இயக்க வரலாறான தன் வரலாறு(239) : அமெரிக்காவில் டாக்டர் டட்லி ஜான்சன் எனக்கு இதய அறுவை சிகிச்சை 4 மணி நேரம் வெற்றிகரமாக செய்தார்!

டிசம்பர் 01-15 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி.வீரமணி

16.03.1991 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் இலவச சட்ட உதவி மய்யத் துவக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அன்னை மணியம்மையார் அவர்கள் நினைவு நாளில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன். இந்த இலவச சட்ட உதவி மய்யத்தை துவக்கிவைத்த முன்னாள் அட்வகேட் ஜெனரல் கிருஷ்ணமூர்த்தி போன்ற பெருந்தகையாளர்களின் உணர்வு மூலமாகத்தான் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பெரியார் இலவச சட்ட மய்யத் துவக்க விழாவில் குறிப்பிட்டேன்.இந்தச் சட்ட உதவி மய்யம் எளிய முறையிலே துவக்கப்பட்டது. அய்யா நீதிபதி பி.வேணுகோபால் அவர்கள் திராவிடன் நலநிதி மூலமாகவும் நிறைய நூல்களை வாங்கிக் கொடுத்து உதவுவார்கள். இதே போன்று நம்முடைய அலுவலகத்திலே பணியாற்றுகின்ற அய்யா டி.கே.போரூரான் (திருமழிசை) அவர்கள் ரூபாய் 10,000/-_ அளித்து ஓர் அறக்கட்டளையை அமைத்திருக்கிறார்கள். அதிலிருந்து வரும் வட்டிப் பணத்திலிருந்து பராமரித்து ஓரளவு அதன் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எடுத்துரைத்தேன்.

இலவச சட்ட உதவி மய்யத்தின் துவக்க விழாவில் ஆசிரியர், நீதியரசர் பி.வேணுகோபால், அட்வகேட் ஜெனரல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்

டி.கே.போரூரான்

மேலத்தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி 24.3.1991 அன்று இரவு 7:00 மணி அளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இப் பொதுக்கூட்டத்திற்கு ஒரத்தநாடு ஒன்றிய தி.க. தலைவர் வை.குப்புசாமி அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் மேலத்தஞ்சை மாவட்ட தி.க. செயலாளர் கோ.தங்கராசு, மேலத்தஞ்சை மாவட்ட தி.க. தலைவர் ஆர்.பி.சாரங்கன், திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

 தந்தை பெரியார் இலவச சட்ட உதவி மய்யத்தை

துவக்கி வைக்கும் அட்வகேட் ஜெனரல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழகத்தினர்

விழாவில் தந்தை பெரியார் சிலையைத் திறந்துவைத்து சிறப்புரை ஆற்றினேன். முன்னதாக தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணியினர் சார்பாக எனக்கு வீரவாள் _ கேடயத்தை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கரவொலிக்கிடையே கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்கள் வழங்கினார். விழாவில் தி.மு.க. சார்பில் எல்.கணேசன், முன்னாள் அமைச்சர் மன்னை ப.நாராயணசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

எனது இதய அறுவை சிகிச்சை

16.4.1991 அன்று அமெரிக்கா சென்று என் உடல்நிலையைப் பரிசோதித்துக் கொள்ளவும், கழகப் பணிகளை மேற்கொள்ளவும் சென்றேன். அங்கு 18.4.1991 அன்று விஸ்கான்சின் மாநிலம் (Wisconsin State) மில்வாக்கி (Milwaukee) நகரில் உள்ள பிரபல செயின்ட்மேரீஸ் மருத்துவமனையில் பரிசோதனைக்குப் பின் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டட்லி ஜான்சன் அவர்கள் எனக்கு மாற்று இதய அறுவை சிகிச்சை செய்வார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் திட்டமிட்டபடி எனக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் எல்லாம் நன்றாக இருக்கிறது. இரண்டு நாள்கள் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருந்தேன். இச்செய்திகள் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் மூலம் திராவிடர் கழக தலைமை நிலையத்திற்கும் அதன்வழி தமிழக மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

எனக்கு நினைவு திரும்பி உடல்சரியான நிலையில், 16.5.1991 அன்று சிகாகோவிலிருந்து மருந்து சிகிச்சை குறித்தும், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அனைத்தும் விரிவாக ‘விடுதலை’யில் எழுதியிருந்தேன். அதில் சிகாகோவில் உள்ள பிரபல மருத்துவமனையான  St. Luke’s Roser  Presbyterian Medical Centre மருத்துவமனையில் உள்ள பிரபல டாக்டர் ஷப்லானி என்னை முதலில் பரிசோதித்தார்.  (Angiogram சோதனை)

அந்தப் பரிசோதனைக்குப் பின்னர் அறுவைச் சிகிச்சையே, மேற்கொள்ள வேண்டிய சிறந்த முறை என்று அவரும், அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்துவரும் அருமை சகோதரர் சிகாகோ இளங்கோவன் அவர்களும் முடிவுக்கு வந்தனர். எனது துணைவியாரும், பிள்ளைகளும் அந்த முடிவை ஏற்றனர்.

என்னைப் பொறுத்தவரையில், துவக்கத்தில் இப்படி ஓர் அறுவைச் சிகிச்சைக்கு அவசியம் ஏற்படாது என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், மருத்துவர்களும், நண்பர்களும் அறுவைச் சிகிச்சை செய்து கொள்வதே நல்லது என்று கூறியதை ஏற்று அதன்படி இது நடந்தது.

துவக்கத்தில் ‘இந்த நேரத்திலா நாம் தமிழ்நாட்டை விட்டு வெளிநாடு செல்வது? நமது பணி தேவைப்படும் நேரமாயிற்றே’ என்கிற எண்ணமே என்னுள் மேலோங்கி நின்றது. நமது இனமானப் பணியும், தமிழினத்துக்கு நாம் கடமையாற்றுவதும் மிகவும் இன்றியமையாதது அல்லவா என்று நினைத்து கொஞ்சம் யோசித்தேன். மனத் தயக்கம் ஏற்பட்டது என்றாலும், நமது கழகத் தோழர்களின் கடமை உணர்வையும், தொண்டாற்றும் திறனையும் நன்கு அறிந்தவன் என்பதால் இயக்கப் பணிகள் தொய்வின்றி நடக்கும் என்கிற நம்பிக்கையில் அமெரிக்கா சென்றேன்.

டாக்டர்

சோம.இளங்கோவன்

டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் ஒவ்வொரு நாளும் அறுவைச் சிகிச்சை பற்றிய தகவலை தோழர்கள் அறியும்படி அனுப்பிக்கொண்டே இருந்தார். டாக்டர் இளங்கோவன் அவர்கள் மட்டுமா? அவரது மூத்த அண்ணன் வேலாயுதம், அவரது தம்பி டாக்டர் தமிழவேள் மற்றும் அவரது சகலை ஆரூயிர் சகோதரர் டாக்டர் சந்திரன் மற்றும் இவர்கள் குடும்பத்தினர், அட்லாண்டாவில் உள்ள சகோதரர் டாக்டர் நல்லதம்பி (தலைவர் நஞ்சய்யா அவர்களது அன்புச்செல்வன்), அவரது தம்பி டாக்டர் இன்ப வாழ்வு குடும்பத்தினர்) வாஷிங்டன் திரு.ராஜ் குடும்பத்தினர், டல்லாஸ் நகரில் உள்ள டாக்டர் இலக்குவன் தமிழ் குடும்பத்தினர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் நமது அறிவு ஆசான் அய்யா அவர்களுக்கு மருத்துவ உதவி செய்த காலத்திலிருந்து இன்று வரை உதவிடும் அன்புக்குரியவர்கள், மேலும் பாசத்திற்குரிய பலரும் எனக்கு அந்த நேரத்தில் அன்பும் ஆதரவும் தந்தனர்.

அறுவை சிகிச்சைக்குப் பின்

டாக்டர் டட்லி ஜான்சன் உடன் ஆசிரியர்

குறிப்பாக, ‘மாம்’ என்று நாங்கள் அன்போடு கடந்த பல ஆண்டுகளாக அழைத்து வரும் திருமதி வர்ஜினியா கிர்ச்னர் என்கிற 75 வயது மூதாட்டியார் அம்மையார் என்பாலும், குடும்பத்தினர்பாலும் அன்பைப் பொழிவார். அவரது அன்பு மகனாக என்னைக் கருதி பாசம் காட்டுபவர்; அவர் செய்தி அறிந்தவுடன் சுமார் 700 மைல் காரை ஓட்டிக்கொண்டு, அறுவை சிகிச்சைக்கு முன்பாக குடும்பத்தினரோடு வந்து இரண்டு நாள் தங்கி என்னை ஊக்கப்படுத்தி, குடும்பத்தினர்க்கு குறிப்பாக மோகனா, அசோக்_ சுபிதா, அருள்-_பாலு ஆகியோருக்கு நல்ல  ஆறுதல், ஊக்கத்தை_தெம்பை அளிக்க முன்வந்தனர்.

நீண்டகாலமாக குடும்ப உறுப்பினரான பாசத்திற்கும், அன்பிற்கும் உரிய சகோதரர், பண்பும் மாறாத டாக்டர் ஏ.சி.ஜான்சன் குடும்பத்தினர் அவரது சகோதரி, சகோதரர் அத்துணைப் பேரும் செயின்ட்லூயிஸில் உள்ள பேராசிரியர் பெரியார் பெருந்தொண்டர் டாக்டர் திருநாவுக்கரசு குடும்பத்தினர், அதுபோல மேரிலாண்ட் மாநிலத்தைச் சார்ந்த டாக்டர் சித்தானந்தம் தம்பதிகள், நியூஜெர்சியிலுள்ள சகோதரி அமுதா, நியூயார்க் நண்பர் மோகன், வாஷிங்டன் கோபாலசாமி, பிச்சுமணி, செல்லையா, தில்லைராஜா, விக்னராஜா, சிகாகோவில் உள்ள விசுவநாதன், கண்ணகி விசுவநாதன் அவர்கள் பெற்றோர் திரு. திருமதி பாலசுப்பிரமணியம், மோகன் குமார், பாபு குடும்பத்தினர், பாஸ்கரன் குடும்பத்தினர், கெனோஷாவில் உள்ள துக்காராம், சாந்தாராம், பாஸ்கரன், அய்ங்கிரன், பாலசண்முகம், நந்தா, மாதவ் சுரேஷ், மில்வாக்கியில் உள்ள வைரவன், விஜய்பால், ரவி குடும்பத்தினர் அவரது தாயார் உள்பட அனைவரது அன்பு விசாரிப்புகள் மிக்க ஆறுதல் அளித்தது.

டாக்டர் நல்லதம்பி தொலைதூரமான அட்லாண்டிக்கில் இருந்து வந்து  மருத்துவமனையில் மூன்று நாள்களுக்கு மேல் என்னுடன் தங்கி அவ்வப்போது, எனக்கும், என் குடும்பத்தினருக்கும் தெம்பையும், உற்சாகத்தையும் அளித்து வந்தார்.

-எல்லா ஏற்பாடுகளையும் முன்னின்று செய்து வந்த சிகாகோ டாக்டர் இளங்கோவன் அவர்களை, ‘மில்வாக்கி’ என்னும் நகரில் உள்ள செயின்ட்மேரீஸ் மருத்துவமனையில் (இது 200 ஆண்டுகளாக இயங்கும் மருத்துவமனை) பிரபல டாக்டர் டட்லி ஜான்சன் அவரது குழு டாக்டர்கள் சையத், காமத் ஆகியோர் குழுவில் மயக்க மருந்து தரும் டாக்டர் இளங்கோவன்தான்! (Anesthesist) (இவர் பெயரும் இளங்கோவன்தான். இவரின் தந்தையார் நாமக்கல்லில் உள்ளார். மாமனார் மதிப்பிற்குரிய திரு.இராமசாமி அவர்கள் சென்னை அக்கவுண்ட்டன்ட் ஜெனரல் ஆபீசர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலும், பணியாற்றி ஓய்வு பெற்று இப்போது தமிழக மூதறிஞர் குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.) ஆகியோரும் பொறுப்பை ஏற்றனர்.

அறுவைச் சிகிச்சைக்கான தேதியையும் வாய்ப்பையும் விரைந்து பெற்று பல வகையிலும் சிறப்பாக உதவியவர் மயக்க மருத்துவ இயல் டாக்டர் இளங்கோவன் அவர்கள் ஆவார்கள்! இல்லையானால் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் நிலையே!

பிரபல அறுவை சிகிச்சை டாக்டர் டட்லி ஜான்சன், புன்னகையுடன் கொண்ட பணியில் முழு ஈடுபாடு காட்டி ஒரு நாளில் சில நேரங்களில் 22 மணி நேரம் கூட இரண்டு, மூன்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் சிறப்பு வாய்ந்த டாக்டர் ஆவார். எனக்கு 4 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக என்னிடம் சொன்னார்கள்.

விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்த கெனோஷா என்னும் ஊரில் (மகள் அருள் இல்லத்திலிருந்து -_ மில்வாக்கி நகருக்கு) தங்கி முறையான பயிற்சிகளை மேற்கொண்டு எனது உடல்நலம் சீரடைந்து வந்தது.

இதற்கிடையே சென்னையிலும், சிங்கப்பூரிலிருந்தும், லண்டனிலிருந்தும், பாரிசிலிருந்தும் இந்த நல விசாரிப்புகள் உறுதிப்பாடுகள் மெய்சிலிர்க்கச் செய்தன. இதனால் எனக்கு வலி குறைந்து வலிமை கூடிற்று. அதனை, “தீராக் கடன்காரனாக்கி விட்டனர்’’  என்று அறிக்கையில் உள்ளம் நெகிழ எழுதியிருந்தேன்.

ராஜிவ்காந்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்கு கடுங் கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டதோடு, இப்படு கொலையைப் பயன்படுத்தி நாட்டில் வன்முறைக்கு வித்திடும் சக்திகளைக் கண்டிக்க அனைத்து கட்சியினரும் முன்வர வேண்டும் என்று 24.5.1991 அன்று அமெரிக்காவிலிருந்து அறிக்கையின் மூலம் கேட்டுக் கொண்டேன்.

முன்னாள் பிரதமர் படுகொலையை அனுதாப அலையாக மாற்ற முயலுவதா? சட்டத்தை வன்முறையாளர்களிடம் கொடுத்துவிட்டு ஆளுநர் ஆட்சி வேடிக்கை பார்க்கிறதா? அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி கடமையாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்றும், நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு சரியான வழிகாட்ட வேண்டியவர்கள்தான் உண்மையான தலைவர்கள். குரோத உணர்ச்சிகளை தீர்த்துக் கொள்ள இதுதான் தருணம் என்று நினைத்து மக்களைத் திசை திருப்புபவர்கள் தலைவர்களாக மாட்டார்கள் என்று அந்த அறிக்கையில் வன்முறைக்கு கண்டனத்தையும், மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசின் கடமையையும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன்.

மூப்பனார்

சோனியா காந்தி

திருமதி சோனியாவுக்கும், தலைவர் மூப்பனாருக்கும் நான் ‘இரங்கல் தந்தி’ 26.5.1991 அன்று அனுப்பினேன். கெனோஷா (இல்லியனாய்ஸ் _ அமெரிக்கா)விலிருந்து “நமது மதிப்பிற்குரிய திரு.ராஜீவ்காந்தி அவர்களின் மரணம் பற்றிய நெஞ்சு பதறும் செய்தியைக்  கேட்டு அதிர்ச்சியுற்றேன். திரு.ராஜீவ் அவர்களின் இழப்பையொட்டி உங்களது துயரத்துடன் நாங்கள் பங்கேற்கிறோம். திரு.ராஜீவ் அவர்களின் இழப்பு, ஈடு செய்ய இயலாத இழப்பு. இது, இந்திய மக்களுக்கு ஈடுசெய்ய இயலாத இழப்பு. தயைகூர்ந்து எமது இதயமார்ந்த இரங்கலை ஏற்கக் கோருகிறோம்’’ என்று இரங்கல் தந்தியில் குறிப்பிட்டிருந்தேன். அதேபோல், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் திரு.ஜி.கருப்பையா (மூப்பனார்) அவர்களுக்கு, தந்தி கொடுத்தேன். அதில், “அமெரிக்காவில் இருக்கும் நான் _ திரு.ராஜீவ் அவர்களின் படுகொலையைப் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்றேன். “இந்திய மக்களுக்கு இது ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பு. தயைகூர்ந்து எனது மனமார்ந்த இரங்கலை ஏற்கக் கோருகிறேன்’’ என்று இரங்கல் தந்தி குறிப்பில் குறிப்பிட்டிருந்தேன்.

அறுவை சிகிச்சைக்குப் பின் முதன்முதலாக நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியாக, தமிழ்நாடு அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு விழா அமெரிக்காவின் ஒஹியோ (Ohio)  மாநிலத்திலுள்ள பவுலிங் கிரீன் பல்கலைக்கழகத்தில்  (Bowling Green State University)  26, 27.05.1991 ஆகிய நாள்களில் சிறப்புடன் நடைபெற்றது. அமெரிக்காவில் வாழும் முக்கிய தமிழர்கள் அறிஞர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், டாக்டர்கள் வருகை தந்திருந்தனர்.

தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் நீதிபதி பி.வேணுகோபால், மகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோர் கலந்துகொண்ட இவ்விழா நிகழ்ச்சியில் உரையாற்றினேன்.

அறக்கட்டளையின் சார்பில் வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் ராஜேந்திரன் அவர்கள் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புக்கான பணத்தாளை, பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகத்தின் தலைவர் என்கிற முறையில் என்னிடத்தில் பாராட்டி அளித்தார்கள். நன்கொடையைப் பெற்றுக் கொண்ட நான், பெண்கள் முன்னேற்றத்திற்கான தொண்டு குறித்து உரையாற்றினேன்.

13.6.1991 அன்று அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலிருந்து தி.முக. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டி முக்கிய அறிக்கையின் மூலம் கேட்டுக் கொண்டேன். அதில், வரவிருக்கும் தேர்தல் என்பது இனவுணர்வுக்கான திராவக பரிட்சை. வரும் தலைமுறையின் நலனை எண்ணி மத்தியில் வி.பி.சிங் அவர்களையும், தமிழ்நாட்டில் டாக்டர் கலைஞர் அவர்களையும் ஆட்சியில் அமர்த்திட நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும், போலிக் காரணங்கள், அனுதாப அலைகளைப் புறந்தள்ளி விட்டு, 15.6.1991 அன்று நடைபெற இருக்கும் தேர்தல் தமிழ் சமுதாயத்தின் _ ஏன் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் ஒரு வரலாற்றுத் திருப்பம்! தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வழிவகுப்பதாக அம்முடிவுகள் அமைய வேண்டும். இதை தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்களும், இந்திய வாக்காளர் பெருமக்களும் உணர வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டேன்.

அமெரிக்காவில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல் நலத்துடன் சிங்கப்பூர் வழியாக நான் 20.6.1991 அன்று விடியற்காலை 2:45 மணிக்கு அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தை அடைந்தேன். என்னை வரவேற்க சென்னை மற்றும் வெளியூர்த் தோழர்கள் தஞ்சை, திருச்சி நமது கல்வி நிறுவனங்களைச் சார்ந்த தோழர், தோழியர்கள் ஏராளமானோர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். கைத்தறி ஆடைகளையும், மலர்மாலைகளையும் கழகத் தோழர்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு அணிவித்தனர். மலர் மாலைக்கு பதிலாக நன்கொடைகளையும் வழங்கினர்.

என்னுடன் துணைவியார் மோகனா வீரமணி அவர்களும், சிங்கப்பூர் மூர்த்தி அவர்களும் வந்திருந்தனர்.  கழக நிருவாகிகள், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை, பெரியார் பெருந்தொண்டர் சிங்கப்பூர் சந்திரன், திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் பொருளாளர் மயிலை நா.கிருஷ்ணன்,  திராவிடர் கழக பிரச்சார செயலாளர் துரை.சக்கரவர்த்தி, மாநில தி.க. மகளிரணி செயலாளர் க.பார்வதி, திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் செயலாளர் புலவர் கோ.இமயவரம்பன் உள்ளிட்ட கழக முக்கிய நிருவாகிகள் மற்றும் ஏராளமான கழக முக்கியஸ்தர்கள், கழக உடன்பிறப்புகள், என்னை குவிந்திருந்து வரவேற்றார்கள்.

சென்னை விமான நிலையத்தில் வழக்கறிஞர் கோ.சாமிதுரை அவர்கள், ‘விடுதலை’ ஆஃப்செட் நன்கொடை நிதி வசூலித்த ரூபாய் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தையும், ‘உண்மை’ ஆயுள் சந்தா நன்கொடை தொகை இருபதாயிரத்தையும் என்னிடத்தில் வழங்கினார்கள். நான் பெருமகிழ்ச்சியுடன் அந்த நிதியைப் பெற்றுக் கொண்டேன். அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினேன்.

சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் பொறியாளர் சோ.ஞானசுந்தரம், ஞான.மீனா ஆகியோரின் செல்வி ஞான.சுமதி அவர்களுக்கும், மன்னார்குடி வி.ஏ.கிருஷ்ணராமானுசம், கே.கவுசல்யாதேவி ஆகியோரின் செல்வன் ஜி.மோகன்குமார் அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் விழா நிகழ்ச்சி 21.6.1991 அன்று காலை 9 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை காங்கிரஸ் மய்தானத்தில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் என் தலைமையில் நடைபெற்றது. மணமக்களுக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியினைக் கூறி மணவிழாவினை நடத்தி வைத்தேன்.

மணவிழாவில் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்ற, நான் மணமக்களை  வாழ்த்தி பாராட்டுரை நிகழ்த்தினேன். விழாவில் கழக முன்னணியினரும், பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

கலைஞர்

அமெரிக்காவில் இருதய அறுவை செய்துகொண்டு, சென்னை திரும்பிய என்னை தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் 6:30 மணிக்கு எனது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்கள். கலைஞர் அவர்களுடன் அவரது துணைவியார் திருமதி. தயாளு அம்மாள், மாநில தி.மு.க. இளைஞரணி செயலாளர் மு.க.ஸ்டாலின், ஆர்.டி.சீதாபதி ஆகியோர் உடன் வந்திருந்து உடல்நலனை விசாரித்தார்கள்.

ஸ்டாலின்

45 மணித்துளிகள் என்னுடன் இருந்து பல்வேறு பொதுச்செய்திகளைப் பற்றியும் அளவளாவிவிட்டு கலைஞர் அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள்.

24.6.1991 அன்று அ.இ.அ.தி.முக. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தலைமையில் 18 உறுப்பினர்கள் கொண்ட அ.தி.மு.க. அமைச்சரவை பதவியேற்றது. தமிழ்நாட்டில் 11ஆவது முதல்வரான ஜெயலலிதா தமிழகத்தின் இரண்டாவது பெண் முதல்வர்.

ஜெயலலிதா அம்மையார் முதல்வராக பதவியேற்ற பின் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்கிறார். உடன் ஆசிரியர்,நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் கழகத்தினர்

முதல்வர் பதவியேற்ற மாண்புமிகு செல்வி ஜெயலலிதா 24.6.1991 அன்று பிற்பகல் ஒன்றே முக்கால் மணிக்கு தனது அமைச்சர்களுடன் தந்தை பெரியார் திடலுக்கு வருகை தந்தார்.

அய்யா நினைவிட முகப்பில் நானும் தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப்பாளர்களும் முதல்வரையும், அமைச்சர் பெருமக்களையும் வரவேற்று நினைவிடங் களுக்கு அழைத்துச் சென்றோம். அய்யா, அம்மா நினைவிடங்களில் முதல்வரும் அமைச்சர்களும், மலர்வளையத்தை வைத்து மரியாதை செலுத்தினர். முதல்வருக்கு பொன்னாடை போர்த்தி, ‘பெரியார் களஞ்சியம்’ என்னும் வரிசையில் அண்மையில் வெளியிடப்பட்ட ‘பெண்ணுரிமை’ என்னும் தலைப்பிலான தொகுப்பு நூலையும் வழங்கினேன்.

தென்சென்னை மாவட்ட தி.-க. தலைவர் எம்.பி.பாலு _ வள்ளியம்மாள் ஆகியோரின் செல்வன் பி.அருள் அவர்களுக்கும், சைதை வினாயகம்_பத்மாவதி ஆகியோரின் செல்வி உமா அவர்களுக்கும் 24.6.1991 அன்று இரவு 7 மணிக்கு சைதை கொத்தவால்சாவடி பி.எஸ்.டி. திருமண மண்டபத்தில் மணமக்கள் வரவேற்பு  விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

  தென் சென்னை மாவட்ட தி.க.தலைவர் எம்.பி.பாலு இல்லத் திருமண வரவேற்பில் ஆசிரியர் மற்றும் மோகனா அம்மையார்

இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள இயலாத நிலையில், அமெரிக்காவிலிருந்து என் சார்பாகவும் என்னுடைய துணைவியார் சார்பாகவும் அமெரிக்காவிலிருந்து வாழ்த்துக் கடிதத்தை எழுதினேன். நான் அமெரிக்காவிலே இருந்தபொழுது அங்கு எனக்கு வந்த ‘விடுதலை’யை படித்தேன். அதில், நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை மணமேடையில் படித்தார்கள் என்கிற செய்தியைப் படித்தேன். தந்தை பெரியாரின் கொள்கைப் பிடிப்பு நம்மை எங்கிருந்தாலும் இணைக்கும் என்று குறிப்பிட்டேன்.

புலவர் கா.கோவிந்தன்

தி.முக.வின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் சட்டப் பேரவைத் தலைவரும், சுயமரியாதை வீரருமான திருவத்திபுரம் புலவர் கா.கோவிந்தன் அவர்கள் மறைவு குறித்து 3.7.1991 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருந்தேன். அதில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடன் இயக்கத்தில் இணைந்து செயலாற்றிய அவர் தி.மு.க. பிரிந்த பின்பு அதன் வழி இறுதி மூச்சு  அடங்கும்வரை எத்தனை சோதனைகள் ஏற்பட்டபோதும் உறுதியாக நின்றவர் ஆவார்! “இரணியன் அல்லது இணையற்ற வீரன்’’ என்னும் புரட்சிக்கவிஞரின் நாடகத்தை தடையை மீறி நடத்தி, தோழர்கள் பலர் கைதாகி கழக வரலாற்றில் அடக்குமுறைக்கு எதிரான அந்த நாளில் போர்க்கொடி தூக்கி இலட்சிய முழக்கம் செய்ய வைப்பதற்கு உழைத்த வீரர்! அவரது மறைவு திராவிட இயக்கத்தின் இழப்பு, அவருக்கு வீர வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

 கே.கே.சி.எழிலரசன் – எஸ்.ஆர்.அகிலா ஆகியோருக்கு வாழ்க்கை ஒப்பந்தம் செய்து வைக்கிறார் ஆசிரியர்

10.7.1991 அன்று திருப்பத்தூரில்  வடஆர்க்காடு அம்பேத்கர் மாவட்ட தி.க. செயலாளர் கே.கே.சின்னராசு_ கமலா ஆகியோரின் செல்வன் கே.சி.எழிலரசனுக்கும், ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன்_காந்திமதி ஆகியோரின் செல்வி எஸ்.ஆர்.அகிலாவுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழாவை நடத்திவைத்து வாழ்த்துரை ஆற்றினேன்.

14.7.1991 அன்று திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டையில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினேன். அப்போது, தந்தை பெரியாருடைய சிலையை உருவாக்கிய அனைத்து தோழர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுதல்களை உரித்தாக்கிக் கொள்கிறேன். தந்தை பெரியார் அவர்களுடைய சிலை திறக்கப்படுகின்றது என்று சொன்னால் அது ஏதோ விழா கொண்டாடுவதற்காக அல்ல. தந்தை பெரியாருடைய கொள்கை இன்னது என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லத்தான் அவருடைய சிலை இங்கே திறக்கப்படுகின்றது. தந்தை பெரியார் அவர்கள் ஒரு கட்சிக்கு மட்டும் தலைவரல்ல; மனித நேயத்தை எங்கெல்லாம் பாராட்டுகின்றார்களோ அங்கெல்லாம் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்து உரிமை உணர்வு வளர்ந்து கொண்டிருக்கிறது என்று பொருள் என எடுத்துரைத்தேன்.

(நினைவுகள் நீளும்…)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *