நாடகம் : புது விசாரணை(2)

பிப்ரவரி 01-15 2020

(ஒரு நாடகத் தொடர்)

சிந்தனைச் சிதரா

(பழைய நீதிமன்றங்களில் _ அல்லது தேவசபைகளில் தீர்ப்பெல்லாம் தேவர்களுக்கு ஆதரவாகவும், (சூத்திரர்களுக்கு) அசுரர்களுக்குப் பாதகமாகவே, ஒரு சார்பு நிலையிலேயே தீர்ப்புகளும், தண்டனைகளும் அளிக்கப்பட்டு வந்துள்ளதாக இதிகாச, புராண (அ)நீதி நூல்கள் சொல்லுகின்றன!

மனுவே, மறுவிசாரணைக்கு மட்டுமல்ல, மாற்றத்திற்கு_கிரிமினல் நீதிமுறைக்கு  உட்படுத்தப்பட்டது. அதில் மதவாத, ஜாதிவாதக் கண்ணோட்டத்தோடு இருந்த சட்டங்களை பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் வெகுவாக மாற்றப்பட்டது. ஒரு சார்புப் பார்வை ஒருபோதும் ஏற்படக் கூடாது.

இவை மறு விசாரணை செய்யப்பட வேண்டியது கட்டாயம்.

எனவே, இந்தப் புதிய மனித தர்ம நீதிமன்றம் _ மனுதர்மத்தை _ ஏற்காத பொது நிலை நடுநிலை நியாயமன்றம் _ மறுவிசாரணை மனுக்களை ஏற்கிறது.)

நீதிமன்றம்…

நீதிபதி நெடுஞ்செழியப் பாண்டியன் இருக்கையை நோக்கி வந்து அமர்கிறார்.

எல்லோரும் எழுந்து நின்று நீதிபதிக்கு வணக்கம் தெரிவிக்கின்றனர்!

அமைதி! அமைதி!! அமைதி!!!

விசாரணை துவங்குகிறது.

பி.பி.மண்டல், பி.பி.மண்டல்… என்று சேகவர் உரத்த குரலில் அவரை அழைக்கிறார்!

அவர் வந்து நீதிபதியின் முன் நிற்கிறார். அவரை அமரச் செய்தே நடவடிக்கைகளைத் தொடருகிறார் மனிதநேயம் மிக்க நீதிபதி அவர்கள்.

அறிவுமணியின் வழக்குரைஞர் புத்தியானந்தர் தனது விசாரணையைத் துவக்குகிறார்!

“படிக்கட்டு ஜாதிமுறை என்பது பற்றி கனம் கோர்ட்டார் அவர்களுக்கு சற்று விளக்குவீர்களா?’’

பி.பி.மண்டல்: மனுஸ்மிருதியில் உண்டாக்கப்பட்ட வர்ணாஸ்ரம தர்ம முறையில், மேல் கீழ் என்கிற பேதம்கூட, அடுக்கு முறையில், ஏணிப் படிக்கட்டு போலவே ஒருவர்மேல் மற்றொருவர். பிரம்மா முகத்தில் நெற்றியில் பிறந்தவர்கள் பிராமணர்கள். தோளில் பிறந்தவர்கள் க்ஷத்திரியர்கள் இடுப்பில் பிறந்தவர்கள், வைஸ்யர்கள் கீழே காலில் பிறந்தவர்கள், சூத்திரர்கள் நாலாவது ஜாதியினர்.

இவர்கள் வர்ணஸ்தர்கள். அவர்களுக்குக் கீழேகூட இரண்டு பிரிவுகள் உண்டு. அதாவது  கீழேயுள்ள 5ஆவது பிரிவினர் “பஞ்சமர்கள்’’ தாழ்த்தப்பட்டவர்கள் _ S.C., S.T., பிரிவினர் _ பழங்குடி வகுப்பினர்கள்.

வழக்குரைஞர் புத்தியானந்தர்: அதற்கும் கீழே…? யாராவது உள்ளனரா?

மண்டல்: ஓ.கே. எல்லா உயர்ஜாதி வர்ணஸ்தர்கள், அவர்ணஸ்தர்கள் வீட்டுப் பெண்கள் _ அதாவது மேலே கூறிய 5 பிரிவிலும் உள்ள ஒட்டுமொத்த பெண்களும் 6ஆவது ஜாதி. அதாவது பெண்கள் எல்லோரிலும் கீழானவர்கள்!

நீதிபதி: இதென்ன கொடுமையாக இருக்கிறதே! உடனே வழக்குரைஞர் குல்லூகபட்டர் குறுக்கிட்டு பதில் அளித்தார்.

லோக ஷேமத்தையொட்டி நம்ம பெரியவா செய்த ஏற்பாடுகூட அல்ல, பகவானே செய்தது!

பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையில் அர்ச்சுனனுக்குக் கீதோபதேசம் செய்துள்ளார்.

‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்’

நாலு வர்ணங்களை _ ஜாதிகளை நானேதான் உண்டாக்கினேன். ஆனால், நானே நினைத்தாலும்கூட இந்த ஜாதி தர்மத்தை ‘மனு தர்மத்தை’ மாற்றி எழுதவே முடியாது என்பதே தர்மத்தின் தத்துவம். அவாள் அவாள் கர்ம வினைப்படி கர்மா தத்துவப்படிதான், பரமாத்மா, நிர்ணயம் பண்ணினார், லோகத்தை!

அதன்படி கீழ்ஜாதிக்காரர், கல்வியைக் கற்கவே கூடாது. கற்றல், கற்பித்தல் எல்லாம் பிராமணர்களுக்கு என்றே விதிக்கப்பட்ட தர்மத்தின் ஒரு தனித் தத்துவம்.

பி.பி.மண்டல்: மாண்பமை நீதிபதி அவர்களே, இதை நான் இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் அறிக்கையிலே சுட்டிக்காட்டி எழுதியுள்ளேன். ஏகலைவன், சம்பூகன் ஆகிய இரு சூத்திரர்களை _ இந்த தர்மம்தான் தங்கள் விருப்பம்போல் _ தியாகம் செய்ததும்கூட!

நீதிபதி: யார் இந்த ஏகலைவன், சம்பூகன்?

பி.பி.மண்டல்: அவர்கள் இருவரும் முறையே மஹாபாரதம், இராமாயணம் ஆகியவற்றில் இருப்பவர்கள்.

நீதிபதி: அப்படியா இதுவரை நான் படித்த பல இலக்கியங்களில் இவர்களின் பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லையே!

குல்லூகபட்டர்: அந்த இரண்டு பாத்திரங்களும் அவா சொல்ற மாதிரி மஹாபாரதம் மற்றும் வால்மீகி இராமாயணத்தில் வருவா! மண்டல் அவர்களே, அதையெல்லாம் எதற்கு நீங்க, உங்கள் கமிஷன் ரிப்போர்ட் அறிக்கையிலே எழுத வேண்டும் _ தேவையில்லாமல்?

வழக்குரைஞர் புத்தியானந்தர்: ஆட்சேபிக்கிறேன். ‘தேவையில்லாமல்’ என்று அவர் சொல்லக்கூடாது. தேவை உண்டு! சமூகநீதி என்பதே, சமூக அநீதி நிலவியதால் ஏற்பட்ட கோரிக்கை _ விளைவுதானே!

இராமாயணம், மகாபாரதம் இவற்றில் வரும் அவ்விரு பாத்திரங்களும், சமூக அநீதிக் கொடுமைக்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள்.

நீதிபதி: வேறு சில வழக்குகளும் நிலுவையில் உள்ளன. எனவே, அவற்றையும் நடத்த வேண்டியிருப்பதால் விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கிறேன்.

இந்த வழக்காடிகள் நீதிபதிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வெளியேறுகிறார்கள்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *