கின்றார். இப்பாடலுக்கு தற்பொழுது ‘சுதந்திர தாகம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பாரதியார் பதிப்பித்த பழைய பதிப்பில் ‘ஸ்ரீகிருஷ்ண ஸ்தோத்திரம்’ என்றே தலைப்பிடப்பட்டுள்ளது. விடுதலையைக் கூடப் பாரதியார் இறைவனிடம் வேண்டுவது புதுமையாக உள்ளது.
‘சுதந்திரம்’ என்னும் தலைப்பில் பாவேந்தரும் ஒரு பாடல் பாடியுள்ளார். அதனையும் இங்கு ஒப்பிட்டுக் காணுதல் பொருத்தமாக இருக்கும். கூட்டுக்கிளியை நோக்கிக் கூறுவதாக அமைந்த அப்பாடல் இதோ:
‘தித்திக் கும்பழம் தின்னக் கொடுப்பார்
மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கே
பொன்னே மணியே என்றுனைப் புகழ்வார்
ஆயினும் பச்சைக் கிளியே அதோபார்
உன்னுடன் பிறந்த சின்ன அக்கா
வான வீதியில் வந்து திரிந்து
தென்னங் கீற்றுப் பொன்னூச லாடி
சோலை பயின்று சாலையில் மேய்ந்து
வானும் மண்ணுந்தன் வாசத்திற் கொண்டாள்;
தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ?
அக்கா அக்கா என்றுநீ அழைத்தாய்
அக்கா வந்து கொடுக்கச்
சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே!’’
இப்பாடல் பாரதியாரின் கருத்துக்கு ஒரு மறுப்புப் போல அமைந்துள்ளது. “அக்கா! அக்கா! என்று நீ அழைக்கிறாயே…. அக்கா வந்து கொடுப்பதற்குச் சுதந்திரம் என்பது சுக்கும் இல்லை; மிளகும் இல்லை கிளியே, இதனை உணர்ந்து கொள்’’ என்கின்றார். பிறர் வாங்கிக் கொடுத்துப் பெறுவதன்று சுதந்திரம். நான் யாருக்கும் அடிமையல்லன் என எண்ணுகின்ற மனவீறுதான் சுதந்திரம். இத்தகைய மனவீறு படைத்தவன் அடிமை நாட்டிலே வாழ்ந்தாலும் அவன் சுதந்திரனே. இம்மன வீறு இல்லாதவன் விடுதலை பெற்ற நாட்டில் வாழ்ந்தாலும் அவன் அடிமையே, ‘கிளியின் உடன் பிறந்த சின்ன அக்காவைப் போலத் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும். அதுதான் சுதந்திரத்தின் அடையாளம். மாறாக நான்கு சுவர்களுக்குள்ளே அடைபட்டுக் கிடந்து எனக்கு விடுதலை வேண்டும். யாரேனும் வாங்கித் தரமாட்டீர்களா? என்று கோரிக்கை விடுவது விடுதலை வீரனுக்கு அழகன்று.
‘உன்னுடன் பிறந்த சின்ன அக்காவைப் பார்!’ என்று சொல்வதன் வாயிலாக உன்னைப் போல் அடிமைப்பட்டுக் கிடந்த சகோதர நாடுகளைப் பார். அவர்கள் எப்படி விடுதலை பெற்றார்கள் என்பதைச் சிந்தனை செய்’ என்று கூறுகின்றார்.
‘தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ? அக்கா! அக்கா! என்று நீ அழைத்தாய்; அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம்?’ என்று சொல்வதன் வாயிலாகக் கண்ணன் திருமுன்றிலிலே நின்று ‘கண்ணா! கண்ணா!’ _ என்று நீ அழைத்தாய் கண்ணன் வந்து கொடுப்பதற்குச் சுதந்திரம் என்பது அக்கார அடிசிலா என்று கேட்பதுபோல இருக்கிறது.
‘பிஜித்தீவில் கரும்புத் தோட்டத்தில் இந்தியப் பெண்கள் படும் இன்னல்களை எடுத்துக்காட்டி, பாரதியார் ஒரு பாடல் பாடுகின்றார். இப்பாடல் முழுக்க முழுக்க மக்கள் படும் துயரங்களையே வெளிப்படுத்தி நிற்பது. இப்பாடலைத் தொடங்கும்போதுகூட, தெய்வம் சார்த்தி எதனையும் கூறவில்லை. ஆனால், பாடலை முடிக்கும்பொழுது,
‘ஹே! வீரகாளி சாமுண்டீ காளி’ என்று தெய்வம் சார்த்தியே முடிக்கின்றார். ஆக எந்தப் பாடலையும் தெய்வம் சார்த்தாமல் பாடுவதில்லை என்கிற முடிவுக்குப் பாரதியார் வந்து விட்டாரோ என்று எண்ண வேண்டியுள்ளது. இத்தகைய போக்குகளுக்கு எதிரான பாவேந்தர் எப்படி பாரதிக்குத் தாசன் ஆவார்?
இன்னொரு செய்தியையும் இங்குக் கூறுதல் பொருத்தமாக இருக்கும். பாவேந்தர் பாரதியாரோடு உடனுறைந்து வாழ்ந்த காலத்திலேயே தெய்வ நம்பிக்கையில் பட்டும் படாமலும் இருந்திருப்பாரோ என அய்யப்படுமாறுளது. பாவேந்தர் தெய்வப் பாடல்கள் பல பாடியிருப்பினும் அந்நம்பிக்கையில் ஓர் அவநம்பிக்கையும் ஊடாடி நின்றிருக்கும் போலும். இதனைப் பாரதியார் அறிந்தும் இருந்திருக்கலாம்.
பாரதியாரின் வசன நூல்களிலே ‘தராசு’ என ஒரு பகுதி உள்ளது. தன்னில் இடப்படும் பொருளின் நிறைகுறையைத் தராசு வெளிப்படுத்துவது போலப் பாரதியாரின் கற்பனைத் தராசும் நூல்கள், மனிதர்களின் நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது. எல்லாம் கற்பனைதான். இங்குத் தராசு என்பது பாரதியாரே. அதில் ஒரு பகுதி இவ்வாறு வருகின்றது.
‘இன்று நமது கடைக்கு ஒரு தமிழ்க் கவிராயர் வந்தார். கைக்கோள ஜாதி. ஒட்டக்கூத்தர்கூட அந்தக் குலந்தான் என்று நினைக்கிறேன்.’
‘இவருக்கு இங்கிலீஷ் தெரியாது; தம்முடைய பெயரை வெளிப்படுத்தக் கூடாது என்று சொன்னார். ஆதலால் வெளிப்படுத்தவில்லை.’
‘தராசு முகமலர்ச்சியுடன் சிரித்தது. ‘‘இப்படியொரு கவிராயர் வந்தால் எனக்குச் சந்தோஷம். எப்போதும் வீண் வம்பு பேசுவோரே வந்தால் என்ன செய்வேன்?’’ என்றது. ‘கவிராயரே! என்ன விஷயம் கேட்க வந்தீர்?’ என்று தராசு கேட்டது.
‘எனக்குக் கவிராயர் என்பது பரம்பரையாக வந்த பட்டம். என்னுடைய தகுதியால் ஏற்படவில்லை. அத்தகுதி பெற முயற்சி செய்து வருகிறேன். அந்த விஷயமாகச் சில வார்த்தைகள் கேட்க வந்தேன்’ என்று கவிராயர் சொன்னார். ‘இதுவரை பாடிய பாட்டுண்டானால் சொல்லும்’ என்று தராசு கேட்டது.
‘இதுவரை நாற்பது அய்ம்பது அடிகளுக்கு மேல் பாடியது கிடையாது. இப்பொழுதுதான் ஆரம்பம். அது அத்தனை ரஸமில்லை என்று சொல்லிக் கவிராயர் விழித்தார்.
‘மாதிரி சொல்லும்’ என்றது தராசு. புலவர் பாடத் தொடங்கினார். தொண்டை நல்ல தொண்டை.’
‘காளையொருவன் கவிச்சுவையைக்-கரை
காண நினைத்த முழுநினைப்பில்-அம்மை
தோளசைத் தங்கு நடம்புரிவாள்-இவன்
தொல்லறி வாளர் திறம்பெறுவான்
ஆ! எங்கெங்குக் காணினும் சக்தியடா-தம்பி
ஏழுகடல் அவள் மேனியடா
தங்கும் வெளியினிற் கோடியண்டம்-எங்கள்
தாயின்கைப் பந்தென ஓடுமடா
கங்குலில் ஏழு முகிலினமும்-வந்து
கர்ச்சனை செய்தது கேட்டதுண்டோ?
மங்கை நகைத்த ஒலியதுவாம்-அவள்
வாயிற் குறுநகை மின்னலடா.’’
தராசு கேட்டது: “புலவரே! தமிழ் யாரிடம் படித்தீர்?’’
கவிராயர்: “இன்னும் படிக்கவில்லை. இப்போதுதான் ஆரம்பஞ் செய்கின்றேன்.’’
தராசு: “சரிதான், ஆரம்பம் குற்றமில்லை. விடா முயற்சியும் தெய்வபக்தியும், அறிவிலே விடுதலையும் ஏறினால் கவிதையிலே வலிமை ஏறும்.’’
(பாரதியார் வசன நூல்கள் பக்.730_732)
தராசின் முன்னின்ற கவிராயர் வேறு யாருமல்லர்; பாவேந்தரே என்பதை மேலே காட்டிய ‘எங்கெங்குக் காணினும் சக்தியடா’ என்னும் பாடல் தெளிவாக்கி விடுகின்றது. இப்பாடலுக்கான விமரிசனத்தைத்தான் பாரதியார் தராசு என்னும் பெயரிலே புதுமையாக எழுதியிருக்கிறார். விமரிசனத்தின் முடிவிலே பாரதியார் பாவேந்தரின் கவிதை வலிமைபெறச் சில பரிந்துரைகளைச் செய்கின்றார். அவை என்ன? விடாமுயற்சி, தெய்வபக்தி, அறிவிலே விடுதலை என்பன. இவற்றில் ஒன்று தெய்வபக்தி. பாவேந்தரிடம் தெய்வபக்திக் குறைபாடு இருப்பதைப் பாரதியார் கண்டிருப்பார் போலும். இதனால்தான் தெய்வபக்தி, கவிதையிலே வலிமை ஏற்றும் என்று பரிந்துரை செய்கின்றாரோ என்று எண்ண வேண்டியுள்ளது. தெய்வபக்தி, கவிதையிலே வலிமை ஏற்றும் என்று பாரதியார் வலியுறுத்திக் கூறியிருந்தும் பாவேந்தர் அதனைப் புறக்கணித்து விட்டார் என்றால் அவரைப் பாரதி ‘தாசன்’ எனல் எவ்வாறு பொருந்தும்?