வாசகர் மடல்

உங்களுக்குத் தெரியுமா? ஜனவரி 01-15 2020

 வெல்க பெரியாரின் புகழ்!

டிசம்பர் 1-15, 2019 இதழின் உள்ளே தமிழர் தலைவர் ஆசிரியரைப் பற்றிய தலைவர்களின் வாழ்த்துகள், கவிஞர்களின் கவிதைகள், கட்டுரைகள், அத்துணையும் படிக்கப் படிக்கப் படித் தேனாய் இனித்தன. வாழ்க அவர் பல்லாண்டு – தந்தை பெரியார் இட்ட பணி தொடர்வதற்கே! என வாழ்த்துகிறேன்.

டிசம்பர் 16-31, 2019 இதழில் முகப்புக் கட்டுரையாக மஞ்சை வசந்தன் தீட்டிய தொகுப்புச் செய்திகள் அத்துணையும் அருமை!

இந்த இதழில், வாசகர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர் அவர்களின் பதில்கள் முத்துகளாக அமைந்திருந்தன.

அன்புடன்,

– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

 ******

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். ‘உண்மை’ இதழ் (டிசம்பர் 16-31, 2019) படித்தேன். முதலில் அட்டைப் படமே என்னைப் பெரியாரை உற்று உற்று பார்க்க வைத்தது. உலகத்தில் அறிஞர்கள், கவிஞர்கள் தோன்றலாம். தம் சிந்தனைகளைத் தெரிவிக்கலாம். ஆனால், சிந்தனைகளை செயல்படுத்தியவர் இவர்தான்.

தலையங்கம் படித்தேன். கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை அறிவித்துள்ள இந்த அரசு பற்றி தோலுரித்துக் காட்டுகிறார்.

மனிதன் மானாக மாற முடியுமா? கட்டுரை அருமை. விஞ்ஞானம் என்பது இருக்கிறது என்பதே இந்த அஞ்’ஞானி’களுக்குத் தெரியவில்லையே. இதெல்லாம் என்னைப் பொறுத்தவரை மக்களை ஏமாற்றும் வேலை.

“நான் யார்?’’ தந்தை பெரியாரின் கட்டுரை “நான் யார்’’ என்று சிந்திக்க மட்டுமல்ல. என்னை செயல்படுத்தவும், பெரியார் வழியில் நடக்கவும் வைத்துள்ளது என்பேன். “உண்மை’’ இதழ் தரும் உண்மயான “மகிழ்ச்சி’’ இது.

முகநூல் பக்கம்(facebook) “சும்மா கிழி’’ கிழினு கிழித்து தோரணம் கட்டி விட்டார்கள்.

நான் படித்தது பெரியாரின் நூல்களை மட்டுமே! நல்ல புத்தகங்கள் ஒருவனை நல்லவனாக்கும் என்பதற்கு பெரியாரின் நூல்களே அத்தாட்சி.

என்றென்றும் நன்றியுடன்,

– ஞா.சிவகாமி,

 பாராட்டுக் கடிதம்

அய்யா வணக்கம். கடந்த நவம்பர் 16-30 இதழில், ஆசிரியரின் தலையங்கத்தில் ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புக்கு நேரடி பண வசூல் வேட்டை மோசடி அம்பலம். ‘விதை நெல்லுக்கு பெருச்சாளியை காவல் வைத்தது போல்’ தமிழ் வளர்ச்சித் துறைக்கு மாஃபா பாண்டியராஜனை அமைச்சராக்கியது; திருக்குறளை தாய்லாந்து மொழியில் பல லட்ச ரூபாய் செலவு செய்து மொழிபெயர்த்து பிரதமர் மோடி அவர்கள் வெளியிட்டது என ஆர்.எஸ்.எஸ்ஸின்  இரட்டை வேடத்தை வெளி உலகுக்குக் காட்டி விட்டது. ரங்கநாத் மிஸ்ராவின், “சமத்துவம் பேசினால் அன்பு போய்விடும்’’ என்னும் கூற்று பார்ப்பன நரிப் புத்தி எந்த அளவுக்கு ஊடுருவிப் பேச வைக்கிறது என்பதைக் காட்டுகிறது. மருத்துவர் ராமதாசின் சந்தர்ப்பவாத அரசியலை வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது அய்யாவின் அடிச்சுவட்டில் பதிவு. 

திருவள்ளுவரை காவிமயமாக்கும் முயற்சியைக் கண்டித்து, திருவள்ளுவரின் 1071ஆம் திருக்குறளை ஸ்டாலின் சுட்டிக்காட்டிப் பேசியிருப்பது அருமை. காலத்திற்கு ஏற்றவாறு உண்மைச் செய்தியைக் கொடுக்கும் “உண்மை’’ ஆசிரியருக்கு எல்லையற்ற அன்பு வாழ்த்துகள்.

இப்படிக்கு,

– பெரியசாமி, வாழப்பாடி

******

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

டிசம்பர் 16-31 இதழ் படித்தேன். உங்களுக்குத் தெரியுமா? எனும் பகுதி வரலாற்றில் நடந்த முக்கியச் சம்பவங்களைச் சொல்கிறது. ஆசிரியர் பதில்கள் பகுதியில் கேள்விகள், பதில்கள் அருமை. ‘ஆடாதீர்’ என்று சொல்லும் அளவிற்கு ஆரியம் தன்னுடைய வேலைகளை செய்து வருகிறது.

பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை முறியடித்த நீதிக்கட்சியின் தலைவர் பனகல் அரசர். அவரைப் பற்றிய தகவல் சிறப்பு. ‘வழி’ எனும் சிறுகதையை எழுதியவரான புதுமைப்பித்தன் தன் படைப்பாற்றலை இச்சிறுகதையில் வெளிப்படுத்தி உள்ளார். “உண்மை’’ இதழைப் படிப்போருக்கு நிச்சயம் உற்சாகம் பிறக்கும். அவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

பாவலரேறு கவிஞர் பெருஞ்சித்திரனார் அவர்கள் எழுதிய ‘பெரியாரைப் பெற்றிழந்தோம்’ எனும் இரங்கற்பா நம் தலைவரின் (பெரியார்) உண்மையான தியாகத்தை எடுத்துக் காட்டுகிறது. அந்தக் கவிதையில் மணிச்சுரங்கம் – மதிச்சுரங்கம் மோனையை சிறப்பாக கையாண்டுள்ளார் கவிஞர். நன்றி!

இப்படிக்கு,

– அ.உதயபாரதி, கெருகம்பாக்கம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *