இயக்க வரலாறான தன் வரலாறு(243) : மகளிர் அணி மாநாட்டில் எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது!

பிப்ரவரி 01-15 2020

அய்யாவின் அடிச்சுவட்டில் …

கி.வீரமணி

 30.4.1992 அன்று காவிரி நீர் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் கருநாடக அரசைக் கண்டித்தும், நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தச் செய்வதில் மத்திய அரசு காட்டிவரும் அலட்சியத்தை எதிர்த்தும், நடுவர் மன்றத் தீர்ப்புப்படி 205 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்குத் திறந்துவிடக் கோரி வலியுறுத்தியும், திருச்சி, தஞ்சை, நாகை காயிதே மில்லத் ஆகிய மாவட்டங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் எனது தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு இதற்குத் தடை விதித்தது. இதனை மீறி மறியலுக்குப் புறப்பட்டபொழுது காவல் துறையினர் என்னைக் கைது செய்தார்கள். என்னுடன் 4,000 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சுமார் 600 பேர் பெண்கள், மூதாட்டிகள். கைக்குழந்தையுடன் பெண்களும் கைதாகினர்.

அங்குள்ள காவல்துறை அதிகாரி செல்வராஜ் (ஷி.றி) என்னுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவர் அவ்வளவு பெண்களைக் கைது செய்ய வாகன வசதி இல்லை என்று கூறி அவர்களை வீட்டிற்கு செல்லக் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்; எவ்வளவோ சொல்லியும்கூட மகளிர் கலைந்து செல்லவில்லை. வந்தே தீருவோம் என்று பிடிவாதம் பிடித்தனர்.

சுப்புலட்சுமி ஜெகதீசன்

‘தடா’ சட்டத்தின் கீழ் மதுரை சிறையிலிருக்கும் திரு.ஜெகதீசன் அவர்களையும், திருமதி சுப்புலட்சுமி அவர்களையும், மனிதாபிமான அடிப்படையில் ஜாமீனில் விடுவிக்குமாறு முதலமைச்சருக்கு 7.5.1992 அன்று  மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, தந்தி அனுப்பினேன்.

‘தடா’ கைதியாக இருக்கும் சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் அவர்களின் உடல்நிலை பற்றி வரும் செய்திகள் மிகவும் கவலை அளிக்கிறது. அவர்கள் இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன். இந்த நேரத்தில் இந்த மனிதாபிமானக் கண்ணோட்டம் மிகவும் அவசியம். ‘தடா’வின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஏற்கெனவே, இதுபோல் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதற்கு முன்னுதாரணங்கள் உண்டு என்பதையும் அந்தத் தந்தியில் சுட்டிக் காட்டியிருந்தேன்.

மகளிர் அணி சார்பில் பெண்கள் ஆசிரியருக்கு

எடைக்கு எடை நாணயம் வழங்கும் காட்சி

 9.5.1992 அன்று திருச்சி (கிழக்கு) மாவட்ட திராவிடர் கழக மகளிரணி சார்பில் பெண்கள் விடுதலை மாநாடும், எனக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்கும் விழாவும், திருச்சி வெல்லமண்டி பகுதியில் நடைபெற்றது.

மாநாட்டுக்கு நாகை காயிதே மில்லத் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி தலைவர் ராசலெட்சுமி மணியம் தலைமை ஏற்றார். மாநில மகளிரணி செயலாளர் க.பார்வதி மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றினார். மாநாட்டில் கருத்தரங்கம் முடிந்தபின், எனக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்கும் விழா உற்சாகமுடன் தொடங்கியது. தராசின் ஒரு தட்டில் என்னை அமர்த்திய மகளிரணிப் பொறுப்பாளர்களான தோழர்கள் வரிசை வரிசையாக வந்து ரூபாய் நாணயங்களை மறு தட்டில் போட்ட வண்ணம் இருந்தனர். என்னுடைய எடைக்கு மேலாகவும் ரூபாய் நாணயங்கள் கொட்டப்பட்டன. மக்கள் மகிழ்ச்சி பொங்கப் பெருமைப்படுத்தினார்கள்.

மாநாட்டில் உரையாற்றும்போது, தமிழ்நாட்டின் வரலாற்றில் பெண்கள் போர்க்களம் புகுந்தது, சிறைக்கோட்டம் ஏகியது என்பன எல்லாம் 1938இல் தந்தை பெரியார் அவர்களின் எழுச்சியால் உருவான இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதுதான். அந்தப் போராட்டம் வெறும் மொழி எதிர்ப்புப் போராட்டம் மட்டுமல்ல; தமிழினத்தின் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கான எழுச்சி வடிவம் கொண்ட ஒரு போர் முறை என்றே வரலாற்றில் சொல்ல வேண்டும். அந்தப் போராட்டத்தின் இடையில்தான் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு கூட்டி, ‘பெரியார்’ என்கிற பட்டத்தை _ உலகில் வேறு எந்த தலைவருக்கும் இதுவரை கிடைத்திராத பெருஞ்சிறப்புக்குரிய பட்டத்தை _ தீர்மானமாக அளித்தது என்பது வரலாற்றில் என்றென்றைக்கும் ஒளிவிடும் ஒப்பற்ற ஒளிச்சுடராகும் என்று குறிப்பிட்டேன்.

மாநாட்டில், 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும்  மயிலாடுதுறை மா.க.நாகராசன் ஆகியோருடைய சகோதரர் மா.க.கிருஷ்ணமூர்த்தி_சுப்புலக்குமி ஆகியோருடைய செல்வன் கி.தளபதிராஜ் மற்றும் சேலம் நடுப்பட்டியைச் சேர்ந்த நடராஜன்_மங்கையர்க்கரசி ஆகியோருடைய செல்வி உமாமகேசுவரி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா நிகழ்ச்சி 24.5.1992 அன்று மயிலாடுதுறை கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் எனது தலைமையில் நடைபெற்றது.

மணவிழாவில், அனைவரையும் வரவேற்று திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்றுப் பேசினார்.

மணவிழாவில் மணமக்களுக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியினைக் கூறச் செய்து மணவிழாவினை நடத்திவைத்து மணமக்களைப் பாராட்டி சிறப்புரையாற்றினேன்.

கி.தளபதிராஜ் மற்றும் சேலம் உமாமகேசுவரி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. உடன் மோகனா அம்மையார் மற்றும் மணமக்களின் பெற்றோர்.

24.5.1992 அன்றே, மயிலாடுதுறை நகரில் நடந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை பெற்ற சோமு அவர்களின் பெயராலே அமைக்கப்பட்ட நினைவுக் கொடிக்கம்பத்தில் கழகக் கொடியேற்றும் விழா நிகழ்ச்சியில் பங்கேற்று கழகக் கொடியை ஏற்றி வைத்தேன்.  இந்த விழாவிற்கு மயிலாடுதுறை நகர துணைச் செயலாளர் தங்க.வீரபாண்டியன் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

நாகை காயிதே மில்லத் மாவட்டம் மயிலாடுதுறையில் 24.5.1992 அன்று இரவு திருவாரூர் சாலை கிணற்றடி பெரியார் சதுக்கத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்களுடைய வாழ்த்து ஒலி முழக்கத்தோடு தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினேன். அதனை அடுத்து 1957இல் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் சிறை சென்ற பெரியார் பெருந்தொண்டர்களுக்கு  சான்றிதழ்களையும் பட்டயங்களையும் வழங்கிச் சிறப்பித்தேன்.

அதனை அடுத்து நமது கழகத் தோழர்களுக்கும், பெரியார் சிலையை நிறுவ உதவிபுரிந்த சீவல் கம்பெனி உரிமையாளர் சவுந்திரராஜன், என்.என்.குருமூர்த்தி, கோ.அரங்கசாமி, காண்ட்ராக்டர் ரகுபதி, வைத்தியலிங்கம், பாடுபட்ட மயிலாடுதுறை நகர தி.க. துணை செயலாளர் தங்க.வீரபாண்டியன், அய்யா உருவச் சிலைக்கு பீடம் அமைத்துக் கொடுத்த கொத்தனார் மோகன், கணேசன் உள்ளிட்டோருக்கு கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.

கழகத்தின் மத்திய நிருவாக குழுக் கூட்டத்தில் ஆசிரியர் உரையாற்றும் காட்சி

31.5.1992 அன்று திருச்சியில் திராவிடர் கழகத்தின் மத்திய நிருவாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. 16 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

அந்த தீர்மானங்களில், விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்க, காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு எச்சரிக்கை, தாயகம் திரும்பிய மலைவாழ் தமிழர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை முறையாக அமல்படுத்துக, மத்திய அரசுத் துறையில் தாழ்த்தப்பட்டோரை வஞ்சிப்பதற்குக் கண்டனம், நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி தேவை, நவோதயா கல்விக் கூடங்கள் வேண்டாம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

28.6.1992 அன்று சென்னை அவ்வை சண்முகம் சாலை கீதாபவனில் நடைபெற்ற பொதுவுடைமை இயக்கத் தலைவர் ப.ஜீவானந்தத்தினுடைய பேரனும், குடும்பநலத் துறையில் மக்கள், கல்வி தகவல் அலுவலர் இரா.அருணாசலம்_ உஷாதேவி ஆகியோரின் செல்வனுமான அ.சுரேஷ்க்கும் பாரத் பொறியியற் கல்லூரி இயக்குநர் பொறியாளர் க.தியாகராசன்_சாரதா ஆகியோரின் செல்வி தி.தமிழரசிக்கும் நடைபெற்ற வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதி மொழியினைக் கூறச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்து வாழ்த்தி உரையாற்றினேன்.

திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை துவக்க விழாவில் ஆசிரியர் உரையாற்றும் காட்சி

விழாவில், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், ஜனார்த்தனம், திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், திரைப்பட நடிகர் பேராயர் ராஜேஷ், குடும்பநலத்துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், ஜேப்பியார் மற்றும் பலரும் கலந்துகொண்டனர். மணவிழாவில்  உரையாற்றும்போது, தந்தை பெரியார் அவர்கள் காலத்தில் சுயமரியாதைக் கொள்கையை நாட்டுக்கு அறிமுகப்படுத்திய காலத்திலே கட்சிகளால் மாறுபட்டிருந்தாலும் அவருக்கு உற்ற துணையாக குரல் கொடுத்த தளபதிகளிலே முக்கியமானவராகத் திகழ்ந்தவர் ‘தோழர் ஜீவா’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட ப.ஜீவானந்தம் அவர்களாவார். அவர் வண்ணத்தால் மாறுபட்டிருந்தாலும் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை எண்ணத்திலே மாறுபட்டவர் அல்லர்.

ஜீவானந்தம் அவர்களுக்கே தந்தை பெரியார் அவர்கள்தான் திருமணத்தை நடத்தி வைத்தார்.

அதற்குப் பிறகு ஜீவானந்தம் அவர்களுடைய பிள்ளைகளுடைய திருமணத்தையும், அவர் மறைந்தாலும் பெரியார் மாளிகை நடத்திவைத்தது.

இன்றைக்கு மணமகனுடைய தந்தையாராக இருக்கின்ற அருமைச் சகோதரர் அருணாசலத்துக்கும் உஷாதேவிக்கும் 1967ஆம் ஆண்டு திருச்சி பெரியார் மாளிகையிலே தந்தை பெரியார் அவர்கள்தான் திருமணத்தை நடத்தி வைத்தார்.

அத்திருமணத்தில்தான் (1967இல்) அண்ணா அவர்கள்,  “சுயமரியாதைத் திருமணங்கள் என்னுடைய ஆட்சிக் காலத்தில் சட்ட வடிவமாகும் என்றும், அதுதான் என்னுடைய ஆட்சியில் முதல் பணியாக இருக்கும்’’ என்றும் சொன்னார்கள்.

1967லேயே அண்ணா அவர்கள் சொன்னபடியே அதை சட்ட வடிவமாக்கினார்கள் என்று பல்வேறு வரலாற்றுச் செய்திகளை எடுத்துரைத்தேன்.

4.7.1992 அன்று திண்டுக்கல்லில் “திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை’’ மாநில மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் நான் உரையாற்றும்போது, “திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை’’ என்பதை நாம் துவக்கியிருக்கிறோம். அதேநேரத்தில் பல்வேறு பகுதிகளிலே இந்த அமைப்பைத் துவக்கி நல்ல ஒரு துவக்கத்தை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். திராவிடர் தொழிலாளர் கழகம், இதில் முற்றிலும் மாறுபட்டு நிற்கக்கூடிய திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த படிப்பறிவில்லாத பாட்டி கூட தந்தை பெரியார் அவர்களின் கொள்கை பற்றிப் பேசும்; அதன்படி நடக்கும்.

 திராவிடர் தொழிலாளர் சங்கம் பேரணியாக வரும் காட்சி.

அதே நேரத்தில் நமது தொழிற்சங்கம், தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போன்ற பிரச்சினைகளில் அலட்சியம் காட்டும் என்று  யாரும் தவறாகப் பிரச்சாரம் செய்ய வேண்டாம். அப்பிரச்சினையில் எந்தத் தொழில் சங்கப் பார்வைக்கும் நமது அமைப்பு பின்தங்கியது அல்ல என்பதை மாநாட்டில் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். போக்குவரத்துக் கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் ஓய்வூதியம்  (Pension) அளிக்கப்பட வேண்டும் என்கிற திண்டுக்கல் மாநாட்டுத் தீர்மானம் பொருளாதாரப் பிரச்சினைகளில் எந்த அளவு அடிப்படைக்கே செல்லுகிறது என்பதற்கான அத்தாட்சியாகும் என்பதை சுட்டிக் காட்டினேன்.

சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளில் நடைபெற்ற மதிப்பெண் ஊழலை கண்டித்து உரையாற்றுகிறார் ஆசிரியர். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அம்ர்ந்துள்ளனர்

விவசாயத்தை ஒரு தொழிலாக (Industry) அறிவிக்க வேண்டும் என்கிற தீர்மானமும், லாபத்திலும் நிருவாகத்திலும் தொழிலாளர்களுக்குப் பங்கு அளிக்க வேண்டும் என்கிற தீர்மானமும், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்கிற தீர்மானமும், நெசவாளர்கள் பற்றிய விரிவான தீர்மானமும் எவ்வளவு கவலையோடு திராவிடர் தொழிலாளர்கள் பிரச்சினைகளை நமது இயக்கம் அணுகுகிறது என்பதற்கான ஏற்றமிகு எடுத்துக்காட்டாகும் என்று மாநாட்டில் எடுத்துரைத்தேன்.

30.6.1992 அன்று சென்னை பெரியார் திடலில்  சி.பி.எஸ்.ஈ மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களில் செய்யப்பட்ட ஊழலை எதிர்த்து பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் சார்பாக கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு மாணவர்கள் ஊர்வலத்தைத் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினேன். மேலும், கழகத்தின் சார்பில் சிபிஎஸ்ஈ மாணவர்கள் தமிழகக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தசாமி அவர்கள் முன் விசாரணைக்கு வந்தது.

“சி.பி.எஸ்.ஈ மண்டல இணை இயக்குநர், இந்த ஆண்டு ஒவ்வொரு மாணவருக்கும் தொழில் கல்லூரியில் சேருவதற்கான பாடங்களுக்கான மார்க்குகளில் 10 மார்க்கை கூடுதலாக போடுமாறு உத்தரவு இட்டிருக்கிறார். கடந்த ஆண்டு இந்தப் பள்ளிகளில் இந்தப் பாடப் பிரிவில் 99 சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்கள் 22 பேர்தான். இவ்வாண்டு கூடுதலாக மதிப்பெண் போடப்பட்டதால், 90 சதவிகித மதிப்பெண்களை 187 பேர் பெற்றுள்ளனர். இதனால் தமிழ்நாடு அரசு பாடத் திட்டத்தில் படித்தவர்களும், சமூக ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களும் பாதிப்புக்குள்ளவார்கள். எனவே, கூடுதலாக போடப்பட்ட, இந்த 10 மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும் என்றும், இது மோசடிக் குற்றம் என்றும், இந்த மோசடிக் குற்றத்தில் ஈடுபட்ட சி.பி.எஸ்.ஈ பள்ளிகளுக்கான மண்டல இணை இயக்குநர் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்றும், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மாநில காவல்துறை இயக்குநரும் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி கோவிந்தசாமி அவர்கள் 30.6.1992 அன்று இந்த வழக்கு விசாரணை முடியும் வரை தமிழகக் கல்லூரிகளிலும், தொழில் கல்லூரிகளிலும் சி.பி.எஸ்.ஈ மாணவர்களையே சேர்க்கக் கூடாது என்று (Interim Injection) தமிழக அரசுக்கும், தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வு நடத்தும் அமைப்பின் செயலாளருக்கும் உத்தரவிட்டார்.

(நினைவுகள் நீளும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *