முகப்புக் கட்டுரை : உணர்வு பொங்க நடைபெற்ற “உண்மை” இதழின் பொன்விழா!

பிப்ரவரி 01-15 2020

– மஞ்சை வசந்தன்

“உண்மை’’ மாத இதழாக 14.1.1970 அன்று தந்தை பெரியரார் அவர்களால் தொடங்கப்பட்டது. முதல் இதழை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். புலவர் இமயவரம்பன்  உண்மை இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். திருச்சியிலிருந்து வெளியிடப்பட்ட உண்மை இதழ் சென்னையிலிருந்து வெளியாகிறது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு உண்மை இதழ் தற்பொழுது மாத மிருமுறை இதழாக வெளி வந்து கொண்டி ருக்கிறது. தந்தை பெரியாரின் சமத்துவக் கொள்கைக்கான வாழ்வியல் இதழாக வெளிவரும் “உண்மை’’ இதழ் பொன்விழாவைக் கண்டுள்ளது.

“உண்மை’’ 50ஆம் ஆண்டு_பொன் விழாவில்  பெரியார் பன்னாட்டமைப்பைச் சேர்ந்த அமெரிக்கா ஆய்வாளர் முனைவர் ரவிசங்கர் கண்ணபிரான் தலைமை வகித்து உரையாற்றினார்.

பகுத்தறிவு இலக்கிய அணி மாநிலச் செயலாளர், உண்மை இதழின் பொறுப் பாசிரியர் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் வரவேற்புரை ஆற்றினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார்.

பேராசிரியர் அருணன், திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இதழாளர் கோவி.லெனின், உண்மை இதழின் வாசகர் கொரநாட்டுக்கருப்பூர் நெய்வேலி க.தியாகராசன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்கள்.

சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு

முனைவர் ஆய்வாளர் ரவிசங்கர் கண்ண பிரான், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பேராசிரியர் அருணன், இதழாளர் கோவி.லெனின், நீண்ட நாள் வாசகர் எழுத்தாளர் கொரநாட்டுக்கருப்பூர் நெய்வேலி க.தியாகராசன், “உண்மை’’ இதழில் “திருப்பதியில் எழுந்த நெருப்பு” என்று தொடர் நாவல் எழுதிய கவிஞர் மறைமலையான் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

பொன்விழா மலர் வெளியீடு

உண்மை பொன்விழா ஆண்டு மலரை பேராசிரியர் அருணன் வெளியிட பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெற்றுக் கொண்டார்.

‘உண்மை’ பொன் விழா மலர் முன்பதிவுக் கான தொகை ரூ.250அய் வரிசையில்  நின்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஏராளமானவர்கள் வழங்கினர்.

உணர்வு பொங்கிய உரை வீச்சுகள்!

மஞ்சை வசந்தன் வரவேற்புரை

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வுக்கு வந்திருக்கக்கூடிய தமிழர் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது முதல் வணக்கம். உண்மையிலேயே வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு இது.

தந்தை பெரியார் இந்த இதழைத் துவங்கியபோது அந்த இதழ் எதற்காகத் துவங்கப்படுகிறது என்பதை தெளிவாகச் சொல்கிறார். மூடநம்பிக்கையை ஒழித்து பகுத்தறிவை பரவச் செய்ய வேண்டும் என்னும் நோக்கத்திலேயே இந்த இதழ் துவங்கப்பட்டதாகக் கூறுகிறார். இதையே உண்மை இதழின் தலையாய கடமையாகக் கொண்டு துவக்கினார். உண்மை ஏட்டின் நோக்கம் பகுத்தறிவை மக்கள் மத்தியில் பரப்புவது. பகுத்தறிவு என்று நாம் சொன்னால், அதன் எல்லை மனிதநேயத்தில் சென்று முடியும்.

வள்ளுவர் இரண்டு இடத்தில் தெளிவாகக் கூறுகிறார். அறிவு அற்றம் காக்கும் கருவி. அற்றம் என்னும் சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று உண்மை; மற்றொன்று அழிவு. இரண்டு முரண்பட்ட பொருள்களை கொண்டுள்ள சொல்தான். இதுதான் தமிழின் சிறப்பு. அதாவது அழிவினின்று காத்து உண்மையை அறியச் செய்வது அறிவு என்பது அதற்குப் பொருள்.

அறிவு என்று சொல்லும்போது எது உண்மையை நிலைநாட்டக் கூடியதோ அதுதான் அறிவு. ஆனால், இன்று அறிவைப் பற்றி யார் யாரோ பேசுகிற நிலையில் உள்ளது.

‘துக்ளக்’ ஏட்டைக் கையில் வைத்திருந்தால் அறிவாளி என்னும் இழிநிலை இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது. அறிவாளி என்பவர் யார் என்பதைப் பற்றி வள்ளுவர் மேலும் கூறுகையில்,

அறிவினால் ஆகுவ துண்டோ பிரிதின்நோய்

தன்நோய்போல் போற்றாக் கடை

என்றார். அறிவென்பது தன்னைப்போல ஒத்த மனிதர்களைச் சமமாக நடத்துவது. அப்படி இல்லாத அறிவால் சமுதாயத்திற்குப் பயனில்லை. அந்த நடிகர் கூறுகிற அறிவு அப்படிப்பட்டதா? அறிவாளிக்கும் சூழ்ச்சிக்காரருக்கும் வித்தியாசம் தெரியாமல் கூறிக்கொண்டு இருக்கிறார். பார்ப்பான் இவ்வளவு நாள் சூழ்ச்சியாலே மக்களை ஏமாற்றினான் அவன் அறிவாளியா?  சூழ்ச்சிக்காரன் அறிவாளி இல்லை. அவன் மானுட விரோதி. அவன் நம்மைக் கெடுக்க அறிவினால் சூழ்ச்சி செய்து நம்மைக் கெடுப்பவன். சூழ்ச்சி வேறு; அறிவு வேறு.

அறிவு என்பது பிறரை தன்னைப்போல நேசிக்கிற மானுடப் பற்று என்கிறார் வள்ளுவர். அந்தப் பகுத்தறிவு மனிதநேயத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் நோக்கம். மூடநம்பிக்கையை ஒழிப்பது மட்டுமல்ல, மனிதநேயத்திற்கு எதெல்லாம் விரோமாக இருக்கிறதோ அதெல்லாம் பகுத்தறிவால் ஒழிக்க வேண்டும். மனிதநேயத்திற்கு எதிராக இருப்பது ஜாதி, ஏற்றத்தாழ்வு, ஒருவர் உயர்ந்தவர் மற்றவர்  தாழ்ந்தவர், நீ படிக்க வேண்டும், மற்றவர் படிக்கக் கூடாது என்பது. தந்தை பெரியார் பகுத்தறிவு நோக்கில் கூறியதில் அவருடைய சுயமரியாதைக் கொள்கையும் உள்ளது.

உண்மை வெளிவந்து கொண்டிருக்கக் காரணம் மனிதநேயம். சூழ்ச்சிக்காரன் கையில் உள்ளது ஏடுகள் அல்ல. அவை மக்களுக்குக் கேடுகள். அந்த நடிகருக்கு மட்டுமல்ல, அந்த இதழின் ஆசிரியருக்கு நான் சவால் விட்டுக் கூறுகிறேன். உண்மையும் துக்ளக்கையும் ஒரே மேடையில் வைத்து ஒப்பிட்டு விவாதித்து யார் அறிவாளி என தீர்மானிக்க நீங்கள் தயாரா? இந்தக் கூட்டத்தின் வாயிலாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

அறிவாளிக்கு உகந்த ஓர் உண்மை ஏடு. ஓர் உதாரணத்தோடு கூறுகிறேன். இந்த உண்மை ஏட்டிற்கு பொறுப்பாசிரியர் என்கிற முறையில், நான்கு நாள்களுக்கு முன் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் மாயவரத்தில் உள்ள மண்ணப்பந்தல் ஏ.வி.சி கல்லூரி முதல்வரிடமிருந்து வந்தது. அதில் முதல்வரே கைப்பட எழுதி எங்களுக்கு உண்மை இதழ் வேண்டுமெனக் கூறி, ஆண்டுச் சந்தாவுடன் அந்தக் கடிதம் வந்தது. அறிவாளி ஏற்கக்கூடிய ஏடு எதுவெனப் புரிந்துகொள்ள இந்த நிகழ்வே போதும். உண்மை அறிவாளி ஏடு என்பதற்கு இதைவிட வேறு ஆவணம் வேண்டுமா? இந்த உண்மை பொன்விழாவிற்கு வந்துள்ள உங்கள் அத்தனை பேரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுகவுரை

50 ஆண்டுக்கு முன் பொங்கல் நாளில் திருச்சியில் பெரியாரால் வரவேற்பு உரையாற்றப் பெற்று துவக்கப்பட்டது உண்மை இதழ். அந்த விழாவில் புரவலர்போல் போற்றப்பட்ட பாலசுப்பிரமணியம் தலைமையில் துவக்க விழா நடைபெற்றது. நம்முடைய ஆசிரியரால் வெளியிடப்பட்டது உண்மை இதழ். இதன் முதல் ஆசிரியராக பெரியாரின் தனிச் செயலாளராக இருந்த புலவர் கோ.இமயவரம்பன் அவர்கள் இருந்தார். அவர் வரலாற்றுக் கட்டுரை எழுதுவதில் தனித் திறமை பெற்றவர். அவர் எழுதிய இலக்கியத்தில் வர்ணாஸ்ரமம், நரபலி, பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும், குழந்தைத் திருமணம் என ஏராளமான வரலாற்றுக் கட்டுரைகள் உண்மை இதழில் தொடர்ந்து எழுதினார். சில நூலாகவும் வெளிவந்துள்ளன. பி.வி.ஆர் என ஒருவர் இருந்தார். பி.வி.இராமசாமி என்னும் அவர் திருச்சியில் ஆரம்ப காலத்தில் உண்மையில் பணியாற்றினார். பின் விடுதலையில் எழுதினார். உண்மையில் அவர் எழுதிய ‘அய்யப்பன் ஒரு கொலைகாரன்’ என்னும் ஆதாரபூர்வமான கட்டுரை மிகவும் சிறப்பு பெற்றது.

வரலாற்றில் புராணங்கள் பொய்களை வெளிப்படுத்தின. அவருக்குக் காது கேளாது. அவர் எழுதிய சினிமா துறை பற்றிய தனி நூல் ஒன்று அரசு விருது பெற்றது. நீதிக்கட்சியில் திராவிட இதழுக்கு உதவி ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் யாரை அழைக்கலாம் என்னும்போது சிறப்பான வாசகர் பங்காற்றும் நெய்வேலி தியாகராசன் அவர்களை அழைக்கலாம் என ஆசிரியரே தேர்வு செய்தார்.

உண்மை துவங்கப் பெற்ற அதே நாளில் இன்னொரு இதழும் துவங்கப்பட்டது. ஓர் அறிவாளி சொல்லியிருக்கிறார் _ அந்த ஏடு கையில் இருந்தால் அவர்கள் அறிவாளியாம். உண்மை துவங்கிய நாளிலே பொய் என இதழும் துவங்கப்பட்டுள்ளது. துக்ளக்கின் முதல் அட்டைப்படம் இரண்டு கழுதைகள் பேசி கொள்வதைப் போல் போடப்பட்டிருக்கும் அதில் ஒரு கழுதை, ‘ஆ ஆ! துக்ளக் இதழ் துவங்கியாச்சி! இனிமேல் நமக்கு நல்ல தீனிதான் எனக் கூறும். அதே அட்டைப் படத்தை 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த இதழிலும் போடப்பட்டுள்ளது. அதில் ஒரு கழுதை “50 வருடம் உழைச்சதுக்கு நமக்குப் பொன்விழாவாம்! அதற்கு மற்றொரு கழுதை கூறும், “நம்ம மட்டுமா உழைச்சோம். 50 வருஷமா எத்தனை அரசியல்வாதிகள் நமக்காக உழைச்சாங்க. அத்தனை பேரையும் போட முடியாது. அதான் அவங்களுக்குப் பதில் நம்மைப் போட்டிருக்காங்க.’’ இதில் எத்தனை குறும்பு பாருங்கள். அரசியல்வாதிகள் எல்லாம் கழுதையாக இருப்பதாக துக்ளக் எவ்வளவு திமிர் தனத்துடன் சொல்கிறது. ஒருவகையில் துக்ளக் தன்னிலை விளக்கமாக கூறப்பட்டிருந்தாலும், அரசியல்வாதிகளை கேவலமாகப் பேசும் போக்கையும் பார்க்க வேண்டும்.

1971இல் தேர்தல் சமயத்தில் ராமரைப் பெரியார் செருப்பால் அடித்தார் என்னும் செய்தியை பொய்யாக ஆர்.எஸ்.எஸ். பரப்பினர். அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் காதுக்கு இந்தச் செய்தி சென்றது. இதனால், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறாது என்று கணிப்பையும் கூறினார்கள். அதற்கு இந்திராகாந்தி சொன்னார், “அவர் இப்பவா அடிக்கிறாறு, 50 வருஷமா அடிக்கிறாரு! போய் வேலையைப் பாருங்க!’’ என்று கூறிவிட்டார். அந்தத் தேர்தலில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் பெரியார் முன்னிலையில் தி.மு.க. அமைச்சர்கள் பதவி ஏற்றனர். உடனே ராஜாஜி, “நாட்டில் ஆஸ்திகர் வாழ முடியாது.   ஆஸ்திகர் எல்லாம் இந்த நாட்டை விட்டுப் போய்விடுகிறோம்’’ என்று கூறினார். அதற்குப் பதிலாக நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், “நீங்கள் எப்போது, எந்த நேரத்தில் போகிறீர்கள் என்று சொல்லுங்க. நாங்களே வந்து வழியனுப்பி வைக்கிறோம்’’ என்றார். இப்படியெல்லாம் ராமரை வைத்து அரசியல் செய்து தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் தங்கள் ஆட்டத்தை ஆரம்பித்து உள்ளனர். தமிழ்நாட்டில் எது வேண்டுமானாலும் பேசலாம் என்னும் பிளாங்க் செக் தந்தை பெரியாருக்கு மட்டுமே மக்களால் கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஆர்.எஸ்.எஸ். ஊதுகுழல்கள் செயல்படத் துவங்கினாலும் அதையெல்லாம் தமிழக மக்கள் புறக்கணித்து உண்மையின் பக்கம் நிற்பார்கள் என்பது உறுதி! நன்றி!

‘நக்கீரன்’ கோவி.லெனின் பாராட்டுரை

‘உண்மை’ பொன்விழா நிகழ்வில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.  இங்கு தலைமை ஏற்ற ரவிசங்கர் கண்ணபிரான் அவர்கள் ஆசிரியர் அய்யாவிடம் இந்தியப் பொருளாதாரத்தை நன்கு புரிந்துகொண்டு தன்னுடைய உண்மை சந்தா தொகையை ரூபாயில் கொடுக்காமல் ‘யூரோ’வில் கொடுத்தார்.

நீங்கள் ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தைப் போட்டாலும் சரி, வேறு எந்தப் படத்தைப் போட்டாலும் சரி, இந்தியாவின் பொருளாதாரம் தேறாது. லஷ்மி விலாஸ் பேங்கே தடுமாறி வருகிற நிலையில், லட்சுமி படம் ரூபாயில் போட்டால் பொருளாதாரம் வளருமா?

கவிஞர் கூறியதுபோல நான் பெரியார் திடலில் நடைபெறும் எல்லா விழாக்களிலும் உங்களின் ஒருவன். நான் காட்ட வேண்டிய நன்றி இது. தோராயமாக 5000 பிரதிகள் அச்சடிக்கப்பட்ட பத்திரிகை (துக்ளக்) வைத்திருந்தால் அறிவாளிகளா? இந்த நாட்டில் உண்மையை எப்படிச் சொல்ல வேண்டும் என்பது மிக முக்கியமாக உள்ளது.

“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு’’

இங்கு மெய்ப்பொருளை விட்டு பிரபலங்கள் கூறுவதை நீண்ட நாள்களாக நம்பும் தன்மை உள்ளது. ஆனால், குறள்படி உண்மையை ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டி உள்ளது. பிரபலங்கள் சொல்வதாலேயே அது உண்மை ஆகிவிடாது.

‘துக்ளக்’ விழாவில் ரஜினி 1971இல் சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு என்னும் நிகழ்வு பற்றிக் கூட அறியாது, ஏதோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததைப் பேச, அதற்கு நம்முடைய பேராசிரியர் சுப.வீ. அய்யா அவர்கள் எழுத்துப் பூர்வமாகவும், காணொளி மூலமாகவும் ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறியுள்ளார். இதில் நாம் சொல்ல வேண்டிய ஒரே உண்மை என்னவெனில், அந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் நடைபெற்ற பேரணியில் பா.ஜ.க உடைய பழைய ஆள்கள், ராமசாமிப் பெரியார் மீது வீசிய செருப்பு, ராமசாமிப் பெருமாள் மீது பட்டது என்பதுதான்.

திருவள்ளுவருக்கு திடீரென காவி நிறம் பூசினர். இன்னும் என்னென்ன பூசுவர் எனத் தெரியாது. திருவள்ளுவர் நாளில் புதிதாகக் கதைகட்டி பிரம்மாவே திருவள்ளுவராக வந்து குறளை எழுதியதாகப் புதிய கதை கட்டிவிடப்படுகிறது. இதில் பொங்கலுக்கு மட்டும் கதை இல்லை. அதுதான் திராவிடர் திருநாள். இதற்கிடையே திடீரென சல்லிக்கட்டுக்கு ஒரு புதிய கதை கட்டப்படுகிறது. அது என்னவென்றால் சிவனுக்கும் அர்ச்சுனனுக்கும் சண்டை நடந்தது. அதில் அர்ச்சுனன் சிவனைக் கட்டிப்பிடித்துத் தழுவினான். அதுதான் சல்லிக்கட்டு என கதை விடுகிறார்கள். அப்படி உங்கள் கதைப்படியே வந்தால், நீங்கள் சிவனை கருவறைக்குள் சென்று கட்டிப்பிடிக்க அனுமதித்திருக்க வேண்டுமே? அப்படிச் செய்யாமல் நீங்கள் நந்தியைத் தழுவ மட்டும் அனுமதிப்பதேன்? இதுபோல கதைகளை அவர்கள் திரும்பத் திரும்பக் கூறி, மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். நாம் திசை மாறி வருகிறோம்.

இங்குகூட ஆசிரியரின் ‘குடியுரிமைத் திருத்தச் சட்டம்’ புத்தகம் வெளியிடப்பட்டது. அதைப் பற்றிப் பேசாமல், இவர்கள் திசைதிருப்பலாக ‘துக்ளக்’ வைத்திருந்தால் அறிவாளி எனக் கூறி ரஜினி போன்றவர்களால் திசைதிருப்பப் படுகிறோம். அப்போது குறிக்கோளை அடைய நமக்கு ‘விடுதலை’, ‘உண்மை’ போன்ற பத்திரிகைகள் தேவைப்படுகின்றன. அவைதான் ‘உண்மை’ சொல்லும். உண்மையைச் சொல்ல ‘உண்மை’ பத்திரிகை தேவைப்படுகிறது. பொய்யும் புரட்டும் அவர்களுக்குப் பெரிதல்ல. 1989இல் தி.மு.க. ஆட்சியில் தந்தை பெரியாரின் கொள்கையான பெண்களுக்குச் சொத்துரிமையைச் சட்டமாக்குகிறார் கலைஞர். 69% இடஒதுக்கீடு, கிராமப்புற மாணவர் கல்வி, ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் எனப் பல சாதனைகளைச் செய்துகொண்டே போகிறார் கலைஞர். ஓராண்டு முடிவில் 80 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் எனக் கூறுகிறார். இது ‘துக்ளக்’ சோவுக்குப் பொறுக்கவில்லை. உடனே சோ ‘துக்ளக்’கில் “தி.மு.க.வின் பொய்யும் புரட்டும்’’ என்னும் கட்டுரையை எழுதுகிறார்.

இதற்குப் பதிலாக கலைஞர் முரசொலியில் எழுதுகையில், சோ வைத்த “நாளொரு பொய்யும் பொழுதொரு புரட்டும்’’ என்ற தலைப்பில் “சோவின்’’ என்று முன் ஒட்டுச் சேர்த்து தலைப்பாக்கினார். பார்ப்பனர்களின் வழக்கம் இப்படிப்பட்டதுதான். இவர்களுக்கு சரியான சம்மட்டிஅடி தந்தை பெரியார்தான் கொடுத்தார். ‘விடுதலை’, ‘உண்மை’, ‘முரசொலி’ நடத்தும் மாலை நேரக் கூட்டங்களில் வருபவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் போன்றவர்கள். அவர்கள் அறிவாளிகள்; ‘துக்ளக்’ சோவைப் படிப்பவர்கள் ரஜினி மாதிரிதான் ஆவார்கள் எனக் கூறி முடிக்கிறேன். நன்றி!

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *