சிறப்புக் கட்டுரை : பெரியார் பாதையில் துணிவுடன் பயணிக்கும் ஆசிரியர் அய்யா!

டிசம்பர் 01-15 2019

’ நக்கீரன்’ கோபால்

பத்து வயது சிறுவனாக மேடையேறி, பகுத்தறிவுப் பிரச்சாரத்தைச் செய்யத் தொடங்கி, முக்கால் நூற்றாண்டுகாலம் கடந்து இன்னமும் அந்தக் கொள்கையையும், கொடியையும் கைவிடாமல் தூக்கிப் பிடித்துக்கொண்டு, ஒரு இளைஞரைப் போல் சுறுசுறுப்பாக பொதுநலப் பணியைத் தொடர்வதென்பது அரசிய-ல் ஆச்சர்யகரமானது. அந்த ஆச்சரியத்துக்குரியவர் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள். கலைஞர், பேராசிரியர், நல்லகண்ணு, சங்கரய்யா போன்ற மிக மூத்த அரசியல் தலைவர்களை நாம் பார்த்திருக்கிறோம். தங்கள் இயக்கம் சார்ந்த பணிகளில் தொய்வில்லாமல் செயல்பட்டவர்கள். அந்த வரிசையில் எவ்வித அரசியல் பதவிக்கும் ஆசை கொள்ளாமல், தேர்தல் களங்களில் நிற்காமல், பொதுவாழ்வு _ சமூக சீர்திருத்தம் _ சமூகநீதி இவற்றை மட்டுமே லட்சியமாகக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட ஓர் இயக்கத்தில் தொடர்ந்து பயணமாவதென்பது பெரியார் தொண்டர்களுக்கு மட்டுமே சாத்தியம்.

திராவிடர் கழகத்தின் தலைவர் என்றாலும், பெரியாரின் பெருந்தொண்டர் என்கின்ற வகையில்தான் ஆசிரியர் அவர்கள், தமது பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அதற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அண்மையில் அமெரிக்காவில் மனிதநேயர் சங்கத்தின் சார்பில் ““மனிதநேய வாழ்நாள் சாதனை விருது’’ (Humanist Lifetime Achievement Award) வழங்கப்பட்டது. சமூகம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சனையிலும் அவர் காட்டுகிற அக்கறையும், அதனை உடனே நிறைவேற்றி முடிக்க வேண்டுமென்கிற சுறுசுறுப்பும், அதற்கான தெளிவான திட்டமிடலும், நக்கீரனை எப்போதுமே ஆச்சர்யப்படுத்திக்கொண்டிருக்கிறது.

“இந்தியாவின் தலைமைப் பீடம் டெல்லி-யா இல்லை காஞ்சியா?’’ என்கின்ற கேள்வி ஒரு காலத்தில் எல்லோருக்குள்ளும் இருந்தது. இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமரில் தொடங்கி தமிழகத்தின் அமைச்சர்கள் வரை காஞ்சி சங்கர மடத்திற்குச் சென்று, ஜெயேந்திரரிடம் ஆசிபெற்ற பிறகே அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொண்ட காலம் அது. அந்த நேரத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவி-ல் சங்கரராமன் கொலை செய்யப்பட, அதன் பின்னணியில் காஞ்சி மடத்திற்கு இருந்த தொடர்பையும், ஜெயேந்திரர், விஜயேந்திரர் மீதான குற்றச்சாட்டுகளையும் ஆதாரத்துடன் “நக்கீரன்’’ அம்பலப்படுத்தி செய்திகள் வெளியிட்டது. அன்றைக்கிருந்த அரசாங்கம் குற்றவாளிகளைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவுக்கு நிலைமை உருவானது.

அதிகார மய்யமாக விளங்கிய காஞ்சிமடம் என்பது அதன் பிறகு தகர்ந்து போனது. அந்த நேரத்தில் நக்கீரனுக்கு எதிராக மதவாத சக்திகள் திரண்டு நின்ற நிலையில், நக்கீரனின் பக்கம் நின்று ஆதரவுக் குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் ஆசிரியர் அய்யா அவர்கள்.

அதைத் தொடர்ந்து நக்கீரனில் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்கின்ற நூறு வயதைத் தொடும் நிலையில் இருந்த வேத வித்தகர் எழுதிய “இந்து மதம் எங்கே போகிறது?’’ என்னும் தொடர், வாசகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொடரை துணிச்சலாகக் கொண்டு வந்ததற்காகவே பெரியார் திட-ல், நக்கீரனுக்கு பாராட்டு விழா நடத்தி, எனக்கு பெரியார் விருது வழங்கி கவுரவித்தவர் ஆசிரியர் அய்யா அவர்கள். விருதோடு நிறுத்தாமல், “இந்து மதம் எங்கே போகிறது?’’ என்னும் பெயரிலேயே புத்தகமாக வெளிவந்தபோது, அதன் நோக்கம் நிறைவேற வேண்டும் என்கிற குறிக்கோளுடன் அந்தப் புத்தகத்தை தங்களுடைய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் பல இடங்களுக்கும் கொண்டுசென்று விற்பனை செய்ததுடன், பல்வேறு மேடைகளில் அந்தப் புத்தகத்தில் இருக்கும் கருத்துகளைச் சுட்டிக்காட்டி, காலங்காலமாக ஆதிக்க வர்க்கத்தினர் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றி வந்திருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக் காட்டியவர் ஆசிரியர்தான்.

அதோடு நிறுத்தாமல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கத்தில் ஒரு கூட்டம் போட்டு, திராவிடர் கழக மேடையிலேயே தாத்தாச்சாரியாரின் படத்தைத் திறந்துவைத்து, அவருடைய கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் செயல்பட்ட நக்கீரனுக்கு பாராட்டு விழாவையும் எடுத்தார். நெருப்பாற்றில் நீந்துகிற நக்கீரனின் பணியில், எத்தனையோ வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. சட்டச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆட்சியாளர்கள் எங்கள்மீது பாய்கிறார்கள். அந்த நேரத்திலெல்லாம் துணைநின்று தோள் கொடுக்கக் கூடியவர்களில் முதன்மையானவராக ஆசிரியர் திகழ்கிறார். கல்லூரி மாணவிகளை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, அதிகாரத்தில் இருக்கும் காமக் கொடூரன்களுக்கு இரையாக்க அழைத்தது தொடர்பான ஆடியோவில், கவர்னர் மாளிகை வரை குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதனை அட்டைப்படக் கட்டுரையாக ‘நக்கீரன்’ வெளியிட்டது. கல்வித்துறையைக் காக்கவேண்டும், மாணவிகளின் எதிர்காலம் காக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் வெளியிடப்பட்ட இந்தச் செய்திக்காக, கவர்னரை பணிசெய்ய விடாமல் ‘நக்கீரன்’ தடுத்ததாகக் கூறி, 124ஆவது பிரிவின் கீழ் நான் உள்பட என்னுடன் பணியாற்றும் தம்பிகள் 35 பேர் மீதும் தேசத்துரோக வழக்கு போடப்பட்டது.

ஆளுநர் மாளிகையின் பரிந்துரையின் பேரில் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், விமான நிலையத்தில் வைத்து என்னை சுற்றிவளைத்துக் கைதுசெய்தனர் காவல் துறையினர். சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு என்னைக் கூட்டிச்சென்றபோது, முதல் ஆளாக அங்கே முற்றுகையிட்டு சாலை மறியல் செய்து உரிமைக்குரல் எழுப்பியவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டபோது, உடனடியாக அங்கே வந்து ஆதரவு தந்தார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலி-ன். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வழக்கறிஞராகவும், அவரின் குமாஸ்தா என சொல்லி-க்கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.முத்தரசனும் வந்து நின்றது எங்களுக்கு கூடுதல் பலத்தை உண்டாக்கியது. அப்பொழுது மூத்த பத்திரிகையாளர் “இந்து’’ என்.ராம் அவர்களை, நீதிமன்றத்துக்குள் அனுமதித்து, அவருடைய கருத்தைக் கேட்டு அதன்பிறகு கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் நீதிபதி விடுவித்தார். ஜனநாயகத்திற்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்ட சவாலாக நிகழ்ந்த இந்த சம்பவத்தில் கைது செய்யப்படாமல் வெளிவந்தோம்.

இதனை உடனடியாக பாராட்டும் விதமாக இரண்டே நாள்களில், பெரியார் திடலில் மிகப்பெரிய கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்தவர் நமது ஆசிரியர். அந்த நிகழ்வில் “இந்து’’ என்.ராம் அவர்களையும் அழைத்து மேடையில் வைத்துப் பாராட்டி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தோழமைகள் அனைவரையும் ஒருங்கிணைத்து  நக்கீரனை மிகப்பெரிய அளவில் கவுரவித்தவர் ஆசிரியர். இந்த வயதிலும், இப்படியொரு கருத்தரங்கை இத்தனை வேகமாக நிகழ்த்திக் காட்டக்கூடிய துணிவும், தெளிவும் ஆசிரியரிடம் நாம் பார்க்கிறோம். அவரது இந்த உயரிய பண்பும், ஆற்றலும் என்னை மிகவும் கவர்ந்தது. அவரிடமே நான் இதுபற்றிக் கேட்டேன். “இதனை நாங்கள் பெரியாரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டோம். பாராட்டுவதாக இருந்தால், அதைத் தள்ளிப் போடாமல் உடனடியாகப் பாராட்டி விடவேண்டும். அது யாராக இருந்தாலும், மக்கள் நலனுக்கானதாக இருந்தால் எல்லோரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்பதை அவர்தான் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்’’ என்றார், பெரியாரின் பாதை மாறாத தொண்டராக.

பல நெருக்கடிகள், பல வழக்குகள், பல அச்சுறுத்தல்கள் எல்லாவற்றையும் கடந்து, பெரியார் கொள்கையை, சமூக நீதியை ஆசிரியர் உறுதியுடன் காத்து, வளர்த்து உயர்த்திச் செல்கிறார். அந்த சமூகநீதிப் பார்வைதான் நக்கீரனுடைய பயணத்தை எளிமைப்படுத்தியிருக்கிறது. இந்தப் பயணம் தொடரும் வகையில், ஆசிரியர் அவர்கள் நூறாண்டு கடந்து நலமுடன் வாழவேண்டும் என விழைகின்றேன்.

என்றும் அன்புடன்,

 (நக்கீரன் கோபால்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *