ப.திருமாவேலன்
பொருளாதார உலகமயமாக்கலை எதிர்ப்போர் நாம். ஆனால், பெரியாரிய உலகமயமாக்கலை ஆதரிப்போர் நாம்!
ஏனென்றால், பெரியாரியம் என்பது ஓர் இனத்துக்கோ, ஒரு மொழிக்கோ, ஒரு மாநிலத்துக்கோ, ஒரு நாட்டுக்கோ உரியதல்ல; இவற்றுக்குள் அடங்கிவிடக் கூடியதும் அல்ல. அது உலகளாவியது. ‘கடவுளை மற; மனிதனை நினை’ என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது. ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது. ‘சுயமரியாதை தேவை’ என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது. ‘பகுத்தறிவு கொள்’ என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது. ‘மனிதருக்குள் ரத்தபேதம் இல்லை’ என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது. ‘ஆணுக்கும் பெண்ணுக்கும் பால்பேதம் இல்லை’ என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது. இவற்றையெல்லாம் சொல்வதால் பெரியாரியமும் அனைத்துலகுக்கும் பொதுவானது.
இதனை தந்தை பெரியார் அவர்களே உணர்ந்ததால்தான், தான் வாழ்ந்த காலத்திலேயே குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் உலக உருண்டைக்குள் தனது உண்மைப் பயணத்தை மேற்கொண்டார். 1929இல் மலேசியா சென்றார். 1932இல் எகிப்து, கிரீஸ், துருக்கி, ரஷ்யா, இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, பிரான்ஸ், இலங்கை என வலம் வந்தார். 1954இல் பர்மா சென்றார். அப்போது அய்யா சென்றது எல்லாம் உலகம் உணர. இப்போது ஆசிரியர் வீரமணி அவர்கள் மேற்கொண்டு வரும் பயணங்கள் எல்லாம் உலகுக்கு அய்யாவை உணர்த்த!
கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை நானும் பெற்றேன். எனக்கு அருகில் அமர்ந்திருந்த திராவிடர் கழகத் துணைத் தலைவரும் வீறுகொண்ட கவிஞரும் தனது வாழ்க்கையை பெரியாரியத்துக்கு கொடை வழங்கியவருமான கலி.பூங்குன்றன் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர் சொன்னார்: ‘இப்படி எல்லாம் நடக்கும் என்று அய்யாவே நினைத்திருக்க மாட்டார். தான் மறைந்த பிறகு தனது கொள்கைக்காக அமெரிக்காவில் மாநாடு நடக்கும் என்றெல்லாம் அய்யா நினைத்திருக்க மாட்டார்’ என்று சொன்னார். அய்யாவே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவரது கொள்கைகள் இன்று மாநில எல்லைகளைக் கடந்து, நாட்டு எல்லையைக் கடந்து உலகளாவியதாக மாறிவரக் காரணம் ‘உலகப்பன்’ கி.வீரமணிதான்!
எம்.ஏ. பொருளாதாரத்தில் முதல் தகுதி பெற்றவர் கி.வீரமணி. அதற்கு தங்க மெடல் பெற்றார். பொருளாதார ஆனர்ஸ் தேர்வில் மூன்று பட்டங்களையும் பெற்றார். இவருக்குப் பேராசிரியராக இருந்தவர் எஸ்.வைத்தியநாத அய்யர். அவர் கி.வீரமணிக்கு ஒரு நற்சான்று பத்திரம் எழுதிக் கொடுத்தார். அதில் என்ன சொன்னார் என்றால்….
“இவர் பிரிட்டன் அல்லது அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு பல்கலைக் கழகத்திலாவது சேர்ந்து ஆய்வுப் பட்டம் மேற்கொண்டு வெற்றி அடைய வேண்டும் என்று மிகவும் பலமாக பரிந்துரை செய்கிறேன்’’ என்று எழுதிக் கொடுத்தார். இன்றைக்கு பல நாட்டுப் பல்கலைக் கழகங்களால் ஆய்வு செய்யப்படும் மனிதராக ஆசிரியர் வளர்ந்திருப்பதற்குக் காரணம் அவரது அறிவும், ஆற்றலும், அர்ப்பணிப்பும், உழைப்பும்!
இந்த நான்கும் தனித்தனியே பெற்றவர்கள் அதிகம் உண்டு. அறிவு இருப்பவர்கள் அதனைப் பயன்படுத்தும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பதில்லை. அறிவும், ஆற்றலும் கொண்டவர்கள், அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமல் சுயநலமாகச் சுருண்டு விடக்கூடும். அர்ப்பணித்துக் கொண்ட அனைவரும் சுறுசுறுப்பானவர்களாக இருந்துவிடுவது இல்லை. சோம்பேறிகளாக இருந்துவிடக் கூடும்.
தன்னறிவுடன் பெரியாரின் அறிவையும் சேர்த்து, தன் ஆற்றலுடன் இயக்கத்தவர் ஆற்றலையும் இணைத்து, தனது அர்ப்பணிப்புடன் ஆயிரக்கணக்கானவரையும் அர்ப்பணிக்க வைத்து, தான் உழைப்பதோடு அடுத்திருப்பவர் அனைவரையும் உழைக்கத் தூண்டி – தான் ஒரு வீரமணி அல்ல, ஓராயிரம் வீரமணி என்று ஒவ்வொரு நாளும் காட்டிக் கொண்டு இருப்பவர் தான் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள்.
அய்யாவைப் போல ஆளை அடையாளம் காணும் ஆள் ஒருவர் இல்லை. பேரறிஞர் அண்ணாவை திருப்பூரில் பார்க்கிறார், அய்யா. “என்னோடு வந்து விடுகிறீர்களா?’’ என்று கேட்கிறார். கொண்டு செலுத்தும் முகம் என்று அண்ணாவைப் பார்த்ததும் தெரிகிறது அய்யாவுக்கு. கண்டதும் காதல் இது.
கழகத் தொண்டுக்கு இதழுக்கு முழுநேரமாகத் தன்னை ஒப்படைக்க ஒருவர் வேண்டும் என்று அன்றைய வழக்கறிஞர் வீரமணியைக் கேட்கிறார் அய்யா. இதனை இதனால் இவண் முடிக்கும் என்று ஆய்ந்து செய்த தேர்வு இது. பலநாள் இருந்த ஒருதலைக் காதல் இது. பல சிந்தனையாளர்கள் தோற்ற இடம் இது. தனக்குப் பின்னால் இயக்கத்தை வழிநடத்தத் தகுதி வாய்ந்தவர்களைத் தேர்வு செய்ய முடியாமல் போனதால்தான் பல இயக்கங்கள், அமைப்புகள், இதழ்கள் அழிந்திருந்திருக்கின்றன. தனக்குப் பிறகான இடத்துக்கு தான் வாழ்ந்த காலத்திலேயே மிகச் சரியாக அடையாளம் காணக்கூடியவராக இருந்தது மட்டுமல்ல, உட்காரவும் வைத்தார் அய்யா. உரிமையைக் கொடுத்தார். அந்தத் தேர்வு சோடை போகவில்லை என்பதை உணர்த்தியது அமெரிக்கா. உணர்த்திக் கொண்டு இருக்கின்றன உலகநாடுகள்.
நாசிசம் தலைதூக்கிய ஜெர்மனியிலும் நிறவெறி மனோபாவம் கொண்ட அமெரிக்க மண்ணிலும் பெரியாரிய மாநாடுகளை நடத்தியதன் மூலமாக ஆசிரியர் வீரமணி காலத்தில் பெரியார் உலகமயமாகிக் கொண்டு இருக்கிறார். தனது அறிவையும் ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் தனக்காக அல்ல, பெரியாரை உலகமயமாக்குவதற்காக ஒப்படைத்துக் கொண்டு உள்ளார் ஆசிரியர். ‘திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர்’ என்று அன்று சின்னஞ் சிறுவனான வீரமணியை அடையாளம் கண்டு அண்ணா சொன்னார். அந்த திருஞானசம்பந்தம் தான் இன்று திராவிட இயக்கத்தின் முதற்திருவாக வளர்ந்து நிற்கிறார். இந்த முக்கால் நூற்றாண்டு காலமும் தான் பிடித்த பெரியாரை விட்டுவிடாமல் பற்றி நின்றதுதான் வீரமணிக்கும் பெருமை. பெரியாருக்கும் பெருமை. திராவிடர் கழகத்துக்கும் பெருமை. திராவிட இயக்கத்துக்கும் பெருமை. இந்தத் தமிழினத்துக்கும் பெருமை. பெரியார் போய்விட்டால் எல்லாம் போய்விடும் என்று எதிரிகள் நினைத்தார்கள். ஆனால், மணியம்மையார் கொளுத்திய ராவணலீலா இந்தியாவைச் சூடாக்கியது. அவரும் முடிந்துவிட்டால் எல்லாம் முடிந்துவிடும் என்று எதிரிகள் நினைத்தார்கள். வீரமணி எழுப்பி வரும் ஒலிகள் உலகம் முழுக்க எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. இனிப் பெரியாரியத்தை உலகம் வளர்க்கும். அந்தச் சூழ்நிலையை உருவாக்கியதில் தான் ஆசிரியர் வீரமணியின் அறிவும் ஆற்றலும் அடங்கி இருக்கிறது. இயக்கத்தின் கொள்கையை வலுப்படுத்துவதைவிட, இயக்கத்தின் கொள்கையை நோக்கி அனைத்துலகத்தையும் ஈர்த்ததில்தான் வீரமணியின் வெற்றி அடங்கி இருக்கிறது. “எதிர்காலக் கணிப்பு பற்றிய அறிவுத் திட்பம் ஆசிரியர் வீரமணியிடம் அதிகமாகவே உண்டு’’ என்று சொன்னவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள். (பெரியவர்!) அந்த அறிவுத் திட்பம்தான் பெரியாரியத்தை உலகமயமாக்கியது. சமூக நீதிக்குக் காவல் அரணாக இருக்கிறது. மதவாதத்தை மண்டையில் அடிக்கிறது. ஜாதியச் சதியை நித்தமும் எதிர்க்கிறது. பெண்ணியம் வெல்ல உறுதியாய் நிற்கிறது. ஆரியத்துக்குச் சாவுமணி அடிக்கிறது. அவாள் எவாள் என எல்லா வால்களையும் ஒட்ட நறுக்குகிறது. சட்டத்தின் சந்து பொந்துகளை அடைக்கிறது. தமிழின உரிமைக்கு ஓங்கிக் குரல் எழுப்புகிறது. சனாதனச் சழக்கை வெட்டி வீழ்த்துகிறது. எதிரிகளுக்கு எப்போதும் சங்கூதுகிறது. 11 வயதில் மாநாட்டு மேடையேறிய அந்த அறிவுத்திட்பம் 87 கடந்தும் மாநாட்டு மேடைகளில் முழங்கி வருகிறது. எழுதிக் கொண்டே இருக்கிறது. பேசிக் கொண்டே இருக்கிறது. பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கிறது. தமிழினத்துக்கு அரவணைப்பாய் இருக்கிறது. எதிரிகளுக்கு எரிச்சலாய் இருக்கிறது. வீரமணி என்ற அந்த அறிவுத் திட்பத்துக்கும் உலகமயமாகும் தகுதி உண்டு. உலகப்பராம் வீரமணி வாழ்க! அவரது அறிவுத்திட்பம் மேன்மேலும் பொலிவு பெறுக!