அய்யாவின் அடிச்சுவட்டில் …
கி.வீரமணி
11.1.1992 அன்று சென்னை பெரியார் திடலில் “தடா சட்டமும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்’’ என்னும் தலைப்பில் திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன். அப்போது வழக்கறிஞர் த.வீரசேகரன் அவர்கள் கைது செய்யப்பட்ட வழக்கை எடுத்துக்காட்டி பேசினேன்.
16.1.1992 அன்று மாலை மாநில கழக கிராமப்புறப் பிரச்சாரச் செயலாளர் மல்லியம் கண்ணையன் மாரடைப்பால் மரணமடைந்தார் என்கிற செய்தியைக் கேட்டு மிகவும் மனவேதனை அடைந்தேன்.
அதேபோல் தஞ்சை பி.மகாதேவன் அவர்கள் திடீரென தஞ்சையில் மரணமடைந்தார். இவர்கள் இருவரின் துயரச் செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். மகாதேவன் அவர்கள் வல்லத்தில் உள்ள பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளார். 17.1.1992 அன்று ‘விடுதலை’யில் இவர்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் இரங்கல் செய்தியை அனுப்பினேன்.
மறைந்த திரு.மகாதேவன் உடலுக்கு பெரியார் மகளிர் நூற்றாண்டு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் எஸ்.ராஜசேகரன் மற்றும் கழகத் தோழர்கள் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தச் செய்தேன்.
கர்நாடகத் தமிழர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து 20.1.1992 அன்று டில்லி அரசை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த மறியல் போராட்டத்தில் கட்சி, மதம், ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு தமிழ் மக்கள் ஒன்று திரள வேண்டும் என 18.1.1992 அன்று அறிக்கையின் வாயிலாக முன்பே கேட்டுக்கொண்டோம்.
இந்த மறியல் போராட்டத்திற்கு சென்னை பெரியார் திடலிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு அஞ்சலகங்களை நோக்கி புறப்பட்டுச் சென்றோம். மறியலுக்குச் சென்ற கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சென்னையில் என் தலைமையில், கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்களுடன் சென்று அண்ணா சாலையில் உள்ள அய்யா அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து, மே தினப் பூங்கா அருகே திரண்டிருந்த தோழர்களிடையே உரையாற்றினேன். பின் நாங்கள் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டோம்.
21.1.1992 அன்று இரவு 7:30 மணிக்கு திண்டிவனத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற புரட்சிக்கவிஞர் சிலை திறப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், கழகப் பாடகர் ‘பெலா’ முனுசாமி – சந்திரா ஆகியோரின் மகன் என்.எம்.பாண்டியனுக்கும் செஞ்சி வட்டம் வடபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எம்.கண்ணன் – ரெங்கநாயகி ஆகியோருடைய செல்வி விஜயாவுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்து வாழ்த்து கூறினேன். இந்த மணவிழாவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்!
பின்னர் புரட்சிக்கவிஞர் அவர்கள் சிலையை திறந்து வைத்து உரையாற்றினேன். உண்மையான தத்துவங்களை நமக்குச் சொல்லியதால்தான் புரட்சிக்கவிஞருக்கு நாம் சிலை எடுக்கிறோம் என்றேன்.
இந்து ஏட்டின் தலையங்கம்
24.1.1992 அன்று ‘விடுதலை’யில் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமியை பதவி நீக்கம் செய்ய நடக்கும் நிர்ப்பந்தங்களுக்கு தலைமை நீதிபதி பணியக் கூடாது என்றும், அதற்காக கழகத் தோழர்கள் தலைமை நீதிபதிக்கு தந்தி அனுப்பிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். அந்த அறிக்கையில் நீதிபதி திரு.வி.ராமசாமியின் மீது கோபம். அவர் சமூகநீதித் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள தமிழர் என்பதாலா? இல்லை. இதற்கெல்லாம் உண்மையான மூலகாரணம் அவர் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தமிழர் நீதிபதி – பார்ப்பனரல்லாதார் சமூகநீதியில் நம்பிக்கையுள்ள நீதிபதி.
முன்பு, எம்.ஜி.ஆர். அரசு கொண்டுவந்த வருமான வரம்பு ஆணை ரூ.9,000/- ஆண்டு வருமான வரம்பு பற்றிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் வந்தபோது இவர் துணிந்து அவ்வாணை சமூகநீதித் தத்துவத்திற்கும், வகுப்புரிமைக்கும் முரணானது என்று தன்னந்தனியாக நின்று மைனாரிட்டி தீர்ப்பு எழுதினார் என்கிற ஆத்திரம் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களுக்கு – சமூகநீதியின் விரோதிகளுக்கு – நீண்ட காலமாக இருந்து வருவதால் இவர் இப்படி அவமானப்படுத்தப்படுகிறார்; கொச்சைப் படுத்தப்படுகிறார். எனவே, மரியாதைக்குரிய தலைமை நீதிபதி அவர்கள் இதில் சட்டப்படி நல்ல மரபினை உருவாக்கும் வண்ணமும் நடந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். எனவே, ஜஸ்டிஸ் ராமசாமி அவர்கள் மீது திட்டமிட்டுச் செய்யப்படும் இந்தப் பழி தீர்க்கும் முயற்சிக்கு எதிராக தமிழ்நாட்டு வழக்கறிஞர்களும் பொதுநல அமைப்புகளும், மன்றங்களும் தலைமை நீதிபதிக்கு ஏராளமான தந்திகளை காலதாமதம் இன்றி அனுப்பிட வேண்டும் என்று மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டோம்.
சேலத்தில் 14, 15.2.1992 ஆகிய இரு நாள்களிலும் முதல் நாள் திராவிடர் கழக மாநில மாநாடும், இரண்டாம் நாள் நீதிக்கட்சி பவள விழா மாநாடும் (சமூகநீதி மாநாடும்) சிறப்பாக நடைபெற்றன. முதல் நாள் மாநாட்டில் 16 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழகத்து மய்ய அரசு நிறுவனங்களின் அலுவல் மொழியாகத் தமிழே இருக்க வேண்டும், வெளிநாடு வாழ் தமிழர்க்கு தமிழ் கற்க தமிழக அரசு உதவ வேண்டும், அனைத்திலும் தமிழ்ப் பெயர்களே சூட்ட வேண்டும், தமிழகத்தில் இதர மொழிப் பெயர்ப் பலகைகள் கூடாது, புரட்சிக்கவிஞர் நூலை அரசே மலிவு விலையில் வெளியிட வேண்டும், தமிழிசை இயக்கத்தின் தேக்க நிலையை நீக்குக, கர்நாடகத் தமிழர்கள் மீண்டும் தத்தம் இருப்பிடங்களில் வாழ உத்தரவாதம் தேவை மற்றும் தமிழிசை இயக்கத்தின் தேக்க நிலையை நீக்கவும், ‘தடா’ சட்டப் பிரயோகத்தை தமிழக அரசு விலக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
15.2.1992 அன்று சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாளில் திராவிடர் கழகத்தின் தென்மாநில சமூகநீதி மய்யத்தின் தலைவர் தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் ஜஸ்டிஸ் திரு.பி.வேணுகோபால் அவர்கள் தலைமையில் நீதிக்கட்சி பவளவிழா (75ஆம் ஆண்டு) மாநாடு நடந்தது. அதில் 14 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
முதல் தீர்மானமாக பொது நிறுவனங்கள், சாலைகள், வளாகங்களுக்கு நீதிக்கட்சி தலைவர்கள் பெயர்களை சூட்டுக, வரலாற்று நூல்களில் நீதிக்கட்சி உரிய இடம் அளிக்க வேண்டும், ஜாதி ஒழிப்பு மாநாடுகள், பெண்கள் இழிவுகள் நீக்கவும், இடஒதுக்கீடு வழங்கவும், பெண்ணுரிமை பாதுகாப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் பத்தே நிமிடத்தில் முடிந்த 7 மண விழாக்கள் குறிப்பிடத்தகுந்ததாகும். துண்டு ஏந்தி வழக்கு நிதியைத் திரட்டி வந்தேன். கருஞ்சட்டைப்படை தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று சபதம் செய்தனர். 18 மணி நேரம் மாநாடு தொடர்ந்து நடைபெற்று சாதனை படைத்தது.
24.2.1992 அன்று ‘மவுண்ட்ரோட் மகாவிஷ்ணுவான’ ‘இந்து’ பார்ப்பன ஏடு, அதன் வழமைக்கு மாறாக தீப்பொறி பறக்க “Bring L.T.T.E to Justice” என்று எழுதியுள்ள தலையங்கத்தில் அப்படி அறிவுரை கூறியுள்ளது. தனிப்பட்ட ஓர் ‘இந்து’ ஏட்டின் கருத்தாக நாம் நினைக்கவில்லை. ஓர் ஆழ்ந்த பார்ப்பன அதிகார வர்க்க கூட்டுசதி வலையாகவே அதனை நினைக்கிறோம்.
விசாரணைக்கு முன்பே – விடுதலைப்புலிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோருவது ஏன்? இந்து தலையங்கத்தின் பின்னணி என்ன? என்று முக்கிய அறிக்கையின் வாயிலாக 26.2.1992 அன்று எடுத்து விளக்கி எழுதியிருந்தேன்.
எந்த ஓர் இயக்கத்தையும் தடை செய்வதன் மூலம் அழித்துவிட முடியாது என்பது சரித்திர உண்மையாகும். அது சரியான அணுகுமுறையும் ஆகாது, நோய் நாடி நோய் முதல் நாட வேண்டும்.
தம்பி பிரபாகரன் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டதாலேயே விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்டு விட வேண்டும்மென்ற ‘இந்து’ கூட்டமான பார்ப்பனக் கூட்டத்தின் வாதம் சரியானதா?
ஈழத்தமிழர்களை சிங்கள பேரினவாதம் குண்டு வீச்சு மூலம் முப்படைத் தாக்குதல் மூலம் தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் அழித்து வருகிறதே -_ அதனை அங்கே தடுத்து நிறுத்தி, அவர்களைக் காக்கின்றவர்கள் விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யார்?
அதற்கு அரசியல் தீர்வு காணுங்கள் என்று வற்புறுத்துகிறதா மத்திய அரசு? என்று கேள்வியை எழுப்பியிருந்தேன்.
எஸ்.பி.தட்சணாமூர்த்தி
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், முன்னாள் தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவரும் ‘மிசா’வில் ஓராண்டு சென்னை சிறையில் இருந்தவரும் இயக்கப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்டு சிறை சென்றவருமான அருமைத் தோழர் சைதை எஸ்.பி.தட்சிணாமூர்த்தி அவர்கள் 25.2.1992 அன்று இயற்கை எய்தினார். நான் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த, சென்னை மாவட்ட தலைவர் சைதை எம்.பி.பாலு, மாவட்டச் செயலாளர்கள் எம்.கே.காளத்தி ஆகியோருடன் சைதை மசூதி தெருவில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம். அவரின் துணைவியார் மகன்கள், மகள்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில் ஆறுதல் கூறினோம்.
பி.ஈ.பக்தவச்சலம்
26.2.1992 அன்று இறுதி ஊர்வலத்தில் கழகத் தோழர்கள் பங்கேற்று அவரது உடலுக்கு கழகக் கொடி போர்த்தப்பட்டது.
அதேநாளில் (25.2.1992) வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவரும், திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு உறுப்பினரும், சென்னை மாநகராட்சியின் முன்னாள் உறுப்பினரும் கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவருமான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், கடைசி மூச்சு அடங்கும் வரை கட்டுப்பாடு மிக்க கழக செம்மலாக வாழ்ந்த சென்னை அயன்புரம் பி.ஈ.பக்தவத்சலம் அவர்கள் மறைவுற்றார். அவரது இழப்பு கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாதது என்று குறிப்பிட்டு, அவரது இறுதி ஊர்வலத்தில் கழகத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர். தலைமை நிலையத்தின் சார்பில், கழகப் பொதுச்செயலாளர் என்கிற முறையில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஏராளமான கழகத் தோழர்களுடன் சென்று இறுதி மரியாதை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 28.2.1992 அன்று இரவு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் “‘ராஜீவ், பத்மநாபா கொலைகளும் தமிழின அழிப்பு சதிகளும்’’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினேன்.
5.3.1992 அன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் ‘மண்டல் குழுவும், மதவெறியும்’ என்னும் தலைப்பில் உரையாற்றினேன்.
ஒரு குறிப்பிட்ட கெடு – தேதியை நிர்ணயித்து அதற்குள் மண்டல் குழு சிபாரிசுகளை அமல்படுத்த வேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும்,
அந்தத் தேதி முடிவடைந்தவுடன் ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லோரும் ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராக வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தும் என்னுரையை நிறைவு செய்தேன். சட்டக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், இருபால் ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
9.3.1992 அன்று கழக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் கி.மகேந்திரன் அவர்களது “வழக்கு உரைப்போர் சட்ட அலுவலகம்’’ திறப்பு விழா – மதுரை கே.கே.நகர், கே.ஆர்.எஸ். வளாகத்தில் நடைபெற்றது. அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றினேன். ‘இந்த வழக்கு உரைப்போர் அலுவலகத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று நண்பர் மகேந்திரன் கோரியது, அன்பின்பால் ஏற்பட்ட ஒன்றாகும். பொதுவாகத் தமிழர்கள் வழக்கறிஞர்களாக இருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் இந்த இயக்கத்தை ஆரம்பிக்கின்றபோது தேடிப் பார்க்கின்றபோது, பார்ப்பனரல்லாதார்களிடையே, உள்ளபடியே வழக்கறிஞர்களைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. வழக்கறிஞர்களைக் கண்டுபிடிக்க முடியாது என்றால் நீதிபதிகளையோ, மற்றவர்களையோ கண்டுபிடிக்க முடியுமா? அந்தக் கேள்விக்கே இடமில்லை. அந்த அளவுக்கு இருந்த ஒரு காலகட்டம், நீதிக்கட்சிக் காலத்துக்குப் பின்னே, சுயமரியாதை இயக்கம் தோன்றியதன் விளைவாக மாறியுள்ளது.
மதுரையில் வழக்குரைப்போர் சட்ட அலுவலகம் திறப்பு நிகழ்வில்
ஆசிரியர், கி.மகேந்திரன் மற்றும் வழக்குரைஞர்கள்.
இன்று ஏராளமான தமிழர்கள் வழக்கறிஞர்களாக இருக்கின்றார்கள். நீதிபதிகளாக இருக்கின்றார்கள். அவர்கள் வளரும்போது அவர்கள் எந்தக் கட்சியினர், என்ன ஜாதியினர், எந்த மதத்தினர் என்பது பற்றி எல்லாம் எங்களுக்கு கவலையில்லை. சமூகநீதி அடிப்படையில் இதுவரைக்கும் யார் யாருக்கு உரிமை மறுக்கப்பட்டு இருந்ததோ, அந்தச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் முன்னேறுகிறார்கள் என்று சொல்லுகின்ற போது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி. அந்த வகையில்தான் நீதிபதிகளாக வரவேண்டும் என்று ‘விடுதலை’ எழுதியது என்று எடுத்துக்கூறி வாழ்த்தி, உரையை நிறைவு செய்தேன்.
தந்தை பெரியாரால், கடவுள் மறுப்பு வாசகம் – உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க விடயபுரத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய நினைவுக் கல்வெட்டுத் திறப்பு _ 18.3.1992 அன்று பருத்தியூரில் அன்னை மணியம்மையார் படிப்பகத் திறப்பு விழா -_ காவாலக்குடியிலும், திருமதிக்குன்னத்திலும் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா _ இவை அனைத்தும் ஒருங்கிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்கூட்டம், கீழத்தஞ்சை மாவட்டம் திருவாரூருக்கு அருகிலுள்ள கண்கொடுத்த வனிதத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மகத்தான நிகழ்ச்சிக்கு நாகை காயிதே மில்லத் மாவட்ட தி.க. தலைவர் எஸ்.எஸ்.மணியம் தலைமை வகித்துப் பேசினார்.
முன்னதாக விடயபுரம் நினைவுச் சின்னம் (வரைப்படம்) உருவாக்கிய பெரியார் நூற்றாண்டு மகளிர் கல்லூரியைச் சார்ந்த ஆசிரியை ஹேமலதாதேவி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தேன்.
அப்போது, விடயபுரத்தில் 10 லட்சம் ரூபாய் செலவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று தெரிவித்தேன். ஏனென்றால், உலகத்திலே எந்த ஒரு நாட்டிலும், எந்த ஒரு பகுதியிலும், எந்த ஒரு தலைவருடைய சிலைக்கும் கீழே ‘கடவுள் மறுப்பு’ என்னும் வாசகம் கிடையாது என்று கூறினேன்.
31.3.1992 அன்று ‘தினகரன்’ நிறுவனர் கே.பி.கந்தசாமியின் 60ஆம் ஆண்டு விழா, ‘தினகரன்’ நாளிதழ் 15ஆம் ஆண்டு விழா, – சேலம், கோவை, வேலூர், மாலைமுரசு ஏடுகளின் 25ஆம் ஆண்டு விழா ஆகிய அய்ம்பெரும் விழா – சென்னை கலைஞர் திருமண மண்டபத்தில் கலைஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தி உரையாற்றினேன். அப்போது, ஒரு காலத்திலே அய்யா, அண்ணா ஆகியோர் பேசிய பேச்சுகள் எல்லாம் பத்திரிகைகளிலே வராது.
‘கிஸீஸீணீபீuக்ஷீணீவீ ணீறீsஷீ sஜீமீணீளீ’ என்றுதான் இனவுணர்வுக்கு எதிரான ஆங்கிலப் பத்திரிகைகளிலே செய்தி போடுவார்கள்.
இதை அண்ணா அவர்களே கூட வேடிக்கையாகச் செல்லுவார்: “அண்ணாதுரையும் பேசினார்’’ என்றுதான் போடுவார்கள். ஏன் அப்படி செய்தி போடுகிறார்கள் என்றால், படிக்கிறவர்கள், எங்கே பாடினார் என்று நினைத்து விடுவார்களே என்பதற்காக அண்ணாதுரையும் பேசினார் என்று செய்தி போடுவார்கள்’’ என்பதை அண்ணா அவர்களே சொல்லியிருக்கிறார்கள்! அப்படிப்பட்ட நிலைகள் எல்லாம் இந்த நாட்டிலே இருக்கின்றன.
இனவுணர்வுக்காக நீங்கள் பத்திரிகையை நடத்திக் கொண்டு வரும்பொழுது, அந்த இனவுணர்வுக்கு எதிரான கருத்துகளை ஒருபோதும் நீங்கள் சமரசப்படுத்திக் கொள்வது கிடையாது.
எது நம்மைப் பிரிக்கின்றதோ அது நமக்கு முக்கியமல்ல; எது நம்மை இணைக்கின்றதோ அதைத்தான் நாம் அகலப்படுத்த வேண்டும் என்று எடுத்துரைத்தேன். ‘தினகரன்’ நிறுவனர் கே.பி.கந்தசாமி அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
எஸ்.எஸ்.இராமசாமி
படையாட்சியார்
3.4.1992 அன்று ‘எஸ்.எஸ்.ஆர்’ என்று தென்னார்க்காடு மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படும் கடலூர் பெரியவர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் அவர்கள் 80ஆம் வயதில் காலமானார் என்கிற மிகுந்த துயரமான சோகச் செய்தி கிடைத்தது.
“தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்து, அதனையே தனது முக்கிய அரசியல் குறிக்கோளாகக் கொண்டு உழைத்தவருமான தந்தை பெரியார் அவர்களது பேரன்புக்குப் பாத்திரமானவரும், திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரது பாசத்திற்கும், அரசியல் பெருமக்களின் மரியாதைக்குமுரியவர் அவர்.
இவர் நகராட்சித் தலைவராகவும், மாவட்டக் கழக உறுப்பினராகவும் சட்டப் பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த காலத்தில் எல்லாம், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் எழுச்சிக்கும் ஏற்றத்திற்கும் சலிக்காது பாடுபட்ட பெருந்தகை ஆவார்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் பேராதரவினைப் பெற்று உழைத்தவர் என்று இரங்கல் அறிக்கை வெளியிட்டேன்.
7.4.1992 அன்று சிங்கப்பூரின் தமிழ்நெறிக் காவலர் பெருமதிப்பிற்குரிய அய்யா விக்டர் அவர்கள் மறைவுற்றார்.
“சிங்கப்பூர் தமிழர், சீர்திருத்த சங்கத்திற்கு கட்டடம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கிய திரு.ஓ.இராமசாமி (நாடார்) (ஆதித்தனாரின் மாமனார்) அவர்களும், ‘தமிழவேள்’ கோ.சாரங்கபாணி, (“தமிழ் முரசு’’ நிறுவனர்) ஆசிரியர் அவர்கள் வழிவழியாக பொறுப்பை ஏற்ற அந்த அமைப்பிற்கு தற்காலத்தில் தலைவராக விளங்கியவர் அய்யா விக்டர் அவர்கள்.
சிங்கப்பூரில் உள்நாட்டு, வெளிநாட்டுத் தமிழர்களுக்குச் சிறப்புச் செய்யப்படும் நிகழ்வுகள், பாராட்டு, வரவேற்பு விழாக்கள் என்றால் அங்கு தலைமை தாங்கி பொறுப்பை ஏற்று நடத்த முன்வரும் ஒரு மாமனிதர் _ பொது மனிதர் என்றால், அய்யா விக்டர் அவர்கள்தான்!
தமிழ் இன உணர்வின் சின்னம் எல்லோரிடமும் பரிவு காட்டி நடந்துகொண்ட சீரிய பண்பாளர் இல்லறம், துறவறம் போன்று தொண்டு செய்யும் இயல்புக்கு நாம் கூறும் சொல் ‘தொண்டறம்’ என்பதாகும். அந்தத் தொண்டறத்திற்குப் பெருந்தகையாளர்.
நாம் சிங்கப்பூர் செல்லும்போதெல்லாம் விமான நிலையத்திற்கே வந்து வரவேற்று திரும்பும்போது வழியனுப்பி இடையில் நடக்கும் பல்வேறு விழாக்களிலும் மிக்க பேரன்போடு பங்குகொண்ட அப் பெருந்தகையாளர் மறைந்தார் என்பது அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, தமிழ்கூறும் நல்லுலகத்திற்கே ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று ஆழ்ந்த இரங்கலை அறிக்கையின் மூலம் தெரிவித்தோம்.
9.4.1992 அன்று தமிழக அரசு அர்ச்சகர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆகம பயிற்சிக் கல்லூரி துவக்கப்படும் என்றும், முதலில் வேதப் பயிற்சிக் கல்லூரியை ஒரு கோடி ரூபாய் செலவில் துவக்கப் போவதாக தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்கள். இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவிகிதம், பழங்குடியினருக்கு 1 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதம் என்று இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று அறநிலையத் துறை மான்யக் கோரிக்கையின் மீது நடந்த விவாதத்தில் இதுபற்றி அரசின் நிலையை விளக்கினார்.
இதனை வரவேற்று 13.4.1992 அன்று ‘விடுதலை’யில், “தமிழக முதல்வரின் சரியான அணுகுமுறைக்கு திராவிடர் கழகத்தின் பாராட்டு’’ என அறிக்கை வெளியிட்டோம்.
(நினைவுகள் நீளும்)