சிறுகதை – வெந்தணலில்

ஜனவரி 01-15 2020

எத்தனையோதூரம் நடந்து வந்து விட்டான். ஊர்க்கோடியிலேயுள்ள ஆலமரத்தின் உச்சியும் அவன் கண்களில் தென்பட ஆரம்பித்தது. இரவெல்லாம் நடந்திருக்கிறான். இருள் அவனுக்குத் தெரியவில்லை. குளிரும் அவனைப் பாதித்ததாகக் காணோம். கிழக்கு வானில் உதயசூரியன் எழுந்து இரண்டு பனை உயரம் போய்விட்டான். வானத்திரையில் எத்தனையோ வர்ண ஜாலங்களைத் தீட்டிக் காட்டினான். அவற்றையெல்லாம் கவனிக்க அவனுக்கு நேரமேது; நினைப்பேது! அவனுக்கிருந்த ஒரே கவலையெல்லாம் ஊர் சேரவேண்டும். வேறு நாளாயிருந்தால் இயற்கையின் எழில் நடனத்தில் லயித்திருப்பான். இன்றைக்கு அவனது நிலை அதுவல்ல. காரணம் எவளை அவன் வாழ்வில் வசந்தத்தை வீசச் செய்ய கைப்பிடித்தானோ, அவளை மணமான அன்றே பிரிந்த துர்ப்பாக்கியவான் அவன். நாட்டின் கட்டளை போருக்கழைத்தது. மணக்கோலத்தைக் களைந்து போர்க்கோலம் பூண்டான். போகக் களத்தில் புதுமணப் பெண்ணுடன் புரள வேண்டியவன் போர்க்களத்திலே போரிட்டான். ஆண்டுகள் மூன்று உருண்டோடிவிட்டன. அந்த அபாக்கியவதியின் நினைவுச் சித்திரம் அவன் நெஞ்சை விட்டு அகலவில்லை. போர்க்களத்திலே எதிரிகள் வீசிய அம்புகளை அவன் சமாளித்திருக்கிறான், பெருமிதத்துடன். ஆனால், அந்தப் புன்னகைக்காரி வேல்விழியால் அவனது விலாப்புறத்தைக் கொத்தவரும்போது, அதனைத் தடுக்க கவசமேது, ஆற்றலேது? போரிலே அவனுக்கு வெற்றிதான். முழு மகிழ்ச்சி அவனது உள்ளத்தில். ஆனாலும் அவனுக்கு ஏதோ குறை. அவளது மடியிலே அவனது தலையைப் புதைத்துக்கொண்டு நிசப்தமான இரவு முழுதும் அவனது வீரதீர பராக்கிரமங்களை இனிக்க, இனிக்க அவளுடன் பேசவேண்டும் என்பது அவனது ஆசை. இன்னும் எத்தனை ஆசைகளோ!!

ஆலமரமும் வந்துவிட்டது அதைத் தாண்டி ஊருக்குள்ளே இரண்டு தெரு நடந்தால் அவனது இல்லம். யார் கண்ணிலும் படாமல் திடீரென்று வீட்டிற்குள் நுழைந்து அவனது ஆசைக்கினியவளையும், அன்னையையும் ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் மூழ்கடிக்க வேண்டும் என்பது அவனது பேராசை. பத்தடி நகர்ந்திருப்பான். அவன் கண்ட காட்சி அவனாலேயே நம்பமுடியவில்லை. ஊர்ச்சாவடி _ அங்கு பெரும் ஜனத்திரள். பஞ்சாயத்து கூடியிருக்கிறது. ஊர்ப் பெரிய தனக்காரன் நீதிபதிகள் வரிசையிலே தலைமை வகிக்கிறான். இன்னும் கொஞ்சம் அருகே நெருங்கினான். எல்லாக் கண்களும் இவனை நோக்குகின்றன. அந்தக் கண்களிலே மகிழ்வு ஒளியையல்ல, பரிதாபத்தைக் காண்கிறான். நிலைமை மேலும் குழப்பமாகிறது. குற்றவாளிக் கூண்டு தெரிகிறது. அங்கே நிற்பது வேறு யாருமல்ல. அவனது இதயக் கூண்டிலே சிறை வைக்கப்பட்டிருக்கும் கோமளவல்லியேதான். அவள் முகத்திலே சோகம் கப்பியிருக்கிறது. கண்களில் ஒளி சுடர்விடவில்லை. தேங்கிய குளமாகக் காட்சி அளிக்கிறது.

கணவனுடன் உடலுறவு கொள்ளாதவள் _ அவள் அய்ந்து மாத கர்ப்பிணி. விபசாரக் குற்றம் சாட்டப்பட்டு வெட்டவெளியில் நிறுத்தப்பட்டிருக்கிறாள். அவளோ வேதனைப்படுவதாகவும் காணோம்; வெட்கப்படுவதாகவும் காணோம். அச்சம் அவள் முகத்திலே இல்லை. அமைதி தாண்டவமாடுகிறது. அந்த மண்டலத்தில் விபசாரக் குற்றத்திற்கு தண்டனை மரணம். “பலாத்காரமாகக் கற்பழிக்கப்பட்டேன்’’ என்று கூறி எந்தக் கயவனையாவது காட்டினால் அவள் மன்னிப்புப் பெற மார்க்கமுண்டு; உயிர் தப்ப வழியுமுண்டு. அவளோ ஊமையாக நிற்கிறாள். ஏதாவது கேட்டால் சில சொற்கள்தான் உதிர்க்கிறாள்.

“நான் கர்ப்பவதி. அதற்குமேல் ஒன்றும் சொல்லத் தயாராக இல்லை. எனது நிலைக்குக் காரணம்: எவராலும் அடக்கமுடியாத உணர்ச்சிப் போராட்டத்தின் விளைவாய் ஒரே நாள் நான் நடந்துகொண்ட செயல். வைராக்கியத்தின் வேந்தனாம் விசுவாமித்திரனேயானாலும் அந்த நிலையில் தப்பியிருக்க மாட்டான்; தவறியே இருப்பான்’’ _ இவை தவிர வேறோர் வார்த்தை சொல்ல மறுக்கிறாள்.

நீதிபதிகளிலே ஓர் உத்தமர்; அறிஞர் சமுதாயத்தின் கோளாறுகளைக் குணப்படுத்தும் மருந்து தேடிக் கிடந்த வித்தகர். அவர் சொல்லுகிறார், “அந்தப் பெண்ணின் செயலுக்குக் காரணம் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் செய்த சதி. அவளை மன்னித்துவிடலாம்’’ என்று. அவரின் வார்த்தைகள் பெரியதனக்காரன் மூளையிலேயும் மற்றவர்கள் அறிவிலும் ஏறுவதாகக் காணோம். அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மறுநாள் அது நிறைவேற்றப்பட வேண்டும்.

மறுநாள் காலை. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு மன்றம் கூடியிருக்கிறது. ஊர் மக்களுக்கு உத்தமரின் வார்த்தைகளிலே அனுதாபம் இருந்தது. அவர்கள் என்ன நீதிபதியா? பிரதம மந்திரியா? அந்த மண்டலத்து வழக்கம் மரண தண்டனையை மணாளனே நிறைவேற்ற வேண்டும். கூர்மையான வாளொன்று அவள் கொழுநனிடம் கொடுக்கப்படும். குற்றவாளியென நிரூபிக்கப்பட்டவளை பீடத்திலே நிறுத்தி, அவளது தலையையும் உடலையும் இரண்டு துண்டாக அவன் வெட்ட வேண்டும். இந்தப் போர்வீரனோ திகைப்படைந்தான். நீதிமன்றம் உத்தரவிடுகிறது -_ அந்த உதவாக்கரையை இரண்டு துண்டாக்கு என்று. அவனது உள்ளம் கேட்கிறது _ ‘நீ எத்தனை எத்தனை துடியிடையாள், தோகைமயிலாள், தேன்மொழியாள், தேககாந்தியாளிடம் சொக்கிக் கிடந்தாய்; அரவணைப்பிலே மகிழ்ந்தாய்; அட்டகாசம் புரிந்தாய் _ நீ போர் வீரனாகத் திரிந்தபோது’ என்று.

“இவளை ஏன் கொல்ல வேண்டும்? இவளுடன் வாழவில்லை. விலக்கிவிடுகிறேன்’’ இப்படிச் சொல்கிறான் நீதிமன்றத்தின் கட்டளையை நிறைவேற்ற வேண்டியது இவன் கடமையே தவிர, இவன் விருப்பத்தை நிறைவேற்றவா நீதிமன்றம் இருக்கிறது? பச்சாதாபமிக்க தாய்க்குலத்தினர் சிலர், “அந்தத் தவறியவளை வேண்டுமானால் தண்டியுங்கள். அவள் வயிற்றிலே வளரும் வாயில்லாப் பூச்சியை, கர்ப்பத்திலே இருக்கும் மதலையைக் கொல்ல உங்களுக்கேது உரிமை?’’ என்று கேட்கின்றனர். யார் கேட்டாலென்ன? அந்தக் காரிகை பலிபீடத்தின் முன்னால் நிறுத்தப்பட்டாள். கணவன் என்ன காரியம் செய்யப் போகிறோம் என மருண்டான். போதை மருந்து அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அவன் கையிலே கொடுவாள் கொடுக்கப்பட்டது. இன்னும் ஓரிரு வினாடிகளில் அவள் தலையும் முண்டமும் இரத்தத் தடாகத்தில் மிதக்கும். அப்போதும் அவள் மன்னித்து இரக்கம் காட்டுங்கள் எனக் கெஞ்சவில்லை. எதற்கும் துணிந்தவளாய்க் காணப்படுகிறாள். அவள் தலையைச் சாய்த்துவிட்டாள். கணவனும் கத்தியை ஓங்கிவிட்டான். மயிர்க்கூச்செரியும் சந்தர்ப்பம்! ஒரே மவுனம். அந்த மவுனத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு பொக்கைவாய்க் கிழவி, வெறிபிடித்தவள்போல் பேச ஆரம்பித்தாள். கணவனின் கத்தி, கட்டிய மனைவியின் கழுத்தைப் பதம் பார்க்கவில்லை. அவனது கரத்திலே இருக்கிறது. கிழவி பேசுகிறாள்:

“எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது எனக்கு வயது பதினேழு. ஒரு நாள் நல்ல பூர்ண வெண்ணிலவு. நானும் எனது தோழிமார்களும் நமது ஊர்க் கோவிலிலே நிலாச்சோறு ஒன்று நடத்தினோம். என்னையொத்த குமரிகள் நெடுநேரம் கூடி விளையாடினோம். குறும்புகள் பேசினோம். கும்மியடித்தோம். பாட்டுகள் பாடி இன்ப நாதத்திலே மிதந்தோம். இனிய தென்றல் எங்களைத் தழுவியது. பேசிக்கொண்டே படிக்கட்டுகளிலே உறங்கிவிட்டோம். எனது தோழிமார்கள் ஒவ்வொருவராக வீட்டுக்குச் சென்றுவிட்டனர், என்னை ஆழ்ந்த உறக்கத்தில் விட்டுவிட்டு, திடீரென விழித்தேன். விழித்த நிலையில் இரண்டு காமுகர்களின் முரட்டுப் பிடியிலே சிக்கிக் கசக்கப்படுவதைக் கண்டேன். என்னை விடுவித்துக்கொள்வதற்கு முயலுவதற்கு முன்பு எனது கன்னி அழிந்துவிட்டது’’ என்றாள். உடனே நீதிபதிகள் அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்து வெறிபிடித்தவள் போல், “உங்கள் நீதிமன்றத்திற்குத் தலைமை வகிக்கிறானே பெரியதனக்காரன், இவன்தான் அந்த இரண்டு காமுகர்களில் ஒருவன்’’ என்று மேலும் உரக்கக் கத்தினாள். கூட்டத்தில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது! ஊர்ப் பெரியதனக்காரன் அப்போது அங்கு இல்லை. கிழவி கதையைத் தொடங்கியவுடனேயே மெல்ல நழுவிவிட்டான். யாரும் அதைக் கவனிக்கவில்லை. கிழவி மேலும் தொடர்ந்தாள்:

“மற்றோர் காமுகன் யாரென்று தெரிய விரும்புகிறீர்களல்லவா? அவர் எனது கணவர். ஆச்சரியமாக இருக்கிறதா? எனது கன்னி அழிக்கப்பட்டதும் எனது அன்னையிடம் சென்று விம்மி விம்மி அழுதேன். விவரத்தைச் சொன்னேன். அம்மா, அப்பாவிடம் அழுகுரலில் கூறினாள். அப்பா பெரிய போக்கிரி. ஊரிலே யாருக்கும் அவரைக் கண்டால் பயம். ஆனால், நியாயமானவர். இரண்டு துடுக்குச் சிறுவர்களையும் பிடித்து மிரட்டினார். ஒருவனை என்னை மணக்கச் செய்தார். மற்றவனை ஊரைவிட்டு விரட்டினார். இந்த ஊர்ப் பெரியதனக்காரன் அவர் உயிரோடிருக்கும்வரை ஊருக்குள்ளே காலடி எடுத்து வைக்கவில்லை.’’

கிழவியின் கதை மக்கள் மன்றத்திலே பெரிய மனமாறுதலை ஏற்படுத்தியது. நீதிபதிகளே மனமாறுதல் அடைந்தனர். முதலிலே சொன்ன உத்தமர் கூறிய நியாயத்தை ஆதரித்தனர். உத்தமர் கூறியபடி, “சந்தர்ப்பமும் சூழ்நிலையும் செய்த சதி’’ எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

போர்வீரனின் மனைவிக்கு விடுதலை மட்டுமல்ல, முன்னாள் உரிமைகளுடன் போர்வீரனுடன் புது வாழ்வு வாழ அனுமதியும் கொடுக்கப்பட்டது.

“தைரியவல்லியம்மா நீ! உணர்ச்சிக்கு அடிமைப்பட்ட உனது நிலையை ஒளிவு மறைவில்லாமல் உரைத்தாயே! உண்மையை மரணத்தின் தலைவாயிலிலும் மறைக்காமல் உலகத்துக்கு உரைத்தாயே, உத்தமி! உனது உதார குணத்திற்கு எனது வாழ்த்துகள். நீ எனது மகளாகப் பிறந்திருந்தால் என் உள்ளம் கர்வத்தால் கள்வெறி கொண்டிருக்குமம்மா’’ என்று உத்தமர் தீர்ப்பிலே குறிப்பிட்டார்.

போர்வீரன் பக்கம் திரும்பினார். ‘வீரனே, தீர்ப்பு வழங்கியாகிவிட்டது. அதனை நிறைவேற்றுவது உனது கடமை. உனது உத்தேசம் என்ன?’’

போர்வீரன்: “உத்தமரே, நான் ஓர் போர்வீரன். கட்டளைக்குக் கீழ்ப்படிந்து கடமையை நிறைவேற்றுவது போர்வீரன் இலக்கணம். தவிக்கவிடமாட்டேன் இந்தத் தளிர்மேனியாளை. அவளது பிள்ளைக் கனியமுதையும் எனது மதலையென பாவிப்பேன்’’ என்று கூறி மரணத்திலிருந்து தப்பிய மங்கையைத் தழுவி நின்றான்.

எங்கே என்கிறீர்களா _ இங்கேதான். எப்போது என்கிறீர்களா _ வேதகாலத்தில். வேதகாலத்தில் இவ்வளவு வேகத்துடன் தீர்ப்புகூற எந்த விவேகி இருந்தான், எப்படி முடிந்தது என்கிறீர்களா? பிறகேன் இன்றைய விபரீதம் என்கிறீர்களா? எல்லாம் உண்மைதான். விவேகி இருந்ததும் உண்மை; விபரீதம் இருப்பதும் உண்மை. எந்த ஊரில் என்கிறீர்களா _ சொல்ல முடியாது. தெரியாததால் அல்ல; உண்மை அழிக்கப்பட்டதால். காரணம், வெந்தணல்!

இந்திய உபகண்டத்தில் புரோகிதர்களின் கொட்டம் உச்சநிலையிலேயிருந்த நேரம். நால் வருணம் சதிராடியது.

ஆலயங்களில் மணியோசை கேட்டது. யாக குண்டங்களிலே புகை எழுந்தது. பாவ புண்ணியம் பேசப்பட்டது. அந்த லோக வாழ்விற்கு அங்குள்ள புரோகிதற்கு தட்சணை தாம்பூலம், கட்டளை, காணிக்கை வழங்கப்பட்டது. நடனமாதுகள் கோவிலிலே நடனமாடினர். சோம்பேறிகள் கோவில் பெருச்சாளிகளாயினர்.

மக்களோ, தங்கள் ஆடு மாடுகளைத் தின்ன வரும் வனவிலங்குகளிடம் ஆற்றலுடன் போரிடுவர். கள்ளர்கள் கொள்ளைக் கூட்டத்திடம் காப்பாற்றிக் கொள்வர். ஆனால், அவர்கள் ஆற்றல், அறிவு, தைரியம் மதத்தரகரின் முன்பு _ இடிக்கும், மின்னலுக்கும், புயலுக்கும், பெருவெள்ளத்திற்கும், பேய்க்கும், பிசாசுக்கும் மதத்தைக் காரணங்காட்டி மருட்டிய மதோன்மத்தரிடம் மண்டியிட்டது. பெண் மாயப் பிசாசம், பெண் பிறப்பு பாவம், ஆணுக்கு அடிமை பெண் _ என்கிற கவைக்குதவாதக் கருத்துகள் சமுதாயத்திலே செல்வாக்கு பெற்றது. சீறிவரும் புலியதனை முறத்தினாலே அடித்துத் துரத்தும் ஆற்றலிருக்கும் பெண்களுக்கு, தங்கள் கற்பைச் சூறையாடவரும் கபட வேஷதாரிகள், கடவுள் பெயரைச் சொல்லித் திரியும் கயவரிடம் தப்பும் வழியறியார். சினங்கொண்ட சிங்கத்திடம் சண்டையிடுவர்¢; நரிக்குணங் கொண்ட புரோகிதரிடம் மண்டியிடுவர்.

மதத்தின் கொடுமையும் மகளிர் அடிமையும் கண்ட ஓர் புதுமணத் தம்பதிகளுக்கு இந்தச் சமுதாயத்தின் மீது கோபக்கனல் மூண்டது. தாங்களே உண்மையை உணர வேண்டுமென்று பெரும் யாத்திரை கிளம்பினர்.

வனமிருகங்கள் நிறைந்த ஆரணியத்தின் நடுவே சென்று கொண்டிருந்தனர். வேடுவர் சிலர் சிங்கங்கள் இரண்டை வேட்டையாடிக் கொண்டிருந்தனர். உயர்ந்த மரத்தில் இருவரும் ஏறினர்.

வில்லிலே நாணேற்றி அம்பைத் தொடுக்கக் காத்திருந்தனர். அநுபவம் நிறைந்த வேடுவர் சிலர், “பெண் சிங்கத்தை முதலிலே கொல்லுங்கள்! பெண் சிங்கத்தை முதலிலே கொல்லுங்கள்!’’ என்று கத்தினர். எல்லா அம்புகளும் பெண் சிங்கத்தின் மீது ஒரே நேரத்தில் பாய்ந்தன. அடுத்த சில விநாடிகளில் ஆண் சிங்கமும் வேட்டையாடப்பட்டது. கீழேயிறங்கிய தம்பதிகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. “வேடுவனாரே, முதலில் பெண் சிங்கத்தைக் கொல்வதற்குக் காரணமென்ன?’’ என்று வினவினர். “முதலில் ஆண் சிங்கத்தைக் கொன்றிருந்தால் பெண் சிங்கம் சும்மா இருக்காது. எங்களில் சிலர் உயிரையாவது மாய்த்திருக்கும்’’ என பதிலிறுத்தனர். வேடுவர் செயலுக்கும் வேதியக் கூட்டத்தின் செயலுக்கும் வித்தியாசமில்லை என உணர்ந்தனர். வேடுவரைப் போலவே மதவாதிகளும் பெண்ணை பைசாசமாக்கி, கோழையாக்கி, பாவமாக்கி அடிமைப்படுத்தியதால், ஆணையும் வெறும் சூதாட்டக்காயாக, பொம்மையாகப் பயன்படுத்த முடிந்தது என்கிற முடிவுக்கு வந்தனர்.

அந்த முடிவுக்கு மற்றொரு சம்பவமும் ஆதாரமாய் அமைந்தது. தவம் செய்து கொண்டிருந்த முனிபுங்கவர் ஒருவரின் பர்ணசாலைக்குச் சென்றனர். தங்களுக்குள்ள அறிவுத் தாகத்தையும் தங்கள் யாத்திரையின் நோக்கத்தையும் விளக்கினர். முனிபுங்கவர் மோன நிலையிலிருந்து கண் திறந்து ஆண் மகனைப் பார்த்து, “உனக்கு ஞானோபதேசம் செய்கிறேன். ஆண்டவன் சந்நிதானத்தில் பெண் இருக்கக் கூடாது, பெண் பைசாசம்; அவளைப் போகச் சொல்’’ என்றார். ஆண் மகன் “ஆனும் பெண்ணும் சரிநிகர் சமானந்தானே; பெண்ணை இழிவுபடுத்துவது சரியல்ல’’ என்றான். முனிபுங்கவருக்கு கோபம் பீறிட்டது. “சாணிக் குழியைத் தோண்டுவதால் மாணிக்கமா கிடைக்கும்?’’ என்றார்.

அவனுக்கு ஆத்திரம் பீறிட்டது. “பெரியவரே உளறாதீர்’’ என்றான். முனிவர் தமது தபோவலிமையினால் அவன் மனைவியை பஸ்பம் செய்வதாகப் பயமுறுத்தினார். மனைவியோ மருளவில்லை, “நடக்கட்டும் முனிவரே’’ என்று எதிரே நின்றாள். முனிபுங்கவரின் கண்கள் கொவ்வைப் பழமாயின. தீப்பொறி பறக்க கண்களை உருட்டினார். தமது தோல்வியை நினைத்து வெட்கித் தலைகுனிந்தார். அவரது சீடர்களோ விதண்டாவாத தம்பதிகளை நையப் புடைக்க ஆரம்பித்தனர். வேடிக்கை பார்த்த வழிப்போக்கர்கள் அவர்களைக் காப்பாற்றினர்.

அந்தத் தம்பதிகளின் பெயர் சாருவாகன்_சாரிணி ஆகும். நாலாயிரம் வருடங்களுக்கு முன்பு சண்டமாருதமென வளர்ந்த சனாதனத்திற்கு எதிராக “நாலு வேதமேது? நாலு ஜாதி எப்படி நாதன் கட்டளையாகும்? எங்கே சொர்க்கம்? எங்கே நரகம்?’’ என்று சமர் புரிந்தவர் சாருவாகர். இவர்தான் ஆரம்பத்திலே தீட்டியுள்ள சம்பவத்தில் தீர்ப்பு வழங்கிய உத்தமர்.

இந்த உத்தமரின் பார்ப்பனிய எதிர்ப்புக் கருத்துகள் மக்கள் மன்றத்திலே குடியேற ஆரம்பித்தன. பார்ப்பனியம் செத்துவிடுமோ என்கிற பயங்கர நிலை ஏற்பட்டது. இவரது எழுத்துகள், கருத்துரைகள் தீக்கிரையாக்கப்பட்டன. எனினும் அவர்கள் வெற்றி பெறவில்லை. அவரது கருத்துகள் பவனிவர ஆரம்பித்தன.

ஒரு நாள் இரவு, சாருவாகர் குடியிருந்த வீட்டிலே பெருந் தீ! வீட்டிற்குள் சாருவாகர்! வெந்தணலில் அவரது உடல் சாம்பலாகியது. வைதிகம் அவரைப் பற்றிய எல்லா ஆதாரங்களையும் அக்கினிக்கு இரையாக்கியது. எல்லா ஆதாரங்களையும் அழித்தது. பார்ப்பனியம் சிங்காதனம் ஏறியது _ இன்னும் சிரஞ்சீவியாக இருக்கிறது. சாருவாகரைப் பற்றிய ஆதாரங்களெல்லாம் தத்துவ விளக்கங்களில் அவருக்கு விரோதமாய் எழுதியிருப்பவைதாம். வைதிகம் அன்றைய தினம் சாருவாகரை ஒழித்ததனால் அந்தக் கருத்துகள் ஒழிந்துவிட்டன என்று கருதியது. சாருவாகரின் கருத்துகள் சாகாது; வெற்றி பெறாமல் போகாது என்பதை அவரது சாம்பல் புழுதி நினைவுபடுத்தியதை வெற்றிக் களிப்பிலே மறந்துவிட்டனர். ஒன்று சொல்வோம், வைதிகத்திற்கும் அதன் காவலர்களுக்கும்: “எதை அவர்கள் அழிக்க முயன்றனரோ அது வெந்தணலில் வேகாதது, வெள்ளத்தாலே போகாதது, வெற்றி பெறப்போவது.’’

– K.A. மதியழகன்

(1968, டாக்டரம்மா சிறுகதை தொகுப்பிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *