டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன்
அவர்களுடன் நேர்காணல்
டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் மிகச் சிறிய கிராமத்திலிருந்து மருத்துவம் படித்து தனது கடின உழைப்பால் மருத்துவத் துறையில் உயர் பதவிகள் பலவும் பெற்றவர். 34 ஆண்டுகளாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் தேர்வுக் குழு உறுப்பினராகவும், சமூகநலத் துறையில் நாட்டின் பல பகுதிகளில் மருத்துவ அலுவலராகவும் பணியாற்றியுள்ளார். ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, எத்திராஜ் கலைக்கல்லூரி, எம்.பி. —-நீரிழிவு மருத்துவமனை போன்ற நிறுவனங்களில் கவுரவப் பேராசிரியராக செயல்பட்டவர். அவருடனான நேர்காணலில்…
ஆசிரியர் முதல் சந்திப்பு எப்போது?
ஆசிரியருக்கும் எனக்கும் நேரிடையான சந்திப்பில்லை. என்னுடைய உறவினர் சிவசங்கரன் நெடுஞ்சாலைத் துறையில் இருந்தார். அவர் மூலம் ஆசிரியருடன் தொடர்பு ஏற்பட்டது. பின் தந்தை பெரியார் அரசு மருத்துவமனையில் உடல் பாதிப்பால் சிசிச்சை எடுக்கும்போது பெரியாரைப் பார்த்தேன். உடனே அய்யா அவர்கள் எழுந்து நின்றார். அந்தப் பொழுதில் நான் மிகவும் கூனிக் குறுகி நின்றேன். எவ்வளவு பெரிய மனிதர் அய்யா அவர்கள், சிறியவர்களுக்கும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் பண்பு அவரிடம் கண்டு வியந்தேன்.
அப்போது ஆசிரியருடனான அறிமுகம் கிடைத்தது. பின் மிசாவில் ஆசிரியர் சிறையில் இருந்த நிலையிலும், என் தந்தையின் மறைவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். பின் வெளிவந்தவுடன் என்னிடம் தனிப்பட்ட முறையில் ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.
1991இல் உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் (ராஜாஜி மருத்துவ மனையில்) இதய சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தார். நான் அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை. இருப்பினும் என்னுடன் நட்பில் தொடர்ந்தார். பின் அமெரிக்கா சென்றார்.
ஆசிரியருக்கும் உங்களுக்குமான நட்பை பற்றி கூறுங்கள்?
ஆசிரியரோடு எனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு உண்டு. அவர் மிகவும் அன்புள்ள, பாசமிக்க மனிதராகப் பழகக் கூடியவர். பெரியார் நிறுவனங்களான மருந்தியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்றவற்றில் அவருடன் பணியாற்றியுள்ளேன். பெண்களின் முன்னேற்றத்திற்காக உருவான ஓர் அமைப்பான “புரா’’ நிறுவனத்திற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். பிறருக்கு உதவுவதில் அவருக்கு ஈடு இணையில்லை. எனக்கு விவசாயம் தெரியாது. ஆனால், தஞ்சையில் கல்லூரி வளாகத்தில் ‘மண்புழு’ உரம் பற்றி தெரிந்துகொண்டு, அதனை எனக்குக் கொடுக்கும்படி கேட்டேன். உடனே வண்டியில் ஏற்றி அனுப்பினார். அது எங்கள் நிலத்தில் நல்ல பலனைத் தந்தது. அவரின் இணையர் மோகனா அம்மாள் மீது எனக்கு மரியாதை உண்டு. எப்போதும் என்னை அன்போடு உபசரித்துப் பேசுவார். அவரின் குடும்பத்தினர் எல்லோருடனும் எனக்கு தொடர்பு உண்டு. மரியாதையான பண்பான குடும்பத்தினர். மருத்துவத்தில் பலமுறை என்னிடம் ஆலோசனை கேட்பார். என்னிடம் கலந்து ஆலோசிக்காமல், உடல்நலம் பற்றி எதுவும் செய்ய மாட்டார். வெளிநாட்டில் பயணம் செய்தால்கூட, என்னிடம் மருத்துவம் சம்பந்தமான ஆலோசனைகளைக் கேட்பார்.
நல்வாழ்வு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வில் எம்.எஸ்.இராமச்சந்திரன், ச.இராஜரத்தினம் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கும் ஆசிரியர்
ஆசிரியருக்கும் உங்களுக்குமான நட்பில் மறக்கமுடியாத சம்பவம் ஏதாவது கூறுங்களேன்?
நிறைய சம்பவங்கள் உள்ளன. அதில் அவசரத்திற்கு ஞாபகம் வரவில்லை என்றாலும், என்னால் மறக்காமல் எப்போதும் நினைவில் இருக்கும் நிகழ்வு. என் மனைவியின் உடல்நிலை பிரச்சினையைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது, அதற்கான ஒரு மருந்து கிடைக்கவில்லை எனக் கூறினேன். பின் நானும் அதை மறந்துவிட்டேன். ஆனால், அதனை மறக்காமல் மனதில் வைத்துக்கொண்டு அவர் சிங்கப்பூர் சென்றபோது அங்கு அதை விசாரித்து வாங்கிவந்து தந்தார். எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். நான் அந்த மருந்தைப் பற்றி ஒரு வரி மட்டுமே பேசினேன். அதையும் போகிறபோக்கில் பேசியதை ஞாபகம் வைத்துக்கொண்டு நண்பர்களுக்கு உதவும் அந்த நிகழ்வு என்னால் மறக்க முடியாதது. மற்றொரு நிகழ்வு, என் தந்தை இறந்தபோது மிசாவிலிருந்து வெளிவந்து எனக்குச் சொன்ன ஆறுதல்.
பெரியார் பற்றிய உங்கள் கருத்து என்ன?
ஆசிரியர் கி.வீரமணி என்னுடைய நண்பர் என்பதால் இதைச் சொல்லவில்லை. பெரியாரிடம் உள்ள சிறப்பு என்னவென்றால், அவர் உண்மையானவர்; நடிக்கமாட்டார்(‘He is not hypocrite’). மிகவும் தைரியமானவர். மற்றவர்களை மதிக்கக்கூடிய பண்பாளர். யாரையும் புண்படுத்தும்படியாக எதுவும் செய்யமாட்டார். மிகவும் சிக்கனமான மனிதர். வீண் செலவாக ஒரு பைசாவையும் செலவு செய்யமாட்டார். அந்தச் சிக்கனம் எதற்கு என்பதுதான் பின்னாளில் உருவான மகளிர் கல்லூரி, சுயமரியாதை நிறுவனங்களுக்கு அடித்தளமிட்டது. மணியம்மையாருக்கும் அவருக்கும் சரியான புரிதல் இருந்ததாலேயே அவரை கழகத்தில் சேர்த்து, அடுத்த தலைமுறையை உருவாக்கினார். எனக்கு சாமியார்களைப் பிடிக்காது. அது எந்த மதம் சார்ந்தவராக இருந்தாலும் அத்தனை பேரும் அயோக்கியர்கள்தாம். அதே மாதிரி பேய், பிசாசு போன்ற சமாச்சாரங்களும் பொய்யானவை. அது மக்களை முட்டாளுக்கும் செயல். இதனை திராவிடர் கழகத்தின் பல புத்தகங்களிலும், நிகழ்ச்சிகளிலும் அறிவியல்பூர்வமாக எடுத்துரைத்து வருகின்றனர். எனக்கு மிகவும் பிடித்தவர் எம்.ஆர்.ராதா அவர்கள். அவர் பெரிய திறமையான மனிதர். ஆசிரியரிடமும் அவரைப் பற்றிக் கேட்டேன். ஆசிரியர், “நாம் பேசவேண்டிய கருத்தை 2 நிமிடம் சொன்னால், அவர் அரை மணிநேரம் பேசுவார். அவர் அத்தகைய திறமைசாலி’’ என்றார்.
ஆசிரியருக்கு இதய பாதிப்பு வந்தபோது நீங்கள் அவருக்குக் கூறிய ஆலோசனை என்ன?
அவருக்கு இதய பாதிப்பு வந்தபோது நான் அவருக்கு மருத்துவம் பார்க்கவில்லை. பின் அவரும் அமெரிக்க சென்றுவிட்டார். ஆனால், அவரை நான் சந்தித்துப் பேசும்போது சில மருத்துவ ஆலோசனைகளை தனிப்பட்ட முறைகளில் எடுத்துக் கூறுவேன். அதில் முக்கியமாக உங்கள் சுற்றுப் பயணத்தைக் குறைத்துக்கொண்டு நல்ல உறக்கம் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லோருடைய உயர்வு, தாழ்வுக்கும் செல்லுவதால் நீங்கள் முறையான ஓய்வு எடுக்க வேண்டும். வெளிக்கூட்டத்திற்கு முக்கியமான நிகழ்வுக்கு மட்டும் நீங்கள் செல்லுவதுபோல அட்டவணைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கும் வயதாகிறது. அதை மனதில் வைத்து உங்கள் உடல் சொல்லுவதைக் கேட்க வேண்டும் என நட்போடு எடுத்துக் கூறுவேன். நான் மருத்துவத் துறையில் நடந்துவரும் மாற்றங்கள் பற்றிக் கூறுவதை ஆர்வத்தோடு கேட்டுக்கொள்ளுவார்.
தந்தை பெரியார், மணியம்மையார், ஆசிரியர் மூவரும் எந்த வகையில் இயக்கத்தை மக்களிடம் கொண்டு சென்றார்கள், அதில் ஆசிரியரின் பங்கு என்ன?
பெரியார் மிகப் பெரிய செல்வந்தர்தான். ஆனால், அவர் அதனை பெரிய அளவில் அனுபவிக்கவில்லை. சிக்கனத்தை முக்கியமாகக் கடைப்பிடித்தார். ஆனால், ஆசிரியர் தலைமையின் கீழ் கழகத்தின் வளர்ச்சி அபரிமிதமானது எனலாம். பெரியார் ஒருவகையில் கழகத்தினைக் கொண்டு சென்றார் என்றாலும், ஆசிரியருக்குக் கிடைத்த மிகப் பெரிய தொடர்பு மற்றும் கல்வி அறிவினால் தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் கல்வி நிறுவனங்கள், அய்ஏஎஸ் அகாடமி, திராவிடன் வங்கி, நூலகம் போன்றவற்றின் வளர்ச்சியில் ஆசிரியரின் உழைப்பு அளவிட முடியாதது. ஆசிரியருக்கு உள்ள ஆங்கிலப் புலமை முக்கியமான ஒன்று. அவர் இங்கிருந்து சென்று வடஇந்தியாவில் டில்லியில் ‘பெரியார் மய்யம்’ கட்டியது மிகப் பெரிய சாதனை. அதற்கு எத்தகைய எதிர்ப்பு வந்தபோதும் அதில் உறுதியாக இருந்து அந்தப் பணியை முடித்தார். அதற்கு ஆபத்து வந்தபோது ஒரே இரவில் அப்போதைய பிரதமர் வாஜ்பேயினை சந்தித்து அதற்கான மாற்று இடத்தையும் வாங்கினார் என்றால், ஆசிரியரிடம் மற்றவர்களுக்கு உள்ள மரியாதையும் ஒரு காரணம்.
அண்மையில் ஆசிரியருக்கு அமெரிக்க மனிதநேய அமைப்பு ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்’ விருது கொடுத்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அது வரலாற்றுச் சிறப்புமிகுந்த ஒன்றாகும். அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் ஆசிரியருக்கு இவ்வளவு சிறப்பு கிடைத்தது _ நாமெல்லாம் பெருமைப்படக்கூடியதுமாகும். அமெரிக்காவில் உள்ள தமிழர்களுக்கும் இந்தப் பெருமை சேரும். அவருடைய வாழ்நாள் தொண்டறப் பணிக்கான மிகப் பெரிய அங்கீகாரம்தான் இந்த விருது.
இன்றைய இளைய சமூகம் ஆசிரியரிடமிருந்து எதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள்?
இளைய சமுதாயத்தினர் எல்லோரும் ஆசிரியரை ஒரு வகையில் நினைத்துப் பார்க்க வேண்டிய மகத்தான செயல் 69% இடஒதுக்கீடு சாதனை ஆகும். ஆசிரியரிடமிருந்து இளைஞர்கள் உண்மை, வேகமாகப் பணியாற்றும் தன்மை, மற்றவர்களைத் தொடர்புகொள்ளும் பாங்கு, மதித்துப் பேசும் குணம் ஆகியவை பின்பற்றக் கூடியன. அவரை அரசியல்வாதியாகப் பார்க்காது, சுயமரியாதை இயக்கத் தலைவராக ஏற்றுக்கொண்டு இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.
ஆசிரியரிடம் உங்களுக்குப் பிடித்தது?
எளிமை, பண்பு, மனிதனை மனிதனாக மதிக்கும் குணம்.
ஆசிரியருக்கு உரிய சிறப்பு கிடைத்ததாக நினைக்கிறீர்களா?
அவருடைய உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதற்கு உதாரணம் அமெரிக்காவில் கொடுக்கப்பட்ட மனிதநேய வாழ்நாள் சாதனை விருதேயாகும். இன்னும் உயரிய விருதுகள் கிடைத்திட வேண்டும்.
ஆசிரியருக்கு பிறந்த நாள் வாழ்த்தாக தாங்கள் கூற விரும்புவது?
அவர் நீண்ட நாள்கள் தேக ஆரோக்கியத்தோடும், நல்ல மன ஆரோக்கியத்தோடும் இன்னும் மக்கள் பணியும், கழகப் பணியும் செய்ய மனதார வாழ்த்துகிறேன்.