மதிப்புமிகு ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
வரவர “உண்மை’’ இதழ் தூங்கவிடாமல் சிந்திக்க வைக்கிறது. இது “உண்மை’’க்குக் கிடைத்த வெற்றிதான்! உண்மை வெல்லும். பொய், பித்தலாட்டங்கள், மூடநம்பிக்கைகள் முழுவதும் விலகும் – விலக வேண்டும். “உண்மை’’ இதழின் பங்கு இதில் அளப்பரியது.
திருவள்ளுவருக்கே சாயம் பூசிவிட்டார்களே? சாயம் வெளுத்துப் போகும். ஏனெனில், இவர்களது சிந்தனைகள் உலுத்துப் போன சிந்தனைகள்! மதம், கடவுள் என்று எப்படி, இப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள்! மக்கள் விழிப்படைய வேண்டும். திருக்குறளைப் படித்தால், உண்மை விளங்கும். ஜாதி, மதம், கடவுள் இவற்றுக்கு அப்பாற்பட்டது. பொது அறிவு நெறியைப் போதிக்கும் நூல் அது.
திருக்குறளில் ‘மானம்’ என்று ஓர் அதிகாரம் உண்டு. பெரியார் சொன்ன தன்மானத்தைத்தான் திருவள்ளுவரும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். (Self Respect) சுயமரியாதை, தன்மானம், அறிவு, அறிவுசார்ந்த சிந்தனை, ஒழுக்கம் இதைத்தானே வாழ்நாள் முழுவதும் பெரியார் வலியுறுத்தினார். அதைத்தான் “ஒழுக்கம் விழுப்பம் தருவதால், ஒழுக்கம் உயிரினும் பெரிதாக ஓம்பப்படும்’’ என்கிறார் வள்ளுவர். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பு ஒவ்வாது செய்தொழில் வேற்றுமையால்’’ என்கிறார் வள்ளுவர். இது எப்படிப்பட்ட உயர்நெறி, உலகிற்கே உகந்த நெறி! இதனால், சனாதனம் சுக்கு நூறாக நொறுங்கிப் போகிறதே!
“அறிவியலுக்கு அடிப்படை இந்துமதமா?’’ என்னும் கட்டுரை, உண்மையில் என்னை மீண்டும் மீண்டும் சிந்திக்க வைத்தது என்பேன். நன்றி!
சந்திராயனை அனுப்பி விட்டு, இங்கே, இந்திரன், சந்திரன் கதைகள் உலா வருவது அபத்தத்தின் உச்சம் என்பேன். மொத்தத்தில் “உண்மை’’ உரக்கச் சொல்கிறது உண்மையை!
என்றென்றும் நன்றியுடன்,
– ஞா.சிவகாமி, போரூர், சென்னை – 116