விழிப்புணர்வு : மாசு கட்டுப்பாடும் நீர் சிக்கனமும்

பிப்ரவரி 01-15 2020

அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் உறவுகளைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழ்நாட்டில் பசுமையாக இருக்கும் இடங்களைப் பார்க்கவும், நீர் நிரம்பிய குளங்களைப் பார்க்கவும் மன நிம்மதி. ஆனால், பல இடங்களில், கிராமங்களிலும் நகரங்களிலும் நெகிழிக்(Plastic)  குப்பைகளும் மற்றும் பல வகையான குப்பை கூளங்களும் சாலைகளின் இரு பக்கங்களிலும் மேடுகளாக நிரம்பி வழிகின்றன. மாடுகள் அந்தக் குப்பை மேடுகளில் கிடைக்கும் காகிதங்களையும் நெகிழி(Plastic)த் தாள்களையும் தின்பதைப் பார்த்தால் மிக்க வேதனையாக இருக்கிறது. கிராமங்களில் போதுமான தண்ணீர் கிடைக்காமல் துன்பப்படும் இந்நாள்களில் பெண்கள் துணிகளுக்கு நிறைய சோப்பை போட்டு, அலசுவதற்கு நிறைய தண்ணீரைப் பயன்படுத்தி வீணடிக்கின்றார்கள். மேலும் நகரங்களில் துணி துவைக்கும் எந்திரங்கள் வைத்திருப்பவர்களின் நிலையும் இதேதான். தண்ணீரை வீணடிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பெண்கள்தான் என்பதை வருத்தத்துடன் உணருகிறேன். சலவைக்கட்டி (washing soap) அல்லது சலவைத்தூளின்  (washing powder) அளவை மிகக் குறைவாகப் பயன்படுத்தினாலே போதும். இதனால் துணி அலசத் தேவையான நீரின் அளவு மிகவும் குறையும் அல்லவா!

ஒரு லிட்டர் தூய தண்ணீர் உண்டாக்குவதற்கு நம் மண் மூன்று மாதங்கள் வேலை செய்கிறது. தேவைக்கு மேல் ரசாயனப் பொருள்களை உபயோகிப்பதாலும், தண்ணீரை வீணாக்குவதாலும் நல்ல குடிநீரை ஒவ்வொரு நாளும் நாம் இழந்து வருகின்றோம்.

பெண்கள்தான் இவ்வுலகைக் காப்பாற்ற வேண்டும். குடிநீர் மாசு படுவதற்கு நாம்தான் முக்கிய காரணம். சுற்றுப்புறச் சூழல் அமெரிக்காவில் எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பதை மனதில் கொண்டுதான் இக்கடிதம் எழுதுகிறேன். தமிழ்நாட்டின் இயற்கை வளத்தை மீட்டெடுக்கலாம். குடிநீர் செல்வத்தை நாம் முயன்றால் சேமிக்கலாம். நாம் முன்னெடுத்தால் மற்றவர்கள் பின் தொடர்வர். யார் முதலில் என்பதில் போட்டி போடுவோம். வளமான ஆரோக்கியமான நல்வாழ்வு நமக்கும் நம் வழித்தோன்றல்களுக்கும் உருவாக்கலாம்.

மிக்க நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

மானமிகு அக்கா,

– சரோ இளங்கோவன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *